Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

(முதலில் முக்கியமான ஒரு விடயம்.
இந்த கட்டுரையின் சொந்தக்காரர் நிச்சியாமாக நான் இல்லை. இந்த எழுத்துக்களின் சொந்தக்காரர் யார் என்பதையும் நான் அறியேன்.

ஆனால் என் வார்த்தைகள் சிலதை நான் இக்கட்டுரையில் சேர்த்துள்ளேன்.

வாசித்த போது பிரயோசனமான இருந்தது. அதனால் இதைப் பகிர்ந்துகொள்கிறேன்)

ஆண்ணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى
ஆண், பெண்ணைப் போன்றவனல்ல. (அல்குர்ஆன் 3:36)

(இதைப்பார்த்ததும் பெண்ணடிமைத்தனம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். சிறிதே பொறுமையாக வாசித்து விட்டுச்செல்லுங்கள். உள்ளே பொது விடயங்கள் தான் இருக்கின்றன.)

ஆணையும் பெண்ணையும் படைத்த இறைவன் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது.

அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது.

ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போதுதான் “என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன.

எனவே இல்லறத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணையவிருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.

1.நிறமூர்த்தத்தில் உள்ள வேறுபாடு.

பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் நிறமூர்த்தங்களில் ஆணினது நிறமூர்த்தம் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய நிறமூர்த்தம் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது.

இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது.

பார்த்தீர்களா? அடிப்படையே வித்தியாசம். இனி எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?

2. பார்வைப் புலன்

பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 பாகைக் கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.

இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 பாகைக் கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.

உங்களது வீட்டிலும் இந்தப் பிரச்சினை இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு “என் பைக் கீ எங்கே? கார் கீ எங்கே? ஒபீஸ் கீ எங்கே?, என்று மனைவியைப் போட்டு வதைப்பதும் மனைவியும் ”இது என்ன? கண்முன்னுக்கு வச்சிக்கிட்டு தேடுறீங்க? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்” என்று திட்டிக்கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி தான்.இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும்.

ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.

3. கவனம் செழுத்தும் திறன்

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Multi Personality என்போம். உதாரணமாக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Single Personality என்போம். உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது. அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது. கணவன் பத்திரிகையைத் திறந்து சோபாவில் அமர்ந்தால் மனைவி வாயைத் திறப்பாள் “இந்த மனுசனுக்கு உலகமே அழிஞ்சாலும் ஒன்னும் தெரியாது. பேப்பர்தான் அவருக்கு உலகம்” என்று.
இதற்கு காரணமும் இது தான்.

4. நிறங்கள் புலப்படும் விதம்

ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள். காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான். எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது.

5.மொழி.

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள்.

3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள்.

ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான். அனேக கணவன்மார் மனைவியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் “வாய மூடு, ஏன் எப்ப பாத்தாலும் சும்மா வள வளண்டு பேசுற?” என்பதாகும்.

பெண்கள் தமக்குள் உள்ளவற்றையெல்லாம் வாய் திறந்து பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கணவன் அன்றி வேறு யாரிடம்தான் அவர்களால் வாய் திறந்து பேச முடியும்? கணவன்மாரே மனைவியருக்கு சற்று செவிதாழ்த்தினால் என்ன?

பெண்கள் அதிகம் பேசுவார்கள். இது அவர்கள் இயல்பு.
ஆண்கள் அளவாகத்தான் பேசுவார்கள். இது தான் அவர்கள் இயல்பு.

பெண்கள் பேசாவிட்டால் தான் பிரச்சினை.
ஆண்கள் அதிகம் பேசினால் தான் பிரச்சினை.
காரணம் இது அவரவர் இயல்புக்கு மாற்றமானவை என்பதாகும்.

6. பகுத்துணரும் திறன் (Analytical Skills)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 பாகையில் தூரப் பார்க்கும் திறனுமாகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

7. உடல் மொழிகளைப் பிரித்தறிதல்

பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்ணால் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்துகொள்வார்கள்.

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.  காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20%  உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.

8. பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது.  யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்துகொள்வார்கள். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.

உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்.

9. மகிழ்ச்சியின்மை:

ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது. அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.

10. ஞாபக சக்தி

இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமப்படுவான். பிள்ளையின் பிறந்த திகதி, வயது, எத்தனையாம் ஆண்டில் படிக்கிறான் என்று தந்தைமாரைக் கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள்.

மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான். ஆனால் இதுவிடயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள். கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாணதாக இருக்கத்தேவையான காரணிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது தலையாய அம்சம் என்று நினைக்கின்றேன். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro