சந்திப்பு
"நானும் அம்மாவும் முன்னாடி போறோம். நீ குழந்தைங்களை அரை மணி நேரம் கழிச்சு திருவிழாவுக்கு கூட்டிட்டு வா டா," அரக்க பறக்க கிளம்பிக்கொண்டே அக்கா சொன்னாள்.
"இந்த குட்டி சைத்தானுங்களை நான் மேய்க்கனுமா? நீயே கூட்டிட்டு போ கா," டிவியை ஆப் செய்தேன்.
"இல்ல டா, அம்மாவும் நானும் மலை ஏறி பெரிய கோவிலுக்கு போகலாம்னு இருக்கோம். குழந்தைகளோடு கூட்டத்துல படி ஏறுறது கஷ்டம். நீ லேட் ஆ கூட்டிட்டு வா டா."
"மலை ஏறி கேட்குறதுவிட நாலு ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டா கடவுள் காதுல உன் பிராத்தனை விழும்." அக்கா முறைத்தாள் என் பதிலுக்கு. "சரி சரி. உன்ன காணாட்டி எங்க விடுறது பிள்ளைங்கள?"
"அவர கோயிலுக்கு எதிர்க்கில் இருக்குற பூ கடைக்கிட்ட நிக்க சொல்லுறேன். நீ பிள்ளைங்களை அவர்கிட்ட விட்டிரு."
"மாமா உங்ககிட்ட இருந்து தப்பிச்சோம்னு அப்போவே கிளம்பிட்டாரா?" நக்கலாய் விசாரித்தேன். பதிலுக்கு முகத்தை சுளித்து விட்டு அக்கா அம்மாவுடன் கிளம்பினாள் திருவிழாவுக்கு.
அரை மணி நேரத்தில் அந்த ரெண்டு குட்டி சாத்தான்களை பைக்கில் ஏற்றி பூ கடையில் இறக்கிவிட்டேன். மாமா அங்கே தான் நின்றார் போனை பார்த்துக்கொண்டு. "ஏன் டா, அரை மணி நேரம்னா கரெக்ட் ஆ அரை மணி நேரத்துல வந்துருவியா?" மாமா சலித்துக்கொள்ள ரெண்டு பிள்ளைகளும் அவர் கையைப் பிடித்து கடைகளின் பக்கம் இழுத்தன.
குழந்தைகளை இறக்கிவிட்டுவிட்டு கடையின் முன்னால் நின்றபோது சுற்றும் முற்றும் உலாவிய கண்கள் திடீரென கோவில் படிகளில் நின்றன. சந்தன நிற சேலையின் முந்தானையை தன்னோடு அணைத்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள் அவள். மக்கள் கூட்டம் மறைக்கவே முகம் மட்டும் பார்வையிலிருந்து மறைந்து கண்ணாமூச்சி விளையாடியது. பல ஊர்களிலிருந்து மக்கள் திருவிழாவுக்கு வருவார்கள் என்று அறிந்தும் அவளை இந்த கூட்டத்தில் சந்திப்பேன் அதுவும் 5 மாதங்களுக்குப் பிறகு சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.
இப்போது அவள் முன்னால் இருந்த பெண்மணி நகர்ந்ததும் அவளின் முழு உருவம் கண்டு அதிர்ச்சியடைந்தேன். நிறைகுடமாய் வளர்ந்திருந்தது அவளின் வயிர். 5-6 மாத வயிர் பார்வையை மறைக்க குனிந்து தன் பாதங்களைக் கவனித்துக்க்கொண்டே ஒவ்வொரு படியிலும் இரு பாதங்களையும் வைத்து முதல் முறை படியிறங்கும் குழந்தைப்போல் இறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
படிகளைப் பார்த்துகொண்டிருந்த கண்கள் தன் தோழியிடம் பேச மேலே நிமிர்ந்தபோது என் கண்களை எதேச்சையாய் சந்தித்தன. என் கண்களில் தெரிந்த அதே அதிர்ச்சி அவளிடத்திலும் பிரதிபலித்தது, நின்றுவிட்டாள் செய்வதறியாது. அப்போது பின்னால் வந்துக்கொண்டிருந்த கூட்டம் படிகளில் நின்றவளைத் தள்ள balance இழந்தவள் ஒரு நிமிடம் விழ 10 மீட்டரிலிருந்து என் கைகள் அவளை தாங்க இயல்பாய் ஏந்தின தூரத்தை மறந்து. பார்க்க விருப்பமில்லாவிட்டாலும் கண்களை விலக்க முடியாமல் அந்த கொடூரக் காட்சி அரங்கேற கடைசி நொடியில் அவள் எப்படியோ சுவற்றைப் பிடித்துவிட்டாள். கண்களில் பயம் துடித்தது.
"நடுவுல நின்னுட்டு இருக்க ஓரமா போமா," என அந்த பெண்மணி அலட்சியாமாக அவளைத் திட்ட அதைப் பொருட்படுத்தாமல் அந்த நொடியில் ஏதோ ஒரு கடவுளுக்கு மனம் நன்றிக் கூறியது. அவள் கண்கள் படியையும் என்னையும் மாறி மாறி பார்க்க ஒருவழியாக படிகளிருந்து இறங்கிவிட்டாள். இப்போது என் முன் தயங்கி நின்றவளைக் காணும்போது பல எண்ணங்கள் தோன்றினாலும் ஒன்றும் நா வரை வரவில்லை. கர்ப்பினிகளுக்கே உரிதான சுட்ட தங்கமாய் முகம் மின்னியது. கன்னங்களும் உப்பியிருந்தன ஆனால் இதுவெல்லாம் வேறொரு அழகை ஒளிர்த்தது.
என் முன் தயங்கி இரண்டு அடி தள்ளியே நின்றாள் அவள். சங்கடமான சூழலில் பிரிந்தவர்களின் சந்திப்பில் தூஓரம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் அந்நியராய் நிக்கவைத்த கணவன் மனைவி தூரம் வலித்தது. இருவரும் இந்த திடீர் சந்திப்பை ஜீரணிக்கும் முன்னர் அவளுடைய தோழி அவளின் கையைப் பிடித்து கடைத்தொகுதிக்கு இழுத்து சென்றாள். அடுத்த 1 மணி நேரத்துக்கு அவள் ஏறி இறங்கிய கடைகளுக்கு நானும் படியேறினேன். நான் பின்னால் வருவதை அவள் அறிந்து கடைக்கண்ணால் திரும்பி திரும்பி பார்த்தாள். அவள் தோழியும் பார்த்தாள்.
"அந்த ஆளு இவ்ளோ நேரமா follow பண்றான்! என்ன துணிச்சல்! நான் அவன்கிட்ட பேசுனா ஊர்காரங்க பார்த்துட்டு ஏதாவது சொல்லுவாங்க. நீ கர்ப்பமா இருக்க. அம்மா ஸ்தானத்துல போய் ரெண்டு கேள்வி கேட்டுட்டு வாயேன்." இவள் பதிலுக்கு சிரித்தாள்.
"என்னடி சிரிக்குற? நானே பயத்துல சொல்றேன்!"
"நான் போகமாட்டேன். வேணும்னா நீயே பேசிக்கோ."
கதிரவனின் கடைசி ஒளிக்கதிரையும் நிலவு வானத்தின் கைக்குட்டைக்குள் பொத்திவைக்கும் நேரம். கடவுள் வீட்டுக்கு திரும்ப திருவிழாவும் வீடு திரும்ப தொடங்கியது. அவ்விருவரும் பஸ் ஸ்டான்ட்க்கு செல்ல தோப்பின் உள்ளே நடக்க ஆரம்பிக்க எத்தனித்தனர். இருவரும் ஏதோ காதுக்குள் பேச திடீரென அவள் தோழி திரும்பி என்னை அதட்டினாள், "ரெண்டு பொண்ணுங்க தனியா தோப்புக்குள்ள நடந்துபோறாங்க. decency இல்லாம follow பண்றீங்க?"
"நான் என் wife கிட்ட பேசணும்."
வாய்மூடி சிரிப்பை அடக்கியவள் இப்போது கட்டுப்படுத்த முடியாமல் கலகலவென சிரித்தாள்.
"ஏண்டி, தெரிஞ்சு தான் ஊமையா வந்தியா?" கோபத்தில் கேட்டாள் அவள் தோழி.
"நீங்க கிளம்புங்க. நான் என் wife கிட்ட தனியா பேசணும்."
"நான் மட்டும் எப்படி தனியா பஸ் ஸ்டான்ட் கு போறது? நீங்க பேசுங்க நான் ஓரமா வெயிட் பண்றேன்."
"இந்தாம்மா, வந்த வழில திரும்பி போனா திருவிழா கூட்டம் வரும். கூட்டத்தோடு கூட்டமா திரும்பி பார்க்காம போய்டு."
சலித்துக்கொண்டே அவள் தோழி நடையைக் கட்ட இப்போது அவளின் பார்வை என்மேல் திரும்பியது. இருவரின் பதட்டமும் அதிரித்தது. அவள் ஒன்றும் பேசாமல் நடந்து தண்ணீர் தொட்டியின் சுவற்றில் அமர்ந்தாள். தண்ணீர் தொட்டியின் மெல்லிய நீர் சத்தம் பின்னணி இசையாக ஒலித்தது. பனிக்காற்று வீச கையை இறுக கட்டிக்கொண்டு மண்ணில் பாத விரல்களைப் பதித்து கோலம் வரைந்தாள். தென்னை கிளைகளின் நிழல்களின் நடுவில் ஒற்றை பூவின் கூந்தலும் காற்றில் தலையசைத்தது. உச்சக்கட்ட அசைவும் அதுவாக தான் இருந்தது.
முதற்கேள்வி அது தான், "எத்தனை மாசம்?"
மண்ணை நோக்கியவள் இப்போது நிமிர்ந்து புன்னகைத்தாள், "5.5 மாசம்!"
"ஏன் என்கிட்ட சொல்லல?"
இப்போது புன்னகை மறைந்தது , " ஊருக்கு வந்ததும் கொஞ்ச நாளில் நீங்க நான் சொல்ல வந்ததை கேட்பீங்க பிரச்சனை முடிஞ்சிரும் அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்."
"இன்னும் நாலு மாசத்துல பிரச்சனை தீராமல் தொடர்ந்திருந்தால் இப்படி தான் சொல்லாம இருந்திருப்பியா?"
"ஆமாம். குழந்தை மூலமா எனக்கு sympathy create பண்ண விருப்பம் இல்ல. நாம ஒன்றாக சேர்ந்து வாழ்வது புரிதலால் இருக்கணும் அனுதாபத்தால் அல்ல, " திடமாகக் கூறினாள்.
மௌனம் இரைச்சலாய் கேட்டது.
"வீட்டுல பார்த்துக்க ஆள் இருக்காங்களா?"
"அம்மா இருக்காங்க. வேலைக்கு ஆளும் வச்சிருக்கோம்."
நான் இறங்கி வர இன்னும் யோசித்தேன் என்பதை புரிந்துக்கொண்டவள் உடனே எழுந்தாள், "நான் வீட்டுக்கு போறேன்."
தாயாகப்போகும் பெண்களுக்கே உரிதான நடை, பாதங்களை மண்ணில் ஊன்றி மெதுவாய் ஒரு நடை. படங்களில் காட்டுவார்களே, கர்ப்பிணிகளுக்கு வெகு தூரம் நடக்க சிரமம் என்று என மண்டையில் பொறி தட்டியது. மேலும்அ வள் என்னை விட்டு மீண்டும் விலகுவதும் இந்த தூரமும் பிடிக்கவில்லை.
உடனே, "இரு நான் பைக் எடுத்துட்டு வர்றேன். வீட்டுல drop பண்றேன்."
பைக் புத்துணர்ச்சியில் பறந்தது. அவளைக் கண்டத்தில் நான் அடைந்த மகிழ்ச்சி அவளிடத்தில் பிரதிபலிக்கவில்லை. side mirrorஇல் மாலை நேரத்தில் வாடிய மறை முகம் வாடியிருந்தது. ஏதோ யோசனையில் அவள் மூழ்கியிருந்தாள்.
[final chapter soon. இது ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் சீக்கிரம் அப்டேட் பண்ணிட்டேன். Comments, votes and feedback are appreciated:) மனஸ்தாபம் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது தக்க விளக்கங்கள் இல்லாவிட்டால். ஆகவே, இன்னொரு chapter முடிச்சு வைக்க:)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro