Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வீடு

வாரநாட்களில் வீட்டில் சுடிதார் அல்லது  குர்தா பேண்ட் என்று அணியும் மனைவி அன்று காட்டன் சேலையில் உலாவுவது எனக்கு வியப்பை அளித்தது. அவள் இல்லை என்று நினைத்து தான் நான் என் சாவியை எடுத்து கதவைத்  திறந்தபோது அவள் சோபவில் அமர்ந்திருந்தை கண்டேன். சோபாவில் சம்மணமாக உட்கார்ந்து சேனல் மாத்திக்கொண்டிருந்தாள் ஏதோ யோசனையில். இது அவள் வழக்கமாக டிவி பார்க்கும் நேரமில்லை என்பதும் காரணம். நான் வருவதைக் கண்டவுடன் டிவியை அமத்திவிட்டு என்னை நோக்கி வந்தாள். அருகில் வந்தவளிடம் என் ஆபீஸ் bag ஐ கொடுத்து கேட்டேன், " எத்தன மணிக்கு வந்த?"

"அஞ்சரைக்கு"

உடை மாற்ற ரூமுக்கு சென்றபோது அவள் என்னை பின் தொடர்ந்தாள்.

"10 நாளா பிராஜக்ட் நு லேட் ஆ தான வந்த. பிராஜக்ட் முடிஞ்சுட்டா?"

"ம்ம்ஹூம்" என்பதே அவளின் பதிலாய் அமைந்தது.

குரலில் இருந்த தொய்வை உணர்ந்த நான் கதவின் சட்டத்தில் சாய்ந்து நின்றவளிடம் கிண்டலாகக் கேட்டேன், " என்ன அலங்காரம்?"

வெட்கி புன்னகைத்து புது உடை அணிந்த குழந்தைபோல நல்லா இருக்கா என்று முந்தானையை விரித்துக் காட்டினாள். நன்றாக தான் இருந்தது பார்டர் முழுக்க சிவப்பு பூ கொடுக்கப்பட்டிருந்த அந்த வெள்ளை காட்டன் சேலை. மையிட்ட கண்கள், பெரிய ஜிமிக்கி ஆனால் கடைசி நிமிட யோசனைபோல, தலையில் பூ இல்லை.

"எனக்கு தெரியாம இப்படி எத்தன புடவை வாங்கி வச்சிருக்க?"

போலி கோபத்தோடு முரைத்தாள், " நீங்க கடைக்கு வந்து போனை நோண்டிட்டு இருந்தா நான் என்ன வாங்குனேன்னு எப்புடி தெரியும்?"

அலமாரியில் கைலியையும் பனியனையும் தேடிக்கொண்டிருக்கையில் மெல்லிய குரலில் கேட்டாள்.
"நான் ஒன்னு கேட்டால் உண்மைய சொல்லுவீங்கள்ள?"
இன்றைய திடீர் மாற்றத்துக்கு பதில் வருகிறது. கையில் கைலியுடன் அவளைத்  திரும்பி பார்த்தேன்.

"ஆபீஸ் வேலையினால உங்களை neglect பண்றேன்னு தோனுதா?"

"எனக்கு அப்படி ஒன்னும் தோனலையே"

"ஆனா எனக்கு தோனுச்சே. இன்னைக்கு லஞ்ச் டைம்கு பிறகு மீட்டிங் இருந்துச்சு. யாரும் ஒழுங்கா வேலைய முடிக்கலன்னு ரொம்ப கத்திட்டேன் மீட்டிங்ல. அப்புறம் அவங்க அவங்களுக்கு வேலைய பிரிச்சிக் கொடுத்துட்டு கோபமா ஆபீஸிருந்து கிளம்பிட்டேன். ஆபீஸ் atmosphere இலிருந்து வெளிய வந்ததும் தான் ஏதோ ஒரு டயர்ட் பீலிங் வந்தது ஆனா அது உடல் சம்மந்தப்பட்டதில்ல. மனசு சோர்ந்து போன மாதிரி...யாரையும் பார்த்து ஸ்மைல் பண்ண தோனல பஸ் ஸ்டாண்டில்," புருவங்களை குழப்பத்தில் சுருக்கினாள்.

மனைவி புலம்பும்போது அமைதியாக் கேட்டாளே நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ம்ம்ம் கொட்டினேன்.

"அப்ப தோனுச்சு, வொர்க் அதிகமா இருக்குறதால என்னைய நான் neglect பண்றேனோன்னு. எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி ரொம்ப நாளாச்சுன்னு ஒரு manicure இல்ல shopping போகலாம்னு நினைச்சேன். திடீர்னு உங்க நியாபகம். உங்களையும் நான் neglect பண்ணிட்டேன்ல...அதான் அடுத்த பஸ் எடுத்து வீட்டுக்கு வந்துட்டேன்."

"வேலை ஜாஸ்தி என்பதால் இது இயல்பு" என்று அலட்சியமாய் கூறினாலும் நமக்காகவே மெனக்கெடுத்து அலங்காரம் செய்து நம் வருகைக்காகவே சோபாவில் அமர்ந்திருந்திருந்தாள் என்பதில் உள்ளூற சந்தோஷம். கட்டிலில் சற்று அமர்ந்து அவளையே உற்று நோக்கினேன். கதவு சட்டம் மேல் தலையை சாய்த்து முந்தானையை கையில் பிசைந்துக்கொண்டிருந்தாள். சில நொடிகளுக்குப் பிறகு என் அருகில் வந்தவள் என் மடியில் அமர்ந்தாள். கால்களை மடக்கி கையை கால்களை சுற்றி அணைத்தாள். அவளுக்குச் சிறிய உடல்வாகு என்பதால் ஏதோ குழந்தை மடியில் உட்காரும் ஓர் உணர்வு. முகத்தை என் கழுத்தில் புதைத்துக்கொள்கையில் அவளின் ஒவ்வொரு மூச்சும் கூசியது. மடியில் அமர்ந்த அவளை என் இரு கைகளால் கட்டியணைத்தேன், ஒரு உலகத்தையே கட்டியணைத்த உணர்வு. ஆம், அவள் உலகம் மிகச் சிறியது. ஏதும் பேசாமல் இருவரின் மூச்சுக் காற்று மட்டும் உறையாடிக்கொண்டிருந்தன. ஒருவித அமைதி.

"என்ன யோசிக்கிற?" மௌனத்தை உடைத்தேன்.

"ஷ்ஷ்...யோசிச்சா அனுபவிக்க முடியாது" என்று பதிலளித்தாள்.

அவள் கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் மயில் இறகு போல் என் கன்னத்தை அவளின் இமை வருடியது. உலகத்தை அமைதிப்படுத்த இரவும் நெருங்கியது. வானம் கறு நீலமாய் காட்சியளித்தது.

இப்போது அவள் தான் பேசினாள்.
"அச்சோ பசிக்குதா? அப்பம் ஊத்தவா?"

"ம்ம்ம்" அவளும் என் உலகத்தை நன்கு அறிந்திருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro