🌻 அழகி 22
ஐந்து நிமிடங்கள் ஆன பிறகு நஸாரும், ஜெயனும் அந்த மனிதரும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வதனியும் சென்றாள். அந்த மனிதருக்கு ஏதோ ஒரு தேவை இருக்கிறது என்ற உந்துதல் அவளை அந்த இடத்தில் சென்று நிப்பாட்டியிருந்தது.
"நஸார் ஸார்.... இவருக்கு என்ன வேணுமாம்? ஏன் இப்டி தயங்கி நிக்குறாரு?" என்று கேட்டாள் வதனி.
"ஹா....ன்! இவருக்கு உடனே கைமாத்தா ரெண்டாயிர ரூபா காசு வேணுமாம்! என் பின்பாக்கெட்ல கைய உட்டு, அவருக்கு வேணுங்குற காச அவரே என் பர்ஸ்ல இருந்து எடுத்துக்குவோம்னு நெனச்சாராம். நீங்க எங்க பாக்கெட்ல கைய உட்டு தொழாவிட்டு இருக்குறத பாத்துக்கிட்டு வெரல் சப்பிட்டு இருக்குறதுக்கு நாங்க ஒண்ணும் சின்னப்பசங்க இல்லய்யா; எங்களுக்கு தாடி மீசையெல்லாம் மொளச்சிடுச்சின்னு இவர் கிட்ட அன்பா சொல்லி, நஸார் கடையில போய் இருங்க; நாங்க உங்கள அங்க வந்து வச்சுக்குறோம்னு சொல்லி அனுப்புனோம். வேறெங்கயும் ஓடுனா எங்க நம்மள பின்னாலயே வந்து புடிச்சு கெரண்டக்கால் நரம்ப அத்துப்புடுவானுங்களோன்னு பயந்து, தல கரெக்டா நாம சொல்லியனுப்புன மாதிரி இங்க வந்து நின்னுருகாப்ல...... இப்ப சொல்லு; இவருக்கு உங்காச குடுப்பியா நீயி?" என்று அவளிடம் கேட்டான் ஜெயன்.
"கண்டிப்பா குடுப்பேன்..... அவரோட தேவை நியாயமானதா இருந்தா, நான் நிச்சயமா அவருக்கு ஹெல்ப் பண்ணுவேன்!" என்று ஜெயனைப் பார்த்தபடி அவனிடம் சொன்னாள் வதனி.
"இங்கரு.... நான் உங்கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தேன்னு உனக்கு தெளிவா புரிஞ்சதா இல்லையாம்மா? டீக்கடையில நின்னுட்டு இருக்கும் போது இந்த பெரிய மனுஷரு என் பர்ஸ்ல இருந்த ஒன்னோட பணம் மொத்தத்தையும் அப்டியே ஆட்டைய போடத் தெரிஞ்சாருடீ!" என்று சற்றே பதட்டத்துடன் மறுமுறை சொன்ன ஜெயனிடம்,
"ஏய்.... எனக்கென்ன கேக்குறதுல பிரச்சனையா? மொதல் தடவையிலேயே நீ சொன்னது தெளிவா தான் புரிஞ்சது எனக்கு; இவர் உங்கிட்ட திருட வந்தாரு; நீங்க ரெண்டு பேரும் சேந்து அவர வார்ன் பண்ணி நஸார் ஸார் கடைக்கு அனுப்பி வச்சீங்க..... அதான் அங்க வந்தப்போ ஒரு மாதிரி பயந்து போய் வந்தாரா? நீ அடிச்சியா இவர?" என்று அவன் கண்களை நேர்ப்பார்வை பார்த்து அவனிடம் கேள்வி கேட்டாள் வதனி.
"அடிச்சியாவா.......? நல்லா கேட்டீங்க மேடம்; நாலஞ்சு பேர் கூட்டமா கூடுனதை பத்தியும் யோசிக்காம ஒத்தையா நின்னு இந்த ஆள பிரிச்சு மேய்ஞ்சுட்டான் எருமமாடு! இந்த ஆளு வாங்கியிருக்குற உள் காயத்துக்கு இன்னும் எத்தன நாளைக்கு இவருக்கு ஒத்தடம் குடுக்கணுமோ தெரியல!" என்று கவலைப்பட்ட நஸாரிடம்,
"ஏன் நீ வேணும்னா ஒரு மாசம் இவன் வீட்ல போய் ஒக்காந்து ஒத்தடம் குடுக்குற வேலையப் பாரேன்!" என்று தன் நண்பனிடம் கோபப்பட்டவன் தன்னுடைய கையையும் உதறிக் கொண்டான்.
அவனுக்கு விரல் எலும்புகளில் எல்லாம் வலி இருந்திருக்கும் போல..... இடது கையால் வலக்கையை சற்றே அமர்த்தி கொடுத்துக் கொண்டிருந்தான்.
"உங்களுக்கு என்ன பிரச்சனங்க? எதுக்கு பணத்த எடுக்கணும்னு நெனச்சீங்க?" என்று புன்னகைத்த படி கேட்டவளிடம்,
"டேய் நஸாரு; இவ என்ன லூசாடா? இந்தாளு பர்ஸ அடிக்க வந்தான்னு இவ கிட்ட நான் கூவிக்கிட்டே இருக்கேன்; அதக் கொஞ்சங்கூட காதுல வாங்காம, இவங்கிட்ட போயி பல்ல காட்டிக்கிட்டு பேசிட்டு இருக்கா..... இவள உள்ள போச்சொல்றா; இல்லையின்னா இருக்குற கோபத்துல இவளையும் தூக்கிப் போட்டு ரெண்டு மிதி மிதிச்சுடுவேன்!" என்று கர்ஜித்தவனிடம்,
"யேய்....... ஒருத்தர நாலு அடி அடிச்சுட்டா என்ன பெரிய ஹீரோவா நீ? வாய மூடிட்டு
அமைதியா நில்றா!" என்று உரக்கச் சொல்லி ஜெயனுடைய பேச்சை சற்றே அடங்க செய்தாள் வதனி.
"ரெண்டு பேருல நான் யார சமாளிக்குறதுன்னு தெரியல. நான் போறேன் போங்கடா! இங்க நின்னுட்டு ரெண்டு பேரும் இந்தாள்ட்ட என்னமும் பேசித் தொலைங்க!" என்று சொல்லி விட்டு ஒரு தலையசைவுடன் உள்ளே போய் விட்டான் நஸார்.
"ஸார்..... இப்ப சொல்லுங்க! எதுக்கு பணத்த எடுக்கணும்னு நெனச்சீங்க?" என்று மறுபடி கேட்டவளிடம்,
"நான் ஒரு பெயிண்டருங்கம்மா! ரெண்டு மாசத்துக்கு முன்ன நான் வேலை பாத்துட்டு இருந்த கடையில என்னைய வேலையில இருந்து நிப்பாட்டிட்டாங்க..... ஆனாலும் எங்குடும்பத்துல இன்னும் வேலைக்கு போறதா தான் சொல்லிட்டு, சும்மா சுத்திட்டு இருக்கேன்! நாலு நாளைக்கு முன்னால பொண்ணு தொட்டா பேசுற போனு வேணும்ப்பான்னு கேட்டுச்சு..... அது ரொம்ப ரூவா இருக்குமுல்லம்மான்னு கேட்டதுக்கு ஆமாப்பா பத்தாயிரம் ஆகும்னு சொல்லுச்சு; அதான் போன மாசம் மாதிரி இந்த மாசமும் இந்த தம்பியோட பர்ஸ திருடப் போனேன்!" என்றவரிடம்,
"அப்போ போன மாசமும் பாக்கெட் அடிச்சியா நீயி? இத சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லையாய்யா?" என்று கேட்டு எகிறிக் கொண்டு வந்தான் ஜனமேஜயன்.
"ஜெயன் ப்ளீஸ்.... கொஞ்ச நேரம் அமைதியா இருங்க! இவர் நினைச்சுருந்தா நாலு நாளா பட்டினி, அதான் திருடுனேன்னு நம்ம கிட்ட பொய் கூட சொல்லியிருக்கலாம். அத செய்யல இவரு! நீங்க சொல்லுங்க ஸார்....... பெயிண்டிங்க் தவிர வேற என்னென்ன வேலை தெரியும் உங்களுக்கு?" என்று பொறுமையாக அவளிடம் கதை கேட்டவளிடம்,
"எனக்கு கரெண்டு வேலையின்னா ரொம்ப பிடிக்கும்மா! காட்டுல களை எடுக்குற வேலை, உழவுக்கு
ட்ராக்டர் ஓட்டுறது இதெல்லாம் தெரியும்!" என்று சொன்னவரிடம் சிறு புன்னகையுடன்,
"இதெல்லாம் போக கையில பணம் குறைஞ்சா சைடு பிஸினஸா திருடுற வேலையும் தெரியும். அப்டித்தான ஸார்? உங்க பொண்ணு ஆசைப்பட்ட ஆண்ட்ராய்ட் மொபைல நீங்க திருடி வாங்குனா ரொம்ப ஈஸியா வாங்கிடலாம்; உழைச்சு வாங்குனா கொஞ்சம் கஷ்டப்படணும்.... ஆனா ரெண்டாவது வழியில யாருடைய சாபமும், வயித்தெரிச்சலும் உங்க பொண்ணு கையில போய் சேராது இல்லையா?"
"இந்தா நிக்குறானே.... இவன் யாரு தெரியுமா? என் ஹவுஸ் ஓனருடைய பையன்.... என் குடும்பத்துல இறந்து போன ரெண்டு பேரோட காரியத்துக்காக அவன் பர்ஸ்ல பணத்த வச்சுருந்தான்! இந்த பணத்த நீங்க எடுத்துட்டுப் போயி உங்க பொண்ணுக்கு பொருள் வாங்கிக் குடுத்துருந்தா, அது எவ்ளோ பெரிய பாவம் ஸார்? வேண்டாம்.... இந்த மாதிரி பணத்த திருடி சம்பாதிக்கணும்னு நெனைக்காதீங்க ஸார்! வீட்ல வேல போய்டுச்சுன்னு தைரியமா சொல்லுங்க. மறுபடி வேற வேலையில சேந்து பெயிண்டிங்கே பண்றதோ இல்ல மத்த தொழில் பண்றதோ உங்க இஷ்டம்! பட் இந்த மாதிரி திருட்டு மட்டும் வேண்டாம் ஸார்!" என்று சொன்னவளை கண்கலங்கி பார்த்திருந்தவர்,
"யாரும்மா நீ? இந்த தம்பி என்னைய திருடன், திருடன்னு மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்லுது; இருந்தாலும் என்னைய கொஞ்சங்கூட மரியாத குறையாம, எங்கதைய கேட்டு, எனக்கு ரொம்ப பெரிய ஆலோசனையும் சொல்றியே தாயி? நீ நல்லாயிருக்கணும். எம்புள்ள மேல சத்தியமா இனிமே யார்கிட்டயும் நான் திருட மாட்டேன்மா; ஒருதடவ திருடுன பணத்தையும் சேத்து இல்லாதவங்களுக்கு முடியாதவங்களுக்கு ஏதாவது பண்றேன்மா! என்னைய மன்னிச்சுடு; தம்பி நீங்களும் தான் என்னைய மன்னிச்சுடுங்க! ஒன்னைய மாதிரி ஒரு பொண்ண பெத்த உங்கம்மா புண்ணியவதிம்மா!" என்று சொல்லி அவள் தலையில் கைவைத்து திரும்பி நடந்தவரிடம்
"கொஞ்சம் நில்லுங்க ஸார்.... ஏதாவது பணம் வேணுமா?" என்று கேட்டாள் வதனி.
"வேண்டாம்மா! செவுள்ல அறைஞ்ச மாதிரி ஒரு பாடம் சொல்லிக் குடுத்த; இதுக்கு நியாயமா நான் இல்ல ஒனக்கு ஏதாவது காணிக்க குடுக்கணும்? போயிட்டு வர்றேன்மா!" என்று சொன்னவரிடம் கைகூப்பி விடை கொடுத்த வதனியின் கண்கள் சற்றே கலங்கியிருந்தது.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro