அலை - 5
இது தங்கள் வீடு தானா என்ற சந்தேகம் கணவன், மனைவி முன்பு, பெரிய கேள்விக்குறியாக கண் முன்னே நின்றது.
வந்தார்கள் வென்றார்கள் என்பது போல், வந்தார்கள் அன்னையும் மகனும். வீட்டையே தங்கள் பொறுப்பில் எடுத்து அவர்கள் வசமாக்கிக் கொண்டனர். மாறன் காபி எடுத்து வர, மதி மற்றும் சித்தார்த் அதனை பருகும் வரை அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இரண்டு நாட்களாக அலைந்து திரிந்து, தெளிவான முகவரி இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்து இல்லத்திற்கும் சென்று, கதவைத் தட்டி ஆரோஹி ஆரோஹி என கேட்டு கேட்டு சலித்துப் போனது. அதில் பலர் கேள்வியாய், சந்தேகமாய் பார்க்க ஓடியே வந்துவிட்டனர்.
அதனால் தான் அத்தனைக்கும் சேர்த்து இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டு, ஆழ்ந்து தேநீரில் கவனம் செலுத்தி வந்தனர். அப்படி தான் மகன் நினைத்திருந்தான்.
ஆனால் அன்னையின் மனதில் பல வினாக்கள் சந்தேகமாய் உருமாறி நின்றது. சரி வருமா சரி வருமா என்றெல்லாம் யோசித்து யோசித்து, தேநீர் முடிந்ததை கூட கவனிக்க மறந்து, வெறும் கோப்பையை உதட்டினை ஒட்டி உறிந்து கொண்டிருந்தார்.
"ஆன்ட்டி டீ?" திவ்யா, அவரது நினைவலைகள் ஊடே புகுந்து தேநீர் கோப்பையை நீட்ட, தெளிந்தவர் மறுக்காமல் அதையும் வாங்கிக் கொண்டார்.
"அக்கா டீ சூப்பர், எந்த டீத்தூள்?"
"சார் டீ போட்டது நான், அது என்ன பாராட்டு அங்க போகுது?" உரிமை குரல் தூக்கி மாறன் வந்து நிற்க, திவ்யாவுக்கு கணவனைப் பார்த்து சிரிப்பு வந்தது. அவர்களை வரவேற்ற சந்தோசம் இப்பொழுது இல்லை.
அது என்ன, காரணமே கூறாமல் மௌனமாய் உள்ளே வந்து அமர்ந்து, உரிமையாக தேநீரை அருந்திவிட்டு வார்த்தை மொழிய மறுக்கின்றனரே. ஏதோ ஆரோஹி என்னும் பெயரைக் கூறியதால் மட்டுமே இந்த அமைதி.
"அட விடுங்க ப்ரோ, நீங்களும் அக்காவும் என்ன வேற வேறயா?"
"ம்ம்... வந்ததுல இருந்து பாக்குறேன், வாயிலேயே வடை சுடுற, ஆனா வந்த காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டிங்கிறீங்க. என்ன, ஆரோஹி உங்கிட்ட எதுவும் வம்பு பண்ணாளா?" இதற்கு தான் வாய்ப்பு அதிகமென யோசித்து அந்த கேள்வியை வைத்தான்.
"மாறா... ரோஹி எதுவும் பண்ணிருக்க மாட்டா."
மனைவியை முறைத்து, "நம்பு, நம்பிக்கை தான வாழ்க்கை?" கேலி செய்தான்.
சித்தார்த்த்துக்கு முகம் எல்லாம் மத்தாப்பு தான், "ஆரோஹி அண்ணி சேட்டை பண்ணுவாங்களா?"
தனக்கு தெரிந்த ரைம்ஸ் கேட்ட குழந்தை போல, அத்தனை ஆனந்தம் திவ்யாவுக்கு, "ஐயோ சேட்டையா? அவ சரியான குசும்புக்காரி ப்பா. காலேஜ்ல ஸ்டாப்ஸ் எல்லாம் இவ கிளாஸ்ல இருந்தா, நான் உள்ளையே வர மாட்டேன்னு தர்ணா பண்ணாங்கனா பாத்துக்கோ, எவ்ளோ சேட்டை பண்ணுவானு..."
"திவி நில்லு..." மனைவியை நிறுத்திய மாறன் முகம் இப்பொழுது கடினமாகியிருந்தது. சித்தார்த்திடமிருந்து பார்வையை மதிவர்தினியிடம் மாற்றினான்.
"சாரி ஆன்ட்டி, பட் ப்ளீஸ்... அமைதியை பிரேக் பண்ணிட்டு வந்த விசயத்தை சொல்றிங்களா? இவர் அண்ணி, மருமகனு என்ன என்னவோ சொல்றார். ப்ளீஸ்... அபன்ஸிவா பேசுறேன்னு மட்டும் தப்பா நினைக்க வேணாம்." அன்னையும் மகனும் இருவரையும் மாறி பார்க்க, திவ்யாவுக்கு அப்பொழுது தான் கணவன் பேச்சும் அவர்கள் வரவும் புரிந்தது.
அதை விட மதிவர்தினியின் கவலையான முகம், ஏதோ பெரிய அச்சத்தை அவளுக்கு காட்ட, தன்னுடைய சிறிய மேடிட்ட வயிற்றைப் பிடித்து அந்த சோபாவின் நுனியில் வந்தமர்ந்தாள்.
"திவி பாத்துடி, பின்னாடி தள்ளி ஒக்காரு" மனைவியை குரல் உயர்த்தாமல் கடிந்தவன், அவள் கையைப் பற்றி பின்னால் இழுக்க, கணவன் முகம் பார்த்து கண் சுருக்கி கெஞ்சி தன் கையை அவனிடமிருந்து பிரித்து, மதிவர்தினியிடம் மீண்டும் கவனத்தைத் திருப்பினாள்.
"ஆரோஹி உங்களுக்கு எப்படி தெரியும்?"
"ஆரோஹி தெரியாது, ஆனா லட்சுமி தெரியும்."
திவ்யாவின் கைகள் உடனே சில்லிட, அவளது கையைப் பற்றிக்கொண்ட மதியின் கண்களில் அத்தனை வலி.
தன்னுடைய சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை அவர்களிடம் நீட்டினார். அதில் மதிவர்தினியும் அருகே லட்சுமியும் தாவணி அணிந்து, ஒரு மரத்தில் சாய்ந்து சிரித்தபடியே நிற்க, அத்தனை உயிர்ப்பிருந்தது அந்த புகைப்படத்தில்.
"ரொம்ப சின்ன வயசுல அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, பெண்ணுக்காகனு இன்னொரு கல்யாணத்தை பண்ணிட்டு வந்து நின்னார் என்னோட அப்பா. அம்மா மாதிரி இல்லனாலும் சித்தி ஒருத்தவங்க வர்றாங்கனு சந்தோசம் தான் எனக்கும். ஆனா அதெல்லாம் ஒரு மாசம் கூட நிலைக்கல. எந்நேரமும் திட்டு, அடி தான். அம்மாவோட சேர்த்து அப்பாவையும் மொத்தமா இழந்துட்டேன். வாழ்க்கையே நரகமாச்சு. அந்த நேரம் தான் ஆரோஹி அம்மா லட்சுமியை பாத்தேன். என்னோட அமைதிக்கெல்லாம் சேர்த்து அவ பேசுவா..."
அந்த நாளின் நினைவில் இப்பொழுது கூட அவருக்கு கண்ணீரோடு சிரிப்பு வந்தது, "பெருசா வயசு கூட இருக்காது, எயிட்த் தான் படிச்சிருப்போம். எந்நேரமும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்த என்னை அழுக வச்சு, சிரிக்க வச்சு சாதாரண மனுசியாக்குனா. வீட்டுல இருந்து தப்பிக்கவே ஸ்கூல்க்கு வந்த என்னை படிக்க வச்சு, காலேஜ் வர கொண்டு வந்ததே அவதான். அங்கதான் சித்தார்த் அப்பா ராகவ்வை லவ் பண்ணேன்.
வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆச்சு. ரெண்டு பக்கமும் போராட்டம் தான். எனக்காகனு பேச யாரும் இல்லனு கலங்கி நின்னப்போ, லட்சுமி அவளோட அப்பாவை வச்சு ரெண்டு பக்கமும் சமாதானம் பேசி கல்யாணம் பண்ணி வச்சா. அவ இல்லனா என் வாழ்க்கை இவ்ளோ சந்தோசமா இருக்குமானு என்னால சொல்ல முடியாது.
ஆளுக்கு ஒவ்வொரு பக்கம் வேலை, குடும்பம்னு போனாலும் லெட்டர், போன்னு பேசிப்போம். திடீர்னு லெட்டர் எதுவும் இல்லாம போச்சு. ரெண்டு வருஷம் முன்னாடி தான், அவளைத் தேடி கோயம்புத்தூர் வந்தப்போ அவ இல்லாதது தெரிஞ்சது.
லட்சுமி இல்லாததையே ஏத்துக்க முடியாத எனக்கு, ஆரோஹி எங்க இருக்கானு தெரியாம ரொம்ப சோர்ந்து போனேன். அதுவே எனக்கு ஒடம்பு சரியில்லாம பண்ணிடுச்சு. அவங்கள நினைச்சு நினைச்சு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டேன்."
சித்தார்த் அதிர்ந்து அன்னையைப் பார்க்க அவர் மகனிடம் திரும்பவே இல்லை. மாறன் கூட அவரது நிலையை எண்ணி வருந்தி அவரைப் பார்க்க, திவ்யா பதமாய் அவரது கை பற்றி ஆறுதல் வழங்கும் விதமாய் அழுத்தி பிடித்தாள்.
"ஹார்ட்ல பிளாக் இருக்குனு சொல்லி மொத்தமா என்னை முடக்கிட்டாங்க. ஆனாலும் அப்டியே விட முடியல. இப்ப அவளை தேடி இங்க வந்துருக்கேன்." கண்ணீர் மளமளவென வடிய சித்தார்த் வியந்து தான் போனான்.
"அதுக்கு காரணம் கூட உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்..." கண்ணீரைத் துடைத்து, அவர்களைத் தலை தூக்கி பார்த்தார்.
திவ்யாவின் கைகள் தளர்வை உணர்ந்தவர் அதை விடாது பிடித்துக்கொள்ள, தவிப்பாய் கணவனை ஏறிட்டாள் திவ்யா. மாறனும் யோசனையில் பல நொடிகள் வீழ்ந்திட, அவர்களுக்கு தக்க நேரம் கொடுத்து மௌனமாய் இருந்தார் மதி.
ஏதோ கூற வருவதும், பின்பு தயங்குவதுமாய் திவ்யா இருக்க, அவளுக்கு பதில் கணவனே பேசத் துவங்கினான், "இது சரியா வராது ஆன்ட்டி."
இப்பொழுது உண்மையாகவே அழுதுவிட்டார். மகனோ அன்னையின் உணர்வு புரிந்து, அவர் அருகில் வந்து வேகமாக அமர்ந்து அவர் தோளில் கை போட்டு ஆறுதல் படுத்தினான், "விடுங்க ம்மா..." என்று.
"அப்டி எல்லாம் விட முடியாது. ஏன் சரி வராது? நான் என்ன ஆரோஹிய கொடுமையா படுத்தப் போறேன்? இல்ல, என் மேல நம்பிக்கை தான் இல்லையா?"
மாறன், "உங்கள எதுவும் சொல்லல ஆன்ட்டி. நீங்க நல்லாவே பாத்துக்கிடாலும் முக்கியமா பாக்க வேண்டியது உங்க பையன் தான்."
"அவன் என்னை விட பத்திரமா பாத்துக்குவான் ப்பா. அவனை பத்தி உங்களுக்கு தெரியாது."
"பாசம் உங்க மேல வைக்கிறது வேற, தனக்கு வர்ற பொண்ணு மேல வைக்கிற பாசம் வேற. அதை அவரால ஆரோஹிக்கு குடுக்க முடியும்னு எனக்கு தோனல."
பீதியோடு மாறனைப் பார்த்தவர் கண்ணில் அப்பட்டமான பயம், "இல்ல ப்பா..."
"ப்ளீஸ் ஆன்ட்டி புரிஞ்சுக்கோங்க, எங்களுக்கு மட்டும் இல்ல, அவர் லவ் பண்ற விஷயம் அரசல் புரசலா வெளிய வந்துட்டே தான் இருக்கு, அது தப்பில்ல. அவர் வேலை அப்டி. ஆனா எங்க ஆரோஹி அப்டி இல்ல. பாக்கதான் எதுக்கும் கேர் பண்ணிக்காத மாதிரி இருப்பா, பட் ரொம்ப சென்சிடிவ்."
"என் பையன் யாரையும் லவ் பண்ணல தம்பி, சித்தார்த் சொல்லுடா..." மகனை உசுப்பி விட்டவர் கண்களில் அத்தனை ஆணை, ஏதாவது நல்லது கூறு என்று.
'சொல்ல இருந்தா தான?' என்று நினைத்தவன், அன்னையின் தீ பார்வைக்கு பயந்து, "அண்ணா பத்தி வெளிய நூறு விஷயம் சொல்லுவாங்க, ஆனா உண்மை என்னனு தெரியாம முடிவுக்கு வர வேணாமே. நாங்க பேசுனோம் அண்ணாகிட்ட, அவன் லவ் எல்லாம் பண்ணல. சும்மா ஃப்ரண்ட்லியா பழகுறாங்க..."
அத்தனை நேரம் மௌனம் காத்திருந்த திவ்யா மௌனத்தைத் தகர்த்து, "இதுதான் ம்மா எங்க பயமே... அவரோட உலகம் ரொம்பவே பறந்து விரிஞ்சது. ஆரோஹி உலகம் ரொம்பவே சின்னது.
நான், அவளோட வேலை அவ்ளோ தான் அவளோட உலகமே. இதுல இவ்ளோ பெரிய பாரத்தை என்னால அவ தலைல ஏத்தி வைக்க முடியும்னு தோனல. என்ன கஷ்டம்னாலும் வாய் தொறந்து கூட சொல்லா மாட்டா. சிரிச்சே சமாளிப்பா, வேணாமே..."
ஒரேடியாக தலையை ஆட்டி ஆட்டி மறுத்த திவ்யாவின் கன்னத்தில் கண்ணீர் கோடுகள் அதிகம் உருவாகியது.
"திவ்யா ச்சில்..." மாறன் அவளது உடல்நிலையை எண்ணி மனைவியை சமாதானம் செய்தான், "நான் புரிய வைக்கிறேன் அவங்களுக்கு..."
"என்ன புரிய வைக்கணும்? என்னமோ என் அண்ணன் கொடுமைக்காரன் மாதிரி பேசுறீங்க? அவன் உங்க ஃப்ரண்ட்ட விட ரொம்ப நல்லவன், ஏதோ பாப்புலரா..."
சகோதரனை அவர்கள் நிராகரித்தது கூட அவனுக்கு கோபமில்லை. அவனை ஏதோ அரக்கன் போல் அவர்கள் பாவித்து பேசுவது தான், சகிக்கவே முடியவில்லை. கோவத்தில் திவ்யாவை பார்த்து பேசியவனை, பார்வையாலே அடக்கி நிறுத்தினார் அன்னை.
"சாரி ம்மா, அவன் ஏதோ கோவத்துல பேசுறான். என்னோட அஸ்வின் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நிச்சயமா இல்ல. ஒரு நாள் கூட கோவம் படமாட்டான். ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங், என் முகத்தை பாத்தே என்னை தெரிஞ்சுப்பான்.
ஒருத்தர் மேல பாசம் வச்சிட்டா, அவங்க மேல உயிரா இருப்பான். அந்த உயிர் ஆரோஹியா இருக்கணும்னு என்னோட ஆசை. என் பையன் வேற ஒரு பொண்ண லவ் பண்றான்னு தான நீங்க யோசிக்கிறீங்க?" இருவர் முகமும் தெளிச்சியடையவில்லை இன்னும்.
"அவன் அந்த பொண்ணு கூட பழகுறது உண்மை, அதே நேரம் அவனுக்கு அந்த பொண்ணு மேல கொஞ்சம் கூட லவ் இல்ல, அதுவும் உண்மை தான்."
திவ்யாவின் முகம் அப்பட்டமான விலகலைக் காட்டியது, "லிவ் இன் ரிலேஷன், பெனிபிட்ஸ் எல்லாம் இந்த காலத்துல ரொம்பவே சாதாரணம். ஆனா ஆரோ..."
"இல்ல திவ்யா, இது தப்பு. இப்பவும் சொல்றேன், என் பையனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு ஆசை, அட்ராக்ஷன் இருக்கலாம். அதுக்கு அவனோட எல்லை மீறி தாண்டி போறவன் இல்லை. இத ஒரு அம்மாவா என்னோட வளர்ப்பு மேல நம்பிக்கை வச்சு உறுதியா சொல்ல முடியும்.
ஆரோஹிகிட்ட என்னால நேரடியா பேசியிருக்க முடியும். ஆனா அவ ஒரே உறவா நினைக்கிற உன்கிட்ட பேசி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு தான் ம்மா வந்தேன். முன்ன பின்ன தெரியாத என்னை நம்புறது உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்."
தன்னுடைய கணவனின் விசிட்டிங் கார்டை கொடுத்தவர், "இது சித்தார்த் அப்பா விசிட்டிங் கார்ட். எங்களை பத்தி வெளிய விசாரிச்சுக்கோங்க. என்கிட்ட ஒளிவு மறைவு எதுவும் இருக்காது திவ்யா. ஆரோஹிய நான் என்கூடயே வச்சுக்க, என் பையன் அஸ்வின் ஒரு சாக்கு அவ்ளோ தான், யோசிங்க.
எவ்ளோ நாள் வேணும்னாலும் யோசிங்க, ஆனா எந்த முடிவு எடுக்க முன்னாடியும், அஸ்வினை ஒரு செலிப்ரட்டியா பாக்காம சாதாரண மனுசனா தெரிஞ்சிட்டு, முடிவு பண்ணுங்க. அதை மட்டும் தான் உங்ககிட்ட கேக்க முடியும்."
அன்னை, மகன் இருவரும் வீட்டை விட்டு வெளியேற, அன்னையை விசித்திர பிறவி போல் திரும்பி திரும்பி பார்த்து வந்த சித்தார்த்தை காரில் ஏறியதும் மொத்திவிட்டார் மதி.
"ஏன்டா அமைதியாவே இருக்க மாட்டியா? பொறுமையா பேசணும்னு சொல்லி தான கூட்டிட்டு போனேன்?"
"ம்மா... சும்மா என்னையே சொல்றிங்க, எனக்கு முன்னாடி அவன் பண்ண அழிசாட்டியத்தை நீங்க தான சொன்னிங்க?"
அன்னையை ஏகத்திற்கும் முறைத்து வைத்தவன் முகம், அடுத்த நொடியே கேலியாக மாறியது. "ஆனா, போட்டீங்க பாருங்க ஒரு ட்ராமா... எப்பா நெஞ்சு வலியாம்? ஹார்ட்ல பிளாக்காமாம்? இவங்க பையனுக்கு கோவம்னா என்னன்னே தெரியாதாமாம். எப்பா...! உலக மகா நடிப்புடா சாமி!"
அதெற்கெல்லாம் சிறிதும் அசரவில்லை மதி, "நான் சொன்னது பொய் தான், ஆனா என் பையன் குணம் இப்பவும் தங்கம் தான்டா. எங்க, உன்னால தப்பு சொல்லிட முடியுமா?"
இதற்கு சித்தார்த்திடம் எந்த பதிலும் இல்லை.
"வண்டிய ஆபீஸ்க்கு விடு, உன் அப்பாகிட்ட பேசணும்."
"ம்ஹ்ம்... பேச வேண்டிய ரெண்டு ஜீவன்களை தவர, மத்த எல்லார்கிட்டயும் பேசுங்க." அலுத்துக்கொண்டு வாகனத்தை தந்தையின் இருப்பிடத்தை நோக்கி விட்டான்.
அதன்பிறகு வந்த நாட்களில் ஆரோஹி, அஸ்வின் இருவருக்கும் தங்களை இணைக்க மதி துடிப்பது தெரியாமலே, போனது. திவ்யாவும் சரி, மாறனும் சரி யோசனையில் மூழ்கி போக, ஆரோஹியிடம் மதி வந்ததை மட்டும் கூறி, அவர் பேசிய சமந்தத்தை பற்றி வார்த்தை கூட விடவில்லை. ஆதலால் இருவருக்கும் இருவரும் இன்னமும் மூன்றாம் மனிதர்கள் தான்.
***
அன்று சரவெடியாய் துவங்கிய ஒரு நாள் போட்டியில், ஏன் என்றே தெரியாத அளவிற்கு அஸ்வின் உள்ளம் உறுதியோடு நின்றது. தனக்கு முன்பு இறங்கிய இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் சொற்ப இலக்கில் தங்கள் ஆட்டத்தை இழந்திருக்க, நிலையான வீரன் துணைக்கு நில்லாமல் தள்ளாடிய இந்திய அணியின் தூணாய், நம்பிக்கை நாயகனாய் அஸ்வின் மட்டுமே களத்தில் நின்றான்.
எந்த விதமான சந்தேகமும் இல்லை, சிறு அச்சம் கூட அவனிடம் இல்லை. எப்பொழுதும் இருக்கும் அதே அசுர வேகம், அதோடு இம்முறை ஒரு ஆக்ரோஷம் அவனிடம் சற்று அதிகமாகவே தென்பட்டது.
உடன் நிற்கும் வீரன் கூட, "பொறுமையா ஆடு அஸ்வின், முதல் அஞ்சு ஓவர்லயே ரெண்டு விக்கெட் போச்சு. நிறுத்தி ஆடுனா தான் ரன் ரேட் அதிகமாகும், அவசரப்படாத..."
அழுத்தி அவன் கூறியும் நிற்கவில்லை இவன். வந்த ஒவ்வொரு பந்தும் எல்லையைக் கடந்து செல்ல, அவனது எண்ணும் ஏறிக்கொண்டு சென்றது. இருபதே பந்துகளில் அரைசதம் அடித்தவன், அடுத்த முப்பது பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களின் ஆரவாரத்தைக் கூட்டியிருந்தான்.
ஒரு பக்கம் நிலையில்லாத பார்ட்னர் இருக்க விக்கெட் விழுந்துகொண்டே சென்றது. அந்த நிலையிலும் ரசிகர்கள் மனதில் பெரிய ஆசுவாசம், அஸ்வின் நாராயண் களத்தில் உள்ளான் என்பது மட்டுமே.
ஒவ்வொரு ஓவரும் மக்களின் கூச்சலில் அந்த அரங்கமே அதிர, அஸ்வினின் அதிரடியான நிதான ஆட்டம் எதிரணியினரை கதிகலங்க வைத்தது.
அந்த நேரம் அவனோடு களத்தில் நின்ற அந்த அணியின் கேப்டன் நிதின், "என் பிளாக்மெயில் இப்டி எல்லாம் வேலை செய்யும்னா, டீம் மொத்தத்துக்கும் இதையே பண்ணலாம் போலயே..."
விளையாட்டாக அவன் கூற, கூட்டத்தின் மேலே கவனம் வைத்திருந்த அஸ்வின் இதழ்கள் சிரிப்பில் அழகாய் மலர்ந்தது.
"சரி, இனிமேலாவது நிதானமா ஆடு. லாஸ்ட் பத்து ஓவர்ல ஸ்டேபிலிட்டி ரொம்ப முக்கியம். எனக்கு அடுத்தது பௌலர்ஸ் தான்..." ஒரு கேப்டனாக நிதின் துணை கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்க, அவன் கவனம் எதிரில் இருப்பவனிடம் சுத்தமாக இல்லை.
"நீங்க நின்னு நிதானமா ஆடுங்க பாய். இன்னைக்கு என்னோட டாஸ்க்கே வேற... டபுள் சென்சுரி இல்லனா ட்ரிபிள் சென்..."
கண் முன்னே தெரிந்த அந்த இரண்டு நொடி காட்சியில் வார்த்தைகள் மறந்து, கண்கள் தன்னுடைய தேடலை அந்த கூட்டத்தினுள்ளே துவங்கியது. புள்ளியாய் தெரிந்த ஜன கூட்டத்தின் நடுவே, அந்த ஒரு பலகையை எப்படி கண்டறிவது? அதுவும் இத்தனை ஆயிரம் மக்களிடையில்...?
"என்னது ட்ரிபிள் சென்சுரியா?" அதிசயித்து அஸ்வினைப் பார்த்தவன், "டேய், என்னாச்சு உனக்கு இன்னைக்கு?" கேட்ட கேள்விக்கு உரியவனிடமிருந்து பதில் வரவில்லை, தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது.
"என்னடா தேடுற?"
நிதின் மீண்டும் கேட்க, "பாய் ஒரு போர்ட் ஸ்க்ரீன்ல வந்துச்சு பாத்திங்களா? டூ ஹண்ட்ரட் ஆர் த்ரீ ஹண்ட்ரட்னு வந்துச்சே?"
"அது சாதாரணம் தானே அஸ்வின், ஃபேன்ஸ் எஸ்பக்ட் பண்றது தான?"
அஸ்வின், "இல்ல பாய், இது வேற..." என்றவன் முகம் எல்லாம் பிரகாசம் பரவ, தன்னுடைய இடத்திற்கு சென்று நின்று விட்டான் அடுத்த பட்டாசை கொளுத்த.
ரசிகர்களின் ஆரவாரம், மனதின் உந்துதல் என அனைத்தும் அவனுக்கு போதை கொடுக்க, அணியின் இலக்கோடு அவனுடைய இலக்கும் வெகு சீக்கிரமே உச்சியைத் தொட்டது.
இரட்டை சதம் அடித்தும் வெறி அடங்காதது போல் பந்துகளை பறக்க விட்டவன், இருநூற்றி ஐம்பது அடித்த பொழுது மக்களின் வாழ்த்துகளை பெற, மட்டையை உயர்த்தி தன்னுடைய மகிழ்ச்சியை வைக்க, தன்னாலே பளிச்சென விரிந்தது அவன் மனம்.
ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி கூறி வானை நோக்கி கண்கள் மூடி திறந்தவன் கண் முன்னே, வானவில்லாய் பளிச்சென மின்னியது அவளது அழகிய சிரித்த முகம்.
சில நேரங்களில் சில மனிதர்களின் நினைவுகள் மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகிறது, அவள் கள்ளமில்லா சிரிப்பை போல்.
தவறு தான், ஆனாலும் மீண்டும் அவள் நினைவில் மூழ்கி, அந்த பௌர்ணமி முகம் ஒத்தவளைக் கொண்டாடிவிட தூண்டிய மனம், சற்று பின்வாங்கி தற்காலிகமாக நன்றியை மட்டும் வைத்தது, 'தாங்க் யூ பட்டாம்பூச்சி!'
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro