🌻 அழகி 15
அன்று காலையில் பர்வதவர்த்தினி படுக்கையில் இருந்து எழாமல், அப்படியே தலையணையில் படுத்து கிடந்தபடி அறையின்
விட்டத்தை பார்த்துக்கொண்டு பனிச்சிலையாக உறைந்து போயிருந்தாள். முகிலமுதம் திரும்ப திரும்ப அவளிடம் வாதம் செய்து இந்த நாளைப் பற்றி இரண்டு மூன்று தடவைகள் அவளிடம் நினைவூட்டி இருக்கா விட்டால் கூட இன்றைய பொழுதை இவ்வளவு மனபாரமில்லாமல் கடந்திருப்பாளோ என்னவோ?
எப்போதும் எழுந்ததும் முதல் வேலையாக படுக்கையை சீராக்கி அதற்கான இடத்தில் வைப்பது, அன்றைய நாள்காட்டியில் தேதியை கிழிப்பது, ஜெயன் அவனுடைய இடத்தில் வைத்திருக்கும் செடிகளை எல்லாம் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நிற்பது, ஏதாவது பூக்கள் பூத்திருந்தால் அவைகளை கையால் வருடி அவற்றிற்கு நெட்டி முறித்து விடுவது, பிறகு மாடியிலிருந்து உதிர்ந்த இலைகள், சருகுகள் ஆகியவற்றை துடைப்பம் கொண்டு பெருக்கி விட்டு தன்னுடைய அறையையும் சுத்தம் செய்வது, குளியலறைக்கு சென்று சற்று ப்ரெஷ் ஆகி பல்துலக்கி குளித்து வருவது, குளித்தவுடன் கடனுக்காக கற்பகாம்பாள் முன்பாக இரண்டு நிமிடங்கள் கைகூப்பி நிற்பது, பின்னர் இரண்டு ஏலக்காய்களை தட்டிப் போட்டு காலை நேர தேநீருடன் கீழே செல்வது, முகிலமுதத்திற்கு செய்யும் காலை நேர உதவிகள், காலை மதியத்திற்கென பறந்து பறந்து தயாரிக்கும் உணவுகள் என எழுந்ததில் இருந்து வேலைகள் அவளுக்காக க்யூவில் நின்று கொண்டு காத்திருக்கும்.
இன்றைக்கும் எதுவும் மாறவில்லை. வேலைகள் அனைத்தும் அவளுக்காக காத்துக் கொண்டு தான் நின்றன! அவள் தான் அவற்றை செய்வதற்கு தயாராக இல்லாமல் முடங்கிப் போயிருந்தாள்.
"நீ ஒண்ணும் கவலப்படாத வது! எனக்கு வேலை கெடச்சுருக்குற 3 ஸ்டார் ஹோட்டல்ல சேலரி பேக்கேஜ்லாம் ஓரளவுக்கு திருப்தியாவே இருக்கு! என்ன ஒண்ணு..... இப்ப ஊட்டியில வேலை தேடுன மாதிரி மூணு வருஷத்துக்கு ஒருக்க நீ ட்ரான்ஸ்ஃபர் ஆகுற ஊருலயோ இல்ல அந்த ஊருக்கு பக்கத்துல இருக்குற சிட்டியிலயோ நானும் புது புது ரெஸ்டாரென்ட்டா மாறிட்டே இருக்கணும்!"
"பட் அதுவும் நல்லது தான்...... அப்பப்ப ஒரு புது ஊருக்குப் போறதுனால
நெறைய ஊரைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்ல?" என்று அவளிடம் சொல்லி அவளுடன் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவு திட்டம் போட்டவன், விபத்தில் அடிபட்ட பொழுது
அரைமணி நேரத்திற்குள் மொத்தமாக இல்லாமல் போனான் என்பதை இப்போதும் வதனியால் நம்ப முடியவில்லை.
அவர்கள் இருவரும் சென்று முப்பது நாட்களான பிறகும்
தினமும் காலையில் எழுந்தவுடன்
அவர்கள் இரண்டு பேரையும் தேடுவதும், பின்னர் நிசர்தனம் புரிந்து கண்ணீர் வடிப்பதுமாக இருந்தாலும் இன்று போல் சுத்தமாக தன்னுடைய உடலைக் கூட அசைக்க முடியாத அளவுக்கு பாரம் அவளை அழுத்தியிருக்கவில்லை.
"என்னைப் பெத்தவரு மாதிரி நீ கெட்டவனா இருந்துருந்தா கூட ஒன்னைய கொஞ்சம் ஈஸியா மறந்துருக்க முடியுமோ என்னவோ வினு; என்னைய மொத மொதல்ல பாத்த நாள்ல இருந்து, அவ்வளவு அன்பா, அக்கறையா பாத்துக்கிட்டு உன்னோட ஒவ்வொரு செயல்லயுமே காதல காமிச்சியேடா? அது எல்லாமே இப்டி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போறதுக்கு தானா......?"
"அம்மாவோட இழப்பு கூட என்னை அவ்வளவா அழ வைக்கல..... ஆனா ஒன்னைய உன் குடும்பத்துக்கிட்ட இருந்து தனியாப் பிரிச்சு கூட்டிட்டு வந்து, இப்டி கொன்னுட்டேனேடா.... கொன்னுட்டேனே!" என்று வாயால் புலம்பாமல் மனதால் நினைத்து திரும்ப திரும்ப கண்களில் கண்ணீர் வடித்தபடி கிடந்தாள் வதனி.
அன்னையாவது விபத்து நேர்ந்த இடத்திலேயே போய் விட்டார்; அவரது இழப்பை உணர்ந்து அழுத கண்ணீர் காயும் முன்னர் அவனும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவை அடைந்த அரைமணி நேரத்திற்குள் சென்று விட்டான்! அவர்கள் இருவருக்குமாக அன்று சிந்தாத கண்ணீரையெல்லாம் இன்று வரை பெண்ணவள் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக் கொண்டிருந்தாள். என்றைக்கும் இல்லாமல் இன்று சற்று அதிகமாகவே கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்தது.
எட்டு மணியளவில் அவளது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஹாலின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக அவளை எட்டிப் பார்த்தவன் அவளது நிலையைப் பற்றியெல்லாம் கொஞ்சங்கூட கவலைப்பட்டவன் போல் தெரியவில்லை. அவளைப் பார்த்து சலனமே இல்லாத குரலில்,
"இன்னும் பெட்லதா பொரண்டுக்கிட்டு இருக்கியா? இப்டித்தான் கெடப்பன்னு
நெனைச்சேன்..... வெள்ளன எந்திரிச்சி மாடியில நீயி
சுறுசுறுப்பா சுத்திக்கிட்டே இருக்குறத இன்னைக்குப் பாக்காம ஒன்னைய படுக்கையிலயே படுக்க வச்சுப் பாக்குறப்ப என்னவோ சீக்கு வந்த கோழி மாதிரியில்ல ஒன்னைய நெனைக்கத் தோணுது.....! சரி சரி..... எழுந்திரிச்சு வா! டீ குடிக்கலாம்!" என்று அவளிடம் சொல்லி விட்டு அவளை அழைத்தான்.
இரவில் ஹாலிலேயே படுக்கும் போது காற்றோட்டத்திற்காக
இந்த ஜன்னலை சற்றே திறந்து வைத்து விட்டு படுப்பது வதனியின் பழக்கம்! பெட்ரூமிற்குள் கதவை சாற்றிக் கொண்டு படுக்கையில் படுப்பதற்கும் பயமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் ஹாலிலேயே படுத்து விடுவாள்! அவளது பழக்கம் கீழே உள்ள கடன்காரனுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
"ஹவுஸ் ஓனர் ஸார்; ப்ளீஸ்.... இப்டியெல்லாம் பேசாம
கீழ போங்க! என்னால இன்னிக்கு எழுந்திரிக்கவே முடியல! இன்னிக்கு ஒருநாள் மட்டும் முகில்ம்மா வேலைய நீங்களே செஞ்சுக்கோங்க. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க!" என்று சொன்னவளிடம் பதில் ஏதும் சொல்லாமல் அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டு தன்னுடைய பைக்குள் வைத்திருந்த சாவியை வைத்து கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜனமேஜயன்.
"மிஸ்டர்.... திஸ் இஸ் த லிமிட்!
உங்களுக்கு அறிவில்ல.....? நீங்க என் வீட்டுக்குள்ள அத்துமீறி நுழையுறீங்கன்னு உங்களப் பத்தி நான் போலீஸ்ல கம்ப்ளையிண்ட் குடுப்பேன்!" என்று சொன்னவள், அவனுடைய வருகை காரணமாக
அடித்துப் புரண்டு கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து இருந்தாள்.
"போலீஸ்ல கம்ப்ளையிண்டா.....? சூப்பரு! குன்னூர் லா அண்ட் ஆர்டர் எஸ்ஐ, அப்புறம் எங்க அஞ்சாறு கான்ஸ்டபிள் இவங்க எல்லாரும் நம்ம தோஸ்துங்க தான்! சீசன் நேரத்துல அவங்க சொந்தக்காரவுங்க வர்றாங்கன்னா அவங்க தங்கறதுக்கு நம்மளத்தே
ரூம்பு போட்டு குடுக்க சொல்லுவாங்க! அவரு நம்பரே
வேணும்னா எடுத்துத் தரவா?"
"இங்க குன்னூர்ல இருக்குற ஒரு பொறுக்கி என்னைய அவனோட வீட்டுக்கு வாடகைக்கு தங்க வர்றியான்னு கூப்ட்டுட்டு, எங்கிட்ட ரொம்ப அத்துமீறி நடந்துக்கிட்டு இருக்கான் சார்! அவனை புடிச்சு ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு வெளியவே வராத மாதிரி
சிறுவர் சீர்திருத்த பள்ளியில..... ச்சீ ச்சீ..... அது கொழந்தைங்கள வைக்குற ஜெயிலோ? சென்னையில இருக்குற புழல் ஜெயில தூக்கிப் போடுங்க சார்! சூடு தாங்காமலே பயபுள்ள வெந்து சாவட்டும்னு சொல்றியா? நான் சொல்லிக் குடுத்தத ஒருவார்த்த மாறாம அப்டியே பேசணும் என்ன?" என்று அவளிடம் கேட்டபடி புருவம் உயர்த்தி, சீரியஸாக அவன் சொன்ன காவலரின் எண்ணை அவனுடைய அலைபேசியில் தேடிக் கொண்டிருந்தான் பர்வதவர்த்தினியால் கீழ் வீட்டுக் கடன்காரன் என்ற மரியாதையான அடைமொழியால் அழைக்கப்பட்ட ஜனமேஜயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro