Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிறைவு

மழைத்துளிகள் என் கண் இமைகளை நனைத்தன. திடுதிடுப்பென கண்களைத் திறந்தால் மஞ்சள் நிறமும் கறுப்பும் மங்கலாய் தெரிந்தன. சோப் வாசனை நுரையீரலில் படிந்து மணமணத்தது. அவளின் முகம் விலகியதும் அவளின் ஈரக் கூந்தலிலிருந்து விழுந்த முத்தென அறிந்தேன். சின்னதாய் புன்னகைத்து, "Good morning! Its Saturday!" என்றாள்.

தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கினேன். நான் திருதிருவென விழிப்பதைக் கண்டு அவள் அறிவித்தாள்,"10.30 மணி ஆச்சு."

வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் சூரியன் உச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். அதிகாலையின் குளிர் வெப்பமடைந்து தற்போது கொதித்துக்கொண்டிருந்ததைக் கூட அறியாமல் துயில் கொண்டிருந்தேன். காரணம் நேற்றிரவு வந்த மனோஜின் மெசேஜ் மனதைச் சலனமடையச் செய்ததால் வெகு நேரம் கழித்து சோர்வினால் தூக்கத்தைத் தழுவினேன். லாவண்யாவின் செயற்பாடுகளும் அவள் மேல் எல்லையற்ற அன்பு வைத்திருந்த மனோஜும் கனவை ஆர்பரித்தனர்.

என்னருகில் அமர்ந்து elbowவை மெத்தையில் ஊன்றி கை தலையைத் தாங்கியிருந்தப்படி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். மலர்ந்த முகமும் அமைதியாய் என்னை நோக்கிய கண்களும் அவளின் சந்தோஷத்தைச் சுட்டிக்காட்டின. கரையைக் காணா கடலாய், நிலவைக் காணா வானாய், ஒற்றைக் குரலில் கூவும் குயிலாய் ஓர் ஏக்கம் உதித்தது. நகர்ந்து அவளின் மடியில் தலை சாய்த்தேன். எல்லோருக்கும் கிடைப்பதல்ல இந்த அன்பு என தோன்றி சிந்தனை மீண்டும் மனோஜின் பக்கம் திரும்பியது.

"இன்னைக்கு எங்கயாவது வெளிய போறோமா?" ஆவலுடன் வினவிய அவளுக்காக நேற்றைய எண்ணங்களை ஒதுக்கிவிட்டு இன்றைய நாளை வரவேற்றேன்.

"ஆமாம். ப்ரெண்ட் கூப்டிருந்தான் பட் முடிஞ்சா வர்ரேன்னு சொல்லியிருந்தேன். போற போக்கை பார்த்தா அவன் கூப்டதுக்கே போயிரலாம்ன்னு தோனுது."

"எங்க கூப்டாரு உங்க ப்ரெண்ட்?"

"அவ்ளோ பெரிய விஷயம் இல்ல பட் இருந்தாலும் நம்ம போகாத இடம் தான்."

"எங்க?"

"அதுலாம் சொல்ல முடியாது. ஆனா ஈவ்னிங் தான் போறாம்," என்று குறும்பாய் சிரித்துவிட்டு அவள் அடம்பிடிப்பதற்குள் குளிக்க நழுவினேன்.

மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி King's Hotel இன் பார்க்கிங்கில் வண்டி நின்றதும் ஹோட்டல் பெயரைக் கண்டு, "என்ன function?" என்று வினவினாள்.

"Function இல்லை. இது வேற," என பதிலளித்துவிட்டு காரிலிருந்து இறங்கினேன். அவளும் காரின் கதவைத் திறந்து இறங்கி முன்னால் வந்ததும் அவள் கரத்தைப் பிடித்து நடக்க ஆரம்பித்தேன். அவள் ஜீன்ஸும் பச்சை நிறத்தில் எளிமையான சட்டையும் கழுத்தை அடைத்தாற்போல் ஒரு பெரிய jewelleryஉம் அணிந்திருந்தாள். கூந்தலை french plait பின்னியிருந்ததால் அவளைப் பார்த்தவுடன் ஏதோ காலேஜ் பெண்ணுடன் நிகழ்ச்சிக்கு வருவதுபோல் இருந்தது. அதை நினைத்துச் சிரிக்கையில் அவள் என்னை நோக்கி புருவத்தை உயர்த்தினாள். பதிலுக்கு புன்னகைத்துவிட்டு அவளின் கையைப் பற்றி அவளை விறுவிறுவென என்னுடன் அழைத்துச்சென்றேன். லிப்ட் இன் கதவுகள் 3ஆம் மாடியில் திறந்ததும் ஹோட்டலின் events roomஇன் வாசலில் பிரத்யேகமாக தெரிந்தான் நித்தின் சக்கர நாற்காலியில்.

"ஹாய் நித்தின்! நீ முன்னாடியே வரச் சொல்லியிருந்த பட் எனக்கு இந்த வாரம் தான் டைம் கிடைச்சது."

நித்தின் எங்களிருவரையும் கண்டு திடுக்கிட்டான். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி எங்களை வரவேற்றான். "பரவால்ல டா. இருந்தாலும் சரியா தான் வந்திருக்க. இந்த வார ஷோவோட comedian ரொம்ப talented!"

"By the way, my wife. ஏற்கனவே பார்த்திருக்கிரியல்ல restaurantஇல்?" அவளின் பக்கம் சைகைச் செய்தேன்.

"ஆமாம். பார்த்திருக்கேன்." சுறுக்கமாய் பதில் வந்தது.

நித்தினுக்கும் என் மனைவிக்கும் இடையே மரியாதை நிமித்தமாய் தோன்றிய புன்னகையைத் தவிர எந்த ஓர் உரையாடலும் தொடங்கவில்லை. சில நொடி நிலவிய மௌனத்தை உடைக்க நித்தின் அனைவரையும் உள்ளே செல்ல அழைத்தான். Stand up comedy நிகழ்ச்சி ஒரு மணி நேரத்தில் முடிந்ததும் அங்கேயே இரவு உணவை முடித்துவிடலாம் என எத்தனித்தேன்.

நித்தினை இதற்கு இயங்கவைக்க சற்று போராட்டம் தேவைப்பட்டாலும் அவன் இறுதியில் ஒப்புக்கொண்டான்.

ஹோட்டலின் முதல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த உணவகத்தின் ஆடம்பரம் இரவு நேரத்தில்  பிரகாசமாய் ஒளித்தது. ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருக்கையில் நித்தினை என் மனைவிக்கு அறிமுகப்படுத்தினேன். காலேஜ் பெஸ்ட் ப்ரெண்ட் திரும்ப கிடைத்தது போல் ஒரு மகிழ்ச்சி என்பதால் அவனை அவளிடம் அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம்.
"நித்தின் இங்க டிகிரீ முடிச்சுட்டு MBA பண்ண UK போய் அங்கேயே செட்டல் ஆகிட்டான். நீ எங்கடா படிச்ச டிகிரீ?"

நித்தின் சற்று தடுமாற்றத்தோடு பதிலளித்தான், "சென்னைல SVRC காலேஜில்."

இப்போது எனக்குக் குழப்பமாய் இருந்தது, "என் wifeஉம் அங்க தான் படிச்சாங்க," என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன் உறுதிச்செய்ய. அவள் முன்னாள் இருந்த baked riceஇல் கோலம் வரைந்துக்கொண்டிருந்தாள் ஏதோ யோசனையில். சற்று உரக்கமாக, "நீயும் SVRCஇல் தான அக்கவுண்டிங் பண்ண?" என்று மீண்டும் கேள்வியைத் தொடுத்தேன். இங்கு வந்ததிலிருந்து அவள் பேசிய முதல் வார்த்தையாய் அமைந்தது அவளுடைய ஆமாம் என்ற பதில்.

எவரும் பேசும் முன் நித்தின் அவசரமாய் குறுக்கிட்டான்,"அவங்க ஜாய்ன் பண்ணும்போது நான் படிச்சு முடிச்சு graduate பண்ணிர்பேன்."

"இருக்கலாம் ஆனா அவள எப்போதும் கிண்டல் பண்ணுவேன் அந்த காலேஜில் சேர்ந்ததற்கு. நல்ல காலேஜா இருந்தாலும் சென்னைன்னு அட்றெஸ் வச்சிருக்கக்கூடாது. சிட்டிலேர்ந்து ஒதுக்கிவச்சமாதிரி ஓரத்துல இருக்கும்."

பதிலுக்கு நித்தினும் சிரித்தான், "பசங்களுக்குப் பிரச்சனை இல்ல. நாங்க  பைக்ல போய்டுவோம்," இப்போது வார்த்தைகள் மெலிதாய் இருந்தன, "I mean எனக்கு கால் போகுறதுக்கு முன்னாடி."

ஆபீஸில் மற்றவர்கள் அது ஒரு கொடூர விபத்து என்று கூறியிருந்தாலும் நித்தினிடம் நான் இதுவரை எதுவும் கேட்டதில்லை அதைப் பற்றி கேட்கவும் சம்மதமில்லை. நல்ல வேளையாக வெய்ட்டர் dessertஉடன் எங்கள் டேபிளை வந்தடைந்து பேச்சை மீண்டும் சாதரணவற்றுக்கு மாற்றினான். சாப்பிடுகையில் என் போனிலிருந்து மெசேஜ் ஒலி வர அதைக் கடைக்கண்ணால் எட்டிப்பார்த்தபோது என் மனைவியிடமிருந்து தான் வந்திருந்தது. என்னருகில் அமர்ந்தவளைப் பார்த்துவிட்டு சில வினாடிகள் கழித்து ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் மெசேஜைத் திறந்தால், "தலை வலிக்குது. சீக்கிரம் கிளம்பலாமா?" என்று அனுப்பியிருந்தாள். ஆதலால், டின்னர் முடிந்ததும் நித்தினிடம் அதிகம் பேசாமல் நாங்கள் கிளம்பினோம்.

"இன்னைக்கு வித்தியாசமா இருந்துச்சுல்ல?" அவளிடம் கேட்டேன்.

"ம்ம்ம்."

"ஷோ எப்டி இருந்துச்சு?"

"நல்லா தான் இருந்துச்சு. ஆனா உங்க ப்ரெண்ட் ஐ எல்லாத்துக்கும் கூப்டனுமா?" குறையாய் சொன்னாள்.

நித்தினை அவளுக்குப் பிடிக்காதது எனக்குக் கோபத்தைத் தந்தது, "அவன் தான் இந்த stand up comedy show பத்தி சொன்னான். அவன் இல்லாம எப்படி?"

"டின்னருக்கும் அவரோட தான் இவ்ளோ நேரம் உட்கார்ந்து பேசனுமா? ஆபீஸில் பேசிக்கோங்க."

"மனோஜ் நம்மகூட அடிக்கடி வெளிய டின்னருக்கு வருவான். அதுக்கு நீ ஒன்னும் சொன்னதில்ல," இப்போது விஷயம் புரிந்து அறச்சீற்றமாய் ஒலித்தது, "நித்தின் wheelchairஇல் வர்ரதால எல்லாரும் பார்க்குறாங்கன்னு இப்படி சொல்றியா?"

"எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. இனிமே அவர் வந்தா நீங்க மட்டும் போங்க. என்னை விடுங்க."

காரின் வேகம் கோபத்தின் நிழலாய் அதிகரித்தது. அவள் பிறகு ஒன்றும் பேசவில்லை. நானும் ரேடியோவின் சத்தத்தை அதிகரித்தேன்.

[மௌனராகம் படத்தில் வரும் கார் காட்சி ரொம்ப பிடிக்கும்! ரேவதி டைவோர்ஸ் வாங்கி தர முடியுமான்னு கேட்குற சீன்!
Next chapter is here! Hopefully, I have enough interest in this story to finish writing it. பிடிப்பு அப்டியே கரையுது:/ மிக்க நன்றி உங்களோட இத்தன நாள் ஆதரவுக்கு_/\_ :) ]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro