21
இருவரும் ஒரு மாலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு இருக்கின்ற ஒவ்வொரு கடையாக விண்டோ சாப்பிங்க் (எதுவுமே வாங்காம கண்ணாடி வழியாக ஒவ்வொரு கடையாக பார்த்து செல்வது) செய்துகொண்டே செல்ல சிறுது நேரத்தில் கவிக்கு பசித்தது.
"உங்களுக்கு பசிக்கல்லயா?" என்று கேட்டவளை பிருந்தா புன்னகையுடன்
"உனக்கு பசிக்குதா? சரி எங்க நல்ல சாப்பாடு கிடைக்கும்னு சொல்லு போய் சாப்பிடலாம்" என்று கூற கவியும் உற்சாகத்துடன்
"இங்க ஒரு மங்கோலியன் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. அங்க நாசிகொரங்க் சூப்பரா பண்ணுவாங்க. இறால்,கனவா மீன்லாம் போட்டு செம்மயா இருக்கும். அங்க போவோமா?" என்று கேட்க பிருந்தாவும் சரி என்று கூறி அவர்கள் இருந்த அதே மாலின் புட்கோட்டில் அந்த ரெஸ்ட்டாரண்ட் இருக்க அங்கு சென்றனர்.
இருவரும் ஆளுக்கொரு பிளேட் சாப்பாட்டை ஆடர் செய்து சாப்பிட ஆரம்பித்ததும் பிருந்தா
"கவி இந்த சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கு. அடிக்கடி இங்க வருவியா?" என்று கேட்க அவள்
"அடிக்கடியா, ஹாஹா. இங்க சாப்பாடு ரொம்ப விலை அதிகம். பண்டிகை நாட்கள்ல இல்லைன்னா ஏதாச்சும் ஸ்பெசல் டேய்ஸ்ல இங்க வருவோம். உங்களுக்கென்ன நீஙக் அடிக்கடி இப்படி பெரிய ரெஸ்ட்டாரண்ட் போவீங்க. மிடில் கிளாஸ் நாங்க அப்படியா" என்றவளை பிருந்தா அமைதியாக பார்த்து
"நான் என்னோட வாழ் நாள்ளயே எந்த ஒரு பெரிய ரெஸ்ட்டூரண்டுக்கும் போனதில. சினிமால ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சூட்டிங்க்கு வெளியூர் போனா அந்த படத்தோட சூட்டிங்க் டீம் எல்லோரும் வெளில போவாங்க. ஆனா அப்பவும் நான் வெளில போக மாட்டேன். இங்க வந்ததுக்கு அப்புறமாத்தான் இப்படி வெளில சுத்துறேன். நான் ஒன்னும் பிறந்ததுல இருந்து பணக்காரி இல்லம்மா. இது இப்போ ஒரு மூனு மாசமாத்தான் இந்த வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கேன் அதுவும் பிடிக்காம. அம்மா இருந்தப்போ எங்களுக்கு அன்னன்னைக்கான தேவைகள பூர்த்தி செய்ய பணம் போதுமான அளவு இருந்திச்சி. ஆனா ஆடம்பரமா எதுவுமே செலவு செய்ய முடியாது. முடியாதுனு சொல்றத விட எனக்கு அப்படி செலவு செய்றது ரொம்ப கூச்சமா இருக்கும். இப்போ காசு இருக்கு ஆனா அம்மா இல்லை" என்று கூற அவளைப்பார்த்த கவி
"சாரிக்கா நான் விளையாட்டா ஏதோ பேச போக உங்க மனச பாதிச்சிடிச்சி" என்று கவலைப்பட்டவளை அவள் "இட்ஸ் ஓக்கேமா, லீவ் இட்" என்றால்.
இவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் இவர்களை நோக்கி ஒரு ஆண் வர கொஞ்சம் குழப்பமான கவி
"அக்கா நம்மள பார்த்து ஒரு ஆளு வராங்க. யாருனு தெரியுதா?" என்று கேட்க அங்கு அஜய் வந்துகொண்டிருந்தான். அவனை பார்த்து புன்னகைத்த பிருந்தா
"என்ன அஜய் இன்னும் ஊருக்கு போகலயா?" என்று கேட்க அவன்
"இன்னும் போகல்ல, ஒரு புதிய படத்துக்கு லொக்கேசன் பார்க்க வந்தோம். அதுவும் இந்த ஊரோட முன்னாள் லேடி ப்ரைம் மினிஸ்டர் பற்றிய கதை. அதான் எல்லா இடமும் பார்த்து சில இடங்கள்ள சூட்டிங்க் நடத்த இங்க இருக்குற கவர்மண்ட் கிட்ட பர்மிசன் கேட்கனும். சோ எல்லாமே இன்னும் முடியல" என்று கூறியவன் பக்கத்தில் இருந்த கவியை பார்த்து
"என்ன ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பொண்ணு கூட சுத்துறீங்க. இங்க உங்களுக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க போல" என்று கேட்க புன்னகைத்தாள்.
"இது என் டூர் கைட்டோட தங்கச்சி. இன்னைக்கு அவரால வர முடியல. நமக்குத்தான் இந்த ஊருல எந்த இடமும் தெரியாதே, அதான் வெளில போறதுக்கு இவங்கள கூட்டிட்டு வந்தேன்" என்றவளை அஜய்
"நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது" என்றவனை அவளும் என்ன என்பது போல பார்க்க
"நீங்க வேணா இவங்கள அனுப்பிடுங்க. என்கிட்ட கார் இருக்கு, நான் உங்களுக்கு இந்த ஊர முழுசா சுத்திக்காட்டுறேன். அப்படியே நம்ம நுவரெலியாவுக்கும் போகலாம். அங்க கிளைமேட் ரொம்ப சூப்பரா இருக்கும்" என்று கூற அவனது பேச்சில் இருந்த உள் அர்த்தம் புரியாத பிருந்தா
"இல்லை அஜய், நாந்தான் அவங்கள வழுக்கட்டாயமா கூட்டி வந்தேன். இப்படி பாதில அவங்கள விட்டுட்டு உங்க கூட வந்தா நல்லா இருக்காது. இன்னொரு நாளைக்கு நான் உங்கள கூப்பிடுறேன். அப்போ பார்த்துக்கலாம்" என்று கூற அவனும் சரி என்று கூறி அங்கிருந்து கிளம்பும் முன்
"உங்க காலுக்காக நான் காத்திருப்பேன்" என்று கூற அவளும் சரி என்று தலைஅசைத்தாள். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த கவிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்த்தது. வந்தவன் தன் அண்ணனைவிட ஹேண்ட்சம்மாக இருந்ததும் பிருந்தா அவனுடன் மிகவும் சகஜமாக பேசியதுமே காரணம்.
"உங்களுக்கு அவர முன்னாடியே தெரியுமாக்கா?" என்று கேட்க பிருந்தா
"இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹிருனி கூட நான் வெளில வந்தப்போ அவர மீட் பண்ணேன். ரொம்ப நல்லா பேசினாங்க. ஏதும் உதவி வேணும்னா கேட்க சொல்லி தானாவே வந்து அவங்க கார்ட் வேற கொடுத்தாங்க. அதான் அவங்கள மறுபடி பார்க்கும் போது தெரியாத மாதிரி நடந்துக்க கூடாதுள்ள. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம நமக்கு உதவ வர்ரவங்கள நாம கண்டிப்பா மதிக்கனும். அப்புறம் அவரு எங்க ஊர்க்காரர் வேறயா அதான் சாதாரனமா பேசலாம்னு பேசினேன்" என்று கூற கவிக்கு அஜய்யை ஆரம்பித்திலேயே பிடிக்காமல் போனது. இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
"அதென்னக்கா எங்க ஊர்க்காரர், அவரு பக்கத்து நாடு. நம்ம எல்லோரும்தான் ஒரே ஊர்காரங்க" என்று கவி கோபித்துக்கொண்டால்.
"அட கவிக்கு கோபப்படல்லாம் தெரியுமா. நீ சாதாரணமா இருக்குறத விட கோபத்துல ரொம்ப அழகா இருக்க. உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வெச்சவன்" என்றவளை கவி
"ஓஹ் கோபமா இருந்தாதான் அழகா இருக்கேனா? அப்போ இனி அடிக்கடி கோபப்பட்டா சரி. நானாச்சும் கோபப்பட்டாத்தான் அழகா இருக்கேன். உங்கள எப்படி பார்த்தாலுமே அழகாத்தானே இருக்கீங்க. எங்கண்ணனே நான்சிக்கு அப்புறமா ரொம்ப ஜொல்லுவிட்டது உங்கள பார்த்துதான்" என்ற போதுதான் பிருந்தாவுக்கு நினைவுக்கு வந்தது நான்சியை பற்றி அவள் முழுவதும் அறிந்து கொள்ளாதது.
"ஆமா கவி அன்னைக்கு நான்சியை பத்தி பேசிக்கிட்டு இருக்கும் போது இடையில உங்கம்மா கூப்பிட்டதும் அந்த பேச்சு இடையில தடைப்பட்டிடிச்சி. ஆமா நான்சிய எப்போ மீட் பண்றோம்" என்று கேட்க கவியோ விரக்தியாக
"அதெல்லாம் முடியாதுக்கா.அவங்க எங்க அப்பாகிட்டயே போயிட்டாங்க" என்று கூற பிருந்தா அதிர்ச்சி ஆனாள்.
"ஏப்ரல் 21,2019 யாராலயும் மறக்க முடியாத ஒரு நாள். அன்னைக்கு ஈஸ்டர் தினம். புனித அந்தோனியர் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு போன நான்சியும் அவங்க அம்மாவும் அங்க நடந்த குண்டு வெடிப்புல இறந்துட்டாங்க. நான்சி அம்மாவோட பாடி கிடைச்சது. ஆனா நான்சியோட பாடி கூட எங்களுக்கு கிடக்கல. ஒரு மாசம் அண்ணா நான்சி சாகல உயிரோடத்தான் இருக்கா, கண்டிப்பா வந்திடுவான்னு புலம்பிக்கிட்டே இருந்தான். அதுக்கு அப்புறமாத்தான் அவனுக்கு அவ இறந்து போயிட்டா எண்ட நிதர்சனம் புரிஞ்சது. ஆனா அவன் கொஞ்சமும் அழாம மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் அணை போட்டு மூடி வெச்சிட்டான். அதனால என்னமோ அவன் அடிக்கடி வித்தியாசமா பிகேவ் பண்ணுவான். எப்போ கோபமா இருக்கான், எப்போ ஜாலியா இருப்பான் என்றே தெரியாது. அவன நினைச்சு எங்கம்மா அழாத நாளே இல்லை" என்று கூற பிருந்தாவுக்கு தலையே சுற்றியது. ஈஸ்டர் தாக்குதல் அவளுக்கு ஒரு கவலை தரக்கூடிய ஒரு செய்தியாக தெரியுமே அன்றி அதில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை இப்போதுதான் பார்க்கின்றால்.
"அப்போ உங்க அண்ணா நான்சிய காதலிச்சாங்களா?" என்று கேட்க அவளும்ம் ஆம் என தலை அசைத்தாள். "அப்போ அந்த டீசேர்ட் உங்கண்ணா நான்சிக்காக வாங்கினதா?" என்று பிருந்தா கேட்டாள்.
"எங்கண்ணனும் அன்னைக்கு போகவேண்டியது. கடவுள் புண்ணியத்துல அப்படி எதுவும் ஆகல. அந்த டீஷேர்ட் 199 யூரோ. எல்லோரும் காதலிக்கிற பொண்ணுக்கு நகை ஏதும்தான் வாங்கொகொடுப்பாங்க. இல்லைன்னா சாதாரணமா ஒரு டிறஸ். இவன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு ரொம்ப பிரபல்யமான ப்ராண்ட் டீஷேர்ட்ட அவளுக்கு கொடுக்கலாம்னு இருந்தான். சர்ச்சுக்கு போற அவசரத்துல அவன் டீஷேர்ட் பார்சல வீட்டுல வெச்சிட்டு கிளம்பிட்டான். பாதில போறப்பதான் அவனுக்கு மறந்து அதை வீட்டுல வெச்சது ஞாபகம் வர உடனே திரும்ப வந்திருக்கான். மறுபடி எடுத்துக்கிட்டு போகும் போது நான்சி அவனுக்கு கால் பண்ணி ஏன் இன்னும் சர்ச்சுக்கு வரல என்று கேட்கும் போதுதான் குண்டு வெடிச்சிருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கக்கா காதலிச்ச பொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் போதே திடீரென செத்துட்டான்னா எப்படியிருக்கும். எங்கண்ணன் ரொம்ப பாவம்" என்றவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro