Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

☘35☘

"இரு... இன்னும் நான் முடிக்கவில்லை, உன் சொல்படி நடந்தால் பதிலுக்கு நீ என்ன தருவாய்?" என்று நைச்சியமாய் கேட்டான் மாதவ்.

"ம்... பெண்டாட்டியிடமே லஞ்சமா?" என்று முகம் சுளித்தாள் அஸ்வதி.

"பெண்டாட்டியிடம் தான் முக்கியமாக லஞ்சம் கேட்க வேண்டும்!" என்று கண்ணடித்தான் அவன்.

தலையிலடித்துக் கொண்டவள், "லஞ்ச ஒழிப்பு துறையிடம் போட்டு கொடுத்து விடுவேன், பீ கேர்ஃபுல்!" என்று சுட்டு விரல் நீட்டி மிரட்டினாள்.

"ஹஹா... அதற்கான ஆதாரத்தை எல்லாம் உன்னால் தயாரிக்க இயலுமா செல்லம்?" என்றவனின் உடல் வெடித்துக் கிளம்பிய நகைப்பில் குலுங்க ஆரம்பிக்க, முகம் சிவந்தவள் அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

"யூ... ராஸ்கல், இந்த வாய் இருக்கின்றது பார். இப்படியே பேசிப் பேசி தான்டா என்னை நீ மடக்கி விட்டாய்!" என்று பொருமினாளா அல்லது பாராட்டினாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

"ஏய்... சியாம் வீடு வந்து விட்டது, அத்தை சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கிறது இல்லை? ம்... அடக்கமான நல்லப் பெண்ணாக நடந்துக் கொள்ளப் பார்!" என்று அவளை சீண்டினான் மாதவ்.

ஐய்யே... என்று உதட்டை சுழித்து பழிப்பு காண்பித்தவளை கண்டு பெருமூச்செரிந்தவன், "ஹும்... இதை கொஞ்சம் ஊருக்கு ஒதுக்குபுறமாய் காட்டியிருந்தாய் என்றால் காரையாவது ஓரங்கட்டி நிறுத்தியிருப்பேன். இப்படி நட்ட நடு தெருவில் காண்பித்து என் கைகளை கட்டிப்போட்டு விட்டாயே அம்முகுட்டி!" என்று ஏகத்திற்கும் அவன் விசனப்பட,

"ச்சீய்... லூசு!" என கன்னம் சிவந்தவள், "ஆனால்... நான் ஃபிரியாக தான் இருக்கிறேன்!" என்று கண்ணடித்து அவனை நெருங்கி வேகமாக முத்தங்களை பதித்து விட்டு விலக, பதிலுக்கு முறைத்தவனை கண்டு நாக்கை துருத்தி அழகு காண்பித்தாள் அஸ்வதி.

வீட்டின் முன் காரை நிறுத்தி இவர்கள் இறங்கவும் முகம் கொள்ளா உவகையுடன் விரைந்து சியாம் அருகில் வரவும் சரியாக இருந்தது.

"ஹேய் மாதவ்..." என்ற கூவலுடன் உற்சாகமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டவன், "வாம்மா!" என்று அஸ்வதியையும் வரவேற்றான்.

"ஹாய்டா... எப்படி இருக்கிறாய்? பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகளாகி விட்டது இல்லை?" என்று அவன் கரங்களை ஆசையுடன் பற்றிக் கொண்டு மாதவ் வினவ, ஆமாம்... ஆமாம்... என்று ஆமோதிப்பாக தலையாட்டியவனிடம் அவந்தியின் உடல்நலம் பற்றி விசாரித்தாள் அஸ்வதி.

"நன்றாக இருக்கிறாள்மா... உள்ளே வாருங்கள்!" என்று அழைத்து செல்ல, எதிரில் நாராயணனும், நாச்சியாரும் வந்து வரவேற்றனர்.

"ஏய் மாதவ்... வா வா... எப்படிப்பா இருக்கின்றாய்? அப்பா, அம்மா, அண்ணா அனைவரும் நலமா?"

"எல்லோரும் சௌக்கியம் மாமா!"

வாம்மா என்று அஸ்வதியை அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்ட நாச்சியார், "ஏன்பா அப்பா, அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம் அல்லவா நீ? அவர்களையெல்லாம் பார்த்து எத்தனை வருடங்களாகி விட்டது!" என மாதவிடம் வினவினார்.

"இல்லை அத்தை... அண்ணிக்கு ஒரு சின்ன மைனர் ஆப்ரேஷன் நடந்திருக்கிறது. அதனால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டி அவர்களால் வர முடியவில்லை. தலைவருக்கு ஜுனியர் பிறந்ததும் கட்டாயம் பார்க்க வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்!" என சியாமின் முதுகில் தட்டினான்.

முறுவலித்தவன், "சரி வா ரூமுக்கு போகலாம்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு ரெப்ரெஷ் பண்ணிக் கொள்ளுங்கள். டிபன் சாப்பிட்டு விட்டு ஊரை சுற்றிப் பார்க்க போகலாம், அஸ்வதி வேறு போனிலே கிராமத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் சொன்னாள் உன் தங்கை இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என்று உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்து நடந்துக் கொண்டே இருந்தாள். அம்மாவும், நானும் தான் அவளை மிரட்டி தூங்க வைத்திருக்கிறோம்!" என்றான் மேலும் விரிந்த புன்னகையுடன்.

"அட அதையேன்டா கேட்கிறாய்... அவந்திகாவின் வளைக்காப்பை ஒட்டி நான்கு நாட்கள் ஊருக்கு சென்று வரலாம் அலுவலகத்தில் லீவ் சொல்லி விடு என்று இவளிடம் சொன்னாலும் சொன்னேன், ஐ... கிராமமா? நான் அங்கெல்லாம் சென்றதேயில்லை போகலாம் போகலாம் என்று ஜார்ஜ் புஷ் பேத்தி லெவலுக்கு ஓவராக குதூகலிக்க ஆரம்பித்து விட்டாள் இவள்!" என்று நக்கலடித்து மாதவ் நகைக்க, தன்னிலை மறந்த அஸ்வதி அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.

"யூ... ஜார்ஜ் புஷ் பேத்தி என்று நான் சொன்னேனாடா? இல்லை... அலட்டினேனா எதற்குடா ஓவராக கலாய்க்கிறாய்?" என்று இடையில் கை வைத்து அவனை முறைத்தாள்.

ஐயோ அச்சுமா... என்று தன் வாய் மேல் கை வைத்து விழிகளை அகல விரித்தவன், "என்ன நீ பாட்டுக்கு சியாம் முன்னாலே என்னை கிள்ளி விட்டு வாடா போடா என்றெல்லாம் பேசி விட்டாய்?" என்று அளவுக்கதிகமாக திகைப்பை வெளிப்படுத்தினான்.

பேசிக் கொண்டே அப்பொழுது தான் அறையின் வாயிலை அடைந்திருந்தனர், மாதவ்வின் கேள்வியில் திடுக்கிட்ட அஸ்வதி தன் தவறை உணர்ந்து திருதிருவென்று விழித்தாள்.

'ஐயோ... இந்த அண்ணா என்னை பற்றி என்ன எண்ணுவார்கள்?'

"அண்ணா! ப்ளீஸ்... அது... சாரி என்னை எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான்..." என்று டென்ஷனாக விளக்க முயன்றவளை தடுத்தான் சியாம்.

"அட ஏன்மா நீ வேற... ஜஸ்ட் ரிலாக்ஸ். உண்மையிலேயே எனக்கு இப்பொழுது தான் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இவனை மாதிரி ஆளுக்கெல்லாம் எந்த பெண் வந்து மாட்டிக் கொண்டு விழிக்க போகிறதோ பாவம் என கவலைப்பட்டேன். நல்லவேளை... இவன் கொட்டத்தை அடக்கவென்றே கடவுளாக பார்த்து உன்னை இவனிடம் அனுப்பி வைத்திருக்கிறார்!" என்று சியாம் கூலாக உரைத்ததும், ஹேய்... என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவள் அவனிடம் ஹாய்ஃபை அடித்தாள்.

"ஹஹா... வெற்று சீன் பார்ட்டி போட்ட பால் பௌன்ஸ் ஆகி விட்டதே!" என்று மாதவ்வை கேலி செய்தாள்.

"டேய்... நீயெல்லாம் நண்பனாடா? துரோகி!" என சியாமை முறைத்தான் மாதவ்.

"சரி விடுடா... பாவம் சின்னப்பிள்ளை, உன்னை திருமணம் செய்து கொண்டு சின்னாபின்னமாகி சிக்கி தவிக்கிறது இல்லை..."

"ஆமாண்ணா!" என்றவள் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொள்ள, "யார் இவளா? அவ்வ்வா... டேய்... இந்த நடிப்பில் எல்லாம் ஏமாறாதேடா, உண்மையிலேயே இவளிடம் நான் தான் சிக்கி கொண்டு தினமும் அடி வாங்குகிறேன் தெரியுமா?" என்றவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டே கண்களில் வராத கண்ணீரை துடைத்தான்.

"சரி சரி ஸ்கூல் பையன் மாதிரி கம்ப்ளைன்ட் செய்தது எல்லாம் போதும், அண்ணா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். பை அண்ணா!" என்று மாதவின் கைப்பற்றி உள்ளே இழுத்தாள் அஸ்வதி.

தலையாட்டி சிரித்தபடி அவன் தன் அறைக்கு செல்ல, "நடிப்புக்கள்ளி... அண்ணா அண்ணா என்று அழைத்தே ஐஸ் வைத்து என் நண்பனை உன் பக்கம் கூட்டணி சேர்க்கிறாயே..." என்றவனின் அலட்டல் பேச்சு காதில் விழ, 'இதுங்க இரண்டும் எங்கே ரெஸ்ட் எடுக்கப் போகிறதுகள்? இன்னும் குறைந்தது அரை மணி நேரமாவது சண்டைப் போடுங்கள்!' என்று மெத்தையில் சரிந்தவன் திரும்பி அருகினில் உறங்கி கொண்டிருக்கும் அவந்தியை பார்த்தான்.

நன்றாக மேடிட்டிருந்த அவள் வயிற்றில் வாஞ்சையுடன் கை வைத்தவன், நெருங்கி கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தான்.

'இன்னும் நான்கு நாட்களுக்கு என் செல்லக்குட்டிக்கு நல்ல டைம் பாஸ் தான். சிரித்து சிரித்து வயிறு வலி வராமல் நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!' என்று இதழ் மலர்ந்தான் சியாம்.

மாதவ்வும், சியாமும் பத்தாம் வகுப்பு வரை பள்ளி தோழர்கள். மாதவ்வின் அப்பா கிராம நிர்வாக அலுவலராக இருந்து பணி ஓய்வுப் பெற்றவர்.

யாதவ் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரையில் சியாமுடைய ஊரில் தான் அவர்கள் குடும்பம் குடியிருந்தது. பிறகு அவனுடைய கல்லூரி படிப்பிற்காக மாற்றல் வாங்கி கொண்டு வேறு ஊருக்கு சென்று விட்டனர். அதன்பிறகு அவ்வப்பொழுது குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது சந்தித்து அளவளாவும்படி அவர்களின் நட்பு வேரூன்றியிருந்தது.

காலையில் ஆவலுடன் எழுந்து புத்துணர்ச்சியுடன் தயாராகிய அவந்திகா, மாதவ், அஸ்வதியை சந்திக்க வேண்டி எதிர்பார்ப்புடன் அவர்கள் அறைக்கதவின் மீது ஒரு கண்ணாக தங்கள் அறை வாயிலில்  நடமாடிக் கொண்டிருந்தாள்.

அவர்களின் நட்பையும், மாதவ்வின் குறும்புத்தனங்களையும் சியாமின் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள் அவந்தி. முதன் முதலாக இவர்களின் "நம் வாழ்க்கை நம் கையில்" குழுமத்தின் இயற்கை உரச் செடி, கொடி வளர்ப்பு குறித்து ஏசி, கரன்ட் பில் எந்த செலவும் இல்லாமல் இயற்கையாக குளிரூட்டப்பட்ட சூழலுக்கு மொட்டை மாடியில், பால்கனியில் ஆர்கானிக் தோட்டம் அமையுங்கள் என விளம்பரம் செய்தானே, அன்று தான் அவன் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டாள் அவள்

அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்கவில்லை என்றாலும் அவ்வப்பொழுது போன் மூலம் நிறைய உரையாடியிருக்கிறாள். மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர்ஸ் என சியாமிடம் கூறி சிலாகித்தவளுக்கு நேரில் சந்திக்க ஆர்வம் இல்லாமல் இருக்குமா என்ன?

அவளின் அலைப்புறுதலை கண்ட சியாம் அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்து தோளில் முகம் புதைத்தான்.

"ஏய் பொம்முக்குட்டி... அதுங்க இரண்டும் சண்டையை முடித்து தூங்குவதற்குள் விடிந்து போயிருக்கும். எப்படியும் குறைந்தது ஒன்பது மணியாகும் அவர்கள் எழுந்து வெளியே வருவதற்கு!" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, எதிரில் அறைக்கதவு திறக்கும் ஓசை கேட்டது.

"இதோ... எழுந்து விட்டார்கள் போலிருக்கிறதே!" என்று அடக்கப்பட்ட உற்சாகத்துடன் வேகமாக வெளியேறினாள் அவந்தி.

"ப்ச்... ஏய்... பார்த்து மெல்ல போ!" என்று அதட்டியபடி அவளை பின் தொடர்ந்தான் சியாம்.

"ஹாய் அவந்தி... எப்படிமா இருக்கிறாய்?" என்று புன்னகையுடன் எதிரே வந்த மாதவ், சியாமின் குரல் கேட்டு சுதாரித்தான்.

"ஆமாம் ஏய்...  எதற்காக இப்படி ஓடி வருகிறாய்? நாங்கள் உன்னை பார்க்க தானே வருகிறோம்!" என்று விரைவாக அவளிடம் வந்தான்.

"இல்லைண்ணா... நைட்டெல்லாம் சரியாக தூக்கம் இல்லாததால் விடியற்காலையில் அசந்து தூங்கி விட்டேன். இல்லையென்றால் அப்பொழுதே உங்களை வந்து பார்த்திருப்பேன்!"

"அதனாலென்ன... இன்னும் முழுதாக நான்கு நாட்கள் உன்னுடன் இருந்து உன் வளைக்காப்பை முடித்து விட்டு தான் நாங்கள் ஊருக்கு செல்வோம்!" என்ற அஸ்வதியின் கரத்தை ஆசையுடன் பிடித்துக் கொண்டவள், "தாங்க்ஸ்கா!" என்று முறுவலித்தாள்.

"அக்காவெல்லாம் வேண்டாம் உன்னை விட இரண்டு வயது தான் பெரியவள் பெயர் சொல்லியே கூப்பிடு. இப்பொழுதெல்லாம் அது தான் ஃபேஷன்!"

"ஆமாம்மாம்... வயதை ஏற்றி காண்பிப்பது போல் அக்கா என்றெல்லாம் கூப்பிடாதே!" என்ற மாதவ் அஸ்வதியின் முறைப்பை கண்டு, "உனக்காக தாண்டி செல்லம் சொன்னேன்!" என பளீரென்று பல்லை காண்பித்தான்.

அவர்களின் அலும்பை ரசித்த சியாம், "சண்டையை முடித்து சிறிது நேரமாவது தூங்கினீர்களா அல்லது நான் ஸ்டாப்பாக போய் கொண்டிருந்ததா?" என்றான் கேலியாக.

"ம்... கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் சண்டையை முடித்து விட்டோம், பிறகு மீதி நேரம் சமாதானத்திற்கே பற்றவில்லை!" என்று கூறி அவன் கண்ணடிக்க, "ஹைய்யோ... விவஸ்த்தை கெட்ட ஜென்மம்!" என்று வெட்கத்துடன் அவன் தோளில் முகம் புதைத்தாள் அஸ்வதி.

உணவருந்தும் வேளையில், "உன்னால் திருமணத்திற்கு வர முடியவில்லையே என்று சியாம் மிகவும் புலம்பினான். நல்லவேளை வளைக்காப்பிற்காவது வந்தாயே... எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோசம்!" என்றார் நாராயணன்.

"இரண்டிற்குமே காரணம் நான் தான் மாமா!" என்ற மாதவ்வை ஓர விழியில் நோக்கினாள் அஸ்வதி.

'இப்பொழுது யாரை கவிழ்க்கப் போகிறானோ தெரியவில்லையே?'

"முதல் காரணம் இவள், ஏனென்றால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என சண்டி ராணியாக சுற்றிக் கொண்டிருந்தவளை ஒரு வழியாக பல திட்டங்கள் போட்டு வழிக்கு கொண்டு வந்தேன். சம்மதம் கூறியவளுக்கு யோசிக்க அவகாசம் கொடுக்க கூடாது என்று தான் பட்டென்று விரைவாக சியாமின் திருமணத்தென்றே இவளுக்கும் நான் தாலி கட்ட வேண்டியதாகிவிட்டது. இரண்டாவது இவன், நண்பன் திருமணத்திற்கு வரவில்லையே என்று சியாம் மிகவும் ஃபீல் செய்ததால் பெரிய மனது பண்ணி எங்கள் வளைக்காப்பை தள்ளி வருமாறு பிளான் செய்து விட்டேன்!" என பெருமை பீத்தியவனை கண்டு அஸ்வதி தலையிலடித்துக் கொள்ள, அவந்தி சூப்பர்ப் அண்ணா என்று தம்ப்ஸ்அப் காண்பித்தாள்.

"அடேய் அப்பா சாமி... உனக்கெல்லாம் பேசவாடா கற்றுக் கொடுக்க வேண்டும்!" என்று மயக்கம் போடுவது போல் தள்ளாடினான் சியாம்.

இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்தபடி ஆற்றங்கரை, சியாமின் பேக்டரி, தோட்டம் என உற்சாகமாக கிராமம் முழுவதும் சுற்றி வந்தனர்.

மிகவும் அந்நியோன்யமான ஜோடி எவ்வளவு காதலுடன் தங்களுக்குள் இதமாக நடந்துக் கொள்கின்றனர் என்று சியாம், அவந்தியை நினைத்து இவர்கள் நெகிழ்ந்தனர்.

அவர்களோ இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி அனைவரையும் தங்கள் பால் கவர்ந்திழுக்கும் சுவாராஸ்யமான ஜோடி என்று மாதவ், அஸ்வதியை எண்ணி மகிழ்ந்தனர்.

💞சுபம்💞

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro