19. நண்பன்:)
வேலை தேடு என்ற கட்டளை அப்பாவிடம் வந்த பின் ராஜ் முதலில் உதவியும் ஆலோசனையும் கேட்டது அவனின் நண்பர்களிடம். அன்று தோட்டத்திற்கு சற்று சீக்கிரமாக ராஜ் வந்து சேர்ந்தான். ஸ்கூல் பசங்கள் முதல் இருபது முப்பது வயதுள்ள ஆண்கள் வரை வயது வித்தியாசமின்றி கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். ராஜ் முதலில் தனது நண்பர்களான மைக்கல் மற்றும் பாண்டியை கண்டு அவர்களிடம் தனது கவலையை கூறினான். நண்பர்கள் இருவரும் கையை விரித்தனர்.
"நியூஸ்பேப்பர் ல ad ஏதாவது வருமா?" பாண்டி அப்பாவியாய் கேட்டான்.
"இதுவும் மெடிக்கல் கடை வேலை மாதிரி தான். யாரும் வேலைக்கு ad போட மாட்டானுங்க. எப்டி உங்க மாமாவுக்கு மெடிக்கல் கடை ஓனரையும் கடைல ஆள் தேவைப்படுதுன்னும் தெரிஞ்சதோ அதே மாதிரி தான் முக்கால் வாசி வேலை வாய்ப்பு. மிஞ்சி போன ஒன்னு ரெண்டு வேலைக்கு தான் ad போடுவானுங்க." ராஜின் பிரச்சனையைக் கேட்ட மற்ற ஆண்கள் அவனுக்கு ஆறுதலாய் இரு வார்த்தைகள் பேச விளையாட்டை ஸ்கூல் பசங்களிடம் கொடுத்துவிட்டு ராஜிடம் வந்தனர். அங்கு ஒருத்தன், "சென்னைல மட்டும் தான ஏர்போட் இருக்கு?" கூட்டத்தில் இருந்த ஒருத்தன் குரல் கொடுத்தான்.
இன்னொருத்தன், "மச்சா, நீ படிச்ச படிப்புக்கு சென்னைல மட்டும் தான் வேலைக் கிடைக்கும். நீ அங்க கிளம்பி போ," என தனக்குப் புலப்பட்டதைக் கூறினான். மற்றவர்களும் தலையசைத்தனர், அவர்களுக்கும் இதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை, ஆனால் தெரியவில்லை என்பதே அதைவிட பெரிய காரணம்.
மனது உடைந்து போன தன் நண்பனை பரிதாபமாக பார்த்தான் மைக்கல். படிப்பு இருந்தும் சரியான வேலையில்லாமல் திண்டாடும் நண்பனின் முகம் வாடியிருந்தது. "உடனே சென்னைக்கு கிளம்பு ராஜ். வேணும்னா அங்க இருக்குற என் அண்ணன் கூட தங்கிக்க. என்னால அது தான் டா பண்ண முடியும்."
"சென்னைக்கு போலாம் ஆனா அதுக்கும் அப்பா கிட்ட இருந்து பணம் வாங்கனும்," ராஜ் மெதுவாய் பதில் சொன்னான்.
"பஸ் கண்டக்டர் என் மாமா தான். தஞ்சாவூர்லேந்து சென்னைக்கு இலவசமா போலாம்," கூட்டத்திலிருந்து ஒரு ஆலோசனை வந்தது.
மைக்கல் சிரித்தான், "அதான, பஸ்ஸே நம்மடது. சென்னைலயும் ஒரு கண்டக்டர பார்த்து வை டா," என கிண்டலடித்தான்.
"ரொம்ப தேங்க்ஸ் டா. நான் வீட்டுல பேசி சென்னைக்கு போற வேலைய பார்க்குறேன்." நண்பர்கள் ராஜைத் தட்டிக் கொடுக்க ராஜுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்தது. காலையில் மேகங்கள் சூரியனை மறைத்து உலகமே இருண்டது போலவும் இப்போது நண்பர்களிடம் பேசியபின் நிலவொளியில் பிரகாசமாய் இருப்பது போலவும் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.
ராஜ் இரவு உணவுக்கு கூடு வந்து சேர்ந்தபோது சண்முகம் மண்ணும் புழுதியும் படிந்த சட்டையைக் கழட்டிவிட்டு பனியனுடன் சமையலரையின் வெளியே சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தார். சமையலரையில் உணவு பரிமாறுவதற்கு மகாலட்சுமி தட்டைக் கழுவும் சத்தம் கேட்டது. அப்பா அருகே தான் மட்டும் உட்காறுவது ஒரு மாதிரியாக இருக்க வீட்டுப்பாடம் செய்துக்கொண்டிருந்த சுதர்சனை ராஜ் இழுத்தான், "சாப்டுட்டு வந்து படி டா."
சுதர்சனும் ராஜும் அப்பா பக்கத்தில் அமர மகா தட்டையில் சோற்றை வைத்தாள். தட்டின் பாதி உணவு வயிற்றின் பசியை ஆற்றியபின் ராஜ் மெண்டு முழுங்கி துப்பினான், "அப்பா, நா வேலை தேட சென்னைக்கு போலாம்னு இருக்கேன்."
சன்முகத்தின் முகம் எவ்வித உணர்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. ஏற்கனவே இதைத் எதிர்பார்த்தவர் போல, "எப்ப போலாம்னு இருக்க?"
"எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போலாம்னு இருக்கேன். இன்னு ஒரு வாரத்துல போலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்."
"சரி பா. வேலைக்கு தான போற, சரி போய்ட்டு வா. தங்குறது, சாப்பிடுறது இதெல்லாம் என்ன பண்ண போற?"
"மைக்கல் அண்ணன் சென்னைல இருக்கான் அவன் கூட தான் தங்கபோறேன். வேலைக் கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பணம் தேவைப்படும்."
"ம்ம்ம்... எவ்வளவு வேணும்னு சொல்லு, இந்த ஒரு வாரத்துல புரட்டிர்ரேன்."
மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்த மகாலட்சுமி பணம் என்றதும் குறுக்கிட்டாள், "ஏங்க, பணத்த அதுக்குள்ள புரட்ட முடியுமா? கொஞ்ச நாளாகட்டுமே"
"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இங்க இருந்தா ஒன்னு கிடைக்காது. அங்கயாட்டும் போகட்டும். ஆம்பிளையாகட்டும்," சண்முகம் முடிவெடுத்தார்.
[நண்பர்கள் ரொம்ப முக்கியம்:) அப்புறம், தனியா இன்னொரு ஊருக்கு போய் வேலைத் தேடுறது, அங்கயே வாழ்றது என்பதெல்லாம் வாழ்க்கைல முக்கிய பாடங்கள். நம்ம புத்தகங்களும் டிகிரியும் தர முடியாத பாடங்கள். கண்டிப்பா எல்லாரும் அவங்க வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதி/வருஷத்தை வெளியூரில் வாழ முயற்சி பண்ணனும். தெரியாத ஊர், மக்கள், தனிமை ஆகியவை சோதனைகள், பாடங்கள். ]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro