💚25💚
மாலையில் அலுவலகம் முடிந்து வீடு வந்த கணவனிடம், “நாம் இந்த வாரமா ஊருக்கு போகிறோம்?” என விசாரித்தாள் ஸ்ரீநிதி.
“ம்… ஊருக்கு போகிறோம், ஆனால் அத்தை ஊருக்கு இல்லை. சுவாதி இங்கிருந்து போய் மூன்று நாள் தானே ஆகிறது, அதனால் அத்தை அவள் இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கட்டும் நீ அடுத்த வாரம் வா என்று விட்டார்கள்!”
“ஓ… அம்மாவிடம் பிரசாத் அண்ணா விஷயம் பேசி விட்டீர்களா?”
“இல்லைடா… அதை நேரில் பேசினால் தான் நன்றாக இருக்கும். சுவாதியிடமும், பிரசாத்திடமும் நேற்றே சொல்லி விட்டேன், நான் வந்து பேசுகிற வரை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றிருக்கிறேன். அவர்கள் தான் ஜோடி என முடிவாகிய பிறகு திருமணதிற்கு முன்பாக சுவாதி அங்கே இருப்பது சரி வராது. சோ… நான் வரும் வரை விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறேன்!”
ஷ்ரவணின் தோளில் தலைசாய்த்து இருந்தபடி, ம்… என்றவள் சட்டென்று நிமிர்ந்து, “அப்பொழுது நாம் வேறு எந்த ஊருக்கு போகிறோம்?” என்றாள் ஆச்சர்யமாக.
“அது சஸ்பென்ஸ்… ஆமாம் உன் கையில் காயம் சரியாகி விட்டது தானே. ஊருக்கு கிளம்பலாம் அல்லவா?”
“ஓ… காலையிலிருந்து வலியே இல்லை, ஆனால் தழும்பு மட்டும் இருக்கிறது. யாராவது பார்த்தால் தவறாக நினைத்துக் கேட்பார்கள் தானே… என்னுடைய அவசரத்தால் உங்களுக்கும் கஷ்டம், எனக்கும் அசிங்கம்!” என்றாள் ஸ்ரீநிதி கவலையுடன்.
அது உண்மை தான் என்றாலும் மனைவி வருந்துவதை தவிர்க்க, “நடந்து முடிந்ததை எண்ணி வருந்திக் கொண்டு இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாவற்றையும் எதிர்கொள்ள கற்றுக்கொள், சரி வெளியே கிளம்புவோமா?” என்றான்.
“ம்…” என மலர்ச்சியுடன் தலையாட்டுபவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, “போய்… புடவையை மாற்றி விட்டு ஏதாவது சுடிதார் அணிந்துக் கொண்டு வா!” என்று எழுப்பி விட்டான்.
“ஏன்?”
“இன்று நாம் பைக்கில் போகிறோம்!”
“ஓ… சரி!” என்றவள் ஆர்வமாக உள்ளே செல்லவும் சின்ன முறுவலிப்புடன் யோசனையில் ஆழ்ந்தான் ஷ்ரவண்.
நிறைந்த முழுபௌர்ணமி நாளில் வீசுகின்ற சிலுசிலு காற்றிற்கு ஏற்ப தன் கூந்தல் கட்டவிழ்ந்து பறப்பதற்கு நிகராக கணவனோடு இருசக்கர வாகனத்தில் மகிழ்ச்சியுடன் பறந்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.
ஏற்கனவே அவனிட்டிருந்த கட்டளையால் அவன் இடையை தன் இரண்டு கரங்களாலும் சுற்றி வளைத்துப் பிடித்தபடி கிட்டதட்ட அவன் முதுகில் இவளின் பாதி உடல் முழுவதும் படர்ந்திருக்க, நெருங்கி அமர்ந்து பயணித்தவளுக்கு ஒருபுறம் சற்று கூச்சமாக இருந்தாலும் மனம் முழுவதும் புரியாத ஏகாந்தத்தில் திளைத்திருந்தது.
ரொம்ப நேரமாக எங்கேயும் நிறுத்தாமல் கணவன் பாட்டிற்கு சீரான வேகத்தில் வண்டியை பைபாஸில் விரட்டிக் கொண்டிருக்கவும் பெரிதும் குழம்பியவள் அவனிடமே விவரம் கேட்டாள்.
“இப்பொழுது நாம் எங்கே போகிறோம்?”
“ம்… அப்படியே கொஞ்சம் முன்னால் நகர்ந்து எம்பி என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடு சொல்கிறேன்!” என்று ஷ்ரவண் சீண்டவும் வெட்கத்தில் சிவந்தவள் சுற்றிலும் விழிகளை அலைய விட்டாள்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro