🌻 அழகி 19
"ஏம்மா..... ஒங்கிட்ட
ஒண்ணு கேக்கணுமே? இந்த ஒலகத்துல நீ ஒருத்தி மட்டுந்தான் என்னிய அழகா ஜெயன் ஸாருன்னு கூப்ட்டுட்டு இருந்த..... பரவாயில்லடா ஜெயனு, நம்பள கூட மரியாதயோட கூப்டுறதுக்கு ஒரு ஆளு இருக்குதுன்னு நெனச்சு சந்தோசமா இருந்தா, நீ இன்னிக்கு காலைல ஒன்னோட ஜாகைக்கு வந்துட்டுப் போனதுல இருந்து என்னைய வாடாங்குற, போடாங்குற, கொன்னுடுவேங்குற? ஏம்மா..... எனக்கு நீ இதுவர குடுத்த மரியாதயெல்லாம் இன்னிக்கு எங்க மாடு மேய்க்க போயிருச்சு?" என்று கவலைக்குரலில் வதனியிடம் கேட்டான் ஜெயன்.
இவனிடம் நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் இவன் நம்மிடத்தில் எதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்து ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டாள் வதனி.
"மரியாத அப்டித்தான் மாடுமேய்க்க போகும்! நீ நெனைக்கறத தான் நான் செய்யணும்னு நீ நெனச்சா, நான் பேசுறதயும் நீ கேட்டுத்தா ஆகணும்! இந்த ஒலகத்துல நா மட்டுந்தான் ஒனக்கு மரியாத குடுத்தனா ஜெயன்? வெரி ஸாரி..... தெரியாம ரொம்ப குடுத்துட்டேன்! இனிமே குடுக்க மாட்டேன். கவலப்படாத!" என்று சொன்னவளிடம் தனக்கு அவள் கொடுக்கும் மரியாதை முக்கியமே இல்லாதது போல்,
"மதியம் என்ன சாப்புடுற? டிபனா இல்ல மீல்ஸ், பெரட்டு சாதம் மாதிரியா? அதுக்கேத்த மாதிரி நான் நம்ம போற வழிய முடிவு பண்ணனும்!" என்று அவளிடம் கேட்டான் ஜெயன்.
"ம்ப்ச்! இப்ப எங்க தான் போறோம்னு சொல்லித் தொலையேன். வீட்டை விட்டு கெளம்புனதுல இருந்து
உங்கிட்ட இந்த கேள்விய நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். அதுக்கு நீ பதில் சொல்ல மாட்டேங்குற! நீ கேக்குற கேள்விக்கு மட்டும் நான் ஒடனே பதில் சொல்லிடணுமாக்கும்?" என்று அவனிடம் கேட்டு எரிச்சல்பட்டாள் வதனி.
"சொல்லாத.... ஒண்ணும் சொல்லாத! இன்னிக்கு பூரா நீயி
நீ வாயவே தெறக்காம இருந்தா எனக்கு அது ரொம்ப செளகரியந்தான்! வாய விட்டு சிரிச்சா அப்டியே சாமி மாதிரி இருக்க.... ஆனா அதெல்லாம் அடிக்கொருக்க செஞ்சுடாத; இப்டியே எப்ப பாத்தாலும் மூஞ்சிய
தூக்கி வச்சுக்கிட்டு எங்கூட சண்ட போட்டுக்கிட்டே இரு!"
"நாம எங்க போறம்முன்னு ஒங்கிட்ட நா சொல்லலையின்னா அதுக்கு ஒருக்க தனியா என்னிய திட்டுவ; மூஞ்சிய தூக்கி வச்சுக்குவ.... அவ்ளதான? வச்சுக்க போ!" என்று சொன்னவன் கடைசி வரைக்கும் இன்றைக்கு என்னவெல்லாம் செய்ய திட்டம் போட்டிருக்கிறான் என்று வதனியிடம் சொல்லவேயில்லை.
இப்படியாக அவனும் அவளும் மாறி மாறி பேசிய படியே நஸாருடைய கடைக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். வதனி ஏற்கனவே ஒரு முறை வந்த இடம் தான் இது; இருந்தாலும் அன்று போலில்லாமல் இன்று அந்த இடத்தை கொஞ்சம் சாவகாசமாக கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.
எட்டு முதல் பத்து கார்களை நிறுத்தும் வகையிலாக நஸாரின் சைனப் ட்ராவல்ஸ் சற்றே பெரிய இடமாக தான் இருந்தது. மொத்தமான ஒரு பெரிய இடத்தில் நேரில் வரும் சில பல கஸ்டமர்களுக்கு ஓனருடைய அறை என்று தெரியும் வகையில் பிளைவுட்டால் தடுக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அறையை தவிர மற்ற இடம் முழுவதும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு கட்டப்பட்டிருந்தது.
அதில் கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்க, அந்தந்த கார்களுடைய ட்ரைவர்கள் நான்கைந்து பேர் கார்களை துடைத்துக் கொண்டும், ஜாலியாக அவர்களுக்குள் ப்ரெண்ட்லி மீட்டிங்க் போட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஜெயனைப் பார்த்ததும் அனைவரும் சிரித்த முகமாக அவனுக்கு கையசைத்து டீ குடிக்கிறாயா என்று கேட்டனர். அவன் இரண்டு நிமிடங்கள் அவர்களிடம் பேசி விட்டு பின்பு நஸாருடைய அறைக்குள் வந்தான்.
டேபிளுக்கு அந்த புறமாக
அவனுடன் மரியமும் அன்று கடையில் அமர்ந்திருந்ததை கண்டு நண்பனிடம் "வாழுறடா மவனே!" என்பது போல ஒரு செய்கையை சமிக்ஞை மொழியில் காட்டினான் ஜெயன்.
"டேய்.....டேய்! நீ நெனைக்கற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல! நாலு நாளுல அத்தா இங்க வர்றாப்ல! அவருக்கு ஒன்றரை மாசம் லீவாம்! அவரு இங்க வந்தா, உங்க உம்மா என்னைய கொஞ்சம் லூசுல உட்டுடும்; அதுனால எனக்கு ஜாலின்னு சொல்லிக்கிட்டு அந்த சந்தோஷம் தாங்க முடியாம என் பீவி ரெண்டு நாளு வேலைக்கு லீவ் போட்டுருக்காங்க! அவ்வளவே தான்.... விஷயம்! நீ ரொம்ப பொங்காத!" என்று தன் நண்பனிடம் சொன்னான்.
"ஒக்காருங்க மேடம்! நின்னுட்டே இருக்கீங்களே? நீங்க இவன் வீட்ல தான் தங்கியிருக்குறதா சொன்னான். வேலை, வீடு எல்லாம் செட் ஆகிடுச்சுல்ல?" என்று கேட்டான்.
"செட் ஆகலைன்னாலும் வேற வழியில்ல நஸார் ஸார்! முகில்ம்மாட்ட நான் ரொம்ப ஒட்டிட்டேன்! அந்த வீட்ல இருக்குற மத்த இடைஞ்சலுக்காக எல்லாம் அவங்கள என்னால விட்டுட்டுப் போக முடியாது!" என்று சொன்னவளின் பேச்சை கேட்ட நஸார் கண்களால் ஜெயனிடம் "ஒன்னைய தான் இந்த பொண்ணு இடைஞ்சலுங்குறா!" என்று சொல்லி விட்டு இதழ்களுக்குள் பற்களை ஒளித்துக் கொண்டு சிரித்தான்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவள் தன்னை இடைஞ்சல் என்று சொன்னாலும் அதையெல்லாம் ஜெயன் இப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காலையில் அவள் மனம் விட்டு சிரித்த சிரிப்பின் ஒலி இன்னமும் அவனது காதுகளில் தொடர்ந்து ரீங்காரம் போல் கேட்டுக் கொண்டே இருந்தது.
என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு நண்பன் ஏன் கடைக்கு மேலே உள்ள ஆஸ்பெஸ்டாஸில் இருக்கும் தூசிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று குழம்பிய நஸார் தன்னுடைய பக்கமாய் இருந்த பேரீச்சம்பழம், பிஸ்தா, அத்திப்பழம், பாதாம், முந்திரிப்பருப்பு இவை அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு போடப்பட்டிருந்த ஒரு பெட்டியை அவள் புறமாக நகர்த்தினான்.
"எடுத்துக்கோங்க மேடம்! சாப்டுங்க!" என்று உபசரித்தவனிடம்,
"இல்ல ஸார் பரவாயில்ல இருக்கட்டும்!" என்று சிறு புன்னகையுடன் அவன் கொடுத்த சிறுதீனியை மறுத்தாள் வதனி.
"ஏங்க்கா.... பேங்க்ல நாங்க போடுற காசுக்கு மட்டும் இத்தூணூன்டு வட்டிய குடுக்குறீங்க..... ஆனா லோன் வாங்குனா மட்டும் அதுக்கு எம்புட்டு வட்டி போடுறீங்க? எங்க மூணு வண்டி இன்னும் லோன்ல தான் கெடக்கு! எப்பத்தான் நான் எங்க கடன கட்டி..... வண்டிய சொந்தமாக்கி, இந்தப் பயல நிம்மதியா தூங்க வைக்கப் போறனோ தெரியல!" என்று வதனியிடம் சொல்லி சலித்துக் கொண்டாள் மரியம்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro