🌻 அழகி 12
"யேய் ஜெயனு.... எந்திரிடா! இன்னிக்கு காலையில ஒரு வேலைக்கும் கெளம்பிப் போகலயாடா நீயி? மணி ஆறாச்சு! இன்னும் குப்புறப் படுத்து கெடக்க?" என்று அவனிடம் வார்த்தையால் சுப்ரபாதம் பாடிய தன்னுடைய தாயின் குரல் கேட்டு அரைக் கண்களைத் திறந்து பார்த்து,
"இன்னிக்கு எங்கயும் வேலயில்ல; அதுனால எனக்கு ஒரு டம்ளர் பால் ஆத்தி வச்சுட்டு எட்டுமணிக்கு அப்புறமா எழுப்பிஉடு அமுதாம்மா!" என்று சொன்னவன் பின் அவனது ரஜாயை நன்றாக போர்த்திக் கொண்டு சுகமாக படுக்கையில் சுருண்டு கொண்டான்.
"இன்னும் செத்த நேரத்துல வதனிப்புள்ள கீழ எறங்கி வந்துடும்! இவேன் அதுக்குள்ள படுக்கையில இருந்து எழுந்துரிச்சு, வெளிய போயிருவான்னு பாத்து இழுத்து படுத்துக்கிட்டு அலும்பு பண்றானே? பயலுக்கு இன்னிக்கு காலைல எதுவும் வேலயில்ல போலிருக்கு!" என்று நினைத்த முகிலமுதம் படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து அமர்ந்து, தன்னுடைய மூச்சுப்பயிற்சி, கைகள் மற்றும் கழுத்துக்கான சிறிய வொர்க் அவுட் இவற்றை எல்லாம் செய்து முடித்திருந்தார்.
தன்னுடைய வீட்டில் தங்க வந்ததற்காக அந்தச் சின்னப் பெண் பர்வதவர்த்தினி தனக்காக பாவம் பார்த்தே அவளால் முடிந்த அளவு உதவிகளை தனக்காக செய்ததாக நினைத்தார் முகிலதமும்.
அவளோ அவரிடம், "மனோம்மாவும் முகில்ம்மாவும் எனக்கு ஒண்ணு தான்! அவங்களும் இப்டிதான்! எங்கிட்ட இருந்து ஒரு ஹெல்ப் கூட வாங்கிக்க கூடாதுன்னு கடைசி வரைக்கும் நெனச்சாங்க. அப்டியே நீங்களும் நெனச்சீங்கன்னா, நான் இந்த வேலைய விட்டுட்டு சென்னைக்கே போயிடுவேன் முகில்ம்மா!" என்று சொல்ல ஒருதடவை பதறியவர் தான்.....
அதற்குப் பின்னர் அவள் செய்யும் அத்தனை விதமான உதவிகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார். பல்துலக்கிய எச்சில் தண்ணீரை அவளிடம் தரும்போதும், அவள் தனக்கு பெட்பேன் வைக்கும் போதும், குளிக்க வைக்கும் போதும், குன்றிக் கூசுபவரிடம் இயல்பாக எதையாவது பேசிக் கொண்டே அவரது குன்றலை கவனிக்காதது போல் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டுப் போய் விடுவாள் வதனி.
"இதெல்லாம் உனக்கு தேவையா கண்ணு? நா ஜெயன இதுக்கெல்லாம் வேற ஆளு பாக்க சொல்றேன்டா தங்கம்... உனக்கென்ன தலையெழுத்தா?" என்று சில நேரங்களில் அவளிடம் கேட்பவரிடம்,
"வேற ஆளுக்கு குடுக்குற சம்பளத்த எனக்கு குடுங்க முகில்ம்மா..... நீங்க தர்மசங்கடப்படுற அளவுக்கு இந்த வேலையில கஷ்டம் எதுவும் இல்ல! ஸோ ப்ளீஸ்..... இத நான் செய்ய வேண்டாங்குற மாதிரி யோசிக்காதீங்க!" என்று சொல்லி புன்னகைத்த படி விஷயத்தை முடித்து விடுவாள்.
சரி...... காலைத் தானே அசைக்க முடியாது? மற்றபடி என்னால் செய்ய முடிந்த சிறு சிறு வேலைகளை செய்வேன் என்று வதனியின் தலைக் காயத்தை பஞ்சால் துடைத்து அதற்கு ப்ளாஸ்டர் இட்டு விடுவது, மதியம் அவள் வங்கிக்கு கொண்டு செல்லும் லன்ஞ்ச்க்கு முருங்கைக்கீரை ஆய்ந்து தருவது, பொரியல், சாம்பார் இவற்றுக்கான காய் வெட்டித் தருவது, வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி தருவது, அவளது நொறுக்குத்தீனி டப்பாவுக்கு கடலைப்பருப்பில் தோல் உரித்து தருவது, சட்னிக்கு தேங்காய் சில் எடுத்து தருவது என்று உட்கார்ந்து கொண்டே செய்யும் வேலைகளில் தன்னால் பர்வதவர்த்தினிக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அவ்வளவு உதவியையும் டேபிளில் வைத்தே செய்து கொடுப்பார் அந்தப் பெண்மணி.
வதனிக்கும் மேலே வைத்து சமையல் செய்வதைக் காட்டிலும், கீழே முகில்ம்மாவுடன் வேலை செய்யும் போது அவரது பாதி வேலைகளால் சமையல் சட்டென முடிந்து விடுவது போன்ற ஒரு உணர்வு! முக்கியமாக மேலே இருப்பதை விட கீழே இருந்தால், தனிமை அவளை தாக்கி கண்கள் சிவக்க அழ வைக்காது! அதனால் காலையில் எழுந்து பல்துலக்கி குளித்தவுடன் ஆறு ஆறே காலுக்கெல்லாம் கீழே இறங்குபவள் எட்டு எட்டரைக்கெல்லாம் முகில்ம்மாவின் டேபிளில் அன்றைய காலை மதிய உணவு அனைத்தையும் ஒழுங்குபடுத்தி அடுக்கி வைத்து விடுவாள்.
அவளது உதவிகள் போக
முகிலின் வீட்டுக்கு இரண்டாவது வீட்டில் இருக்கும் நீண்ட கால தோழி சாந்தலெஷ்மி என்பவர் முகிலிடம் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவருக்கு உதவி ஏதாவது வேண்டுமென்றால் செய்து விட்டு செல்வார்.
இப்படியாக தனது ஹவுஸ் ஓனரின் வீட்டில் முறைப்படுத்தப்பட்ட வகையில் வேலை பார்த்த
பர்வதவர்த்தினிக்கு வடையை சாப்பிடும் போது நடுவில் வரும் முக்கிய இடைஞ்சலான பச்சை மிளகாய் போல் அவ்வப்போது வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான இடைஞ்சல் இன்று கட்டிலில் இழுத்து மூடிக் கொண்டு படுத்திருந்தது.
பொதுவாக இந்த நேரங்களில் பெரும்பாலும் அவன் வீட்டில் இருப்பது கிடையாது. ஆறு மணிக்குள்ளேயே கிளம்பி வெளி வேலைக்கு சென்று விடுவான். முக்கியமாக கேரட்டை கழுவி சுத்தம் செய்து, அதன் லோடுகளை லாரியில் ஏற்றும் வேலைக்கு தான் செல்வான் என்று முகில் சொல்லியிருக்கிறார். இந்த குளிரில் எப்படித்தான் வெளியில் சென்று வேலை செய்வானோ என்று ஒரு நொடி அவனுக்காக பாவப்படுபவள், அதற்கு பின்னர் தோள்குலுக்கி விட்டு தன்னுடைய வேலையைப் பார்க்க போய் விடுவாள்.
இன்று அவனுக்கு அவன் வழக்கமாக செய்யும் வேலை இல்லை போலும்..... கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
ஏழு மணிக்குள் முகில்ம்மாவின் வேலைகளை முடித்தால் தான் அவள் எட்டரை மணிக்குள் சமையல் வேலைகளை முடிக்க முடியும். இதில் இவனை ஹாலில் வைத்துக் கொண்டு அவள் எப்படி எல்லா வேலைகளையும் முடிப்பது என்று நினைத்தவள் முகிலிடம்,
"என்ன முகில்ம்மா.... உங்க பையனுக்கு இன்னைக்கு நல்ல தூக்கமா? இன்னும் பெட்ல இருந்து எழுந்திரிக்க மனசு வரல போலிருக்கு?" என்று கேட்டாள்.
"நானும் அப்பத புடிச்சு அவன உசுப்பிக்கிட்டு தான்டா இருக்கேன் வதனி... பயபுள்ள எழுந்திரிப்பனான்னு சண்டித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கு! ஒரு க்ளாஸ் தண்ணிய புடிச்சு அவேன் மூஞ்சில ஊத்து; அப்பத்தான் எழுந்திரிச்சு ஒக்காருவான்!" என்று சொன்னார் ஜெயனுடைய அன்புக்குரிய தாயார்.
"எப்படியும் அவர வச்சுக்கிட்டு என்னால உங்களோட வேலையெல்லாம் பாக்க முடியாது. அதுனால இப்ப நான் அவர எழுப்பி விடத்தான் போறேன் முகில்ம்மா!" என்று சொன்னவள் ஒரு முதுகு சொறியும் குச்சியால் அவனது போர்வையை மெல்ல விலக்கினாள்.
"ஹலோ ஜெயன் ஸார்..... தூங்குனது போதும்; எழுந்துரீங்க! குட்மார்னிங்!" என்று சொன்ன வதனியிடம்,
"குட்மான்னிங்லாம் நல்லாத்தான் இருக்கு.... ஆனா சொல்ற பேச்ச தான் கேக்க மாட்டேங்குறீங்க
நீங்க என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க? சொல்ல சொல்ல கேக்காம பெட்ஷீட் எல்லாம் தொவைச்சு மாடியில தொங்க விடுறீங்க? இதென்ன சென்னையில இருக்குற மயிலாப்பூரா? குன்னூருமா..... குன்னூரு! இங்க நாங்கல்லாம் ஒரு சீசனுக்கு போர்த்துன போர்வைய அடுத்த சீசன்லதா தொவைப்போம். நீங்க மட்டும் என்ன வாரா வாரம் பெட்ஷீட்ட தொவைக்குறீங்க? இத நான் வன்மையா கண்டிக்குறேன்!" என்று போர்வைக்குள் இருந்து தெளிவான குரலில் பேசினான் ஜெயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro