Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 13

"மிஸ்டர் ஜனமேஜயன்..... நீங்க தைரியமான ஆளா இருந்தா, பெட்ஷீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு பேசாம, எம்மொகத்த பாத்து பேசுங்க. அப்புறமா கண்டிக்குறதெல்லாம் வச்சுக்கலாம்! இப்ப கொஞ்ச நேரம் வெளிய இல்லன்னா பெட்ரூமுக்குள்ள போய் இருக்கீங்களா? எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு!" என்று அவனிடம் சொன்னாள் வதனி.

"இல்லமா.... நான் என்ன சொல்ல வந்தேன்னா..... நீ வச்சுருக்குற
சின்ன பெட்ஷீட்ஸ் எல்லாம் இந்த ஊரு குளிருக்கு ஒத்துவராது! நான் வேணும்னா உனக்கு ரஜாயை மேல கொண்டு வந்து குடுக்கட்டுமா?" என்று தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு அவளிடம் கேட்டான்.

"மொதல்ல எழுந்திரிச்சு போயி பல்ல வெளக்குடா! பெட்ஷீட் சண்டையெல்லாம் அப்புறமா போடு! ரூவா வார வேலையின்னா அத மட்டும் ஓடி ஓடி செய்றது... ஆனா சொந்த வீட்ல மட்டும் அந்த மாதிரி சுத்தப்படுத்துற வேலைய ஒருநாகூட செய்றது கெடையாது.... இந்தப்புள்ளையும் ஒன்னைய மாதிரி அழுக்கு பாண்டையா இருக்கும்னு பாத்தியா? போடா போ!" என்று சொன்ன தன்னுடைய அன்னையிடம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு,

"என்னைய பாத்து இப்டி பேச உனக்கு அமுதாம்மா மனசு வந்தது?
என்னென்ன வார்த்தயெல்லாம் சொல்லிட்ட நீ?" என்று சோகத்துடன் பாவமாக கேட்டான் ஜெயன்.

"இன்னும் அசிங்கமா ஏதாவது சொல்லிறப் போறேன். ஒரு பொம்பளப்புள்ள நிக்குது! அதான் கம்முன்னு இருக்கேன்! மரியாதயா வெளிய போயிரு!" என்று விரட்டிய தாயிடம்,

"நிழலோட அருமை வெயில்ல தான் அமுதாம்மா தெரியும். இந்த புதுப்புள்ள எப்ப வேணும்னாலும் உன்னிய உட்டுட்டுப் போயிரலாம்! நாந்தான் உங்கூடவே எப்பவும்......!" என்று மிகவும் உணர்ச்சிகரமாக பேசியவனிடம் கைகாட்டி அவன் பேச்சை நிறுத்தினார் முகிலமுதம்.

"பாரு என்னோட மனக்குமுறல உன்னாலயே பொறுக்க முடியல பாத்தியா?" என்று ஆதங்கத்துடன் கேட்க தன்னுடைய மகனின் பேச்சில் எரிச்சலுடன் பல்லைக் கடித்தார் முகில்.

"சத்தியமா இதுக்கு மேல உன் கோணங்கித்தனத்த என்னால பாக்க முடியல! அதான் போதும்னு சொன்னேன். வெளிய போ ராசா!" என்று சொன்னவரின் பேச்சைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வந்து வதனியின் கண்களின் ஓரம் சுருங்கியது.

"இந்தப்புள்ளையெல்லாம் என்னைய பாத்து சிரிக்குற அளவுக்கு பேசிட்டல்ல நீ? நா அப்டியே போறேன் போ!" என்று தன்னுடைய அன்னையிடம் சொல்லி விட்டு படுக்கையிலிருந்து எழுந்து விருட்டென வெளியேறினான் ஜெயன்.

இந்த லூசுப்பய பேச்சால நேரம் தான் போயிடுச்சு! வதனி வாடா கண்ணு!" என்று அழைத்தவரிடம் தலையசைத்த வதனி முகிலமுதத்திற்கு தேவையான உதவிகளை செய்து விட்டு அதற்கு பின்னர் அன்றைய உணவுக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எட்டரை மணியளவில் வதனி வேலைகளை முடித்து விட்டு, பேங்கிற்கு கிளம்ப தயாராக மேலே செல்கையில் தன் தலையில் பெரிய ரஜாயை வைத்துக் கொண்டு ஜெயனும் அவள் பின்னாலேயே மேலே ஏறினான்.

"தேக பலம் தா என்றால் அவனும்
தேகத்தை தந்திடுவான் - ஐயப்பா
பாத பலம் தா என்றால் அவனும்
பாதத்தை தந்திடுவான் - ஐயப்பா"

என்று ஒவ்வொரு படிகளும் ஏறுகையில் ஐயப்பா போட்டுக் கொண்டு வந்தவன், அவளது அறை வாசலில் இறங்குகையில் ஒரு படியை விட்டு விட்டு இறங்கியதால் "ஐயோயப்பா!" என்று கத்தியபடி கீழே விழுந்திருந்தான்.

அவன் ஒருபக்கமாக கிடக்க, அவனை பாதி மூடிய படி அவனது மேல் புறத்தில் ரஜாய் விழுந்து கிடந்தது.

"வேண்டா, வேண்டாமுன்னா! அத மீறி இத தூக்கிட்டு வந்ததுக்கு இப்டியா பெப்பரப்பேன்னு கீழ விழுந்து வாரணும்? யப்......பா......!" என்று முணங்கிய படியே தன்னுடைய இடுப்பை தேய்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"ம்ப்ச்......! இவன யாரு இதெல்லாம் கேட்டாங்க? இப்ப இத கொண்டு வந்து குடுக்கும் போது இப்டி விழுந்து வாங்கிக்க சொன்னாங்க....? ச்சை..... என் உயிர வாங்குறதுக்காகவே வந்து பொறந்து தொலைச்ச ப்ராடெக்ட்!" என்று முணங்கிய படி அவனை முறைத்தவளிடம்,

"ஏங்க..... ஏதோ வையுறீங்கன்னு தெரியுது..... ஆனா தூக்கி உட்டு உதவி பண்ணிட்டு வையலாம்ல? நான் பாவம்ங்க!" என்று வலியால் முணங்கிய குரலில் சொன்னவனிடம் கைகொடுத்து அவனை தூக்கி விட்டவள்,

"மிஸ்டர் ஜனமேஜயன்.... திஸ் இஸ் த லிமிட்! நீங்க என்ன தான் ஐடியாவுல இருக்கீங்க?" என்று உஷ்ணக்குரலில் கேட்டாள்.

"பத்து நிமிஷம் பேசலாமா உங்க கிட்ட? நீங்க தான் லன்ஞ்ச் கட்டி, பேக் எடுத்து வச்சு ரெடியாகிட்டீங்களே.... ஒருக்க மூஞ்சி கழுவிட்டு, கெளம்பணும் அவ்ளோதான?" என்று கேட்டவனிடம் பெருமூச்சுடன்,

"எனக்கு இன்னிக்கு வேலைக்கு லேட் ஆனாலும் பரவாயில்ல! நீங்க சொல்ல நெனச்சத சொல்லித் தொலைங்க..... என்னோட குடும்பத்துல ரெண்டு பேர் செத்து இன்னும் அந்த ரத்தக்கறை கூட காய்ஞ்சு போயிருக்காது! அதுக்குள்ள நீங்க இப்டி என் பின்னாலயே வர்றது, டெய்லி ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக்கிட்டு என் ரூமுக்குள்ள வர்றது இதெல்லாம் தப்புன்னு தோணலையா உங்களுக்கு?" என்று கேட்டவளிடம்,

"தோணலங்க!" என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான் ஜெயன்.

"யோவ் நீ என்ன லூசா? நான் சொல்லிட்டே இருக்கேன்......! நீ என்னடான்னா.......!" என்றவளை,

"ஷு.....!" என்று தன் வாயில் விரல் வைத்து சத்தமிட்டு அவளது பேச்சை நிறுத்தியவன்,

"ஆமா! ஒங்குடும்பத்துல ரெண்டு பேரு செத்துப் போயிட்டாய்ங்க.... அதுக்கென்ன இப்ப? நீயும் அவிய்ங்க கூடவே போகப் போறியா? இல்லல்ல..... தப்பிப் பொழச்ச இந்த வாழ்க்கைய நல்லபடியா வாழணுமில்ல? இப்டியே அழுது, கரைஞ்சு, யாரையும் பக்கத்துலயே சேக்காம, போயி சேரப் போறேன்னு சொல்றதுக்கு ஒனக்கு ஒண்ணும் எழுவது வயசு ஆகல..... முப்பது தான் தெரியும்ல?" என்று சொன்னவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள் வதனி.

"ஒன்னிய மாதிரி எனக்கு ரொம்ப சரியா எல்லாம் பேச தெரியாது. மனசுக்குள்ள இருக்குறது அப்டியே வெளிய வரும் அவ்ளோதான்........ தெரிஞ்சோ, தெரியாமலோ நான் பாத்த பொண்ணுங்க கிட்ட எல்லாம் இல்லாத ஒரு கொணம், உங்கிட்ட தானா அமைஞ்சிருக்கு. என்னைக்கு நீ எங்கிட்ட உன் மனசு கஷ்டத்த சொல்லி வருத்தப்பட்டு கண்கலங்குனியோ, அன்னைக்கு இருந்து நீ என்னைய ஒருவார்த்த கேக்காம எம்மனசுக்குள்ள எறங்கி சப்பளம் போட்டு ஒக்காந்துட்டு இருக்க!"

"எனக்குப் பிடிச்ச கொணத்தோட இருக்குற ஒன்னைய நான் என் தங்கச்சின்னுலாம் சொல்லி என்னைய நானே
ஏமாத்திக்க முடியாது! ஒன்னைய புடிச்சிருக்கு! ஒன்னைய மட்டுந்தா புடிச்சிருக்கு! ஒன்னைய பாப்பேன்; ஒங்கிட்ட பேசுவேன்; ஒரு வருஷம் போகவும் ஒன்னைய தான் கல்யாணமும் பண்ணிக்குவேன்! எங்கிட்ட அந்த உறுதி இருக்கு; என்னைய எப்பவும் விரும்பவே மாட்டன்னு உனக்கு உறுதி இருக்கா?" என்று கேட்டவனிடம் கையெடுத்து கும்பிட்டவள்,

"ப்ளீஸ்.... இப்டியெல்லாம் பேசாதீங்க ஸார்! என்னைய கொறஞ்ச பட்சமா மனநிம்மதியோடவாவது வாழ உடுங்க!" என்று கேட்டாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro