🌻 அழகி 14
"யேய்.... ஓங்கி அப்பிருவேன் பாத்துக்க..... எப்ப பாரு வாழ உடுங்க, வாழ உடுங்கன்னுட்டு! நடந்தத மறந்துட்டு ஒரு புது வாழ்க்கைய வாழுன்னு தான்டீ நானும் உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்!" என்று அவளிடம் கோபக்குரலில் பேசினான் ஜெயன். கிட்டத்தட்ட இரைச்சலாக ஒலித்த அவனது பேச்சு காதில் விழுந்தும் தலையை நிமிர்த்தாமல் தன்னுடைய முடிவில் தெளிவாக இருந்தாள் பர்வதவர்த்தினி.
"இல்ல.... எனக்கு யாரும் வேண்டாம்! நானும் முகில்ம்மாவும் மட்டும் போதும்; நீங்க இனிமே இந்த மாதிரி மாடியில ஏறி வரவே கூடாது! நான் முகில்ம்மாட்ட சொல்லி படியை அடைச்சு கதவு போட்டுக்கப் போறேன்! எனக்கு உங்களை பாக்க வேண்டாம்; நீங்க எங்கிட்ட இப்டியெல்லாம் பேச வேண்டாம்! கீழ எறங்கிப் போங்க!"
"நான் இந்த வீட்டை காலி பண்றதுக்கோ இல்ல இங்கயே தங்குறதுக்கோ முகில்ம்மா முடிவு எடுத்தா போதும். நீங்க ஒண்ணும் முடிவெடுக்க வேண்டியதில்ல! தயவுசெஞ்சு என்னை எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கைய வாழ விடுங்க! உங்களுக்கு சீக்கிரமே ஒரு நல்ல வொய்ப் கிடைப்பாங்க...... என்னை அந்த மாதிரி உங்க பாட்னரா யோசிக்காதீங்க! அந்த விஷயம் கண்டிப்பா நடக்காது!" என்று சொன்னவளிடம் லேசான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு,
"இன்னும் கொஞ்சங்கூட வளராம சின்னப்புள்ளத்தனமாவே தான் பேசுற! நடந்துக்குற..... ஒன்னைய பாக்குறத தடுக்க படிக்கு கேட்டு போடுவியா? போடு! அதையும் நான் எகிறிக் குதிப்பேன்! மறுபடியும் சொல்றேன். தூங்குறப்ப
நல்லா பெரிய போர்வைய போத்தி நிம்மதியா படுத்து தூங்கு.
போய்ட்டு வரட்டுமா?" என்றவன் தன்னுடைய இரண்டு விரல்களில் முத்தமிட்டு அதை அவளிடம் ஊதி ப்ளையிங்க் கிஸ்ஸாக கொடுத்து விட்டு கீழே இறங்கிச் சென்றான்.
வந்ததும் தன்னுடைய அன்னையை முறைத்தவன், "அமுதாம்மா! நீ ஏன் வர வர இப்டி ஓரவஞ்சன பண்ற? அவ ஒன்னைய நல்லாப் பாத்துக்குறா! நீ அவள நல்லாப் பார்த்துக்குற. அப்ப என்னைய யாரு பாத்துக்குறது? நீ அவளுக்கு மட்டும் புண்ணுக்கு பாத்து பாத்து எண்ணெயெல்லாம் தடவி விடுற? அப்ப எனக்கு யாரு தடவி உடுவா?" என்று முகிலிடம் கேட்டு அவரிடம் சண்டை போட்டான் ஜெயன்.
"டேய்.... அது நெதமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு சாக்க வச்சுக்கிட்டு, எம்மடியில படுத்து எந்திரிக்கணும்னு நெனைக்குதுடா! அதுனால தான் நானும் அந்த நேரத்துல அந்தப்புள்ளோட தலைக்காயம் ஆறிடுச்சா என்னன்னு ஒரு பார்வ பாக்குறேன்..... அதுல உனக்கெங்க வலிக்குது? நீ எப்பப்பாரு
சும்மா சும்மா வதனிப்புள்ள பின்னாலயே போயி அவள பாடாப்படுத்தாடடா தம்பி! பாவம் அந்தப்புள்ள..... அதோட மனச கொஞ்சம் கொஞ்சமா ஒரு நிலைக்கு கொண்டு வரட்டும்!" என்று சொன்ன அன்னையிடம்,
"வரட்டுமே.... நல்லா வரட்டும்! ஆனா, நீ சொன்னத மாரி அதுக்குத்தான் அமுதாம்மா நான் அடிக்கொருக்க அவளப் பாக்க போறேன். என்னைய திட்டுக்கிட்டே, என் கிட்ட இருந்து எப்டி தப்பிக்குறதுன்னு யோசிச்சுக்கிட்டேயாவது அழுவாம இருப்பால்ல? அது தான் இப்போதைக்கு எனக்கு வேணும். நான் மேல போனப்ப கீழ உழுந்துட்டேன்மா!" என்று தன்னுடைய கன்னத்தை தடவிக் கொண்டே சொன்னவனிடம் நக்கலான சிரிப்புடன்,
"நீ உழுந்தத எல்லாம் பேப்பர்ல நியூஸா போட முடியாது! சட்டுபுட்டுன்னு குளிச்சுட்டு வேலைக்கு கெளம்பு.....!" என்றார் முகில்.
"வர வர ஒனக்கு குசும்பு கூடிப்போச்சு! இதையும் நேரம் வாரப்ப நான் கவனிச்சுக்குறேன் இரு..... ஆமா, இன்னிக்காவது நம்ம மேல் வீட்டு மேடம் கொழம்பு, வெஞ்சனத்த எல்லாம் சுருக்குன்னு வச்சுருக்குறாளா இல்ல வழக்கம் போல நாமதே அதுக்கு வைத்தியம் பாக்கணுமா?" என்று கேட்டுக்கொண்டே அன்னையினுடைய கைக்கெட்டும் தூரத்தில் இருந்த டேபிளில் வைக்கப்பட்டிருந்த சட்டிகளில் இருந்த குழம்பு பொரியல் இவைகளை எல்லாம் திறந்து, அவைகளில் சிறிதளவை கரண்டியால் உள்ளங்கையில் எடுத்து போட்டு சுவை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.
"பரவால்ல! சொன்ன மரியாதைக்கு கொழம்பு கொஞ்சம் சுர்ருன்னு இழுக்குறாப்ல செஞ்சு வச்சுருக்கா புண்ணியவதி!" என்று மெச்சிக் கொண்டான்.
"ஆமா ஒருத்தி நமக்கு வக்கனையா செஞ்சு வச்சா அத குடிச்சுப் பார்த்துட்டு இதையெல்லாம்
ஏன் பேச மாட்ட நீயி? ஜெயனு.... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பேசணும்னு நெனச்சேன். கதவ சாத்திட்டு வாயேன்!" என்று சொன்ன அன்னையிடம்,
"கதவ சாத்துனாப்புல நாம இப்ப ரகசியம் பேசிற முடியுமா......? இந்தா ரெண்டு நிமிஷத்துல ஒனக்கு டாட்டா சொல்ல அவ கீழ எறங்கி வந்துடுவா அமுதாம்மா!
முப்பதா நாத்து காரியந்தான? அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்னு சொல்லி அந்த லூசு அடம் பிடிக்குது..... அவ கிட்ட பேசிட்டு, உனக்கு அதுக்கு மேல என்ன செய்றதுன்னு தெரியல! அதத்தான சொல்ல நெனச்ச?" என்று கேட்டான் ஜெயன்.
"டேய்.... நான் ஒங்கிட்ட பேசவே ஆரம்பிக்கல! அதுக்குள்ள நீயி நான் உங்கிட்ட என்ன பேச வந்தேன்னு சரியா சொல்லிபுட்ட....
போறப்ப, வாரப்ப ஒத்த காத இங்கணயே தான் வச்சிருப்பியாடா நீயி? அதுனால தான் ஒன்னைய பாத்தாலே அந்த வதனிப்புள்ள தெறிச்சு ஓடுது!" என்றார்.
"ஆமா; அவ என்னையப் பாத்து தெறிச்சு ஓடி இங்க அஞ்சாறு ஆச்சு! அம்மா, அவளோட அம்மாவுக்கும், அந்த பையனுக்கும் சாந்தி செய்யுற விஷயத்த நான் பாத்துக்குறேன். நீ எனக்கு ஏத்துக்குட்டு அவ கிட்ட என்னத்தயாவது பேசி வச்சுடாத! அவ ஒரு நிலைக்கு வார வரையில நீ அவளுக்கு பிடிச்ச முகில்ம்மாவாவே இரு...... நீங்க ரெண்டு பேருமா ஒக்காந்து காலையில சாப்பாட்ட சாப்ட்டீங்களா?" என்று கேட்டவனிடம்,
"சாப்ட்டோம்யா! நீயும் குளிச்சுட்டு வந்து சாப்புடு..... தோச மட்டும் நீயே ஊத்திக்க!" என்று சொன்னார் முகிலமுதம்.
"வேலையில்லாம அக்கடான்னு சுத்திக்கிட்டு, நம்ம கையால நாமளே தோசை சுட்டு சாப்புடுறது எவ்ளோ சொகமாயிருக்கு.... நெதம் இப்டி நெளிச்சுக்கிட்டே கெளம்புனா எவ்வளவு நல்லாயிருக்கும். வரிச கட்டி நிக்குற வேலை தான் அதுக்கு விடமாட்டேங்குது! ஹூ.....ம்! ஒண்ணு கிடைக்கணும்னு பாத்தா, இன்னொன்னு கெடைக்காது போலிருக்கு. நான் போயிட்டு குளிச்சுட்டு வந்துடுறேன்மா!" என்று அன்னையிடம் சொல்லி விட்டு குளியலறை நோக்கி நடந்தான் ஜெயன்.
இவ்வளவு வேலைகள் செய்து, தன்னுடைய சக்திக்கு அதிகமாக
உழைத்து இவ்வாறு காசை சேர்ப்பது ஜெயனுடைய இயல்பே அல்ல..... ஓட்டுநர் வேலையில் அவனுக்கு கிடைக்கும் பனிரெண்டு முதல் பதினைந்தாயிரத்திலேயே போதுமென்று நிம்மதியாக இருக்கலாம்! தாய்க்கும், மகனுக்கும் வாழ்க்கையை எளிய முறையில் வாழ அந்த அளவிலான பணமே போதுமானதாக தான் இருந்தது.
ஜெயன் திருமணத்திற்காக பார்த்த சில பெண்களின் அதிக அளவிலான எதிர்பார்ப்புகள் தான் அவனை இத்தனை வேலைகளை தலையில் போட்டுக் கொண்டு ஓடச் செய்தது. இப்போது அவன் மனதிற்குள்ளாக நினைக்கும் காரிகை நல்ல வேளையாக அப்படி பணத்திற்காக அவனை நைய்த்து எடுக்கும் பெண்ணாக இல்லாமல் இருக்கிறாள்!
மூன்று வாரங்களாக இந்த வீட்டிற்கு தேவைப்படும் காய்கறி மளிகைக்கு அவள் அவனிடம் பணம் வாங்கவில்லை. மாதம் பிறந்ததும் அவளிடம் அவனும் வாடகை என்ற ஒன்றை வாங்கப் போவதுமில்லை. எப்படி யோசித்துப் பார்த்தாலும், இத்தனை பெண் பார்த்த அனுபவத்திற்கு பிறகு நான் உனக்கானவளை வேற்றூரில் இருந்து அனுப்பி வைக்கிறேன் என்று கடவுள் தனக்காக அனுப்பிய முதல் விருப்பத் தேர்வாக தான் பர்வதவர்த்தினியை பார்த்தான் ஜனமேஜயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro