Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚4💚

தன் அண்ணி கோபமாக எதை அப்படி இவ்வளவு தீவிரமாக தேடுகிறாள் என்று சுவாதி குழப்பத்துடன் பார்த்திருக்க, வீட்டை சுற்றி விழிகளை அலைய விட்ட ஶ்ரீநிதி, அங்கே ஹாலின் இடதுபுறம் இருந்த கதவின் அமைப்பை கண்டு அதுதான் பால்கனியாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்து விறுவிறுவென்று அங்கே சென்றவள் கதவை திறந்து வெளியேறி தன்பின்னே அதை அடைத்தும் விட்டாள்.

அவ்வாறு வேக நடையிட்டு சென்றவளிடம் தென்பட்ட வித்தியாசம் இவள் மனதை உறுத்த இவளும் மெதுவாக பூனை நடை நடந்து சென்று ஜன்னல் வழியாக அவளை நோட்டமிட்டாள்.

தனிமையை தேடிச் சென்ற ஶ்ரீநிதி பொங்கும் எரிமலையின் சீற்றம் முகத்தில் சிறிதும் தணியாமல் உதடுகளை அழுந்த மூடியபடி கைகளை குறுக்கே இறுகக் கட்டிக்கொண்டு வானை வெறித்தபடி நின்றிருந்தாள்.

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கவனித்துப் பார்த்தும் அவள் நின்ற நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை எனவும் இதற்குமேல் தான் எதுவும் செய்ய முடியாது அண்ணனை தான் அனுப்ப வேண்டும் என பெருமூச்செரிந்தபடி அவனிடம் சென்றாள்.

அங்கே ஷ்ரவணோ அதற்கு மேல் ஆங்காரத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். செய்த உதவிக்கு பரிகாரம் என்ற பெயரில் தன்னை கட்டாயப்படுத்தி மணந்துக் கொண்டதும் இல்லாமல் வந்திருப்பவள் தன்னையும், தன் தங்கையையும் அடக்கி ஆளப் பார்க்கிறாளே என்ற ஆத்திரத்தில் தரையை ஓங்கி உதைத்து விட்டு சீறும் காளையாக நடைப்பயின்றுக் கொண்டிருந்தான்.

"அண்ணா!" என்றபடி கதவை திறந்து வந்த சுவாதியை கண்டு நடையை நிறுத்தியவன், அவளை கேள்வியாக நோக்கினான்.

அவனை தயக்கத்துடன் பார்த்தவள் பின் ஏதோ நினைத்தவளாக கதவை சாற்றிவிட்டு அவனருகில் வந்தாள்.

"என்ன அண்ணா நீ பாட்டுக்கு அவர்களிடம் இப்படி பட்டு பட்டென்று பேசி விட்டாய்? என்ன தான் அவர்கள் மீது தவறு இருந்தாலும் இதுவரை வாழ்ந்த வீட்டையும், உறவுகளையும் விட்டு உங்களை மட்டுமே நம்பி வந்தப் பெண்ணிடம் இப்படி எடுத்தெறிந்துப் பேசி விட்டீர்களே... அவர்கள் அப்படி பேசினால் அது நமக்கு மனக்கஷ்டம் மட்டும் தான். ஆனால் அண்ணிக்கு அப்படியிருக்காது அது பெரிய தன்மானப் பிரச்சனையாக போய்விடும். இப்பொழுது கூட நீ அவ்வாறு பேசி வந்ததில் ரொம்பவும் கோபம் கொண்டு நாளையிலிருந்து வேலைக்குப் போகிறேன் அதுவரை இந்த வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என கோபித்துக் கொண்டு பால்கனியில் நின்றிருக்கிறார்கள்!" என்றாள் கவலையுடன்.

சுவாதியின் சொற்களிள் உள்ள நியாயம் புரிய தன் தவறை உணர்ந்தவன் பின்னந்தலையை தடவியபடி, "இதை உன் அண்ணியிடமும் சொல்லலாம் இல்லை, இப்பொழுது தான் இந்த வீட்டிற்கு வருகிறீர்கள் அதற்குள் ஏன் இப்படி அடாவடியாக நடந்துக் கொள்கிறீர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்களேன் என சொல்ல வேண்டியது தானே!" என்று தங்கையை குறையாகப் பார்த்தான்.

"ஐயையோ... நானா... அவர்களிடமா? ஏதோ என்னிடம் கொஞ்சம் நல்லமுறையில் பேசிக் கொண்டிருந்தவர்களையும் சண்டைப் போட்டு மிகவும் அப்செட்டாக்கி விட்டாய். நான் அருகில் பேசப் போனாலே அப்படி உறுத்துப் பார்க்கிறார்கள், இதில் அட்வைஸ் வேறு செய்தேன் என்றால் அவ்வளவு தான்!" என்று மறுப்பாக தலையசைத்தாள்.

"யார் வீட்டிற்கு வந்து யார் யாரை முறைப்பது..." என்றவனை இடைமறித்த சுவாதி, "முதலில் நீ இந்த மாதிரி பேசுவதை நிறுத்து, எப்பொழுது அவர்கள் கழுத்தில் நீ தாலி கட்டினாயோ அப்பொழுதிலிருந்து இந்த வீட்டில் உனக்கு இருக்கும் அத்தனை உரிமையும் உன் மனைவிக்கும் இருக்கிறது. அதனால் இது என் வீடு அவர்கள் அந்நியம் என்ற நினைப்பை மொத்தமாக அழிக்கப் பார்!" என்றாள் கறாராக.

அவளை கண்கள் இடுங்க நோக்கிய ஷ்ரவண், "எனக்கு ஒரு சந்தேகம் நீ எனக்கு தங்கையா அல்லது அக்காவா? முழுதாக என்னை விட ஏழு வயது சிறியவள் நீ என்னவோ எனக்கு இப்படி அட்வைஸ் மழை பொழிகிறாய்!" என்று முறைத்தான்.

"ஹஹா... இப்பொழுது தான் நீ மீண்டும் பழைய அண்ணனாக அப்பா, அம்மா இருக்கும் பொழுது இருப்பவனாக இயல்பாக மாறி இருக்கிறாய். அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து என்னை பொறுப்பேற்று மிகவும் அமைதியாகவும், அனுசரணையாகவும் நடந்து வந்தவன் இரண்டு வருடங்களில் இன்று தான் இப்படி முறைக்கிறாய்!" என்று கலகலத்து சிரித்தாள் சுவாதி.

Story was removed

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro