💚31💚
ஷ்ரவண் அமைதியாக இருப்பதை உணர்ந்து தன் பேச்சை இடையில் நிறுத்திய ஶ்ரீநிதி, "என்ன மாமா யோசிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"இல்லை... இதற்கு உன்னுடைய அம்மா உன்னை ஆசிரமத்தில் எங்கேயாவது விடச் சொல்லி இருந்திருக்கலாம். இப்படி உன் அப்பாவின் மோசமான பக்கங்கள் தெரிந்து நீ மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நிம்மதியாகவாவது வாழ்ந்திருப்பாய்!"
"ப்ச்... ஆமாம்... அப்படி கூட செய்திருக்கலாம், அநாதை என்கிற பட்டத்தோடு என் வேதனை முடிந்திருக்கும். ஆனால் என் அம்மா தன்னுடைய அம்மாவிடம் என்னை கொடுக்க சொல்லி அவர்களின் துவேஷத்தை இன்னமும் கிளப்பி விட்டுவிட்டார்கள். இதில் அடுத்த கொடுமை என்ன தெரியுமா? நான் வளர வளர அவர்களின் கேலி வேறுவிதமாக மாறியது. எப்பொழுது பார் அந்த விஷ்வாவிடம், டேய்... தப்பி தவறி முறைப்பெண் அது இது என்று இந்த ஜென்மத்தை எதுவும் விரும்பி தொலைத்து விடாதேடா, வயதில் பார்ப்பதற்கு எல்லாம் அழகாக தான் தெரியும், அதன் பின்னால் உள்ள கேவலத்தையும் நினைத்துப் பாருடா உன்னால் இந்த சமூகத்தில் கௌரவமாக வாழ முடியாது என அவனை எச்சரிப்பதை கேட்கும் பொழுது எனக்கு அப்படியே பற்றிக்கொண்டு வரும். அவன் அதற்கும் ஒரு படி மேலே போய் அவனுடைய பாட்டிக்கு நன்றாக ஜால்ரா தட்டுவான், ஐயோ... இந்த நொண்டியையா..." என்று விட்டு ஷ்ரவணை ஒரு பார்வை பார்த்து, "நீங்கள் அடித்தாலும் நான் இங்கே இதை சொல்லி தான் தீருவேன். இவளை நான் என்ன விரும்புவது, ஊரில் உள்ள எவன் பார்க்க நினைத்தாலும் இவளுடைய அருகதை என்னவென்று அனைவருக்கும் சொல்லி விடுவேன். ஓடிப்போனவள், ஜெயிலுக்கு போனவனுக்கு பிறந்தவள், கையும் முடம் யாரென்றாலும் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்பா என்று விவரமாக சொல்லி விடுவேன் என எனக்கு முன்னாலேயே சீண்டுவார்கள். நான் எதையும் கண்டுக்கொள்ள மாட்டேன், எனக்கு அந்த வீட்டை விட்டு எங்காவது போய்விட்டால் போதும் என்று மட்டும் தான் எப்பொழுதும் மனதில் இருக்கும். ஆனால் எப்படி எங்கே போவது என்பது மட்டும் ஒன்றும் புரியவில்லை, ஒருபுறம் அவர்களின் கேலிப் பேச்சுக்களை ஒதுக்கும் மனம் மறுபுறம் அதில் புதைந்துள்ள உண்மை உணர்ந்து படபடக்கும். எப்பொழுதுமே தனிமையிலேயே இருந்ததால் அந்த பாட்டி சொன்னப் பொழுது பெரிதாக தெரியாத விஷயம் கூட அந்த நேரத்தில் பூதாகரமாக மனதில் கிளம்பும். என்னை பெற்றவன் என்னை தூக்கி ரோட்டில் வீசினானாமே என்று அந்தக் காட்சி மனதில் திரும்ப திரும்ப ஓடி மனது இறுகும். பள்ளி செல்லும் வழியில்... பள்ளியில் என பல பெற்றோர்கள், பிள்ளைகளை தினமும் கூர்ந்து கவனிப்பேன். அனைவருமே தங்கள் பிள்ளைகளை ரொம்பவும் கவனமாக ஆசையாக பார்த்து கொள்வதுப் போல் தோன்றும், என்னை பெற்றவர்கள் மட்டும் தான் என்னை இப்படி கொல்லவும் துணிந்து அநாதையாக விட்டு விட்டார்கள் என்று விரக்தியோடு நினைத்தபடி மனவலியை தேடிக் கொள்வேன். இப்படியே ஒருவாறு பள்ளிப்படிப்பை முடிக்க, எதிர்ப்பார்த்திருந்தபடி இத்தனை நாட்களாக படிக்கிறேன் என பெயர் சொல்லி ஓசி சோறு சாப்பிட்டது போதும் இனிமேலாவது ஏதாவது வேலைக்கு சென்று சம்பாதிக்கின்ற வழியை பார் என்கிற குத்தல் விழுந்தது. அது எனக்கு பெரியதாக தெரியவில்லை, உரிமையில்லாத இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று ஏற்கனவே எனக்குள் பதிந்து இருக்கும் அவமான உணர்வு தான் அது. பதினைந்து நிமிட பயணத் தொலைவிலேயே தனியார் பள்ளி ஒன்றில் மாண்டசரி வகுப்புகள் எடுக்கும் ஆசிரியைக்கு உதவியாக குழந்தைகளை பார்த்துக் கொள்வது அவர்கள் வராத நேரம் பிள்ளைகளுக்கு கதை சொல்வது போன்ற வேலை கிடைத்தது. நானும் நிம்மதியாக போய்வந்து கொண்டிருந்தேன், அப்பொழுது ஒருநாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என்னுடைய வயது பத்தொன்பது, பள்ளி விட்டு வரும் வழியில் ஒரு விபத்தை பார்த்தேன். ஒரு நடுத்தர வயது ஆண் லாரியில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். அவரைச் சுற்றி நின்றிருந்த கூட்டம், யாரென்று தெரியவில்லையே இப்படி அல்பாயுசில் போய் விட்டாரே... குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் எவ்வளவு பெரிய இழப்பு என்று அதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவும் எனக்கு காதில் விழவில்லை. மூளை அந்த இடத்திலேயே ஆணி அறைந்தது போல் நின்று விட்டது, இவருக்காக இவர் குடும்பம் முழுவதும் அழுவார்கள், துடிப்பார்கள்... நான் செத்துப் போனால் எனக்காக யார் அழுவார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது!" என ஶ்ரீநிதி கூறவும், அவளை படுகேவலமாய் முறைத்த ஷ்ரவண், "உனக்கு எதையுமே நல்லபடியாக யோசிக்க தெரியாதாடி?" என்றான் கடுப்புடன்.
"உங்களுக்கு எப்படி தெரியும் என்னுடைய கவலையெல்லாம்... யாருடைய ஆதரவுமின்றி... ப்ச்... சரியான நட்பை கூட நான் தேடிக்கொள்ளவில்லை தெரியுமா?" என்று முகத்தை சுருக்கினாள் அவள்.
அவளுடைய விசனம் ஞாயமானதே என்றாலும், "ஏன் நீ சரியான நண்பர்களை உருவாக்கி கொள்ளவில்லை? பள்ளியில் இருக்கும் பொழுதாவது அவர்கள் உனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்கள் இல்லை..." என்று காரணம் கேட்டான் கணவன்.
"ம்க்கும்... எல்லாற்றுக்கும் இந்த கை தான் காரணம், சின்ன வயதில் கொஞ்சம் நண்பர்களை தேடினேன் தான். ஆனால் அவர்கள் என்னை பார்க்கும் கேலிப் பார்வையும், பரிதாபப் பார்வையும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருசிலரிடம் மட்டும் பட்டும்படாமல் சில வருடங்கள் நட்பு வட்டத்தில் இருந்தேன், பள்ளிப்படிப்பு முடிந்தபின் அதுவும் போய்விட்டது!" என்றாள் அலுப்போடு.
"சும்மா... எல்லாவற்றிற்கும் இந்த கையையே குறைச் சொல்லாதே நிதிம்மா... இப்பொழுது இதில் என்ன பிரச்சினை? எல்லா வேலைகளையும் எந்தக் குறையுமில்லாமல் மிக இயல்பாக தானே நீ செய்கிறாய்!" என்று அவளின் இடதுகையை எடுத்து முத்தமிட்டான் ஷ்ரவண்.
சட்டென்று அவனை இறுக கட்டிக்கொண்டவள், "இதுதான்... இதுதான் எனக்கு உங்களிடம் முதலில் கவர்ந்த விஷயம். என் ஊனத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டீர்கள். அதோடு என்னிடம் கோபித்துக் கொண்டிருந்த நேரத்திலும் கூட இதனால் எனக்கென்ன வந்தது என்பது போல் அலட்சியமாக இருந்தீர்கள். காதலை சொன்ன பிறகோ மருத்துவர் கேட்கின்ற கேள்விக்கு கூட என்னால் கணவனாக சரியாக பதில் சொல்ல முடியவில்லை, அதற்காகவாது உன் கை எதனால் இப்படி ஆனது என தகவலாக சொல் என்று தான் என்னிடம் நீங்கள் இதை விசாரித்தீர்கள். உங்கள் கண்களில் எப்பொழுதுமே இதைக்குறித்து சிறு பரிதாபமோ, அருவருப்போ நான் பார்த்ததே இல்லை!" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
- part to be continued on www.deepababuforum.com
💞சுபம்💞
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro