💚14💚
"ஷ்ரவண்!" என்று வித்யா அழைக்கவும் நிமிர்ந்தவன் அவளை குற்றவுணர்வோடு நோக்கினான், "என்னுடைய அவசர புத்தியால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் எவ்வளவு பெரிய தவறு இழைத்து விட்டேன் என்பது எனக்கு இப்பொழுது தான் தெளிவாகப் புரிகிறது!" என்றான் வேதனையோடு.
"சரி விடுங்கள்... பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். இனிமேலாவது உங்கள் மனைவியின் மனதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கு அவள் எந்த அளவிற்கு ஒத்துழைப்பாள் என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் வரையில் ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். அவள் ஒன்றும் மோசமானவள் இல்லை, ஏதோ ஓர் சொல்ல முடியாத காரணத்திற்காக தான் உங்களிடம் தன்னை மறைக்கப் பார்க்கிறாள். ஸோ... அவளை அப்படியே ஏற்றுக்கொள்ள உங்கள் மனதை தயார்படுத்துங்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக அவளிடம் ஒரு நல்ல மாறுதல் வரும்!" என்றாள் நம்பிக்கையுடன்.
ஆமோதிப்பாக தலையசைத்தவன், "உங்களுக்கு நான் ரொம்பவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் வித்யா. காலையில் இங்கே வரும்பொழுது கூட இவள் உயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்ததே தவிர இவளோடு வாழ்கின்ற எண்ணமெல்லாம் எனக்கு சுத்தமாக இல்லை. நான் வற்புறுத்தி கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக இத்தனை தூரம் என்னுடைய பிரச்சினைகளை கேட்டு அதை தீர்க்க பொறுமையாக வழியும் எடுத்து சொன்ன உங்களின் உயர்ந்த குணத்தை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ரியலி யூ ஆர் கிரேட்! சிகிச்சையின் பொழுது மருத்துவர் என்கின்ற அலட்டல் துளியும் இன்றி நடந்த சம்பவத்தை நீங்கள் இயல்பாக விசாரிக்கவும் தான் நானுமே வெளிப்படையாக உங்களின் ஆலோசனயை பெற முயன்றேன்!" என்றான்.
மெல்ல முறுவலித்தவள், "ஒரு உண்மையை சொல்லட்டுமா... நான் சாதாரண பொதுநல மருத்துவர் மட்டும் தான். தனிப்பட்ட முறையில் மனநல மருத்துவம் எதுவும் படிக்கவில்லை. இப்பொழுது தான் அந்த துறையில் மேற்படிப்பு படிக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், அப்பா பள்ளி ஆசிரியர், அம்மா வீட்டரசி. அப்பாவின் ஒற்றை வருமானத்தில் எனக்கு படிப்பு நன்றாக வரவும் ஸ்காலர்ஷிப்பில் மருத்துவம் முடித்துவிட்டேன். மூன்று வருடங்களாக ப்ராக்டிஸ் செய்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே சைகாலஜியில் ஆர்வம் இருந்தாலும் அப்பாவை ரொம்பவும் தொந்திரவு செய்ய கூடாது என்று அமைதியாக இருந்தேன். இன்று ஓரளவு வருமானம் நன்றாக வருகிறது, ஸோ... மேற்படிப்பை மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன்!" என்றவள் விழிகளை தாழ்த்தியபடி சிறிது மௌனமானாள்.
"உங்களிடம் நான் இயல்பாக பேசியதற்கு இன்னமொரு முக்கிய காரணம் இருக்கிறது!" என்று நிமிர்ந்தவளின் விழிகள் லேசாக கலங்கியிருக்க, "வித்யா..." என்றான் ஷ்ரவண் சின்ன திகைப்புடன்.
"சாரி..." என தன் கைக்குட்டையால் கண்களை ஒற்றி எடுத்தவள், "தற்கொலை முயற்சி செய்பவர்களை கண்டாலே ஒருபக்கம் என் மனம் பதறும் அதேநேரம் அவர்கள் மீது தாங்க முடியாத கோபமும் ஏற்படும். ஏனெனில் எனக்கு இருந்த ஒரே தம்பியை இது போன்ற ஒரு நிலையில் தான் நான் இழந்தேன்!" என்று கமறிய தொண்டையை லேசாக செருமி சீர் செய்யும் பொழுதே மனதை சற்று திடப்படுத்திக் கொண்டாள்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro