💚13💚
ஷ்ரவண் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தப் பொழுது சின்ன திகைப்புடனும், மெச்சுதலுடனும் அதைக் கேட்டிருந்த வித்யா, அவன் சொல்லி முடிக்கவும் நன்றாக முறைத்துப் பார்த்தாள்.
ஏதோ பேச வந்தவளை வேகமாக தடுத்தவன், "ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்... என் தவறை கேட்டு நீங்கள் கோபம் கொள்வதுப் புரிகிறது, ஆனால் என் பார்வையில் பிரச்சினையை நான் முழுவதுமாக விளக்கி விடுகிறேன் அதன் பிறகு பேசுங்கள்!" என்று தொடர்ந்தான்.
"முதலில் ஶ்ரீநிதியின் குரலை கேட்டு அவள் மீது எனக்கு சின்ன ஈர்ப்பு எழுந்தது. அதோடு அவள் தான் சுவாதியை காப்பாற்றியவள் என்பது வேறு இணைய என் மனதில் அவளைக் குறித்து பெரிய ஆர்வமே தோன்றியது. என்னையுமறியாமல் அவளை ஒரு கோணத்தில் கற்பனையில் உருவகித்துக் கொண்டு ஆவலுடன் போனால் அவளோ காரணமே இல்லாமல் என்னிடம் உதாசீனமாக நடந்தாள். அது மனதை வெகுவாக வாடச் செய்ய லேசான ஏமாற்றத்துடன் அவளிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது சுவாதியின் நினைவில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் போனேன். ஆனால் அவள் திடுதிப்பென்று என் காதல், கல்யாணம் வரை விசாரித்து அவளை உடனே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லவும் எனக்கு ஒரே அதிர்ச்சி. ஶ்ரீநிதி நன்றாகப் பேசியிருந்தால் கூட என்னால் சட்டென்று அவள் வேண்டுகோளை ஏற்றிருக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது என்னிடம் அவ்வளவு அலட்சியப் பாவத்தோடு பேசுபவளை கண்டு முதலில் குழப்பமாக இருந்தாலும் அவள் மேலும் மேலும் உதாசீனமாக நடந்துக் கொள்ளவும் எனக்கு கோபம் வந்தது. அந்த மனநிலையில் பட்டென்று அவளின் எதிர்ப்பார்ப்பை மறுத்து விட்டேன் நான். அதற்கு பதிலடியாக அவள் சுவாதியை வஞ்சத்துடன் தொடர்புபடுத்தி பேசவும் என் மனம் ஆட்டம் கண்டு விட்டது. நான் உங்களிடம் உறவினர் ஒருவரின் வாழ்க்கையை பற்றி கூறினேனே, அதுப்போன்ற சாபமானதொரு வாழ்க்கை ஏதாவது என் தங்கைக்கு அமைந்து விடுமோ என்று ஒரு பயம் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்கத் துவங்கியது. ஏற்கனவே ஒரு கண்டத்தில் இருந்து தப்பித்து இருக்கிறாள், இதில் இவளின் மனத்தாங்கல் வேறு அவளை பாதிக்குமோ என்கிற அச்சத்தில் எதையும் யோசிக்காமல் சடாரென்று திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டேன். என் வாழ்க்கையை நான் எப்படி வேண்டுமென்றாலும் சமாளித்துக் கொள்வேன். உங்களுக்கே தெரியும், நம் சமூகத்தில் என்ன விதமான மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆங்காங்கே இன்னமும் புகுந்த வீட்டில் வாழச் செல்லும் பெண்களுக்கு உண்டாகும் சில சங்கடங்கள் மட்டும் தீர்க்கப்படாமல் அப்படியே தான் இருக்கிறது. அதாவது... இதை எனக்கு விளக்கி சொல்ல தெரியவில்லை, பட்... என் பயம்..." என்று ஷ்ரவண் திணற, "புரிகிறது, சுவாதி திருமணமாகி செல்லும் இடத்தில் ஏதும் குணக்கேடானவர்கள் இருப்பார்களோ, அவளின் வாழ்க்கையில் அமைதி குலைந்து விடுமோ என்றெல்லாம் கற்பனையில் எதை எதையோ எண்ணி பயந்து இருக்கிறீர்கள் நீங்கள். ஓகே... மேலே சொல்லுங்கள்!" என்று ஊக்கினாள் வித்யா.
"எக்ஸாக்ட்லி... ஏன் அவசரப்பட்டாய் என்ற சுவாதியிடமும் இதைத்தான் நான் அன்று கூறினேன். ஒருபக்கம் சென்டிமென்டலா டென்ஷன், இன்னொரு பக்கம் இமோஷனல் ஃபீலிங்க்ஸ் என தடுமாறி இவளிடம் வாக்கு கொடுத்து திருமணமும் முடித்துவிட்டேன். ஆனால் சத்தியமாக சொல்கிறேன், இவள் என்னிடம் வருமானம், வசதி பற்றியெல்லாம் விசாரித்தும் கூட சரி இவளுடைய குணம் இவ்வளவு தான் இவளுக்கு ஏற்றவாறு நாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழலாம் என்று தான் தீர்மானித்து இருந்தேன். அத்தனையையும் இவள் நடத்தையில் இவளாக தான் உடைத்தெறிந்தாள். திருமணம் ஆனதிலிருந்தே தேவையில்லாமல் என்னை முறைத்துக் கொண்டிருந்தது, கோபம் வந்தால் சுவாதியை எடுத்தெறிந்துப் பேசுவது என்று ஒவ்வொரு முறையும் என் மனதில் இருந்து இவள் கீழிறங்கி கொண்டிருந்தாள். இதையெல்லாம் விட என்னை மிகவும் வெறுப்பிற்கு உள்ளாக்கியது குழந்தையிடம் இவள் நடந்துக் கொண்ட முறையும், அதைத் தொடர்ந்து ஆங்காரமாகப் பேசியதும் தான். என்னால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை, இன்னமும் விட்டால் என்னென்ன செய்வாளோ என்று வந்த ஆத்திரம் கண்களை மறைத்ததால் தான் நானுமே வாய்க்கு வந்ததை பேசி விட்டேன்!" என்று தளர்வுடன் பின் கழுத்தை அழுத்தி விட்டான்.
"ஒரு சின்ன கரெக்ஷன்... வாய்க்கு வந்ததை நீங்கள் சொல்லவில்லை, நன்றாக இரவு முழுவதும் வீட்டிற்கு வராமல் யோசித்து முடிவெடுத்தாக கூறி இருக்கிறீர்கள்!" என்று குத்தினாள் வித்யா.
"ப்ச்... ஆமாம்!" என்று இரு கைகளாலும் தலையை தாங்கி கொண்டான் ஷ்ரவண்.
சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது, "ஆமாம்... இன்னமும் நீங்கள் அதே முடிவில் உறுதியாக இருக்கிறீர்களா?" என்ற வித்யா அவனை கூர்ந்துப் பார்த்தாள்.
"என்ன?" என்று வெடுக்கென்று நிமிர்ந்தவன், "இல்லை..." என திணறிவிட்டு, "என்னால் வாழ்நாள் முழுவதும் இவளை அப்படி ஒதுக்கி வைத்திருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதோ ஓர் சூழ்நிலையில் அது மாறி இருக்கும். அதை இன்றே ஆட்டம் காண வைத்து விட்டாள் இவள். என்னால் இப்பொழுது இவளை அப்படியெல்லாம் அலட்சியமாக நினைக்க முடியவில்லை!" என்றான் சோகமாக.
சட்டென்று சிரித்து விட்ட வித்யா, "அவ்வளவு தான் ப்ராப்ளம் சால்வ்ட்!" என்று தோள்களை குலுக்கினாள்.
அவளை குழப்பத்துடன் நோக்கியவன், "எப்படி? எல்லா பிரச்சினைகளும் அப்படியே தானே இருக்கிறது!" என்றான் யோசனையோடு.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro