அலை - 8
எப்படியோ அவனோடு பிடிவாதம் பிடித்து வேறொரு அறையை வாங்கி வந்தாயிற்று. ஒரு வாரம் பொறுத்திருக்குமாறு கூறியவன், அதற்குள் அந்த அறையை அவள் விருப்பத்திற்கிணங்க மாற்றி தருவதாக, உறுதி கூறி வேறொரு அறையைக் காட்டினான்.
அவன் முன்பு காட்டியதை விட, மிகவும் சிறிய அறைதான் அது. ஆனாலும் ஒரு இதம் அவ்விடத்தில். கூட்டத்தினோடே இருந்து பழகி விட்டவளுக்கு, அமைதி கசந்தாலும் உறவென கூற சில மனிதர்கள்.
அறையின் ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, காற்றோட்டமாய் நின்று கண்களை மூடினாள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அந்த சூழலில் பொருந்தி வாழ்வது சவாலான காரியம்.
அதே நிலைதான் ஆரோஹிக்கும். அனைத்து சூழலிலும் பொருந்தி போனாலும், ஒரு மாதம் கூட பழகியிராத மக்களோடு ஒன்றிவிட்டது போல் நடிக்கதான் முடிந்தது.
ஆனால் ஏனோ திருமணம் முடிந்தபிறகு ஒரு மகிழ்ச்சி ஊற்று உள்ளத்தினுள். அந்நியமாய் தெரிந்த மக்கள் உறவாய், உயிராய் ஆன ஆர்ப்பரிப்பு.
அதிலும் அண்ணி, அண்ணி என அவளை பெரிய பெண்ணாய், உயர்ந்த பதவியில் வைத்திருக்கும் சித்தார்த், ரோஹி என மகளை போல் உரிமையாய் விரட்டி கெஞ்சி கொஞ்சும் மாமியார், அக்கறையை பார்வையாலே வழி நெடுக தொடர விடும் மாமனார், அனைத்திற்கும் மேல் எந்நேரமும் சிரிப்போடு ரசிப்பைக் கலந்து, அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுத்து, அதில் நிம்மதியடையும் அவளவன், வாழ்க்கை இனித்தது...
புதிய உறவாக மூன்று மனிதர்களை சம்பாதித்துவிட்டேன் என்கிற பேரின்பம் அவளுள். சுவற்றில் கண் மூடி சாய்ந்து மகிழ்ந்தவள் கண்களில் மகிழ்ச்சியின் துளிகள். இந்த அன்பு நிலைக்க வேண்டும் என்கிற வேண்டுதல், கண்ணீர் முத்துக்களாய் கன்னம் வருடியது.
நேற்று மனைவி உணவை ஊட்ட ஏங்கிய காரணத்தினால், அதற்கும் சேர்த்து ஒரு மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய சூழல் அஸ்வினுக்கு.
அவன் எப்பொழுதும் செல்லும் ஜிம் சென்று வந்தவன், வீட்டின் வெளியே சகோதரன் வாகனம் நிற்பதைக் கவனித்து உள்ளே வந்தவன், அங்கு நிலவிய அசாத்திய அமைதியில் சித்தார்த்தை அழைத்துப் பார்த்து பதில் வராமல் போக, முதலில் குளித்து வந்து ஆரோஹியை அவள் அறையில் தேடினான்.
எங்கும் இல்லாது போக தோட்டத்திற்கு வந்து பார்க்க, முன் வாயிலின் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்க, அங்கே நடந்தவன் காதில் ஆரோஹி, சித்தார்த் பேசியது கேட்டது.
ஏதோ தீவிரமாக மிதிவண்டியைப் பற்றி பேசினர், இல்லை இல்லை வாக்குவாதம் நடந்தது. பேசிக்கொண்டே தெருவில் நின்று பேச வாக்குவாதம் முத்தியது.
"ஆரோஹி..." அஸ்வின் குரல் கேட்டு இருவரும் திரும்ப, கடுகடுவென நின்றிருந்தான் அவன்.
"எதுக்குப்பா இவர் இப்படி முறைக்கிறார்?" சித்தார்த்திடம் கிசுகிசுப்பாக கேட்டாள்.
"அவன் முகமே அப்படி தான்..." சித்தார்த் பதிலில் ஆரோஹிக்கு சிரிப்பு வர, வாயை மூடி அவனைப் பார்த்து சிரித்தாள்.
"ரொம்ப சிரிக்காத, உள்ள வா." அவளை அஸ்வின் அழைத்த தொனியில் பயந்து இருவரும் உள்ளே வர, சித்தார்த்தை புடிபுடி என புடித்துவிட்டான்.
அவன் திட்டியதில் ஆரோஹி அமைதியாக வீட்டினுள் சென்று ஒளிந்துகொண்டாள்.
"ஏன்டா வெளிய கூட்டிட்டு போன? அதுவும் நீயும் அவ கூடயே நின்னு... வெளிய மட்டும் விஷயம் தெரிஞ்சது அவ்ளோ தான். உன்னை உண்டில்லைனு பண்ணிடுவேன்டா." அழுத்தமான எச்சரிக்கை கொடுத்தே, அஸ்வின் சிறியவனோடு வீட்டிற்கு கிளம்பினான்.
திவ்யாதான் விருந்து கொடுப்பதாக இருக்க, அவள் வீட்டிற்கு அஸ்வின் வர முடியாத காரணத்தால், அனைத்தையும் அஸ்வின் பெற்றோர் வீட்டில் ஏற்பாடாகியது.
எல்லாமே திவ்யாவின் பார்வையில் தயாராக, மதிய உணவு தன்னுடைய டயட்டிற்கு தீங்கு விளைவித்தாலும், அவளது உழைப்பிற்கு தலைவணங்கி அனைத்திலும் சிறிதளவு எடுத்துக்கொண்டான். அவனுக்கு மாறாக அவன் மனைவியோ எதையும் விட்டு வைக்கவில்லை.
போதாததிற்கு எதை எதோடு வைத்து சாப்பிட வேண்டுமென, சித்தார்த்துக்கு வகுப்பு வேறு. உணவிற்கு பிறகு அரட்டை களைகட்ட, இரவானது கூட எவர் கண்ணிலும் படவில்லை. அந்நாள் மிகவும் இனிமையாக ஓடியது.
வீட்டை நெருங்கிய சமயம், "அச்சோ! சொல்லவே மறந்துட்டேன், என்னோட ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்துடலாமா?"
"ஏன் கார் இருக்கே வீட்டுல?"
"ஓட்ட தெரியாதே..."
"சைக்கிள் வாங்கி தரவா?" உடனே முகம் பிரகாசிக்க சரி என்றாள் தலையை ஆட்டி.
"தெரியல, அந்த சைக்கிள் மேல ஒரு பேராசை. ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாரும் சைக்கிள்ல வர்றத பாக்க ஆசையா இருக்கும், நாமளும் ஓட்டணும்னு. அப்புறம் காலேஜ், ஹாஸ்டல் வாழ்க்கை. இப்ப வேலைக்கு போய் கைல காசு இருந்தாலும் இதுல போக முடியாதுல? ஆசை ஆசையாவே போய்டுச்சு." சிரிப்போடு தோளை உலுக்கி அவள் கூறிவிட்டாள்.
அஸ்வினால் தான் அவளது அந்த சிறு வருத்தத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை. சைக்கிள் எல்லாம் அவனும் சிறிய வயதில் அதிகம் பயன்படுத்தியதில்லை. இருசக்கர வாகனத்தின் மீதே ஈர்ப்பு அவனுக்கு.
அதுவும் வேகமாக கிடைத்துவிட, சைக்கிள் என்ற ஒன்றை அதிகம் யோசித்தது கூட இல்லை. இதெல்லாம் கூடவா சிலருக்கு கனவாக இருக்கும்? இருக்கிறதே!
எது எது கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்க வேண்டுமோ, அப்பொழுது அது கிடைத்தால் தான் அதனை முழுதாக அனுபவிக்கவும் முடியும். வயதிருந்த நேரத்தில் பணம் இல்லை, பணமிருக்கும் நேரத்தில் வயதில்லை.
சிந்தனைகளுக்கு கடிவாளம் போட்டு, "குழந்தையா இருக்க போ..."அவளைப் பார்த்தவன், வாகனத்தை வீட்டினுள் நிறுத்தி அவள் தலையில் கை வைத்து மெல்ல ஆட்டிவிட்டு, வாகனத்திலிருந்து கீழே இறங்க, அவனது அச்செயலில் சின்ன சிரிப்போடு அவனையே தொடர்ந்தது அவள் விழிகள்.
'என்ன இவன் இத்தனை இலகுவாக தன்னோடு பழகுகிறான்? இவனுக்கு காதல் அது இது என தோழி கூறினாளே...' யோசனையோடு மதிவர்தினி கொடுத்த உணவை எடுத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து உறங்க சென்றுவிட்டாள்.
மறுநாள் வீட்டையே சுற்றி காட்டிய அஸ்வின், இறுதியாக மனைவியிடம் திட்டு வாங்கியது தான் மிச்சம்.
எந்த பொருளைத் தொட்டாலும் இதன் மதிப்பு இத்தனை லட்சம், இத்தனை ஆயிரங்கள், இத்தனை கோடி என அடுக்குபவனிடம், வறுமையின் அறிக்கையையே வாசித்துவிடுவாள்.
"எம்மா கேப்டன், போதும் ம்மா!" கை எடுத்து கும்பிட்டும் விமோச்சனம் தான் அவனுக்கு கிடைத்தபாடில்லை.
"அது எப்படி விட முடியும்? இதுக்கெல்லாம் இவ்ளோ காசு தேவையா? இந்த டைனிங் டேபிள்க்கு எதுக்கு அஞ்சு லட்சம்? அவ்ளோ காசுக்கு இதுல என்ன இருக்கு? எப்பேற்பட்ட தேக்கு மரமா இருந்தாலும், இவ்ளோ காசெல்லாம் வராது. உங்களை எவனோ ஏமாத்திட்டான்."
அந்த பர்மா தேக்கு மர டைனிங் டேபிளை அவள் கைகள் வருட, அதன் அனைத்து பக்கமும் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தவளுக்கு, ஏதோ பஞ்சு பொதியின் மீது அமர்ந்த அனுபவம். மெல்ல உதடுகளில் சிரிப்பு மலர அவள் கைகள், அந்த மர நாற்காலியின் கம்பீரத்தை உரசி ஆராய்ந்து.
"ஆனா நல்லா தானே இருக்கு?" என கேட்டவளிடம் சிரிப்பை மறைக்க முடியவில்லை.
"சரி வா, முக்கியமானத காட்ட மறந்துட்டேன்." வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தவன், வீட்டின் பின்புறம் அவளை அழைத்து சென்றான்.
பின்கதவின் வழியே மணல் லாரி ஒன்று வந்து செல்ல, "இங்க பார்க்கிங் கொஞ்சம் வேலை போய்கிட்டு இருக்கு. முழுசா செட் பண்ணினதும் காட்டுறேன் உனக்கு."
அந்த கட்டிட வேலையைத் தாண்டி ஒரு சிறிய வீடு போல் தெரிய, அதனைப் பார்த்ததும் ஆரோஹியின் கைகள் நடுங்கியது.
"நாராயணா..." பயத்தில் பிதற்றியவள் அவன் கையைப் பிடிக்க பார்க்க, அவனோ துள்ளலோடு நடந்தான்.
அந்த நாராயணாவும் அவனுக்கு கேட்டாலும் தனக்கான அழைப்பு என தெரியவில்லை. அவள் நின்றது கூட தெரியாமல் சென்றவன், ஏதோ நினைத்து திரும்பி பார்த்து அவள் கை பிடித்து உரிமையாய், வலிக்காமல் இழுத்துச் சென்றான்.
தரதரவென அவளை அந்த இடத்திற்கு அழைத்து வந்தவன், அவள் ஒரு கையை இறுக்கமாய் பற்றி விசிலடிக்க, உள்ளிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது, இரண்டு சிப்பிபாறை வகை நாய்கள். அதன் முகத்தையும் கம்பீரத்தையும் பார்த்த ஆரோஹிக்கு மொத்த உடலும் ஆட்டம் கண்டது.
எப்பொழுதாவது தான் பிஸ்கட் போடும் தெருநாய் தன்னை, வாலை ஆட்டி பார்த்தாலே ஓடிவிடும் ரகம் அவள். இதில் வேட்டைக்கு, காவலுக்கு பயன்படுத்தும் நாட்டு நாயைப் பார்த்தவள் இதயம் மத்தளம் அடித்து அலறியது.
அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வரும் அந்த இரண்டு நாயைப் பார்த்தவன் முகம் ஆசை சுமந்து நிற்க, அவன் மனைவியோ பயத்தை சுமந்து நின்றாள்.
போராடி பார்த்துவிட்டாள் பெண், அவனிடமிருந்து கையை உருவ, அவனோ விடவே இல்லை. ஏதோ செய்கிறாள் என நினைத்தவன் கவனம் முழுவதும், அவனது இரண்டு நாய்கள் மீது இருந்தது.
அஸ்வின் செல்ல பிராணிகளோ ஓடி வந்து முதலில் அஸ்வினைப் பார்த்தாலும், அவனுக்கு அருகில் புதிதாக நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் ஒரே நொடியில் அவளை நோக்கி திரும்பிட, அஸ்வின் கரங்களை உதறி தள்ளி அலறி ஓடியவளை விடாது, எளிமையாக இரண்டும் சூழ்ந்து கொள்ள அவ்விடத்தையே ரணகளப்படுத்தி விட்டாள் ஆரோஹி.
அஸ்வின் தானும் அவளுக்கு அரணாக முன்னே வந்து நின்று, "டேய், இது நம்ம பொண்ணுடா, குரைக்காதீங்க." என்றபிறகே அவை சற்று ஆசுவாசமடைந்தன.
இதையே சாக்காக வைத்து அவ்விடம் விட்டு தப்ப எண்ணி மெல்ல தப்பித்தவளை, இந்த முறை பாசத்தோடு அவைகள் தொடர, அவ்விடத்தையே அஸ்வினுக்கும் அவன் செல்ல பிராணிகளுக்கும் பலமுறை சுற்றி காட்டிவிட்டாள்.
அவனோ அவளைப் பிடித்து நிறுத்த போராடி பார்த்துவிட, அசைந்தே கொடுக்கவில்லை அவள். அவன் வேகத்தை விஞ்சியிருந்தாள் பெண். ஒரு வழியாக அவை இரண்டையும் பிடித்து வைத்து மூச்சிரைக்க நின்றவளிடம்,
"நான் தான் நில்லுன்னு சொல்றேன்ல, அப்டி என்ன நம்பாம ஓட்டம்?" என்றவன், "இது காப்பர்..." கருப்பு நிறத்தில் இருந்த நாயைக் காட்டி கூறியவன், வெள்ளை நிறத்தில் இருந்த நாயைப் பார்த்து, "இது மேவரிக்."
"ஆமா ரொம்ப முக்கியம், வச்சிருக்குறது நாட்டு நாய், பேர் மட்டும் ஃபாரின் நாய் பேர். சுப்பிரமணி, பால்பாண்டினு வைக்க வேண்டியது தான? அப்டியே புடிச்சுக்கோங்க, நான் உள்ள ஓடிடுறேன்." நகரப் போனவளைப் பார்வையாலே நிறுத்தினான்.
"முறைக்காதீங்க, நான் தான் கோவப்படணும். வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல, புடிச்சு இழுத்து வச்சிருக்கீங்க? நான் போறேன்."
"நீ போனா நான் ரெண்டு பேரையும் விட்டுடுவேன்."
தன்னைப் பார்த்து வாலாட்டி நின்ற அவை இரண்டையும் பார்த்தவள் அவனை கெஞ்சலோடு பார்க்க, "இனி இதுதான் உன் வீடுனு ஆச்சு. அப்போ நீ இவங்கள பழகி தானே ஆகணும்? எத்தனை நாள் இப்டியே ஓடுவ?"
ஆரோஹி, "அதுங்க என் பக்கம் வராம இருக்கவரை."
அஸ்வின், "பிடிவாதம் புடிக்காத, நான்தான் இருக்கேன்ல? என்னை நம்பி பக்கத்துல வா ஆரூ."
அவனிடமிருந்து வந்த அவளது பெயர் உச்சரிப்பில், கண் சிமிட்டி நம்பாமல் அவள் அப்படியே நிற்க, "ஆரூ..." மீண்டும் அழைத்தான் அஸ்வின்.
"ஆ...?"
விழித்தவளிடம், "பக்கத்துல வா." என்றான்.
அவனுக்கு, அவனுக்கு நெருக்கமானவை அனைத்தும் அவளுக்கும் நெருக்கமாக வேண்டும் என்கிற ஆசை. அதனால் தான் அவள் மறுக்க மறுக்க மீண்டும் அவளிடமே வந்து நிற்கிறான்.
இந்த இரண்டு நாய்களும் பிறந்து சரியாக இருபதாவது நாள், அஸ்வினிடம் வந்தது. அன்றிலிருந்து அவை இரண்டும் அஸ்வின் பொறுப்பானது. அவனைப் பார்த்தாலே ஓடி வந்து காலை சுற்றி, அவன் மேல் பாய்வது, அவன் சில நேரம் வீட்டினுள்ளே நடக்கும் பொழுது, அவனுக்கு பின்னாலே வால் பிடித்து ஆளுக்கு ஒரு பக்கம் நடக்க என, அஸ்வினுக்கு அவை இரண்டின் மேலும் அதீத பிரியம்.
"இல்ல, நான் இங்கையே நின்னுக்குறேனே... கொஞ்சம் கொஞ்சமா பழகுறேன். பாருங்க, கை எல்லாம் இன்னும் நடுங்குது. ப்ளீஸ் கிரிக்கெட்டரே..." கை இரண்டையும் அவன் முன்பு நீட்ட நிஜமாகவே அவை நடுங்கியது, அதோடு அவள் முகம் எங்கும் வியர்வைத் துளிகள் வழிய சிரித்துவிட்டான்.
"சரி, இரு வர்றேன்". காப்பர், மேவரிக் இரண்டையும் சற்று தூரம் அழைத்து சென்றவன், அவை இரண்டிடமும் ஏதோ பேசி சிரிக்க, அவை அவனைப் பார்த்து குரைத்து, அவன் மீதே தாவி அவன் முகத்தை எச்சில்படுத்த, கீழே விழுந்த அஸ்வின் காப்பர் முகத்தைப் பிடித்துக்கொண்டான்.
இரண்டிடமும் போராடி ஒரு வழியாக அவைகளை அங்கிருந்த வேலையாளிடம் ஒப்படைத்து, ஆரோஹிக்கு மீண்டும் அவ்விடத்தை சுற்றி காட்டினான். ஒரு பக்கம் முழுவதும் தோட்டம் போன்ற அமைப்பு. அனைத்தும் காய் வகைகள், சில பழ வகைகள்.
"வெளிய மருந்து அடிச்சு காய் எல்லாம் வருதுல, அதான் எல்லாம் உள்ளையே வளர்க்குறேன். எல்லாம் என்னோட டயட்டிசியன் ஐடியா. இதனால தான் நான் இங்க வர்றதே. அங்க அப்பா வீட்டுல இருந்தா, அம்மா சாப்பாட்டுக்கு அடிமையாகி எல்லாம் மறந்துடுவேன், கண்ட்ரோல் பண்ணி இங்க வந்துடுவேன். இந்த மரத்தை பாரேன்,
இந்த இடம் வாங்கி இருபது வருஷம் மேல ஆச்சு. அப்போ ரொம்ப அவுட்டர். இடம் எதுக்கு சும்மா இருக்கணும்னு ரெண்டு மரம் வச்சு விடலாம்னு, அம்மா வச்சது இந்த வேப்பமரம், புளிய மரம். இப்ப எவ்ளோ பெருசா வளந்து நிக்கிது. அத டிஸ்டர்ப் பண்ணாம இங்கையே ஒரு ஸ்டோன் பெஞ்ச் போட்டாச்சு."
அப்படியாக அவனது நினைவுகள் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து, மகிழ்ச்சியாக அந்த இரவைக் கழித்தான்.
ஆரோஹிக்கு அவன் பேசியது அனைத்தும் காதில் கேட்டாலும் நடுக்கம் மட்டும் குறையவில்லை. எதேச்சையாக அவளது கைகளைப் பார்த்தவன் இரண்டு கைகளையும் எடுத்து, "இன்னும் உனக்கு பயம் போகலையா?"
அதிகமாகவே வருத்தம் அவனுக்கு, அவளிடம் நாய்களுக்கு பயம் உள்ளதா என கேட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும் என.
'அய்யய்யோ! என்ன கை எல்லாம் புடிக்கிறான்?' பதறியவள், "இல்ல, நார்மல் தான்." இதய துடிப்பின் வேகம் சீரானாலும், அவன் கைகள் அவள் கைகளைப் பற்றிய நொடி மீண்டும் வேகம் எடுத்தது.
"சரி, வா சாப்பிடலாம்." அன்றும் அதே போல் அவனே அவளுக்கு உணவு செய்து கொடுத்து, அவன் உண்ணும் பொழுது சொல்லும் கதைகளைக் கேட்டு நிம்மதியான உறக்கத்தைத் தழுவினான்.
நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனை, கதவு தட்டும் சத்தம் உசுப்பிவிட, எழுந்து பார்த்தால் ஆரோஹி அவன் அறையின் சுவற்றில் தலை சாய்த்து கண்களை மூடி நின்றாள்.
சோர்வு முகம் எங்கும் தாண்டவமாட, பதறியது ஆண் மனம். "ஆரூ..." அவள் தோள் தொட படக்கென கண் விழித்தவள், "பாராசிட்டமல் இருக்கா கிரிக்கெட்டரே?" குரல் மிகவும் நலுங்கி வந்தது.
உடனே அவள் நெற்றியைத் தொட்டு பார்த்தவன் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்து, அவள் அறையை நோக்கி இழுத்தான்.
அவளால் நடக்கவே முடியவில்லை, "மெதுவா..." வலுவிழந்து வலியோடு கூறியவள் நிலை, அஸ்வினை சாய்த்துப் பார்க்க பூவாய் கைகளில் ஏந்தி, அவள் அறையில் கிடத்தி உடனே மருத்துவரை அழைத்துவிட்டான்.
மருத்துவர் வந்து பார்த்து, மருந்திட்டு ஓய்வெடுக்கும்படி கூறி சென்றிருந்தார்.
அவள் மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்திற்கு சென்றுவிட, அஸ்வின் தூக்கத்தை இழந்து மனம் நொந்து கிடந்தான். விடியும் வரை பொறுத்தவன் அன்னைக்கு உடனே அழைத்து,
"ஏன், எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க? இதுக்கு தான் இப்ப வேணாம்னு சொன்னேன். என்னை நம்பி வந்த பொண்ண கூட என்னால ஒழுங்கா பாத்துக்க முடியல, தயவு செஞ்சு இங்க வாங்க." அன்னையிடம் சீறி, மீண்டும் மனைவியின் முகம் பார்த்தே அமர்ந்துவிட்டான்.
என்னதான் இந்த பெண் அவனை செய்தாளோ? காரணமே இல்லாமல் அவள் சோகம் அவனைத் தாக்குகிறது, அவள் பசி அவன் பசியாகிறது, அவள் புன்னகை அவனது நிம்மதியாகிறது. இதற்கெல்லாம் பொறுப்பு என அவன் பெயர் கூறிக்கொண்டாலும், இல்லை அதற்கு வேறொரு பெயரை வைத்தாலும், இரண்டே நாட்களிலா என்கிற இமயமலையாக கேள்வி குறி வந்து நிற்கிறது.
அவனுக்கு யார் கூறுவது, இரட்டை சதம் அடித்த அன்றே காதலிக்கு, இறைவனுக்கு ஏன் பெற்றோருக்கு கூட நன்றியை, சதத்தை சமர்ப்பிக்காமல் அவள் நினைவில் துள்ளினானோ, அன்றே அவன் மனம் அந்த பட்டாம்பூச்சியின் கூட்டில் சிக்கியதென்பதை?
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro