🌻 அழகி 2
ஜெயன் குன்னூரில் டூரிஸ்ட் கைய்டாக பணிபுரிந்து தன்னுடைய வாழ்க்கைப்பாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறான். குன்னூர், கோத்தகிரி, பைக்காரா, ஊட்டி பகுதிகளில் அவனுடைய காலடித்தடங்கள் படாத ஒரு இடம் கூட இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய எல்லைகளின் அழகை அளந்து வைத்திருக்கும் ஒரு தேர்ந்த ரசிகன்!
அவனுடைய தாத்தா ஏதோ ஒரு வெள்ளைக்காரரிடம் எடுபிடியாக வேலை பார்த்தவராம். அப்பா இந்தப் பகுதியிலேயே வாடகை டாக்ஸி ஓட்டிக் கொண்டிருந்தவர். இப்போது இவன் நம் நாட்டவருக்கும், வெளிநாட்டவருக்கும் ஊர்சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறான்.
கைய்ட் என்றால் அந்த வேலை மட்டுமல்ல! சுற்றுலா வருபவர்கள் கேப் ட்ரைவர் வேண்டுமென்றால் அவர்களுடைய ஓட்டுநராக மாறி விடுவான்! டூரிஸ்ட்களின் நிதிநிலைக்கு தகுந்தாற்போல அவர்களுக்காக தங்கும் விடுதிகளையும் ஏற்பாடு செய்து தருவான்.
இப்படி அவர்களுடைய தேவை எதுவாக இருந்தாலும், குன்னூரில் அவனுடைய நிறைய விதமான மனிதர்களின் பழக்கத்தினால் அவனுடைய டூரிஸ்ட்களை அவனால் இயன்ற அளவுக்கு திருப்திப்படுத்தி கைகுலுக்கி மகிழ்ச்சிகரமாக அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பான்.
இருபத்தைந்து வயதில் திடீரென அவனுடைய தந்தை இறந்துவிட தாயும், மகனும் அந்த துக்கத்திலிருந்து மீண்டு ஒரு நிலைக்கு வந்து அமர்ந்து, சிறு சிறு கடன் கச்சாத்துகளையெல்லாம் அடைத்து ஆசுவாசம் அடைவதற்குள் அவனுக்கு மேலும் நான்கு வயது ஓடி விட்டது.
மூன்று வருடமாக அமுதாம்மா இவனுக்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்! "நான் தேடும் செவ்வந்திப்பூ எது?" என்ற கேள்வியுடனும், எதிர்பார்ப்புடனும் ஜெயனும் நிறைய பெண்களை போட்டோவில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.
பெண் வீட்டாரிடம் இவனுடைய ஒரே எதிர்பார்ப்பு எனக்கு வரப்போகும் மனைவி திருமணத்திற்குப் பின் என் அன்னையை பிரிந்து என்னை அவளுடன் தனிக்குடித்தனம் அழைத்துச் செல்லக் கூடாது என்பது மட்டுந்தான்...... ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு இவனது எதிர்பார்ப்புக்கு சற்றும் பொருந்தாமல் இருக்க ஜெயன் இன்னும் ஒரு பெண்ணுடன் திருமணம் என்ற கமிட்மெண்ட்டில் இணையாமல் ஜாலி பேச்சுலராக இருந்து வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு டூரிஸ்ட் கைய்டு அவனுடைய பிழைப்பைப் பார்க்காமல் மருத்துவமனைக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்கிறீர்களா? இதோ அந்தக் கேள்விக்கான ப்ளாஷ்பேக்கும் பின்னாலேயே வருகிறது.
"ஜெயனு.... அம்மாவ ஒருதடவ கார்ல ஏத்தி நம்ம ஊரச் சுத்திப் பாக்க ரவுண்ட்ஸ் கூட்டிட்டுப் போடா! யார் யாரையோ ஊருசுத்திக் காட்டுறதுக்குன்னு கூட்டிட்டுப் போற..... ஒன்னைய பெத்த அம்மா என்னைய ஒருநா அப்டியே காருக்குள்ள ஒக்கார வச்சு ரவுண்ட்ஸ் கூட்டிக்கிட்டுப் போவ மாட்டியா?" என்று அவனுடைய அன்னை முகிலமுதம் அவனிடம் ஒருநாள் கேட்டார்.
ஒருநாள் என்றால் வெறும் ஒருநாள் அல்ல! இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவனது அமுதாம்மா அவனிடம் இப்படிக் கேட்பது வழமை தான்!
"ஏம்மோவ்..... வெளிநாட்டுல, வெளியூருல இருந்து வாரவங்களுக்கு பரவாயில்ல.... இந்த இடம் புதுசு! பூவு, பாறை, குளிருன்னு அவுங்க பாக்கறதுக்கு நாலு புது விஷயம் இருக்கும். நம்பளக் கேளு..... பொறந்ததுல இருந்து குன்னூருலதா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கோம்!"
"இங்கிட்டு திரும்புனா பைக்காராவும் கோத்தகிரியும்.... அங்கிட்டு திரும்புனா ஊட்டியும் மேட்டுப்பாளையமும்..... இல்ல மலமேல ஏறி கீழ எட்டிப் பாத்தா கோயமுத்தூரு! இதுல புதுசா நீ பாக்குறதுக்கும், போகுறதுக்கும் என்னருக்கு அமுதாம்மா?
ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா சின்னப்புள்ள மாதிரி என்னிய காருல ஏத்தி ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போடா ஜெயனுன்னு கேக்க ஆரம்பிச்சுடுற!" என்று சடைத்துக் கொண்டு கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவர்,
"நான் பெத்தெடுத்த அழகுரத்தினமே! அம்மா உன்ட்ட காருல கூட்டிட்டுப் போவ சொல்லிக்
கேட்டா என்னவாம்? உங்கிட்ட கேக்காம வேற எவங்கிட்ட ஊருசுத்திக் காட்டுன்னு கேக்க முடியும்டா? உங்கப்பா இருக்கும்போது அடிக்கடி அவர் என்னைய கார்ல வச்சு ரவுண்ட்ஸ் கூட்டிட்டுப் போவாரு தெரியுமா?"
"எங்க போறோம்ங்குறது முக்கியமில்ல ஜெயனு! அவரு அப்ப கூட்டிட்டுப் போன மாதிரி நீயும் என்னைய மாசத்துக்கு ஒருக்க, ரெண்டுதடவ காருல கூட்டிட்டுப் போவணும் அவ்வளவுதான்!" என்று சொன்ன தன் அன்னையினுடைய ஆசை நியாயமான ஆசையாகத் தான் பட்டது ஜனமேஜயனுக்கு!
தன்னுடைய நண்பனும் முதலாளியுமான நஸாரிடம் கேட்டு அவன் மூலமாக வாடகைக்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு அன்னையை கூட்டிக் கொண்டு போன வாரத்தில் ஒருநாள் ஊர்சுற்றக் கிளம்பி விட்டான்.
அந்தப் பொல்லாத நாளில் தான் ஜெயனுடைய காரும் விபத்துக்குள்ளாகி அதனால் முகிலமுதம் இப்போது
இந்த மருத்துவமனயில் வந்து சிகிச்சை பெறும்படி ஆகி விட்டது.
ஒரு காரும், வேனும் மோதிய குறுகலான இடத்தில் மூன்றாவது காராக நின்றிருந்ததால் தான் ஜெயனுடைய வண்டிக்கும் அவனுக்கும் சிறிய அடியுடன் போய் விட்டது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் முகிலமுதத்திற்கும் பெரிதாக ஒன்றும் அடிபட்டிருக்காது!
ஜெயன் எவ்வளவு சொல்லியும் அவர் மகனுடைய பேச்சைக் கேட்காததால் வேனில் மோதிய வேகத்தில் அந்த கார் ஜெயனுடைய காரையும் இடித்து விட ஜெயனுடைய கார் லேசாக பிரண்டு விட்டது. அதனால் தான் ஜெயனின் தாய்க்கு காலில் அடியும்! ஜெயனுடைய கன்னத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டு விட்டது!
ஜெயனுடைய வாழ்க்கையில் அவன் கார் ஸ்டியரிங்கில் கைவைத்த நாளிலிருந்து நடந்த
முதல் விபத்து! அதுவும் அவனுடைய அன்னையை கூட்டிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து!
இத்தனைக்கும் அஜாக்கிரதையோ, அலட்சியமோ, இந்த விபத்துக்கான பொறுப்போ அவனிடத்தில் இல்லை..... சிவனே என்று அவன் வழியில் போய்க் கொண்டிருந்தவனை இரண்டு வண்டிகள் முட்டிக் கொண்டு அவனுடையதையும் இடித்து தள்ளினால் அவன் என்ன தான் செய்வான்?
வேன் ட்ரைவரையும், கார்க்காரனையும் கிழிகிழியென்று கிழிக்கத்தான் நினைத்திருந்தான்! அந்த விபத்தில் இரண்டு மூன்று உயிர்ச் சேதம் வேறு நிகழ்ந்தது என்று கேள்விப்பட்டவன்,
"ஆமா..... ஹில்ஸ்ல வந்து நீ முதல்ல போறியா இல்ல நானான்னு ஒருத்தனோட ஒருத்தன் போட்டி போட்டுட்டு ஏறுஏறுன்னு ஏறுனா இப்டி மேல போய்த்தான் சேரணும்!" என்று வலியில் முணங்கிய படியே உதவிக்கு இரண்டு ஆட்களை அழைத்து அன்னையையும், நண்பனுடைய
காரையும் பத்திரமாக பாதுகாத்து விட்டு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றிருந்தான்.
ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கு தான் இருக்கிறோம், நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய வேன் காரனோ, கார்க்காரனோ வந்து எட்டிக்கூட பார்க்கவில்லையே என்ற கடுப்பு அவன் மனதிற்குள் ஒரு ஓரமாக இருக்கத்தான் செய்தது.
சரி அவர்கள் செய்தது தவறாகவே இருக்கட்டுமே..... தெரியாமல் இந்த விபத்து நிகழ்ந்து விட்டது என்ற ஒரு மன்னிப்பு; நஸார் செய்த ரிப்பேர் செலவுகளுக்கான ஒரு தொகை இவற்றில் எதையாவது ஜெயன் அவர்களிடம் எதிர்பார்த்தானோ என்னவோ.....
"சரி உடு! அவங்களுக்கு நம்மள விட பெரிசா என்ன பிரச்சனையோ? நம்ம வண்டி அடிபட்டது கூட அவங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ? ஒரு ஆக்ஸிடென்ட் நடந்த இடத்துல நம்ம
இதெல்லாமா எதிர்பாத்துட்டு இருக்க முடியும்? சீக்கிரத்துல இந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து புடுங்கிக்கிட்டு வீடு போய் சேர்ந்து பொழப்ப பாக்க ஆரம்பிச்சா போதும்!" என்று நினைத்தவன் தனது நண்பன் நஸாருக்கு கூப்பிட்டான்.
"என்ன மச்சி? உனக்கு அங்க பொழுதே போகலையாக்கும்? என்னைய அடிக்கடி கூப்ட்டு என் உசுர வாங்கிக்கிட்டு இருக்க? இப்ப ஒருக்கா நா ஒங்கன்னத்துல முத்தம் குடுக்கணுமா?" என்று சிரிப்புடன் கேட்டவனிடம்,
"ஏன் உன்னோட வண்டி எனக்கு முத்தம் குடுத்து ஒரு சைட கிழிச்சு உட்டது பத்தாதாக்கும்.....? மரியாதயா நாளைக்கு காலையில நீ என்னைப் பாக்க இங்க வர்ற! வர்றப்ப கோழி சூப்பு, ஜுஸ் எல்லாம் செஞ்சு கொண்டு வர்ற! அதச் சொல்லத்தான் கூப்ட்டேன்! இப்ப வச்சுடு போன!" என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து விடுபட்டான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro