Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 1

குன்னூர் நகரின் அரசு லாலி மருத்துவமனை அந்த மாலை நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்தரை மணியளவிலேயே கார்மேகங்கள் சூழ்ந்த வானம் சற்று இருட்டி மிரட்டிக் கொண்டிருந்தது.

மருத்துவமனை மலைவாச ஸ்தலத்தில் அமைந்திருந்தால் ஒரு ஏற்றத்தில் ஏறித் தான் பின்னர் அதன் நுழைவாயிலை அடைய முடியும். அந்த ஏற்றத்தின் வழி மருத்துவமனைக்கு செல்லும்
சுவரெல்லாம் பாசி படிந்து, சிறிய செடிகளால் மண்டிக் கிடந்தது.

அரசு லாலி மருத்துவமனை குன்னூர் நூற்றாண்டு வளைவு என்ற தாங்கியையும், ஹாஸ்பிடலுக்கு வெளியே நின்றிருந்த ஒரு ஆம்புலென்ஸையும் பார்த்துக் கொண்டே மருத்துவமனையின் உள்ளே சென்றான் ஜனமேஜயன்.

அவனுடைய இடது கன்னத்தில் சதை கிழிந்து அதற்கு ஒரு கூட்டல் குறி போட்டு விட்டிருந்தார்கள். ஒருவாரத்திற்கு பிறகு இப்போது தான் சற்று வலியும் குறைந்து, தோலும் மேவி ஒட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தது.

சும்மாவே அவனுடைய புரொஃபைலில் பெண் வீட்டார் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அவன் கன்னத்தில் விழுந்தது ஆயிரத்து ஒன்பதாவது ஓட்டை!

மருத்துவமனைக்குள் சென்றதும் ஒருவிதமான எரிச்சல் ஜெயனை ஆட்கொண்டது. ஆட்கள் யாருடைய மீதும் அல்ல..... மனிதர்களை பாடாய் படுத்தி எடுப்பதில் இந்த காலத்து நோய்களுக்கு அப்படி என்ன தான் சந்தோஷமோ தெரியவில்லை என்று நினைத்து நோய்கள் மீது தான் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தான்.

அப்படி அவன் எரிச்சலடையும் அளவிற்கு நூற்றுக்கணக்கான மனிதர்கள் நோயுடனும், வலியுடனும், நோய் கொடுக்கும் நிறைய உபாதைகளுடனும் அவற்றிற்கான நிவாரணம் தேடி
மருத்துவர்களைப் பார்ப்பதற்காக அலைந்து கொண்டிருந்தனர்.

காரிடாரை தாண்டி சென்ற ஒரு பெரிய அறையில் வரிசையாக கிடந்த பெட்டில் மூன்றாவதாக இருந்த படுக்கையில் ஜெயனின் அன்னை முகிலமுதம் காலில் கட்டுடன் அயர்ந்து போய் படுத்திருந்தார். ட்ரிப்ஸ் முடிந்து கையை சற்று ஓய்வாக விட்டு விட்டு சென்றிருந்தனர்.

அதற்கு பிறகு வலி நிவாரணத்திற்காக ஊசியோ, மாத்திரைகளோ கொடுத்து இருப்பார்கள் போலும்! தனது அடிபட்ட காலை தலையணையின் மீது வைத்து ஒரு பக்கமாக சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

இப்போது தன் அன்னை தூங்கினால் இன்று இரவு எல்லாம் இருவரும் முணுமுணுத்த குரலில் கதை தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். சரி பரவாயில்லை. எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது தானே தூங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு நின்றிருந்தவன் மனதிற்குள்ளாக ஏதோ அலாரம் அடிக்கவும் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

"வந்துட்டாய்யா..... வந்துட்டாய்யா!
பீரங்கிகுண்டு வந்துட்டாய்யா! இப்ப வழக்கமா சொல்ற ஒரு டயலாக்க சொல்லி இங்கிருந்து நம்மள ஆடு, மாடப் பத்துற மாதிரி பத்தி உடுவாளே?" என்று நினைத்த நினைப்பு முடியும் முன்னரே,

"ம்ஹூம்! என்ன இங்க இத்தன கூட்டம்? டாக்டரு ரவுண்ட்ஸ் வர்ற நேரம்! இப்டி கும்பலா கயகயன்னு கத்திக்கிட்டு எல்லாம் நிக்கக்கூடாது! வெளிய போங்க முதல்ல; காமன்னேரம் கழிச்சுத்தா உள்ள வரணும்!" என்று அனைவரையும் பொதுவாக பார்த்து சொன்ன அங்கிருந்த செவிலிருடைய அதிகாரக் குரலில்,

"டேய் ஜெயனு.... தேவையா இந்த வசவு? ஒழுங்கா வாரப்பவே கடைக்குப் போயிட்டு நிதானமா  ஒரு பால வாங்கி வயித்துல ஊத்திட்டு வந்துருக்கலாம்ல நீயி? இப்பத்தான் எங்கம்மாவ பாக்க என்ட்ரி குடுத்தேன்.....!"

"அதுக்குள்ள இந்தம்மாவுக்கு பொறுக்கல! சரி உடு..... இந்த அவமானமெல்லாம் நம்ம வாழ்க்கையில ஜகஜந்தான? வா அப்டியே காத்தாட வெளிய போயிட்டு வருவம்!" என்று அவனுடன் அவனாகவே பேசி அவனை அழைத்துக் கொண்டு அவனே தன்னுடைய அன்னையை சேர்த்திருந்த வார்டில் இருந்து வெளியே சென்றான்.

அவனுக்கென இருக்கும் ஒரே ஒரு சொந்தமும் காலில் அடிபட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்! தினமும் இப்படி டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வரும் நேரத்தில் நோயாளிகளின்
அட்டெண்டர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி அந்த பெரிய ஹாலில் இருந்து விரட்டித் தான் விட்டுவிடுகிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான்.....

இந்தப் பெருங்கூட்டம் அவர்களுடைய வேலைக்கு இடைஞ்சலாக இருப்பதால் அப்படி செய்கின்றனர் என்று வைத்துக் கொண்டாலும் தன்னுடைய மரியாதையை தானே காப்பாற்றிக் கொள்ள நினைத்து தான் ஜனமேஜயன் எப்போதும் ஒரு டம்ளர் பாலை வாயில் ஊற்றிக் கொண்டு வர இந்த நேரத்தில் வெளியே சென்று விடுவான்.

இன்று அந்த வழக்கத்தை மறந்ததால் மருத்துவமனை பணியாளர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டும் விட்டான்! மருத்துவமனைக்கே உரித்தான ஒரு பினாயில் கலந்த நெடி மூக்கில் ஏறுகிறது. நாமும் ஜெயனுடனே சென்று சற்றுநேரம் வெளிக்காற்றில் நின்று விட்டு அவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

ஜனமேஜயன் எனும் அவனுடைய பெயர் ஏதோ ஒரு அரசரின் பெயராம்! அவன் தாய்க்கும், தந்தைக்கும் அந்தப் பெயர்
மிகவும் பிடித்திருக்க பள்ளிக்கூடத்தில், காலேஜில் எல்லாம் மேஜை, டெஸ்க்கு என்றெல்லாம் பட்டப்பெயர்களை சுமந்து கொண்டிருந்து விட்டு, இப்போது அனைவருக்கும் ஜெயனாகிப் போனான்.

ஆறரடிக்கு ஒரு இன்ஞ்ச் கம்மியான உயரம், அவனுடைய பகுதியில் ஸ்பெஷலாக கிடைக்கும் டார்க் சாக்லேட் போன்ற நிறம், கண்ணனுக்கு இருப்பது போல் வசீகரமான பெரிய விழிகள், எடுப்பான மூக்கு, கவர்ச்சிகரமான சிரிப்பை உதிர்க்கும் பற்கள், உழைத்து உரமேறிய உடம்பு என இந்த முப்பத்தி இரண்டு வயதிலும் நம் ஜெயன் குன்னூர் அழகன் தான்!

அரசு வேலையிலோ இல்லை தனியார் வேலையிலோ சேரும் அளவிற்கு பிஏ ஹிஸ்டரியில் அவன் யோக்கியமாக படிக்கவில்லை என்றாலும், அதைப்பற்றி ஜெயன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தாத்தா நூறுகளில் சம்பாதித்தார்! அப்பா ஆயிரங்களில் சம்பாதித்தார்! சரியான படிப்பில்லாமல் இருந்தாலும்
தான் ஐந்து இலக்கங்களில் சம்பாதிக்க முடியாதா என்ன என்ற மெத்தனம் அவனுக்கு!

ஒரு வேலை என்று இல்லாமல் ஆஃப் சீசனுக்கு ஒன்று, சீசன் நேரத்தில் ஒன்று என மூன்று நான்கு வேலைகளைப் பார்த்தாலும் மாத வருமானம் என இருபது முதல் இருபத்தைந்தாயிரம் வரை தன்னுடைய அன்னையிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவான்!

"இன்னுங்கொஞ்சம் ஊன்டிப் படிச்சு ஒரு நல்ல உத்யோகத்துக்கு போயிருக்கலாம்லய்யா ஜெயனு? ஒரு வேலையில இருந்து அதுல மாசத்துக்கு இவ்ளோ சம்பளம் வருதுன்னா அத பெருமையா சொல்லிக்கலாம்...!"

"ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தா உன்னைய நம்பி எப்டிய்யா ஒருபொண்ண கல்யாணம் பண்ணி வைப்பாங்க?பொண்ணுங்க எதிர்பார்ப்பு எல்லாம் இப்ப ரொம்ப பெரிசாவுல்ல இருக்கு!" என்று பெருமூச்சு விடும் தாய் அவனிடம் கேள்வி கேட்கும் போதெல்லாம்,

"ஹா...ங்! பெரிசா எதிர்பார்ப்பு
வச்சுக்கிறதுக்கு அவளுக ஒவ்வொருத்தியும் பெரிய மகாராணி பேத்திங்க பாரு.....! என்ன வேல செஞ்சா என்னம்மா? அத நேர்மையான வழியில, யாரையும் ஏமாத்தாம, கொறையில்லாம, மனசுக்குப் பிடிச்ச மாதிரி செய்யணும் அவ்வளவு தான்.....!"

"மத்தபடி வீட்டுக்கு காசு குடுக்குறதுக்காக
கேரட் விளையுற எடத்துல போயி, அத கழுவி எடுத்து லாரியில ஏத்துனா கூட தப்பில்ல;
இதுக்கு மேல என்னைய மாதிரியான யோக்கியமான ஆம்பளப்புள்ளைய எவளும் கல்யாணம் பண்ணிக்க தயாராயில்லையின்னா அது எந்தப்பு இல்ல! நீ சும்மா எங்கிட்ட பொலம்பக் கூடாது அமுதாம்மா!" என்று இன்ஸ்டன்டாக ஒரு வசனத்தை தயாராக வைத்துக் கொண்டு அதை அன்னையிடம் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவான்.

அவனது சடைப்பையும், சடைப்புக்கு பின்னால் இருந்த எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்க நீ விரும்புவது போன்ற ஒரு பெண்ணை உனக்கு கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன்! அவளை வாழ்க்கைத் துணையாக மாற்றிக் கொள்வது மகனே உன் சமர்த்து என்று கடவுள் போட்ட கணக்கு பாவம் அவனுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro