💚24 💚
சுவாதி தன் மனதிற்குள் விட்டேற்றியாக பேசும் அண்ணனை தோன்றிய வார்த்தைகளில் எல்லாம் அர்ச்சித்து கொண்டிருக்க, ஷ்ரவணோ கூலாக அதற்கு பதிலடி கொடுத்து தங்கையின் வாயை அடைத்தான்.
"அண்ணா..." என மிரண்டவளிடம், "ம்... அடுத்து சொல்!" என்றான் அவன் அதிகாரமாக.
"அப்புறம்... மாமாவிடம் கொஞ்சம் விளையாட்டு காட்டி விட்டு எனக்கு சம்மதம் என்று சொல்லி விட்டேன்!" என்றாள் மெதுவாக.
"ஓஹோ... அத்தை, மாமாவிடமும் பேசி விட்டாயா?"
"என்னண்ணா இப்படி கேட்கிறாய்? அவர்களிடம் நான் எப்படி பேச முடியும்?" என முனகினாள் சுவாதி.
"இவ்வளவு துணிச்சல் இருப்பவளுக்கு அதற்கு தைரியம் இல்லையா என்ன?" என்றான் ஷ்ரவண் நக்கலாக.
"ப்ச்... ரொம்பவும் கிண்டல் செய்யாதே அண்ணா, நான் செய்தது தப்பா? சின்ன வயதிலிருந்து என்னை அக்கறையாய் கவனித்து, என்னோடு ஒன்றாக விளையாடிய பிரசாத் மாமா என்னை விட்டு ஒதுங்கி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதுவும் எனக்கு அவர்களை பிடிக்காது என்று நினைத்து வருந்திக் கொண்டு விலகி இருப்பதை என்னால் சுத்தமாக தாங்க முடியவில்லை. படிக்கும் பொழுதே இதெல்லாம் தெரிந்து இருந்தாலும் நாம் ரொம்ப நாளாகவே ஊருக்கு போகாமல் மாமாவையும் நேரில் பார்க்காமல் இருந்ததால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அந்த இடியட் என்னை கத்தியில் குத்த வந்தானே அன்று ரொம்பவே பயந்து விட்டேன். மனது முழுக்க காதல், திருமணம் என்றாலே வெறுப்பாக தான் இருந்தது, பிடிக்கவில்லை. அப்பொழுது நீயும் வேறு அண்ணியை அவசர திருமணம் செய்துக் கொண்டு வந்து என்னை இன்னமும் டென்ஷன் ஆக்கி விட்டாய். உங்கள் இரண்டு பேரின் பிரச்சனையில் எனக்கு மற்றது எல்லாம் பின்னால் போய் விட்டது. ஒருமுறை அத்தை அண்ணியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னை பற்றிய பேச்சு வர, அவர்களுக்கு இன்னமும் என்னை அவர்கள் வீட்டு மருமகளாக ஆக்கி கொள்ள விருப்பம் இருந்தது மறைமுகமாக புரிந்தது. அப்புறம் தான் பிரசாத் மாமாவை பற்றி யோசித்தேன், அவரை திருமணம் செய்துக் கொள்வதால் எனக்கு எந்தக் கஷ்டமும் வராது நான் சந்தோசமாக தான் இருப்பேன் என்று தோன்றியது. கல்வித்தகுதியில் வித்தியாசம் என்பது எல்லாம் எனக்கு பெரிய பிரச்சனையாக தோன்றவில்லை, இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. அவருக்கு நல்ல பிசினஸ் டேலன்டும் இருக்கிறது, நிச்சயமாக அதில் நல்லபடியாக முன்னேறுவார். வேறு என்ன வேண்டும்? அத்தை குடும்பத்தை பற்றி சொல்லவே தேவை இல்லை, என் மீது அனைவரும் தனியான பாசம் கொண்டவர்கள். அதனால் நீ என்னிடம் திருமணம் பற்றிப் பேசும் பொழுது அவரையே பிடித்திருக்கிறது என்று சொல்லி விடலாம் என நினைத்தேன். ஆனால் உன் வரவேற்பிற்கு வந்தவர் என்னிடம் சரியாக முகம் கொடுத்தே பேசவில்லை, நானாக பேசினாலும் பட்டும்படாமால் பேசினார். எனக்கு அதெல்லாம் எரிச்சலாக வந்தது. உனக்கே நன்றாக தெரியும், நம் உறவுகளிலேயே உனக்கு ஈடான இடத்தில இருந்து என்னிடம் பாசமாகவும், நெருக்கமாகவும் இருந்தது பிரசாத் மாமா மட்டும் தான். அவர்கள் ஒதுங்கிப் போனால் எனக்கு எப்படி இருக்கும்? ஒருபக்கம் கோபமும் வந்தது, இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. உங்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டும் என்று அத்தை ஊருக்கு கூப்பிடவும், ஒரு நாள் ஒதுங்கி ஓடிய மனுஷன் கூடவே இருக்கும் பொழுது என்ன செய்கிறார் என பார்க்கலாம் என்று அங்கே போனால் சுத்தமாக வீட்டிலேயே இருக்கவில்லை அண்ணா... காலையில் விடிந்தும் விடியாதுமாக எழுந்து ஓடியவர் இரவு எல்லோரும் தூங்கப் போகும் நேரம் தான் வீட்டிற்கு வந்தார் முகத்தில் சுத்தமாக தேஜஸ் இல்லை. பார்த்தேன்... சரி இனியும் வருந்தக் விடக்கூடாது என்று தான் நானே நேரிடையாக பேசலாம் என முடிவு செய்து கொஞ்சம் அவர் நம்பும்படியாக ரீல் எல்லாம் விட்டு ஒருவழியாக தனியாக அழைத்துக் கொண்டுப் போனேன் அதுவும் அமுதனின் துணையோடு..." என்று அவளது நீண்ட நெடியப் பேச்சை முடித்து அவள் நீளமாக பெருமூச்சு விடவும் இங்கே ஷ்ரவண் கண்களில் நீர் வழிய சிரிக்க ஆரம்பித்தான்.
"உன்னை அந்த அளவிற்கு சுத்த விட்டானா பாப்பா அந்த மடப்பையன்!" என்றான் பொங்கும் சிரிப்பிற்கு இடையே.
"அதை ஏன் கேட்கிறாய் போ... இந்த மாதிரி ஒரு தியாகியை நான் சினிமாவில் கூட பார்த்ததில்லை, அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறார் அண்ணா. இப்பொழுதும் என்னை விரும்புகிறீர்களா என்று கேட்டால் மனுஷன் என் மேல் உள்ள விருப்பத்தை நியூட்ரலில் விட்டு விட்டாராம். அதுவும் எப்படி? இவரை பற்றி யோசிக்காது நான் வேறு யாரையாவது மணந்துக் கொண்டால் தலைவர் வேறுப் பெண் பார்ப்பாராம். எனக்கு வந்ததே கோபம் சட்டென்று கிளம்பி விட்டேன்!"
"ஹஹா... அப்புறம் பின்னாடியே சமாதானப்படுத்த அலைந்தானா?"
"நினைப்பு தான்... நான் ஏன் கோபப்படுகிறேன் என்றே புரியாமல் என்னை சமாதானப்படுத்தவும் தெரியாமல் திருதிருவென்று விழித்தபடி சுற்றி வந்தார். கடைசியில் நான் தான் பரிதாபப்பட்டு என் மனதில் இருப்பதை சொல்லி விட்டேன். அப்பொழுதும் கொஞ்சம் தயங்கினார், அப்புறம் உனக்கு பிடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டார். என் அண்ணன் எல்லாம் என்னை மாதிரி பேச மாட்டான், நன்றாக மண்டையிலே நான்கு கொட்டு வைத்து புரிய வைத்து விடுவான் என்றேனா..."
"நீ சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் ஆடிப் போய் இருப்பான் அவன்!" என்று தன் அத்தை மகனை பரிகாசம் செய்தான் ஷ்ரவண்.
"எதற்கு ஆடிப் போக வேண்டும்? அதற்கு பிறகு தான் உன் மாப்பிள்ளையின் முகத்தில் சிரிப்பே வந்தது!" என்ற தங்கையின் கேலிப் பேச்சில் இவன் முகம் யோசனையில் சுருங்கியது.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro