☘32☘
தன்னருகில் யோசனையோடு படுத்திருந்தவளின் தோளில் தன் தாடையை வைத்து அழுத்தியவன், "என்ன யோசனை?" என்றான்.
"நான் செய்யப் போவது சரி தானே மாமா?" என திடுமென்று சந்தேகமாக வினவினாள் அவந்திகா.
"அதில் என்னடா தங்கம் சந்தேகம் உனக்கு? நீ செய்ய விரும்புவது மிகவும் நல்ல செயல் தான்!" என்று அவள் விரல்களை வருடி உதட்டில் பதித்தான் சியாம்.
"ஆனால்... இது குறித்து நிறைய ஆர்டிக்கிள்ஸ், கதைகள், படம் எல்லாம் கூட வந்திருக்கிறதே. அப்படி இருக்கும்பொழுது இதற்கு சரியான வரவேற்பு கிடைக்குமா அல்லது எல்லோரும் சொல்வதை தானே நீயும் சொல்கிறாய் என அலட்சியப்படுத்தி விடுவார்களா?"
சட்டென்று திரும்பி அவள் மீது தன்னுடல் பாரம் அழுத்தாது சரிந்தவன், "செல்லம்மா... நம் மொழியில் சிறந்ததொரு பழமொழி இருக்கிறது உனக்கு தெரியுமா?" என்று விவரம் கேட்டான்.
ம்... என அவள் புருவம் சுருக்க, "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!" என்றுவிட்டு அவள் கன்னத்தை கவ்வினான்.
பளீரென்று முறுவலித்தவள், "புரிகிறது..." என அவனை கீழே தள்ளி அவன் முகம் நோக்கினாள்.
"என்ன புரிகிறது?" என்றான் விரிந்த புன்னகையுடன்.
"அதாவது... கதைகளிலும், படங்களிலும் உள்ளதால் மட்டுமே நம் வாழ்க்கையின் தேவைகளை சரி செய்துவிட முடியாது. அதை நீ நேரிடையாக செயலாற்ற நினைப்பதால், உன்னுடைய முயற்சிக்கு என்று தனி சிறப்பானதொரு வரவேற்பு கிடைக்கும் என சொல்ல வருகிறீர்கள்!"
"எக்ஸாக்ட்லி!" என்று கண்சிமிட்டியவனின் கன்னத்தை நறுக்கென்று கடித்தாள் இவள்.
ஏய்... என்று அவன் வலியில் சிணுங்கும் முன்னே முகம் முழுவதும் மாறி மாறி முத்தமழை பொழிந்தவள், அவனை இறுக கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்தாள்.
"தாங்க்ஸ் மாமா... ஏதோ ஒரு வேகத்தில் குழுமத்தை ஆரம்பித்து விட்டேன். திடீரென்று குழப்பம் வந்து விட்டது, இதுபோன்று வம்புக்கென்று யாராவது ஏதாவது கேள்வி எழுப்பினால் எப்படி சமாளிப்பது? உன் செயல் பத்தோடு பதினொன்று போலத்தானே என்பது போல் தோன்றவும் மிகவும் டல்லாகி விட்டது மனது. அதை சரி செய்யதான் கொஞ்ச நேரமாக குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களிடம் அதை பகிரவும் ஒரே நொடியில் ஒரு பழமொழியை சொல்லி என்னை தெளிவாக்கி விட்டீர்கள் நீங்கள். லவ் யூ மாமா!" என கொஞ்சியவளை தன்னுள் புதைத்துக் கொண்டான் சியாம்.
மறுநாள் காலை தோட்டத்தை பார்வையிட கிளம்பி கொண்டிருந்தவனிடம் வந்து நின்றவள், "மாமா... இன்றைய பதிவில் நம் விவரங்களை கொடுத்து எந்தெந்த ஊரில் யார் யாருக்கு எல்லாம் இதில் இணைந்துக்கொள்ள விருப்பம் என்று கேட்டு போட்டு விடவா? அப்பொழுது தானே அந்தந்த ஏரியாவின் வரவேற்பை பொறுத்து நம்முடைய ஆட்கள் எவரேனும் அங்கே இருக்கின்றனரா என பேசி முடித்து ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்!" என்று அவன் அபிப்ராயத்தை வினவினாள்.
"ஆமாம்டா... அப்படியே செய், நானும் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் விவரம் தெரிவித்து அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு வைத்துக் கொள்கிறேன். உன் நட்பு வட்டமும் பெரிது என்பதால் ஓரளவிற்கு தமிழகம் முழுவதுமே இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். சரி நான் கிளம்புகிறேன், வயலுக்கு நேரமாகி விட்டது ஆட்கள் வந்து விடுவார்கள்!" என்று அவளை அருகிழுத்து முத்தமிட்டு விட்டு விலகிச் சென்றான் சியாம்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது போல பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான் என பலர் சொல்லக் கேட்டிருந்தவள் இன்று தான் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தாள்.
தன் வேலைகளை முடித்துக் கொண்டு லேப்டாப்புடன் அமர்ந்தவள், நம் வாழ்க்கை நம் கையில் குழுமத்தை திறந்து வந்திருக்கின்ற கருத்துக்களை எல்லாம் ஆர்வத்துடன் படித்து அதற்கு தகுந்த பதில்களை அனுப்பிவிட்டு தன் பதிவை போஸ்ட் செய்தாள்.
ஹாய் பிரெண்ட்ஸ்!
நேற்று ஆர்கானிக் புட்ஸ் பற்றி பேசியிருந்தோம் அல்லவா? அப்பதிப்பை போடும் பொழுதே அதை படிக்கின்ற உங்களின் மனநிலை எப்படியிருக்கும் என என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. எல்லோரையும் போல இவளும் ஏதோ நன்மையை செய்ய கிளம்பி விட்டவள் போல ஏதோ சீன் போடுகிறாள் என எண்ணியிருப்பீர்கள். அதில் தவறேதும் இல்லை நானாக இருந்திருந்தாலும் அச்சூழ்நிலையில் அப்படித்தான் நினைத்திருப்பேன்.
ஆனால் இந்த குழுமம் ஜஸ்ட் அறிவுரையோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை, உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாக களத்தில் இறங்கி செய்யப் போகிறோம். எவ்வாறு என்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கத்தையும் இங்கே கொடுக்கிறேன்.
"அன்னபூரணி இயற்கை விதைப்பண்ணை"
இதை நிர்வகிப்பவர் எனது கணவர் திரு.சியாம் அவர்கள். எங்கள் ஊரில் இயற்கை முறை விவசாயத்தை தன் ஆர்வத்தாலும், அக்கறையாலும் ஊக்குவித்து திறம்பட வளர்த்தி வெற்றிக் கண்டவர். நான் சிட்டியில் பிறந்து வளர்ந்தப்பெண், ஒரு சிலரை போல் ஆர்கானிக் தோட்டம் அமைக்க ஆவல் கொண்டு எங்கள் வீட்டு மாடியில் வளர்த்திருந்தேன். திருமணம் முடிந்து இங்கே கிராமத்திற்கு வந்தப்பிறகு தான் நாம் வாழ்கின்ற ஊரில் தினமும் உணவு என்கிற பெயரில் எத்தனை மோசமான விஷயங்களை வயிற்றுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என விவரம் புரிந்தது.
முழுமையாக விஷயங்கள் தெரிய தெரிய அதுவே பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு. நாம் உண்ணும் உணவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுதினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை உருவாக்கி கொண்டிருப்பது தெரிந்து மிகவும் வேதனையடைந்த அதே நேரத்தில் இதை மாற்றவே முடியாதா என்கிற ஆதங்கமும் எனக்குள் எழுந்தது. அதன் விளைவு தான் இந்த குழுமமும் இதன் தொடர்பான சேவைகளும்.
பெரிய அளவில் தோட்டம், பண்ணை என்றமைத்து நம்மால் விவசாயம் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, அட்லீஸ்ட் இருக்கின்ற இடத்தில் சின்ன சின்ன காய்கறி, மூலிகை செடிகளை வளர்த்து நம்மால் இயன்றவரை நம் வாழ்வையும், நம் குடும்பத்தினர் வாழ்வையும் நாம் பாதுகாக்கலாமே... இதற்காக நீங்கள் எந்த சிரமமும்பட வேண்டாம்.
நீங்கள் எந்த ஊரில் வசித்தாலும் சரி உங்கள் வீட்டை தேடி எங்கள் குழு ஆட்கள் வருவார்கள். நேரிடையாக இடங்களை ஆராய்ந்து அதற்கு தகுந்த செடி, கொடிகளை பரிந்துரைப்பதோடு நில்லாமல் அதை அவர்களே தருவித்தும் தருவார்கள். மேலும் அவற்றை பரிமாறிக்கின்ற முறைகள் குறித்தும் முழுமையாக விளக்கம் அளிப்பார்கள். தோட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன சந்தேகம் தோன்றினாலும் சரி, நீங்கள் தாராளமாக எங்களை தொடர்பு கொண்டு விவரம் கேட்கலாம்.
நம் எதிர்கால சந்ததியரின் ஆரோக்கிய வாழ்வை மனதில் கொண்டு நாம் இச்செயலில் முழுமையாக இறங்குவோம். எவ்வித தொய்வும் இல்லாமல் எடுத்த செயலை வெற்றிகரமாக தொடர்ந்து செயலாற்றினால் நம் வாழ்க்கை நம் கையில் தான். எந்த ஒரு அந்நிய சக்தியாலும் நம் மக்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் விளைவித்து விட முடியாது. இதற்கெல்லாம் ஆணிவேர் நம் ஒற்றுமையும், விடாமுயற்சியும் தான்.
ஓகே... இது தொடர்பாக எந்த சந்தேகம் தோன்றினாலும் சரி எங்களை தொடர்பு கொண்டு நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதேபோல் உங்களின் மேன்மையான கருத்துக்களை எங்களிடம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்களின் நட்பு, உறவு வட்டத்திலும் இச்செய்தியை பரப்பி அதன் பலனாக கிடைக்கப் போகின்ற ஆரோக்கியம் குறித்தும் தெளிவாக விளக்கம் அனுப்புங்கள். இன்னும் சில உபயோகமான தகவல்களுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என முடித்தாள் அவந்தி.
எதையோ சாதித்து விட்ட திருப்தியும், சாதிக்கப் போகின்ற திருப்தியும் ஒருங்கே தோன்றியது அவளுக்கு. தன் திட்டத்தினால் எதிர்காலத்தில் விளையப் போகின்ற நன்மைகளின் பலன்கள் கண் முன்னே படமாய் விரிய சுகமாய் அதில் மூழ்கினாள் அவள்.
அவந்திகாவின் முயற்சிகளுக்கு நல்லப்பலன் கிட்ட பல பகுதிகளில் இருந்தும் அவளை ஆவலுடன் தொடர்பு கொண்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர் நம் மக்கள். அவற்றில் பெரும்பாலோனோர் பெண்கள் என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களுக்கு எல்லாம் ஒருபுறம் பொறுமையாக பதிலளித்துக் கொண்டே மறுபுறம் தன் கணவனின் உதவியோடு அந்தந்த ஊரில் தோட்டக்கலையில் ஆர்வமுள்ள திறமையுள்ள குழுக்களை உருவாக்கினாள்.
தன் மாமியார் தனக்கென வீட்டருகே செப்பனிட்டு கொடுத்த இடத்தில் வேண்டுவோரின் தேவைகளுக்கேற்ப பல்வேறு செடி, கொடிகளை கொண்ட சின்ன நர்சரியை துவக்கினாள் அவந்தி.
பட்டணத்தில் இருந்து வந்தப்பெண் என்றாலும் எந்த அசூயையும் கொள்ளாமல் நம்மூர் விவசாயத்தில் அக்கறை கொண்டு இத்தனை தூரம் அதை மக்களிடம் பரப்பி அதில் வெற்றிக்காண துடிக்கும் அவளின் வேகம் அவள் குடும்பத்தினரை மட்டும் அல்லாது அவ்வூர் மக்களையே பெருமைக் கொள்ள செய்தது.
முகநூல் குழுமத்தோடு நில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் துவக்கி செடி, கொடிகளை நடுவது முதல் அவற்றிற்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், எவ்வாறு வெயிலில் இருந்து பாதுகாக்கலாம், பக்குவமாக உரமிடுவது எப்படி? செடிகளையும், கொடிகளையும் பூச்சரிக்காமல் பாதுகாப்பது எப்படி? என சின்ன சின்ன வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தாள்.
அவந்தி, சியாமின் செயல்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் அவர்களுடன் கை கோர்க்க, அவர்களின் ஆதங்கத்தை போக்கும் வகையில் கைமேல் பலனாக இயற்கை முறை விவசாயம் மொட்டை மாடி முதல் பெரிய அளவில் பண்ணை வரை நல்லமுறையில் வளர்ந்துக் கொண்டே சென்றது.
தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வெற்றிக் கண்ட சிலர் அடுத்து தாங்களாகவே அதை ஊக்குவிக்கும் வண்ணம் பல வகையில் சோஷையல் மீடியாக்களில் விளம்பரப்படுத்த ஆரம்பித்தனர்.
அவற்றில் ஒன்று அவந்தியை வெகுவாக கவர தன் கணவனிடம் அதை உற்சாகமாக காண்பித்து நகைக்க ஆரம்பித்தாள் அவள்.
வேறொன்றுமில்லை சியாமின் தோழன் ஒருவன் இம்முறையிலான தோட்டத்தை ஆதரித்து போட்டிருந்த பதிவு தான் அவளை இவ்வாறு நகைக்க வைத்திருந்தது.
"ஷ்... அப்பா... என்ன வெயில்... என்ன வெயில் என்று புலம்பித் தவிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள ஊர்களை சேர்ந்த மக்களா நீங்கள்? கவலையை விடுங்கள்... அதிலிருந்து தப்பிக்க உங்களுக்கு நான் அருமையான யோசனை சொல்கிறேன்.
இந்த ஏசி மிஷினை போட்டுக் கொண்டு ஜன்னல், அறைக்கதவுகளை அடைத்து வைத்துக் கொண்டு கூண்டுப்புலி போல உள்ளேயே அலைப்பாய தேவையில்லை. அவற்றினால் எவ்வளவு மின்சார கட்டணம் உயர்கிறது என்றும் நீங்கள் விழி பிதுங்கத் தேவையில்லை. அதைவிட யப்பா... எந்த நேரம் இந்த மின்சாரம் துண்டிக்கப்படுமோ என்றும், எந்த நேரம் அந்த மிஷின் பழுதாகி தீப்பிடிக்குமோ என்று கூட நீங்கள் அஞ்சத் தேவையில்லை.
பின்னே... இதையெல்லாம் விட்டு விட்டு எங்களை என்ன தான் செய்ய சொல்கிறாய் என்கிறீர்களா? ஸோ சிம்பிள்... நம் வீட்டு மாடியிலோ அல்லது பால்கனியிலோ உங்களால் இயன்ற அளவிற்கு நல்லதொரு ஆர்கானிக் தோட்டத்தை அமைத்து விடுங்கள் அவ்வளவு தான்.
என்னடா இவன் மாக்கானாட்டம் பேசுகிறான்? மரம் வைத்தாலே இந்த காலத்தில் அதனிடமிருந்து சிறு காற்று வருவது அதிசயம். இதில் சின்னஞ்சிறு செடிகளையும், கொடிகளையும் வளர்க்க சொல்கிறானே எங்கிருந்து காற்று வரும் என்று எதுவும் நீங்கள் திட்டுவது என் காதில் விழுந்தது அம்புட்டு தான் இதற்கு மேல் இதற்கான விளக்கம் எதுவும் கொடுக்காமல் கோபித்துக் கொண்டு நான் இங்கிருந்து ஓடிவிடுவேன்!" என பல ஆங்கிரி ஸ்டிக்கர்களை போட்டு அனைவரையும் சிரிப்பு மூட்டியிருந்தான்.
அவனுடைய நண்பர்கள் பலர் அவனை பலவாறு சமாதானப்படுத்தி கெஞ்சிக் கேட்டப்பிறகு சிறு இடைவெளியில் அடுத்த பதிவையும் பதித்திருந்தான் அவன்.
"சரி சரி பிழைத்துப் போங்கள்... என்ன இருந்தாலும் நம் நாடு நம் மக்கள் என்பதால் என் கோபத்தை சற்றே தள்ளி வைத்து உங்களுக்கு விரிவாக விளக்கம் தருகிறேன்.
இப்பொழுது உதாரணத்திற்கு மொட்டை மாடியில் தோட்டம் போடுகிறோம் என வையுங்கள். நாம் செடிகளை வைக்கும் இடங்களெல்லாம் தளத்தில் நேரடி வெயில் படாதவாறு அந்த தொட்டிகளால் நிரம்பி விடுமா? மேலும்... செடிகளை பாதுகாக்கவென்று அவற்றிற்கு தண்ணீர் வேறு தெளிப்போம், அப்பொழுது என்னவாகும்? வெரிகுட்... சரியாக பாயின்ட்டை பிடித்து விட்டீர்களே, நீங்கள் எல்லாம் யாரு புத்திசாலிப் பிள்ளைகள் ஆயிற்றே?
சரி இதுதான் விஷயம்... நாம் வளர்க்கின்ற செடிகளின் காய்கறியினால் மட்டும் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதில்லை. அடைத்து வைத்த அறையில் சுழன்று கொண்டிருக்கின்ற காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசித்து தேவையில்லாத உடல் சீர்கேட்டை இழுத்து கொள்வதற்கு பதில் இவ்வாறாக சுற்றுச்சூழலை மாற்றி சுத்தமான (ஐய்யையோ... இருக்கின்ற பொல்யூசன் உலகத்தில் அதையும் சத்தமாக கூற முடியாதே) சரி ஓரளவு இயற்கை காற்றை சுதந்திரமாக சுவாசிக்கலாம் அல்லவா? பால்கனியில் வைப்பதால் அதனை ஒட்டிய அறையின் மாய்ஸ்ச்சர் மாறி காற்றில் குளிர்பதம் சேரும்.
ஆகமொத்தம்... நான் சொன்னது சரி தானே, உங்கள் வீடுகளில் ஆர்கானிக் தோட்டத்தை அமைத்து ஒரு பைசா கரன்ட் செலவில்லாமல் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளுங்கப்பா!" என அறைகூவல் விடுத்திருந்தான்.
"ஃபன்னி கை..." என தலையசைத்த சியாம், "இவன் எப்பொழுதுமே இப்படி தான் அவந்தி, எந்தவொரு சீரியசான விஷயத்தையும் ஃப்பூ... அவ்வளவு தானா நாமும் முயன்றால் தான் என்ன என்று எண்ணுமளவிற்கு அனைவரையும் சுலபமாக தன் பக்கம் இழுத்து விடுவான். இப்பொழுது கூட பார்... இவன் பதிவை பார்த்து காய், கீரைக்காக செடிகளை வைக்கிறார்களோ இல்லையோ, அட்லீஸ்ட்... வெயிலிடமிருந்து தப்பிக்கவாவது இதை செயல்படுத்த முனைவார்கள்!" என்று நகைப்புடன் கூறியவன் தன் நண்பனை பற்றி அவளிடம் ஆர்வமாக கூற ஆரம்பித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro