Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16. STD booth

வினோதினி வீட்டுக்கு போன் செய்த அதிர்ச்சியில் ராஜுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கே போன் செய்துவிட்டாள். அந்த நேரம் பார்த்து வாசலில் பைக் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் அப்பா, சண்முகம், வீட்டினுள் நுழைந்தார். நுழைந்தவர் முதலில் ராஜை தேட ராஜ் நாற்காலியில் இருந்து அவசரமாக எழுந்து நின்றான்.

"எப்படா வந்த?" தெரிந்துகொண்டு கேட்கிறாரா இல்லை தான் வருவதை மறந்து விட்டு கேட்கிறாரா என தெரியாமல் காலைல வந்தேன் என ராஜ் சொன்னான்.

சண்முகம் சமையல் அறையினுள் சென்று இரு பைகளை மகா விடம் கொடுத்துவிட்டு இருவரும் ஏதோ குசுகுசுவென ரகசியம் பரிமாறிக்கொண்டனர். ராஜுக்கு தெரியும், அவனைப் பற்றி தான் ஏதோ கேட்கிறார் என்று. அப்பா சமையல் அறையிலிருந்து கால் எடுத்து வைத்த தருணம் வீட்டு தொலைப்பேசி அமைதியை உடைத்தது. தொலைப்பேசியின் வெகு அருகில் இருந்த சண்முகம் யோசிக்காமல் போனை எடுக்க ராஜுக்கு பதறியது.

"இன்னைக்கு பார்த்து பேசுனேன்," என அப்பா தெரிந்தவரிடம் பேசுவதைக் கேட்ட ராஜ் இது தான் சந்தர்பம் என மீண்டு வந்த உயிரைக் கையில் பற்றிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான். தான் வீட்டுக்கு வந்ததும் STD பூத் இலிருந்து போன் செய்யும்வரை பொறுத்திரு என்றுக் கூறியும் பொறுமையின்றி வீட்டுக்கே அழைத்துவிட்டாள் வினோ. கோபமும் எரிச்சலும் இவன் அழைக்கவில்லை என வினோ மீண்டும் வீட்டுக்கு அழைத்துவிடுவாலோ என்ற அச்சமும் அவனுக்கு கூடுதல் ஊக்கத்தை தர ஓட்டமாய் STD பூத் கு வந்தடைந்தான் ராஜ்.

7.30 மணிக்கு இளைஞர்கள் தத்தம் கூட்டத்துடன் டீ கடைகளையோ ஆட்டோ ஸ்டான்ட், STD பூத்தையோ மொய்த்துக்கொண்டிருந்தனர். ராஜ் தனக்கு தெரிந்த இருவருக்கு ஒப்புகைக்கு கை அசைத்துவிட்டு STD பூத் வெளியே அமர்ந்திருந்த ஓனரிடம் வந்தான்.

"லோக்கல் கால் ஒன்னு பண்ணனும்."

"இதோ, இங்க பண்ணுப்பா," என மேசையில் இருந்த போனைக் கைக் காட்டினார் ஓனர்.

"இல்ல, பூத்ல பண்ணனும்."

கண்ணாடியை மூக்கில் ஒசத்திக்கொண்டு எழுதிக்கொண்டிருந்த கணக்கு நோட்டிலிருந்து நிமிர்ந்து இவனை நோக்கினார் ஓனர். அவர் பார்த்த பார்வையில் எல்லாம் கண்டுபிடித்துவிட்டார்.

"உள்ள ஆள் பேசிட்டு இருக்கு. வெளிய வந்ததும் போலாம்."

பூத் உள்ளிருந்த ஆள் அவனின் காதலியை சமாதானம் செய்கிறான் போல, வெளியே வர கால் மணி நேரம் ஆனது. STD கடை வெளியே போய் நிக்கலாம் என்றால் வெளியே கைக் காட்டிய இருவரிடம் பேசுக் கொடுக்கவேண்டும் அதுவும் யாருக்கு போன் போட போறே என்று கேட்டுவிட்டால் மலுப்பியாக வேண்டும். இதற்கு இந்த புழுக்கத்தில் கடையினுள்ளே நிற்கலாம் என ராஜ் முடிவெடுத்த்தான். பூத்திலிருந்து ஒருவர் வெளியே வர ராஜ் உடனே உள்ளே நுழைந்தான். பர்ஸ்சை திறந்து அதிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்தான். அதில் எழுதப்பட்டிருந்த நம்பரை அழுத்தினான். ரிங் அடிக்க போன் எடுக்கும் வரை பர்ஸை மீண்டும் திறந்து பார்த்தான், காசு இருந்தது.

"ஹலோ." வினோதினியின் குரல் பல நாட்களுக்கு பின் மென்மையாய் ஒலிக்க அவனின் கோபம் பாதி குறைந்தது.

"ஹலோ வினோ, ராஜ் பேசுறேன்."

"ராஜ், எப்டி இருக்க? ஏன் ஊருக்கு வந்ததும் போன் பண்ணல? என்னைய மறந்துட்டியா?"

உண்மையில் அவன் மறந்து தான் போய்விட்டான். காதல், காதலோட வரும் பிரச்சனைகள் என எல்லாவற்றையும் மறந்து நண்பர்கள், கிரிக்கெட், என்ன படித்தால் என்ன, என்ன வேலை பார்த்தால் என்ன என பாரபட்சம் பார்க்காமல் உடனே அவனை இணைத்துக்கொண்ட பழைய நண்பர்கள், அன்பாய் சாப்பாடு பரிமாறிய அம்மா என பழைய பிளஸ் டூ ராஜாக மாறியிருந்த அவனுக்கு வினோ மறந்து விட்டாள்.

"ஒரு நாள்ல மறந்துடுவேனா? லூசுத்தனமா பேசாத." ஆமாம், மறக்க யுகங்கள் ஆகுமே. "ஊருக்கு வந்ததும் நானே STD லேர்ந்து கால் பண்றேன்னு சொன்னேன். வீட்டுக்கு ஏன் பண்ண?"

"ஆமா, காலை 6 மணிக்குலாம் வீட்டுக்கு வந்துருவேன்னு சொன்ன. அப்புறம் காலை இல்ல பகல் போன் பண்ணுவன்னு பார்த்தேன் நீ பண்ணல. அதான்."

"வீட்டுல உன்ன பத்தி சொல்லல. அதுக்குள்ளே இப்படி போன் பண்ணாத"

"ஏன் கோவமா பேசுறீங்க? உங்கள மிஸ் பண்றேன்னு தான போன் பண்ணேன்."

"சரி. இனிமே பண்ணாத. நான் இந்த STD பூத் நம்பர் தர்றேன். ஏதாவது அவசரம்னா இதுக்கு கூப்டு. டெய்லி சொன்ன மாதிரி ஒரே டைம் கு பேசிக்குவோம். "

"நான் தான் போன் பண்ண முடியாது. ஆனா நீயாவது அடிக்கடி என் நம்பர் கு போன் பண்ணு. நான் தான் எடுப்பேன்."

"எப்படி? வீட்ல தான இருக்க? அம்மா, மாமா நு யாரும் எடுக்க மாட்டாங்களா?"

"என் ரூமுக்கு தான் தனியா போன் நம்பரும் connection உம் கொடுத்திருக்காங்களே. அதெல்லாம் யாரும் எடுக்க மாட்டாங்க."

வினோதினியின் பண பலம் நியாபகத்துக்கு வந்தது. வீட்டுக்கு ஒரு போன் என்பது மற்றவர்கள் வீட்டில், இவர்கள் வீட்டில் ஆளுக்கு ஒரு போன், ஆளுக்கு ஒரு நம்பர்.

"சரி, எப்டி இருக்க வினோ?"

"உன்னோட நியாபகமாவே இருக்கு. மத்தபடி, நல்லா சாப்டு, தூங்கி இருக்கேன்."

"நானும் தான். அம்மா எனக்காக மட்டன் சமைச்சாங்க."

"சாப்பாட மட்டும் சொல்லு. வேற ஏதாவது நடந்துச்சா?"

"பெருசா எதுவும் இல்ல. இப்ப தான ஊருக்கு வந்துர்க்கேன். கொஞ்ச கொஞ்சமா தான் எல்லாம் நடக்கும். சரி, நான் போனை வச்சிடுறேன்."

"ம்ம்ம்..." என தொய்வான குரலில் வினோ கூறினாள். போனின் மறு முனையிலிருந்து அவளின் மூச்சுக் காற்று என் நுரையீரலை நிரப்பிக்கொண்டிருந்தது. முதலில் இருந்த கோபம் எல்லாம் இப்போது உருகி தவிப்பு மட்டும் மிஞ்சியது.

"I miss you da chellam." வினோ சொல்ல ராஜும் "நானும் தான்" என பதிலளிக்க கனத்த மனதுடன் போனை வைத்தான்.

பூத் கதவை திறந்து வெளியே வந்து ஓனர் முன் வந்து நின்று பத்து ரூபாயை நீட்டினான். அவர் அதை வாங்கிக்கொண்டு மிச்சத்தை தர, அதை ராஜ் கை நீட்டி வாங்குகையில் " தம்பி, பாக்கி வைக்கிறது, நாளைக்கு தர்ரதுலாம் வேணாம். போனை வச்சதுமே காச தந்துரனும்," அவன் அடிக்கடி போன் பேச வருவான் என தெரிந்து எச்சரிக்கை செய்தார்.

பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ராஜ் வீட்டை நோக்கி நடந்தான் இரவு உணவுக்கு. அவனின் வேகமும் கோபமும் இப்போது குறைந்திருந்தது. வினோதினிக்கு புரியவைத்துவிட்டோம் என்ற மன நிறைவுடன் அவன் சென்றான்.


(இந்நேரம் உங்களுக்கும் தெரிந்திருக்கும், இது ஒரு early 2000 இல் நடந்த கதைன்னு. அப்போ மொபைல் போன் வரல, 2010 கு பிறகு தான் எல்லாரும் கைல ஒன்னு வச்சிருந்தாங்க. )


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro