24. மன்னிப்பு
வினோதினி வெளியேறியதும் அவள் பின்னால் செல்லாது நாற்காலியில் சிலையாய் பிடிவாத்தத்துடன் அமர்ந்திருந்தான் ராஜ். அவனின் கோபம் தீரவில்லை என அவன் எண்ணிக்கொண்டாலும் அவனின் புண்பட்ட ஆண்மைக்காக தான் அவன் பிடிவாதமாய் நாற்காலியில் அமர்ந்திருந்தான். வாக்மேனை கிப்ட் டப்பாவில் வைத்தபோது புண்ணில் உப்பைத் தேய்த்தது போல் உறைத்தது. "வாக்மேன் வாங்கும் அளவுக்கு சம்பளம் வாங்குறேன்னு குத்திகாட்டுறாளா" என அவனின் மூளை வினோதினியின் அன்பை திசைத் திருப்பியது. ஆனாலும் வெகு நேரம் யாருமில்லா அறையில் தனியாய் உட்கார்ந்திருப்பது சலிப்பைத் தர ராஜ் எழுந்து மீண்டும் மணவரைக்கு வந்து தன் நண்பர்களைக் கண்டுக்கொண்டான்.
நண்பர்களைக் கண்டதும் கிண்டல் கேலி பேச்சுடன் அவர்களுடன் ஒட்டிக்கொண்டான். திருமண வைபோகத்தின் சிரிப்பும் குதூகலமும் அவனின் கோபத்தையும் வினோதினியையும் மறக்க செய்தது. சில மணி நேரம் கழித்து நண்பர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு மீண்டும் ரயில் ஸ்டேஷனக்கு புறப்பட்டான் ராஜ். கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாலையில் அவனை வரவேற்றது போல் இப்போதும் அதே கூட்ட நெரிசலுடன் வரவேற்றது. சென்னைக்கு ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு ஒரு தண்ணி பாட்டில் வாங்க ஸ்டேஷனில் இருந்த ஒரே ஒரு பொட்டிக்கடையின் முன்னால் வந்து நின்றான். தண்ணி வாங்கி விட்டு திரும்புகையில் கடைக்கு பக்கத்தில் இருந்த பென்ச் இல் வினோதினி அமர்ந்திருந்ததைக் கண்டு திடுகிட்டான்.
அவளைப் பெயர் சொல்லி கூப்பிட்டதும் கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திரும்பினாள். அவளின் கண்கள் சிவந்திருந்தன. காலையில் தெரிந்த பொழிவு நேரத்தினாலோ சோகத்தினாலோ இம்மாலையில் மங்கியிருந்தது.
"எனக்காக இங்க உட்கார்ந்து இருக்கியா? மண்டபத்துலேர்ந்து வீட்டுக்கு போகலையா?" என அவளருகில் வந்தான் ராஜ். அவள் வெகு நேரம் தனக்காக ஸ்டேஷனில் அமர்ந்திருந்தாளோ என எண்ணுகையில் அவனின் மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி எழுந்தது.
வினோதினி பதிலளிக்காது எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளை ராஜ் தொடர்ந்தான்.
"வினோ ஏன் பேசாம இருக்க? நின்னு பேசிட்டு போ." அவளின் திமிரான நடை இவன் மனதில் தோன்றிய சிறு குற்ற உணர்ச்சியையும் மூழ்கடித்தது.
அவனின் பேச்சு இவளுக்கு கேட்டதென காட்டிக்க பின்னால் வருபவனை திரும்பி பார்க்காமலேயே வினோ கேட்டாள், "வாக்மேனை மண்டபத்துலயே வீசிட்டியா இல்ல..."
"கைல வச்சிருக்கேன்," ராஜ் தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு அவளின் நடைக்கு ஈடுகொடுத்து நடக்கலானான். கோபத்தில் ரத்தம் கொதிப்பதோடு அவளின் நடையும் அவசரமாய் இருந்தது. அவசரமாய் நடந்தவள் திடீரென நின்றாள். மூச்சு வாங்கியது.
"இங்க பேசுனா யாராவது பார்ப்பாங்க," என சொல்லிவிட்டு ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தாள். ஆம், சரியாக ராஜின் இருக்கையில் தான் அமர்ந்தாள் ஏற்கனவே சீட் நம்பர் பார்த்துவிட்டு இவனுக்காக காத்திருந்திருந்தவள்.
அமர்ந்தவுடன் ராஜ்க்கு பேச்சு வரவில்லை. காலேஜில் நண்பர்கள் சிறு சண்டைகளையும் பெரும் போர்களையும் நிறுத்தி சேர்த்து வைத்த காலம் மலையேறிவிட்டது. பூ கட்டும் நாறின் முடிச்சுகளை அவிழ்ப்பதுபோல் பார்த்து, பிரித்து, சேர்ப்பது என தன் காதலின் சிக்கலை தான் தான் அவிழ்க்க வேண்டும் என அறிந்த வினோதினி தன் சுயமரியாதையை, தன்மானத்தை மாத்திரை முழுங்குவது போல் முழுங்கிவிட்டு ரயில் ஸ்டேஷனில் அவனுக்காக காத்திருந்தாள். இப்போதும் அவள் தான் முதலில் மௌனத்தை உடைத்து சமாதான தூது விட்டாள்.
"பல மாசம் கழிச்சு பார்க்குறோம். இப்டி சண்டைல விடைபெறுவது எனக்கு கஷ்டமா இருக்கு. நீ சிரிச்சுட்டே திரும்ப சென்னைக்கு போகனும். உன் கோபம் தீர திட்டிக்கோ, என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ ராஜ்."
ராஜ்க்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
"எதுக்கு கோபப்படுற நு சொல்லு டா."
அவனின் மனம் குறுகுறுத்தது. தனக்கு முன் அவளுக்கு வேலைக் கிடைத்த காரணத்துக்கு திட்டுவதா? அவனுக்கே தன் காரணங்கள் அற்பமாய் தோன்றின. ஆனாலும் ஆண் அவன் நிற்கதியாய் நிற்கையில் அவள் சந்தோஷமாய் இருக்கலாமா?
"நான் வேலை தேடி தெருதெருவா அலையுறேன். நீ அங்க ஹாயா கம்பனில உட்கார்ந்து இருக்க." மனதில் இருந்த வன்மம் அவனின் கட்டுப்பாட்டைத் தாண்டி ஒலிக் கொண்டது.
"நீ கஷ்டப்பட்டு வேலை தேடிட்டு இருக்க. உன்னோட கஷ்டம் எனக்கு புரியாட்டியும் உனக்கு நல்லது நடக்கனும்னு நான் வேண்டிட்டு இருக்கேன். நீ நல்லா இருக்கனும்னு முழு மனசா நினைக்கிறேன். எல்லாத்துக்கும் நேரம், காலம், அதிர்ஷடம் நு இருக்கு. உன்னோட நேரம் கூடிய சீக்கிரமே வரும் டா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீயும் அந்த நம்பிக்கையோட இரு. நெகடிவ்வா யோசிக்காத"
ராஜ் அவளின் சமாதனங்களை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டான். ஆனாலும் அவள் வாழும் ஊரிலேயே, உட்கார்ந்த இடத்திலேயே வேலை கிடைத்து இப்போது சம்பளத்துடன் வந்து நிற்பது அவனின் மூளையைக் குடைந்தது.
"ஆனாலும் நீ high class நு நிரூபிச்சிட்ட."
"ராஜ், நாம் நு வந்த பிறகு அதுல நான் எப்படி உயர்ந்து இருக்கலாம், நீ எப்படி தாழ்ந்து நிற்கலாம்? இந்த கிளாஸ், ஸ்டேடஸ் உன் மனசுல இருக்கிற நஞ்சு. உன்ன எனக்கு சமமா தான் பார்க்குறேன். அதுனால தான் உன்ன லவ் பண்றேன், உன்கூட சேர்ந்து வாழ ஆசைப்படுறேன்." ராஜ் இருவரையும் பிரித்து பேசுவதை தாங்க இயலாமல் கண்ணீர் கொட்ட கண்ணீரை மறைக்கும் வண்ணம் வினோதினி அவன் கரத்தைப் பற்றி தன் கண்ணோடு சேர்த்தாள். இந்த கூட்டத்தில் தனியாய் அழ இடம் ஏது. அவளின் கண்ணீர் துளிகள் ராஜின் கட்டை விரலில் இருந்து மணிக்கட்டுக்கு வடிந்தது.
பெண்ணின் கண்ணீரைக் கண்டதும் அவளை ஆறுதல்படுத்தும் வண்ணம் தன் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு அவளின் சிரத்தை தன் கழுத்தின் வளைவோடு சேர்த்துக்கொண்டான் ராஜ். ரயில் ஹார்ன் ஒலித்து ரயிலின் கூரைமேல் அமர்ந்திருந்த பறவை ஜோடிகளையும் ரயிலினுள் அமர்ந்திருந்த காதல் ஜோடியையும் பிரித்தது. வினோதினி தன் புடவையின் முந்தானையால் தன் கண்களை துடைத்துவிட்டு அவனின் கரத்தை முத்தமிட்டு போன் பண்ண சொல்லி ரயிலில் இருந்து இறங்கினாள். ராஜ் அவளைத் தொடர்ந்து ரயிலின் படியில் வந்து நின்று அவள் மறையும் வரை கைக் காட்டினான்.
மீண்டும் தன் இருக்கைக்கு திரும்பியபோது இருக்கையில் இருந்த பேக் ஐ தரையில் வைக்கையில் அதில் இருந்த கிப்ட் டப்பாவின் பளிச் பேப்பர் மின்னியது. அதைப் பிரித்து வாக்மேனை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான். புதிதாய் ஜொலித்தது. வாக்மேனின் ஓபன் பொத்தானை அமுக்கியபோது கடித உரை போல் திறந்து வினோதினியின் காதல் கடிதத்தைக் கொடுத்தது. ஆம், உள்ளே ஏற்கனவே ஒரு காசட் இருந்தது. கிப்ட் டப்பாவில் இருந்த ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஸ்டார்ட் பொத்தானை அமுக்கியதும் வித்யாசாகரின் காதல் பாடல் இசைத்து இவனின் கோபத்தையும் மனதின் நஞ்சையும் அகற்றியது. காலேஜ் நியாபகங்களும் இருவரும் ஒன்றாய் நடந்த தூரங்களும் ரயிலுக்கு பாதையாகின. நிறைய காதலுடன் ராஜ் மீண்டும் சென்னைக்கு திரும்பினான்.
(வாக்மேன் ஆ? காசெட் ஆ? இதுலாம் என்ன என கேட்பவர்களுக்கு கதை 1990-2000 ல நடக்குது. 2008-2010 ல தான் நெட் இல்லாத போனே நடுத்தர வர்கத்தின் கையிலும் காதிலும் வந்தது. 2000 ல ஐபோட் வந்தாலும் அது விலை ஜாஸ்தி + இந்தியால அவ்ளோ பெரிய ஹிட் ஆகல. ஐபோட் இருந்தும் இன்னும் வாக்மேன் பயன்படுத்துனாங்க அப்டின்னு நினைக்கிறேன். உங்களுக்கும் தெரிஞ்சா சொல்லுங்க:)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro