💚18💚
சுவாதி தன்னிடம் அவளை குறித்து வெளிப்படையாக வினவுவாள் என்பதை எதிர்ப்பார்த்திராத பிரசாத் முற்றிலுமாக நிலைகுலைந்துப் போனான்.
தன்னெதிரே பதிலளிக்க இயலாமல் திணறிப் போய் அமர்ந்திருந்தவனை உற்றுப் பார்த்தவள் மெல்ல, "மாமா!" என்று அழைத்தாள்.
உள்ளத்து படபடப்பில் நெற்றியில் சிறு துளிகளாக வியர்வை அரும்பத் துவங்க, அதுவரை நிமிர்ந்து அவள் முகம் காணாதவன், "ம்..." என்று மெதுவாக இமைகளை உயர்த்தினான்.
"ஏன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்?" என்றாள் சுவாதி கவலையுடன்.
"அது..." என பேச முயன்றவன் வார்த்தைகள் வெறும் காற்றாக வெளி வரவும் லேசாக தொண்டையை செருமி, "நீ ஏன் திடீரென்று இப்படி கேட்கிறாய்?" என்று தான் பதிலுக்கு கேள்வி எழுப்பினான்.
ப்ச்... என முகத்தை சுருக்கி சில நொடிகள் தொடர்ந்து அமுதனிடம் பார்வையை வைத்திருந்தவள் பின் அவனிடம் திரும்பி, "ஏன் கேட்டால் என்ன எனக்கு அந்த உரிமை இல்லையா? நீங்கள் பதிலை மட்டும் சொல்லுங்கள்!" என்றாள் எடுப்பாக.
சுவாதியின் உரிமையும், அதிகாரத் தோரணையும் பிரசாத்தின் உதடுகளில் முறுவலை பூக்கச் செய்ய அதேநேரம் மனதின் ஓரத்தில் மெல்லிய வலியையும் உணர்ந்தவன் லேசான பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்தான்.
"என்னிடம் உனக்கு இல்லாத உரிமை என்று எதுவுமில்லை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சம்பந்தமில்லாமல் எதற்காக இந்த திடீர் கேள்வி?" என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
"திடீர் கேள்வி என்கிற வரை எல்லாம் சரி தான்... ஆனால் சம்பந்தமில்லை என்று நீங்களாக எப்படி முடிவு செய்யலாம்? மூன்று வருடங்களுக்கு முன்பு தான் அப்பா, அம்மா முதல் அத்தை, நீங்கள் வரை யாரும் என்னிடம் கலந்தாலோசிக்காமல் உங்கள் வசதிக்குப் பேசி முடிவு செய்தீர்கள். இப்பொழுதும் சம்பந்தப்பட்ட நான் ஒதுங்கி இருக்க வேண்டுமா?" என தன் அத்தை மகனை நேராகப் பார்த்தாள்.
"சுவாதி..." என அவளை குழப்பத்துடன் ஏறிட்ட பிரசாத், "நீ என்ன பேசுகிறாய்? உனக்கு என்ன தெரியும்? எனக்கொன்றும் புரியவில்லை!" என்றான்.
உஷ்ணப் பெருமூச்சை வெளியிட்டு ஒரு கையால் தலையை அழுந்த தாங்கி கொண்டவள் விழிகளை ஒருமுறை இறுக்கமாக மூடித்திறந்து, "என்ன புரியவில்லை இதைவிட தெளிவாக நான் எப்படி சொல்வது? மூன்று வருடங்களுக்கு முன்பு அத்தையின் மூலமாக அப்பாவிடம் என்னை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தீர்களா இல்லையா?" என்றாள்.
"அது சரி தான்... ஆனால் உனக்கு எப்படி விஷயம் தெரியும்?" என்றான் தயக்கத்துடன்.
இதுவரை அவளை சின்னப்பெண்ணாகவும் தன்னை பெரியவனாகவும் பாவித்து வந்தவனுக்கு இவனுடைய விருப்பம் இவளுக்கு தெரிந்திருக்கிறதே என்று தர்மசங்கடமாகிப் போனது.
"ம்... குரு மாமா திருமணம் முடிந்து நாங்கள் ஊருக்கு சென்று விட்டோம் அல்லவா... அப்பொழுது ஒருநாள் இரவு எனக்கு சரியாக உறக்கம் வராமல் கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று அறையில் இருந்து வெளியே வந்தேன். அப்பொழுது தான் அப்பா, அம்மா உங்களை பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. நீங்கள் என்னை மணக்க விரும்புவதாகவும் படிப்பை காரணம் காட்டி அவர் தயங்குவது சரியா எனவும் அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு பிள்ளைகளுமே எனக்கு ரொம்ப முக்கியம். அவர்கள் மீதான பாசத்தில் ஒருவேளை நான் ஒத்துக்கொண்டால் நாளை அவர்களுக்குள் ஏதாவது ஈகோ க்ளாஷ் ஆகிவிடாதா... இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இதுபோன்ற விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகின்ற அளவிற்கு பொறுமை இருக்கிறதா? இல்லை... நான் எதுவும் தவறாக சிந்திக்கிறேனா... எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம் பிரசாத்தை விட வேறு யாரும் நம் பெண்ணை நன்றாகப் பார்த்து கொள்ள முடியுமா என்ன? ஆனால்... சுவாதி... என்று ரொம்பவும் குழம்பி தவித்துக் கொண்டிருந்தார். எனக்கோ உங்களுடைய விருப்பத்தை கேட்டு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. நான் உங்களையும் கிட்டத்தட்ட ஷ்ரவண் அண்ணா போன்றதொரு உரிமையான உறவாக எண்ணி தான் பழகி வந்தேனே தவிர அதைத்தாண்டி முறைப்பையன், காதல், கல்யாணம் என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை. ஆனால் எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும், அதுமட்டும் நன்றாக தெரியும். இல்... இல்லை... எனக்கு பிடித்திருந்தது எப்படி என்றால்..." என அதுவரை இயல்பாக விளக்கி கொண்டு வந்தவள் பிரசாத்தின் கேலிப் பார்வையில் பதறி திணறி உளற, சிறுப் புன்னகையோடு அவள் தலையில் தட்டினான் அவன்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro