💚7💚
"உங்களுக்கு சமைக்கத் தெரியுமா அண்ணி? என்னென்ன விரும்பி சமைப்பீர்கள்?" என்ற சுவாதியின் கேள்விகளுக்கு தனக்கு சமைக்கத் தெரியாது என சங்கடத்துடன் பதிலளித்த ஶ்ரீநிதி தன்னையுமறியாமல் அருகில் நின்றிருந்தவளின் மூளைக்கு பெரிய வேலையை கொடுத்திருந்தாள்.
"நீ நன்றாக சமைப்பாயா?"
"ம்... இது மாதிரி விஷயங்களில் நானும் சரி, அண்ணாவும் சரி அம்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது. வீட்டை சுத்தம் செய்வது முதற்கொண்டு சமையலிலும் சின்ன சின்ன வேலைகளை இருவருக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதில் எல்லாம் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை பாகுபாட்டை நான் அனுமதிக்க மாட்டேன் அவரவர் அடிப்படை தேவைகளை கவனித்துக் கொள்ளும் அளவிற்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என உறுதியாக நின்று விட்டார்கள். எங்களுக்குமே அது சரி என்று தோன்றியதால் ஒருசில நேரம் ஏமாற்ற முயல்வோமே தவிர மற்றபடி ஆர்வமாகவே கற்றுக் கொண்டோம். அப்புறம் அவர்களின் மறைவிற்கு பிறகு கொஞ்சம் யுடியூப் சமையலும் கலந்து ஓரளவு நன்றாகவே சமைக்கப் பழகிக் கொண்டோம்!" என முறுவலித்தாள் சுவாதி.
அவளிடம் மேம்போக்காக பதில் புன்னகை சிந்தியவளுக்கு ஏக்கமாக நினைவுகள் எங்கெங்கோ அலைமோதி அலைப்பாய்ந்தது.
"உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள் இல்லையென்றால் பரவாயில்லை நானே சமைத்து விடுவேன்!" என்று சுவாதி மேலே பேசவும் அவளிடம் கவனத்தை குவித்தவள், "இல்லையில்லை... நானும் சமைக்கப் பழகிக் கொள்கிறேன். உன் அம்மா சொல்வதுப் போல் நானுமே அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?" என்றாள் வேகமாக.
அதைக்கண்டு புன்னகைத்தவள், "அண்ணி... என்னுடைய அம்மாவை நீங்கள் அத்தை என்று கூட சொல்லலாம் என நினைக்கிறேன்!" என்று கூறி கண்சிமிட்டவும், ஶ்ரீநிதியின் கன்னங்கள் லேசாக சிவந்தது.
இரவு தன்னறைக்கு உறங்க செல்வதற்கு முன் ஶ்ரீநிதியை ஷ்ரவண் அறைக்கு அழைத்து சென்ற சுவாதி அவளுடைய துணிகளை அடுக்கி கொள்வதற்கு அண்ணனின் வார்ட்ரோபில் இடம் ஒதுக்கி கொடுத்து விட்டு ஒரு குட்நைட்டுடன் ஓடப் பார்க்க, அவளை தடுத்து நிறுத்திய பெரியவள், தனக்கு போர்த்திக் கொள்ள போர்வை ஒன்றை தயக்கத்துடன் வேண்டினாள்.
"இது..." என்றவள் கட்டிலில் கிடந்ததை யோசனையாகப் பார்க்க, "இல்லை... அது உன் அண்ணனுடையது போலிருக்கிறது!" என்று அவசரமாக மறுத்தாள் ஶ்ரீநிதி.
சரி என்றபடி வெளியே வந்தவள் தனது அறையில் இருந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு அவளிடம் செல்லும் முன் ஹாலில் அமர்ந்து அலைபேசியில் மூழ்கி இருந்த சகோதரனை தயங்கியபடி நெருங்கினாள்.
"அண்ணா!"
ம்... என்று நிமிர்ந்தவனிடம், "அண்ணிக்கு உன் வார்ட்ரோபை காண்பித்து அவர்களின் உடைகளை எல்லாம் அதில் அடுக்கிக் கொள்ள சொல்லி விட்டேன். அவர்களுடைய முகத்தை பார்த்தால் கொஞ்சம் ஒரு மாதிரி டென்ஷனாக இருப்பது போல் தெரிகிறது. அதனால் நீ எதற்கும் ஒரு அரைமணி நேரம் கழித்தே உன் அறைக்கு செல், அதற்குள் அவர்கள் தூங்கி விடுவார்கள். நீதான் மதியமே நன்றாக குறட்டை விட்டு தூங்கி விட்டாயே, அண்ணி ரெஸ்ட் எடுக்கட்டும்!" என மடமடவென்று பேசிவிட்டு விலகிச் சென்றாள் சுவாதி.
நெற்றி சுருங்க தரையை வெறித்தவனுக்கு அன்று காலையில் தான் தனக்கு திருமணம் நடந்ததும், இன்றைய இரவு... என்கின்ற எண்ணம் உதிக்கும் பொழுதே ஷ்ரவணையும் மீறி உடலில் ஒருவித கிளர்ச்சி தோன்ற, அதே நேரம் அண்ணி கொஞ்சம் பதற்றமாக இருக்கிறார்கள் என தங்கை சொல்லி சென்றது வேறு செவியில் எதிரொலித்து உதட்டில் மென்னகையை பூக்கச் செய்தது.
ஆனால் மறுநிமிடம் மனைவியின் முகத்தை மனதில் கொண்டு வந்தவனுக்கு எந்நேரமும் அதில் வீற்றிருக்கும் இறுக்கமும், அலட்சியமும், திமிரும் மற்ற உணர்வுகளை வடியச் செய்து உள்ளத்தில் அவள் மீது எரிச்சலையும், வெறுப்பையும் உருவாக்கியது.
தங்கை சொன்ன கெடுவிற்கும் அதிகமாக பத்து நிமிடங்களை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றவன், தனது கட்டிலின் இடது ஓரத்தில் தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு முடங்கி கிடந்தவளை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னிடத்தில் சரிந்து விழிகளை மூடினான்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro