🌻 அழகி 21
உங்களுக்கு ஜெயன எப்டி சிஸ்டர் தெரியும்?" என்று கேட்டவளிடம் புன்னகைத்த மரியம்,
"நஸாரும், ஜெயனும் சின்ன வயசுல ப்ரெண்ட்ஸ்ங்கக்கா! நாங்க மூணு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் வேற.... அதுனால அண்ணன எங்களுக்கு நல்ல பழக்கம்! ரொம்ப நல்ல டைப்புங்கக்கா; எங்களுக்கு தெரிஞ்சவருங்கறதால சொல்லல!
நஸாரோட அம்மாவுக்கு அவர பிடிக்கவே பிடிக்காது!"
"ஒங்கூட சேர்ந்து தான்டா எம்புள்ள வாழ்க்கையில அடுத்த உயரத்துக்கு போகவே மாட்டேங்குறான்னு இவர பாக்குற நேரமெல்லாம் கருவுவாங்க! அதையெல்லாம் ஒரு விஷயமா எங்க கிட்ட சொல்லவே மாட்டாருங்கக்கா; மொத்தத்துல அம்மா கிட்ட கூட சொல்ல யோசிக்குற மாதிரியான குடும்ப பிரச்சனையெல்லாம் ஜெயனுண்ணா கிட்ட மனசு விட்டு பேசலாம்....! அவ்ளோ நம்பிக்கையானவரு!" என்று சொன்னாள் மரியம்.
"நல்ல நம்பிக்கைய வச்சீங்க போங்க! பாத்த நாளுல இருந்து என் உயிர கொஞ்சம் கொஞ்சமா வாங்கிட்டு இருக்கான்.... இவனா நல்லவன்? ம்ஹூம்.... எனக்கு அப்டி தோணல. எப்ப பாரு நீ இதத் தான் செய்யணும், இப்டித்தான் இருக்கணும்னு ஆர்டர் பண்ணிக்கிட்டு..... எனக்கு அவன் பண்ற வேலையெல்லாம் ரொம்ப இரிடேட்டிங்கா இருக்குதுங்க மரியம்!" என்று ஜெயனை முடிந்த அளவிற்கு தாக்கிப் பேசினாள் வதனி.
"இல்லங்கக்கா..... ஒரு பொண்ணு உன்னைய எனக்குப் பிடிக்கலன்னு லேசா மொகத்த சுண்டுனா கூட ஜெயனு அண்ணே அந்தப்பிள்ள பக்கத்துல கூட நிக்க மாட்டாப்ல; நாங்க தான் இத்தன வருசமா பாத்துட்டு இருக்கமே..... சம்பளம் பத்தலன்னு ஒருத்தி, நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வரலன்னு ஒருத்தி, ரொம்ப கருப்பா இருக்காருன்னு ஒருத்தி, அம்மாவ இவரு தான் பாத்துக்கணுமா அப்ப எனக்கு வேண்டாம்னு ஒருத்தி இப்டி எத்தன பேரு அவர வேண்டாம்னு சொல்லியிருக்காளுக தெரியுமா?"
"பத்தாயிரம் பத்தலன்னு, பதினைஞ்சாயிரம், இருபதாயிரம், இருபத்தஞ்சாயிரம்னு தேடி தேடி வேலைய செஞ்சு அண்ணனும் காச சேத்து வச்சு தான் பாத்துச்சு! அது எதிர்பாக்குற மாதிரி இல்லாம ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு கொற சொல்லிட்டே இருந்ததால கடுப்பாகி இனிமே நான் எனக்கு போட்டோவுலயோ ஒரு வீட்லயோ போயி பொண்ணே பாக்க போறதில்ல; மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்குறவ போற போக்குல வாழ்க்கையில வந்தா பாத்துக்கலாம்.... இல்லையின்னா எனக்கு கல்யாணமே வேணாமுன்னு எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்துச்சு!"
"இப்ப உங்கள பாத்துட்டு தான் ஏதோ கொஞ்சம்.....!" என்று சொல்லி தயங்கிய மரியத்திடம்,
"ம்ம்ம்! கொஞ்சம்..... லவ் ஃபீல் வந்துடுச்சாக்கும் உங்க அண்ணாவுக்கு? என் வலிய பத்தி கொஞ்சங்கூட யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்காரு; அதுக்கு முகில்ம்மா வேற ஸப்போர்ட் பண்றாங்க!" என்றாள் வதனி.
"சரிங்கக்கா! அவர இவ்ளோ திட்டிக்கிட்டே எதுக்காக நீங்க அவர் வீட்லயே இருக்கணும்? வேற வீட்டுக்குப் போவ வேண்டியதுதான?" என்று கேட்டாள்.
"போகலாம் தான் மரியம்..... ஆனா எனக்கு முகில்ம்மா மாதிரி இன்னொருத்தர் கெடைக்க மாட்டாங்களே? அதுக்கு என்ன பண்றது?"
"அம்மாவும், வினுவும் என்னை விட்டுட்டுப் போய் இன்னையோட முப்பது நாளாச்சு; இத்தன நாளுல எனக்குப் பைத்தியம் பிடிக்காம, நான் என்னை மறந்து சிரிக்குற அளவுக்கு ஸ்ட்ராங்க் ஆகியிருக்கேன்னா அதுக்கு முகில்ம்மா, ஜெயன் ரெண்டு பேருமே தான் காரணம்! எனக்கு அவரோட குணம் கொஞ்சமா பிடிச்சிருக்கு.... எப்பவுமே ஜாலியா, எனர்ஜிட்டிக்கா, கான்ஃபிடென்ஸோட இருக்காரு; பட் சில நேரத்துல மேல விழுந்து இம்ச பண்ணுறாரு.... அதுதான் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலா இருக்கு! மத்தபடி அவர் கேக்குற மாதிரி கல்யாணம் பண்ணிக்குறதெல்லாம் இம்பாஸிபிள்!" என்று தீர்மானமாக சொன்ன பர்வதவர்த்தினியிடம்,
"ஒரு விஷயம் வேணும்னு நெனச்சுடுச்சுன்னா போதும்;
எங்க ஜெயனு உங்கள விட வீம்பு பிடிச்சது! ரெண்டு பேருல யார் பேச்சு நடக்குதுன்னு பாக்கலாம்!" என்று மனதிற்குள்ளாக சொல்லிக் கொண்டவள் வதனியிடம்,
"நான் ஜெயனுட்ட நீங்க சொன்னத பத்தி பேசுறேன்க்கா!" என்றவள் அடுத்த கொஞ்ச நேரத்தில் அவளது பெற்றோர், நஸாரின் பெற்றோர், தங்கள் மூன்று குழந்தைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள் மரியம். வதனியின் கதையையும் மேலோட்டமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
பேங்கில் மதிய உணவு இடைவெளியின் போது ஒருவருக்கொருவர் அவர்களுடைய
கதையை பேசுவது போல் மரியமுடன் பேசுவதும் இயல்பாக இருந்தது வதனிக்கு.
"மயிலாப்பூருல இருந்தீங்க, முட்டை கூட சாப்ட மாட்டீங்க, தயிர்சாதமும், பருப்பு சாதமும் தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னா நீங்க மாமியாக்கா?" என்று கேட்டு நாக்கை கடித்துக் கொண்டவளிடம் புன்னகைத்தபடி இல்லையென தலையசைத்தாள் வதனி.
"உங்ககிட்ட லூசு மாதிரி ஒரு கேள்வி கேட்டுட்டனோக்கா? தப்பா எடுத்துக்காதீங்க!" என்று மன்னிப்பு வேண்டினாள் மரியம்.
"அட நீங்க வேற மரியம்.... எனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்காங்க. ஆனா பொறந்ததுல இருந்து அவங்க எங்கிட்ட இப்டி உரிமையா ஒருவார்த்த கூட பேசுனதேயில்ல; ஒருவேள அவங்க எங்கிட்ட பேசியிருந்தா இப்டித்தான் இருந்துருக்குமோன்னு நெனச்சுக்குறேன்..... அப்புறம் உங்க ரெண்டு பேரோட லவ்வையும் பாத்து நான் கொஞ்சம் அசந்து போயிட்டேன்! வீட்டுக்குப் போயி சுத்திப் போட்டுக்கோங்க. என் கண்ணு பட்டுடப்போவுது!" என்று சொன்னவளிடம் சற்றே நெளிந்த மரியம்,
"நஸாரு இப்டிதானுங்கக்கா! எப்ப பாரு என்னைய கைக்குள்ளாரவே வச்சு எம்மூஞ்சிய பாத்துட்டே இருக்கணும்னு நெனப்பான். வீட்லயெல்லாம் அம்மா வஞ்சிப்புடும்னு யோசிச்சு யோசிச்சு பக்கத்துல வருவான்; அதுனால கடைக்கு வந்தா இப்டித்தான் கொஞ்சம் ஓவரா நடந்துக்கிடுவான்; நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!" என்று சொன்னாள்.
"ச்சே.... ச்சே! நான் தப்பால்லாம் எடுத்துக்கலங்க மரியம்; உங்க காதல் ரொம்ப அழகாயிருந்தது.... கண் முன்னால தெரிஞ்சது; அத ரசிச்சேன்னு சொன்னேன்! அவ்ளோதான்!" என்று வதனி சொல்லிக் கொண்டிருக்கையில் கடை வாசலில் யாரோ ஒரு நடுத்தர வயது நிரம்பிய ஒரு மனிதர் யோசனையுடன் தயங்கியபடி வந்து நின்றார்.
"ஸார்.... ஏன் வெளியவே நிக்குறீங்க? உள்ள வாங்க! என்ன வேணும்?" என்று கேட்ட மரியத்திடம்,
"நஸார் ஸார் என்னைய இங்க வர சொல்லியிருந்தாரும்மா!" என்றார்.
கசங்கிய சட்டையும் வேஷ்டியையும், கலைந்திருந்த தலையையும், எங்கிருந்தோ யாரோ துரத்தி விட்டு ஓடி வந்தது போல் அவர் வாங்கிய பெருமூச்சையும் பார்த்து விட்டு மரியம் அவருக்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
"அவர் வெளிய போயி.... அந்தா வந்துட்டாங்க! நீங்களே பேசிக்கோங்க!" என்று சொன்ன மரியத்திடம் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு மறுபடியும் அந்த பெரிய கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த நஸாரிடம் சென்றார் அந்த மனிதர்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro