🌻 அழகி 24
"ஜெயன்..... உன்னால முடிஞ்சா இன்னிக்கு என்னை ஊட்டிக்கு கூட்டிட்டுப் போறியா? அவலாஞ்சியில இருந்து ஊட்டி பக்கந்தானே?" என்று கேட்டவளிடம்,
"கை கால்ல பலம் இருக்குற ஒரு ட்ரைவருக்கு எந்த தூரமும் தூரமேயில்லங்க மேடம்.... ஒடம்பு மட்டும் ஒத்துழச்சா கன்யாகுமரியில இருந்து இந்தியோவோட பார்டர் கோடு வரைக்கும் கூட போயி தொட்டுப் பாத்துட்டு வரலாம்; ஆனா திடீர்னு எதுக்கு ஊட்டிக்குப் போகணும்னு கேக்குறீங்க நீங்க?" என்று அவள் அவனிடம் கேட்ட உதவிக்கு பதிலாக ஒரு கேள்வியை அவளிடம் கேட்டான்.
"அது வந்து.... அங்க போயிட்டு சும்மா ஒரு கப் டீ குடிச்சுட்டு வரலாம்னு தோணுச்சு!" என்றாள் வர்த்தினி தயங்கியபடி.
"ஏன் இது வரைக்கும் அழுததெல்லாம் பத்தாதா ஒனக்கு?
குடிக்குற டீய இங்கருந்தே குடி போதும்! நீ ஊட்டிக்கு எல்லாம் போயி ஒண்ணும் கிழிக்க வேண்டியதில்ல!" என்றான் சற்றே அதிகப்படியான குரலில்.
அவளது காதலன் வருங்கால கணவனாக இருந்த வினோத்தை பற்றி வதனி இதுநாள் வரை ஜெயனிடம் ஒருவார்த்தை கூட பகிர்ந்து கொண்டதில்லை..... ஆனாலும் முகிலமுதத்தின் தகவல் உபயத்தால் வினோத்துடைய இடது கைப்பழக்கம் வரையில் அனைத்தும் ஜெயனுக்கு அத்துப்படி!
"அந்த வினோத்து ரொம்ப ரொம்ப நல்ல புள்ளயாமுடா ஜெயனு.... அதிந்து கூட பேசாதாம்; நம்ம வதனிப்புள்ளய அப்டி தாங்குமாம்; என்ன தான் பிரச்சனயின்னாலும் அதோட குடும்பம் இவங்களோட குடும்பம் ரெண்டுத்தயுமே உட்டுக் குடுக்காம சரியா நடந்துக்குமாம்! ஹூ.......ம்! இம்புட்டு நல்லபுள்ளக்கு ஆயுச ஆண்டவன் இன்னுங்கொஞ்சம் அதிகமா குடுத்துருக்கலாம்!" என்று அவன் புகழுரையில் பேச்சை ஆரம்பித்து புலம்பலில் பேச்சை முடிப்பார் முகிலமுதம்.
பர்வதவர்த்தினியை அவன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கியிருந்தாலும் இப்போதைய நிலையில் அந்த வினோத் ஒரு இறந்தகாலம்; ஒன்று அவள் அவளுடைய பேங்க்கின் நட்பு வட்டாரத்தில் அவளுக்கு இணையான ஒரு மாப்பிள்ளையை தேடி காதலித்து அவனை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்க வேண்டும்; இல்லையேல் இருக்கவே இருக்கிறான் இந்த ஜனமேஜயன்..... வேறு எவனும் இல்லாமல், இவனும் இல்லாமல் இன்னமும் பர்வதவர்த்தினி அந்த வினோத்தின் நினைவுகளிலேயே மூழ்கி இருப்பதை ஜெயன் சற்றும் விரும்பவில்லை, ஆனால் பர்வதவர்த்தினி அந்த செயலை மிகவும் விரும்பினாள்.
"இங்க பாரு; நான் என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? நான் இன்னொரு நாள் தனியாவே ஊட்டிக்குப் போவேன். வினு வேலை பாக்க இருந்த ஹோட்டலுக்கும் போவேன். அங்க இப்ப செஃப்பா இருக்குறவங்களையும் பாத்து பேசிட்டு வருவேன்!" என்று சொன்னவளை கிண்டலாக பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் ஜனமேஜயன்.
"ஏய்.... நான் ஒரு விஷயத்த சொன்னா, எங்க அது நடந்துடுதா பாப்போம்ங்குற மாதிரி கிண்டலா சிரிக்காத! எனக்கு எரிச்சல் வருது!" என்று அவனிடம் சொன்னாள் வர்த்தினி.
"நடந்துடுதா பாப்போம்னு நெனச்சு எல்லாம் நான் சிரிக்கலங்க மேடம்! கண்டிப்பா நடக்கவே நடக்காதுன்னு நெனச்சு தான் சிரிச்சேன்!" என்று சொல்லி கோபத்தில் இருந்தவளை மேலும் கோபமாக்கினான் ஜெயன்.
"தனியா போக ஒருமாதிரியா இருந்தா என்ன? நான் பேங்க் ப்ரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிட்டுப் போவேன்!" என்று சொன்னவளிடம்,
"எதுக்கும்மா இவ்ள கஷ்டப்பட்டாவது அந்த ஹோட்டலுக்குப் போவணும்? கொஞ்ச நாளைக்கு வினோத் பத்தின நியாபகத்துல கொஞ்சம் ஒதுக்கி வை வதனி. நீ ரொம்ப அழுது கஷ்டப்படுறத எங்களால சும்மா வேடிக்க பாக்க முடியலம்மா...... கஷ்டமாயிருக்கு!" என்று சொன்னவன் அவளுடைய தலையை மெல்ல தன் இடக்கையால் கோதினான்.
"தலையில முடி இல்லன்னா என்ன இப்ப? சும்மா சும்மா அங்கணக்குள்ள ஒரு துணிய கட்டிக்கிட்டே இருக்கணுமா?
ஸ்கார்ஃப் எல்லாம் கட்ட வேணாம்! தூக்கிப் போட்டுட்டு வா!" என்று அவள் கையிலிருந்து தலையில் கட்டும் துணியை உருவி வீட்டிலேயே தூக்கி எறிந்து விட்டு தான் அவளை அழைத்து வந்திருந்தான்.
முள்ளம்பன்றியின் உடலில் சிலிர்த்து நிற்கும் முட்கள் போல் இப்போது தான் வதனியின் தலையில் ரோமங்கள் வளர ஆரம்பித்திருந்தன. அவனது காயமும், அவளது காயமும் கூட நன்றாக ஆறியிருந்தது. புறக்காயம் ஆறி விட்டது சரி....! அகக்காயமும் கொஞ்சமாவது ஆறியிருக்கும் என்று நினைத்தால் ம்ஹூம்..... சற்று முன்பு அவன் ஒரு சடன் ப்ரேக் அடித்த போது கூட டேஷ் போர்டில் கை வைத்தபடி கண்களை மூடிக் கொண்டு உதடு வரை நடுங்கினாள்.
இந்த பயத்தையும் வினோத் பற்றிய நினைவுகளையும் சற்றே நெஞ்சாக்கூட்டின் அடியில் போட்டு அழுத்தி வைக்க அவளுக்கு இன்னுங்கொஞ்ச காலம் பிடிக்கும் என்று உணர்ந்தான் ஜெயன்.
"தலை மேல எல்லாம் கைய வைக்காம பேசு ஜெயன்!
நீ எங்கிட்ட காட்டுற அக்கறை வரைக்கும் ஓகே; உன்னோடது அக்கறைக்கு ஒரு இன்ஞ்ச் கூட வர்ற ஃபீல்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாது! புரிஞ்சுக்கோப்பா....!"
"பொறந்ததுல இருந்து எனக்கும் அம்மாவுக்கும் பெரிசா சொந்தபந்தமே கெடையாது; நம்மள விட்டுட்டு வேற ஒருத்தனோட ஓடிட்டான்னு நெனச்சு அம்மா வீட்டு சொந்தமும் போச்சு! காதலோட வந்தவங்கள எங்கப்பா ஏமாத்துனதால எங்கப்பாவோட ரிலேஷன்ஷிப்பும் போச்சு!"
"ஹாஸ்பிட்டல்ல நீ எங்கிட்ட வீட்டுக்கு குடியிருக்க வர்றியான்னு கேட்டப்ப எனக்கு அப்டி ஒரு நிம்மதி வந்துச்சு தெரியுமா? உண்மைய சொல்லணும்னா எனக்கு அந்த நேரத்துல ஒடம்புலயும் மனசுலயும் சுத்தமா தெம்பு இல்ல; அதுனால தான் நீ அப்டி கேட்டதும் அப்பாடான்னு இருந்தது!"
"எனக்கு ரொம்ப தேவையா இருந்த நேரத்துல கிடைச்ச ரெண்டு பேர் நீயும் முகில்ம்மாவும்; அவ்ளோதான்! மனோம்மாவுக்கு பதிலா முகில்ம்மான்னு என்னால யோசிக்க முடியுது.... பட் நீ வேற; வினோத் வேற ஜெயன்! சத்தியமா உன்னை வினோத்தோட இடத்துல வச்சு என்னால பாக்க முடியாது!" என்றவளிடம்,
"அதான் எனக்குத் தெரியுமே? அந்தப்பையன் நல்லாப் படிச்சவன், நல்ல வேலையில இருந்தவன், அமைதியோ அமைதியான டைப்பு; ஒனக்கு ரொம்ப பிடிச்சவன்; ஆனா நானு படிப்புலயோ, வேலையிலயோ, நடந்துக்குற மொறையிலயோ உனக்கு கொஞ்சங்கூட பிடிக்காத, செட் ஆகாத டைப்பு அப்டித்தான?" என்று கேட்டான்.
"ஏய்.... இல்ல ஜெயன்! உன்னை நெறய பொண்ணுங்க என்னன்னவோ காரணம் சொல்லி
ரிஜெக்ட் பண்ணியிருக்காங்கன்னு மரியம் சொன்னாங்க. பட் நோ சொல்ற அளவுக்கு எல்லாம் உங்கிட்ட எந்த விதமான தகுதிக்குறைவும் இருக்குறதா எனக்குத் தெரியலப்பா! நீ ஒரு எலிஜிபிளான சிங்கிள் பையன் தான்; பட் என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்குற ஆங்கிள்ல யோசிச்சுப் பாக்க முடியாது. அதத்தான் சொல்ல வந்தேன்!" என்று அவனிடம் மெதுவான குரலில் சொன்னாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro