Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

☘2☘

"அவந்திமா! என்னடா செய்துக் கொண்டிருக்கிறாய்?" என்று வினவியபடி அவந்திகாவின் அறையினுள் நுழைந்தார் ராதா.

"ஆங்... சும்மா பிரெண்ட்ஸ் கூட தான் பேஸ்புக்லயும், மெஸஞ்ஜர்லயும் சாட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்மா!" என்று டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள்.

"ம்... நல்லா செமஸ்டர் முடிந்து உனக்கு காலேஜ் லீவ் விட்டாலும் விட்டார்கள், எந்நேரமும் இதையே கட்டிக் கொண்டு அழுகிறாய்!" என்று அழுத்தபடி அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தார் அவர்.

"வேறு என்னம்மா செய்ய சொல்கிறீர்கள்? வீட்டிலிருப்பதால் ஒரே போர். பிரெண்ட்ஸோடு வெளியே எங்கேயாவது ப்ளான் பண்ணலாம் என்றால் வெயில் மண்டையை பிளக்கிறது!" என்று சலிப்போடு தன் தாயின் முகம் பார்த்தாள்.

"எதற்கெடுத்தாலும் இதை ஒன்று சொல்லி விடுவீர்களே போர் போர் என்று. எவன் தான் இந்த வார்த்தையை கண்டுப்பிடித்தானோ, கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்கு மிகவும் யூஸ் ஆகிறது!" என்று கூறியவர், "சரி... வீட்டு வேலை, சமையல் என்று எதையாவது உருப்படியாக கற்றுக் கொள்ளலாம் இல்லையா? பொழுதும் நன்றாக போகும் போரும் அடிக்காது!" என்று எல்லா அம்மாக்களையும் போல் நைஸாக தன் பிட்டை போட்டார்.

"அம்மா!" என்று பொய்யாக அதிர்ந்த அவந்திகா, "என்னம்மா பேசுகிறீர்கள் நீங்கள்? வீட்டு வேலை செய்வதற்காகவா கல்லூரியில் விடுமுறை விட்டிருக்கிறார்கள்... தினமும் அலைந்து திரிகிறீர்களே ஜாலியாக ரெஸ்ட் எடுங்கள் என்று தான் லீவ் விட்டார்கள்!" என்றாள் அலட்டலாக.

"ம்... நன்றாக பேசுவாயே, சரி அப்படியே வைத்து கொண்டாலும் இப்பொழுது தான் நீ கோர்ஸையே முடித்து விட்டாயே பிறகென்ன?"

"ப்ச்... அம்மா! சும்மா வேலை வேலை என்று சொல்லி கொண்டு, எனக்கு வேலை செய்ய தெரியாதா என்ன? அது தான் எதற்கெடுத்தாலும் பேகை எடுத்துக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை விசேஷத்துக்கு போகிறேன் என்ற போர்வையில் டூர் கிளம்பி விடுவீர்களே, வீட்டிற்கு ஒரு பத்திரிக்கை வந்து விடக் கூடாது. அப்பொழுது எல்லாம் அந்த இரண்டு, மூன்று நாட்கள் நானும் அப்பாவும் தானே சமைப்போம்!" என்று வாதாடினாள்.

ஹஹாவென்று சிரித்தவர், "சரிடி உனக்கு செய்ய தெரியும் தான், நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் கொஞ்சம் ரெகுலராக செய்து பழகினால் நன்றாக இருக்குமே என்று தான் கூறினேன்!" என அவள் கன்னம் தடவினார்.

அப்பொழுது தான் ராதாவின் கைகளிலிருந்த கவரை பார்த்தவள், "அது என்னம்மா கைகளில் ஏதோ கவர் போல் இருக்கிறது?" என்று வினவினாள்.

"ஆங்... இது கவர் தான்..." என்று நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தார்.

"என்னம்மா?"

"அது ஒன்றுமில்லைமா... உனக்கே தெரியும், நீ கல்லூரி படிப்பை முடிக்க போகிறாய் என்று தெரிந்து போன வருடத்திலிருந்தே நம் உறவு வட்டத்தில் உன் ஜாதகம் கேட்டு திருமணப் பேச்சை ஆரம்பித்தார்கள். ஆனால் நானும் அப்பாவும் தான் படிப்பு முடியட்டும் பேசிக் கொள்ளலாம் என்று தவிர்த்து விட்டோம். இப்பொழுது உனக்கு படிப்பும் முடிந்து விட்டது, இன்னும் மூன்று மாதத்தில் இருபத்தியிரண்டு வயது முடிய போகிறது. அது தான் இனி ஜாதகம் பார்க்க ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். பட்... நாம் அதற்கு அடியெடுத்து வைக்கும் முன்பாகவே ஒரு ஜாதகம் வந்திருக்கிறது!" என்று அமைதியானார்.

திகைப்போடு கேட்டு கொண்டிருந்தவள், "என்னம்மா அதற்குள் கல்யாணமா? நான் வேலைக்கு சில காலம் செல்லலாம் என்று இருந்தேனே!" என்றாள் கலக்கத்துடன்.

"இல்லைடா கண்ணா... உடனே என்றில்லை, ஜாதகம் பார்க்க வேண்டும் உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஒருவரையொருவர் பிடிக்க வேண்டும் எல்லாம் பிடித்து ஒத்து வந்தால் தான் திருமணம் அதுவரை வெயிட் பண்ணலாம். எதுவாக இருந்தாலும் ரொம்ப காலம் தாழ்த்த கூடாதுடா அந்தந்த வயதில் நடக்க வேண்டும்!" என்று தெளிவுப்படுத்தினார் ராதா.

"ஆனாலும் அம்மா உங்களையெல்லாம் விட்டு விட்டு யாரென்று தெரியாத இன்னொருவர் வீட்டில் போய் நான் எப்படி இருப்பேன்?எனக்கு நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது!" என்றாள் அவந்திகா விழிகளில் அச்சத்தோடு.

"சேச்சே... கண்டதையும் எண்ணி கற்பனையை வளர்த்து கொண்டு பயப்படாதே, யாரோ முன்பின் தெரியாதவர் வீட்டிற்கெல்லாம் உன்னை அனுப்பி விட மாட்டோம். தீர விசாரித்து என் பெண்ணை மனைவியாக அடைபவனும் அந்த வீட்டினரும் அவளின் அருமை புரிந்து கவனித்து கொள்ளும் குணமுடையவர்களாக இருப்பார்களா என்று திருப்தியான பின் தான் உன்னை பார்க்கவே இந்த வீட்டிற்குள் அனுமதிப்போம். இது காலத்தின் கட்டாயம்டா பெண்ணாக பிறந்தவள் திருமணம், கணவன், குழந்தை, குடும்பம் என்று அடுத்த நிலைக்கு சென்றால் தான் தனிச் சிறப்பு!" என தைரியமூட்டினார்.

ம்... என்று அமைதியானவள், "ஓ! அப்பொழுது இது மாப்பிள்ளையின் விவரங்கள் அடங்கிய கவரா?" என்று தயக்கத்துடன் வினவினாள்.

"ஆமாம்... ஆனால் உன்னிடம் இதை தருவதற்கு முன்பு இந்த வரன் தொடர்பான விவரங்களை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். இதில் இரண்டு விஷயங்கள் கொஞ்சம் இடிக்கிறது, எனக்கு பெரியதாக தெரியவில்லை. அப்பா தான் கொஞ்சம் யோசிக்கின்றார், அதனால் முடிவை உன் கையில் கொடுத்து விட தீர்மானித்து விட்டோம்!" என்று இடைவெளி விட்டவர் நிமிர்ந்து அவளை நேராக நோக்கினார்.

"அவநிமா! போன வருடம் நாம் மாமா ஊருக்கு திருவிழாவிற்கு போயிருந்தோம் அல்லவா... அங்கே தான் மாப்பிள்ளை உன்னை பார்த்திருக்கிறார். அவருக்கு பார்த்த உடனேயே உன்னை மிகவும் பிடித்து விட்டதாம், சுற்றி வளைத்து பார்த்தால் உன் அத்தை அதாவது என் அண்ணிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாம். உன்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள் நீ படித்து கொண்டிருந்தது தெரியவும் விட்டு விட்டார்களாம். ஆனாலும் அவருக்கு உன் மேல் ஆசை போலிருக்கிறது, ஒரு வருடம் கழித்து போன மாதம் தன் அப்பா அம்மாவிடம் பேசியிருக்கிறார். அவர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள் போலிருக்கிறது!"

"ஏன்மா?" என்றாள் வேகமாக, தன்னிடம் குறைக்கண்டு தயங்குவதற்கு என்ன இருக்கிறது என்ற யோசனை ஒடியது.

"இல்லைடா... அந்த இரண்டு சிக்கல்கள் சொன்னேன் இல்லை அது தான் காரணம். என் அம்மா ஊர் திருச்சி பக்கம் கிராமம் அல்லவா? உனக்கும் கிராமிய சூழ்நிலை தான் மிகவும் பிடித்திருக்கிறது அமைதியாக இருக்கும் என அவ்வப்பொழுது சொல்லி ரசிப்பாயே, அது எப்பொழுதாவது தங்குவதற்காகவா இல்லை உன்னால் காலம் முழுக்க அந்த சூழ்நிலையில் வாழ முடியுமா என்பதை முடிவு செய்யும் நேரம் தான் இது. ஏனென்றால் முதல் சிக்கல் மாப்பிள்ளையின் ஊர் தஞ்சாவூர் பக்கம் பூம்பொழில் கிராமம். அவர் வெறும் பி.எஸ்.சி அக்ரிகல்ட்சர் தான் முடித்திருக்கிறார், நீ கணினியில் பி.டெக் இன்ஜினியரிங் முடித்திருக்கிறாய் இது முக்கியமான வேறுபாடு. அதனால் தான் அவருடைய பெற்றோர் அக்குடும்பத்திற்குள் உன்னால் பொருந்தி வாழ முடியுமா? என யோசிக்கிறார்கள். சொந்தமாக நன்செய், புன்செய் நிலங்கள் ஏக்கர் கணக்கில் இருக்கிறது. அதுவுமில்லாமல் சுகர் பேக்டரி, ரைஸ் மில் வைத்திருக்கிறார்கள் அதையெல்லாம் அவரும் அவர் அப்பாவும் தான் நிர்வாகம் செய்கிறார்கள். அவருக்கு ஒரே ஒரு அக்கா தான் வெளியூரில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். உன் அத்தைக்கு அந்த குடும்பத்தை பற்றி நன்றாக தெரியுமாம் கிராமத்தில் இருப்பவர்கள் தான் என்றாலும் மிகவும் மரியாதையாகவும், நாகரீகமாகவும் நடந்து கொள்வார்களாம். இந்த சினிமாக்களில் வருவது போல கிராமமா என்றெண்ணி பயப்பட வேண்டாம் வசதியானவர்கள் என்பதால் வீடெல்லாம் டவுனுக்கு சமமாக வசதியாக தான் கட்டியிருக்கிறார்கள். குணத்திலும் குறை சொல்ல முடியாது நம் பெண்ணை நன்றாக வைத்து கொள்வார்கள் என்று சொன்னார்கள்!"

"ஓஹோ... இரண்டாவது சிக்கல் என்னம்மா?"

தன் மகள் காட்டும் ஆர்வம் மனதிற்கு நிம்மதியை அளிக்க, "நிறம்... மாப்பிள்ளை கொஞ்சம் கறுப்பாக தான் இருக்கிறார். அது தான் உன் அப்பாவிற்கு முக்கிய கவலையே உனக்கு பிடிக்காதென்று, நீ இருக்கும் தங்க நிறத்திற்கும் அழகிற்கும் பொருத்தமாக இருக்காது என அவர் எண்ணுகிறார்!" என்றார்.

"அட நிறம் என்னம்மா நிறம்? இப்பொழுது நீங்களும் அப்பாவும் இல்லையா... நான் உங்களை போல் வெள்ளையாக இருக்கிறேன், அப்பா கருப்பு தானே? நீங்கள் இருவரும் சந்தோசமாக வாழவில்லையா?" என்றாள் அவந்திகா.

சிரித்தவர், "அது என்னவோ எனக்கு தெரியாதுமா, இந்த காலத்து பிள்ளைகளின் மனதில் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறீர்களோ? அது தான் முடிவை உன் பொறுப்பில் விட்டு விட்டோம். வாழ்க்கை முழுவதும் பயணிக்க வேண்டிய உறவுகள், வீடு என்பதால் நன்றாக யோசித்து முடிவெடு. உன் பதில் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம், உன் விருப்பம் தான் இதில் முக்கியம். இந்தா இதில் அவர் தொடர்பான அனைத்து விவரங்களும், புகைப்படமும் இருக்கிறது!" என்று கவரை அவள் கைகளில் கொடுத்து விட்டு வெளியேறினார்.

கவரை பிரிக்காமல் சற்று நேரம் நிதானமாக சாய்ந்தமர்ந்து தன் அம்மா சொன்ன விவரங்களை மனதிற்குள் அலசிக் கொண்டிருந்தாள். எப்படி யோசித்தாலும் அந்த வரனில் அவளுக்கு பிடிக்காத விஷயம் எதுவும் இருப்பது போல் தோன்றவில்லை. கிராமமாக இருந்தால் என்ன வேண்டிய வசதிகள் இருக்கிறது எனும் பொழுது என்ன கஷ்டம்? படித்து முன்னேறுவது என்பது வாழ்க்கையின் வசதிகளை பெருக்கி கொள்ள தானே... ஆல்ரெடி அவருக்கு குடும்ப தொழில் இருக்கிறது என்ற பொழுதும் கம்பெனியை ரன் பண்ணும் அளவுக்கு கௌரமாகவும் டிகிரி முடித்திருக்கிறார். அத்தையும் என் மேல் மிகவும் பாசமாக இருப்பவர்கள், நன்றாக விசாரிக்காமல் எனக்கு வரனாக இவரை பரிந்துரைத்திருக்க மாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அவர் என்னை மிகவும் விரும்புகிறாராமே... ஒரு பெண்ணுக்கு தன்னை உயிராய் நேசிக்கும் கணவனை விட வேறு என்ன பெரிய உயர்வு வேண்டும்?

ஓகே இது வரை எல்லாமே சம்மதம் தான் பிடித்திருக்கிறது. ஆனால் நிறம், அழகு? என இதழ் கடித்தாள் அவந்திகா.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro