அலை - 3
உல்லாசமாக விசிலடித்து வீட்டிற்குள் நுழைந்தவன் நாசி நுகர்ந்த வாசனையில், நேராக சென்று நின்றது அன்னை இருக்கும் சமையலறைக்கு தான். மகனுக்காக தானே நின்று, பார்த்து பார்த்து பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தார்.
"ம்மா, பசி வர வச்சிடுறிங்க..." அன்னையைக் குற்றம் சாட்டி, கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சமையல் மேடையிலே போட்டு, அன்னையின் கை வண்ணத்தில் உருவான உணவை ருசிக்க துவங்கிவிட்டான்.
"எல்லாம் பாத்து பாத்து தான் செஞ்சிருக்கேன், தைரியமா சாப்பிடுடா."
அவன் விருப்பத்திற்கிணங்க உணவை பரிமாறியவர், அவன் வசதியாக அமர அவனது பொருட்களை அப்புறப்படுத்த துவங்கினார் திட்டிக்கொண்டே. "பாரு, ஒரு பொருளை ஒழுங்கா வைக்க தெரியுதா உனக்கு? எல்லாம் அப்டி அப்டியே போட்டுட்டு போய்டுறது. ஒழுங்கா டிகிரி முடிச்சிருந்தா இப்டி பண்ணிருக்க மாட்ட."
ஏழு வருடங்கள் முன்பு தன்னுடைய படிப்பு, எதிர்காலம் அனைத்தையும் துறந்து, முழு மூச்சாக விளையாட்டில் கவனம் செலுத்தத் துவங்கினான்.
"என்ன மதி, எதுக்கு இப்ப அதெல்லாம்? படிச்சிருந்தா கூட இந்நேரம் இவ்ளோ சம்பாதிச்சிருக்க மாட்டேன். மாசம் சம்பளம், ப்பைட் பார்ட்னர்ஷிப், ப்ராண்ட் அம்பாசிடர், ஆட், லான்ச் ஈவென்ட்ஸ்னு எனக்கே கணக்கு இல்லாம போய்கிட்டு இருக்கு. இப்படிப்பட்ட நிலைமைலயும் அந்த டிகிரிதான் உங்களுக்கு பெருசா படுதா?"
அன்னையோ சமாதானம் ஆகவில்லை. நாட்டின் மிகப் பெரிய பிரபலம், ஒரு டிகிரி படிக்கவில்லையா என பலரும் அவர் காது படவே பேசிவிட்டனர்.
சிலர் ஒரு படி மேலே சென்று, "ஆனாலும் டிகிரி முடிச்சிருக்கலாம் மேடம்." நேரடியாக வத்திவிட்டு சென்றுவிட, அன்று முழுதும் வீட்டினர் மதிவர்தினியின் புலம்பலைக் கேட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
"ஆமாடா, எனக்கு அதுதான் பெருசு. இப்ப கூட ஒன்னுமில்ல, கரஸ்லயாவது ஒரு டிகிரி வாங்கேன் அஸ்வின். அம்மா பெருமையா வெளிய சொல்லிக்குவேன்ல?" மகனின் நாடி பிடித்து கெஞ்சினார் மதி.
அவனோ அவருக்கு உணவை ஊட்டிவிட்டு, "நீங்க உங்க மகனை பத்தி பெருமை பேச கூடாது மதி. ஊர் மட்டும் தான் பேசணும், பேசுதுல? நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க."
"அதுக்கு..." அன்னையை மீண்டும் பேச விடாமல் உணவு ஊட்டி நிறுத்தினான் புத்திரன்.
"போடா..." மகனை உரிமையாய் அடித்து மீண்டும் அவன் பொருட்களை ஒதுக்க துவங்கியவர், ஆரோஹி கொடுத்த அந்த கவரை பார்த்து, "இது என்னடா?" கேட்டார்.
தலையை உயர்த்தி பார்த்தவன் இதழ்களில் வெட்கமே இல்லாமல் ஒட்டிக்கொண்டது சிரிப்பு, "மொய் கவர் ம்மா." என்றான்.
அவனை விசித்திரமாக பார்த்தவர், "ஊருக்கெல்லாம் மொய் வை, உனக்கு ஒன்னும் நடக்க காணும்."
'போச்சு, அடுத்த பஞ்சாயத்து' என்றெண்ணியவன் உணவு தட்டை எடுத்து வரவேற்பறை வரவும், மகனை விடவில்லை அந்த அன்னை.
அவன் பின்னேயே வந்துவிட்டார்.
"எத்தனை நாள்தான் இப்டி ஓடிட்டே இருக்க போற? எங்களுக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை இருக்காதா? உன் வயசுல பசங்க எல்லாம் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதெல்லாம் பாக்குறப்போ எங்களுக்கும் ஆசை இருக்காதாடா?"
காதே கேட்காதது போல் உண்ணும் மகன் மேல் வெறி ஏற, தட்டை வாங்கி ஓரம் வைத்து, "பதில் சொல்ல போறியா, இல்லையா நீ இப்போ?"
"அவன் எப்படி சொல்லுவான், அவன்தான் மும்பை பக்கம் செட்டில் ஆக பிளான் போட்டுட்டானே..."
உணவு புரையேறி பதற்றத்தோடு தம்பியைப் பார்த்து திரும்பினான் ஆடவன். கண்களை உருட்டி செய்தியை மாற்றி கூறு என்னும் ஆணை அதில் இருந்தது.
"டேய் போடா..." என்ற இளையவன், கைப்பேசியை எடுத்து அன்னை கையில் ஒப்படைத்து, வெற்றி புன்னகையோடு தமையனிடம், "இந்த நாளுக்காக நான் எவ்ளோ மாசம் தெரியுமா வெயிட் பண்றேன்?" ஜெயந்த் முகம் எங்கும் ஆனந்தம் கூத்தாடியது.
அன்னையிடம் தாவி, "பாருங்க ம்மா, மூணு மாசம் முன்னாடி லண்டன்க்கு நீங்க வர்றேன்னு சொல்லியும், கேக்காம கழட்டிவிட்டு தனியா போனான்ல. அப்போ அந்த பொண்ணு கூடதான் போயிருக்கான். பாருங்க, ஒரே நாள் போஸ்ட் பண்ணிருக்காங்க, ஒரே இடம். இதுல டிரஸ் கோட் வேற...
அப்புறம் இது அந்த பொண்ணு பர்த்டே பார்ட்டில எடுத்தது. இது அந்த பொண்ணோட அம்மா ஒரு பொட்டிக் ஸ்டார்ட் பண்ணதுக்கு, அழையா விருந்தாளியா போய் பப்ளிசிட்டி பண்ணிட்டு வந்துருக்கான் உங்க மகன்."
மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே சென்ற சகோதரனின் வாயினைத் தாவி அடைத்தவன், அவனை அப்படியே சோபாவின் பின்னிருந்து இழுத்து சோபாவில் போட, அதற்கு மேல் தன்னுடைய நாரதர் வேலையை செய்ய முடியாமல் போனது ஜெயந்தால்.
ஆனால் அன்னையிடம் மாட்டிக்கொண்டானே... அரசல் புரசலாக தகவல்கள் காதில் விழுந்தாலும், மகன் தன்னை மீறி எதுவும் செய்திட மாட்டான். தன்னுடைய விருப்பத்தை அறிந்து செயலாற்றுவான் என்கிற நம்பிக்கை, அதிகமிருந்தது அன்னைக்கு.
சகோதரனை அடக்கி அன்னையைப் பார்த்த அஸ்வினுக்கு இன்று ஒரு பெரிய கச்சேரியே உள்ளதென தெரிந்துவிட்டது.
"எத்தனை நாள் நடக்குது அஸ்வின் இது?"
"ஒரு வருசமா..." தனக்கு பதிலாக, பதில் கொடுத்த சகோதரனை பார்த்து, "பிசினஸ்மேன் மாதிரி கொஞ்சமாவது நடந்துக்கோடா." பாவமாக கெஞ்சினான் அஸ்வின்.
"அவனை என்னடா திட்டுற? உன்னை கிரிக்கெட்டுக்கு அனுப்புறப்பவே என்ன சொன்னேன் நான்? இந்த காதல் கத்திரிக்காய் எதுவும் வேணாம்னு தானே கண்டிஷன் போட்டேன். அதை தவிர உன்னை ஏதாவது சொல்லிருப்பேனா? உன் படிப்பு, நம்ம பிஸ்னஸ்னு எதுவுமே எனக்கு பெருசா படல, உன்னோட லட்சியத்துக்கு முன்னாடி."
"மதி போதுமே, அந்த பொண்ணுகிட்ட பேசி பாக்குறீங்களா? நல்ல பொண்ணு மதி."
இத்தனை பேசியும் கேட்காத மகனை தீயாய் முறைத்தார், "சரி உனக்கு வேணும்ல, நீ அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா நான் வர மாட்டேன் உன் கல்யாணத்துக்கோ, உன் வீட்டுக்கோ. உன் அப்பா, தம்பி யாரையும் தடுக்கவும் மாட்டேன்." ஏதோ போல் பேசி செல்லும் அன்னையைப் பிடித்து மீண்டும் அருகில் அமர்த்தினான்.
"என்ன ம்மா இது பிடிவாதம்?"
"யாருடா பிடிவாதம் பிடிக்கிறது நீயா, நானா? என்னை விட நீ லவ் பண்ற பொண்ணு தான் முக்கியமா போச்சா உனக்கு?"
"உங்கள லண்டன்க்கு போறப்போ விட்டுட்டு போனப்பவே தெரிஞ்சிருக்கணுமே..." கிடைத்த இடைவெளியில் ஒரு ரயிலையே ஓட்டினான் ஜெயந்த்.
"சும்மா தான் இரேன்டா..."
சகோதரனை திட்டி அன்னையிடம், "ம்மா, லவ் வரைக்கும் எல்லாம் போகலமா. புடிச்சிருக்கு, அந்த பொண்ணை. எனக்கு செட் ஆவானு தோனுது. அவ அப்பா பெரிய பாலிவுட் ஸ்டார். ஆனா அந்த பந்தா எதுவும் இல்லாம அடக்கமா தான்மா இருப்பா."
மதி, "லவ் இல்லனா... என்ன அர்த்தம்?"
"லவ்... லவ் இல்ல, இன்ட்ரஸ்ட் ம்மா. வேவ்லென்த் மேட்ச் ஆகி லவ்க்கு ப்ராசஸ் பண்ணிட்டு இருக்கோம்."
நாகரிகம், நவீனம் என வளர்ந்திருந்தாலும், பிள்ளைகள் என வரும் பொழுது இந்திய தாய்மார்கள் இருபது வருடங்கள் பின்னோக்கி பயணித்து விடுகின்றனர்.
அதனாலே தயங்கி பயந்துதான் உண்மை நிலவரத்தை மறைக்காமல் கூறிவிட்டான். கோவம் அப்பிக் கிடந்த முகத்தில் இப்பொழுது இன்னதென்று கூற முடியாத நிம்மதி.
மகனை விட துள்ளலான மனநிலை அன்னைக்கு வந்தது. சிரிப்போடு எழுந்தவர், "அப்போ இது செட் ஆகாது. நான் உனக்கு பொண்ணு பாக்குறேன், நீ போய் நிம்மதியா சென்ச்சுரி அடிச்சிட்டு வா."
"அடடே, வீட்டுல விஷேசமா?"
ஜெயந்த் ஆர்வமாக தலையை விட, அவனை தலையை அழுத்தி அன்னையை முறைத்தான் அஸ்வின், "என்ன இது கல்யாணம், பொண்ணுனு. என்னோட விருப்பம்னு ஒன்னு இருக்குமா."
"இருக்கட்டுமே, இதுவரை உன்னோட விருப்பம் தான் எல்லாமே. இந்த ஒரு விஷயம் என் சொல் பேச்சு கேட்டுதான் ஆகணும் நீ. எனக்கு தெரியும்டா, உன்னோட குணத்துக்கும் உயரத்துக்கும் எப்படிப்பட்ட பொண்ணு கொண்டு வரணும்னு..."
அங்கு நிற்காமல் எழுந்து சென்றவரை மகனின் ஆத்திர வார்த்தைகள் நிறுத்தியது. "பாருங்க, உங்க இஷ்டப்படி எப்படி வேணாலும் பொண்ணு பாருங்க. நான் கல்யாணம் பண்ண மாட்டேன். அதையும் மீறி நீங்க சொல்றதை தான் செய்யணும்னா, உங்கள எப்படி அவாய்ட் பண்ணணுமோ, அப்டி கண்டிப்பா பண்ணுவேன். அது, இந்த வீட்டு பக்கம் தலை காட்டாம தான் நடக்கும்னா, அதுக்கும் நான் ரெடிதான்."
தட்டை தரையில் பறக்க வீசி இருந்தவன், அதே கோவத்தோடு வீட்டை விட்டு வெளியேறியது அவன் வாகனம் செல்லும் சத்தத்தில், உள்ளே இருந்த அன்னைக்கே கேட்டது. என்றும் அன்னையிடம் அதிகம் கோவத்தைக் காட்டாமல் இருப்பவனின் இந்த அதீத ஆத்திரமான செயல், அங்கிருந்த இளையவனை வாயடைக்க செய்திருக்க, மதிவர்தினிக்கோ தன்னுடைய புதல்வன், தன்னுடைய கைகளில் இருந்து நழுவுவது போல் மனம் கனத்தது.
அன்னையின் வாடிய முகத்தைப் பார்த்து அவர் தோள் தொட்ட ஜெயந்த், "அவன் ஏதோ கோவத்துல பேசிட்டான் ம்மா."
"பயமா இருக்குடா. லவ் இல்ல, வெறும் ஆசைனு சொல்றப்பவே, இவன் இவ்ளோ கோவப்படுறான். இதுல ரொம்ப முத்த விட்டுட்டா எப்படி நடந்துப்பானோனு தெரியலடா." முகம் எல்லாம் வியர்த்து நின்ற அன்னையை, அமர வைத்து தண்ணீரைக் கொடுத்தான் ஜெயந்த்.
"அவன் விருப்பபடி விடுங்களேன்மா. அந்த பொண்ணும் நல்ல பொண்ணு தான். என்ன, நம்ம கல்ச்சர் இருக்காது. அவன் விருப்பப்படி விடுங்கம்மா." சகோதரனின் பிடிவாதம் பார்த்து, அன்னையின் மனதை சற்று கரைக்க முயன்றான்.
"உனக்கு தெரியாதா ஜெயந்த், அவனை பத்தி? அவன் காலேஜ் படிக்காம ஓடி வந்த முக்கியமான ரீசன் கிரிக்கெட்னு நினைக்கிறியா? நார்த் இந்தியன் கல்ச்சர் செட் ஆகல, சாப்பாடு பிடிக்கலனு தான் ஓடி வந்ததே. கிரிக்கெட் எல்லாம் ஒரு சாக்கு.
அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு கிரிக்கெட் மேல ரொம்ப விருப்பம் வந்ததே. ரெண்டு வருஷம் தாக்கு பிடிக்காதவன், எப்படிடா லைஃப் லாங் இருப்பான்? மேலோட்டமா பாத்துட்டு பிடிச்சிருக்குனு தொங்குறான் உன் அண்ணன். அவதான் வேணும்னு என் கண்ண பாத்து சொல்லலடா அவன்.
அங்கையே வீக்னஸ் அடிக்கிதா? இதுல வீட்டுக்கே வர மாட்டானாமே. இருக்கட்டும், இருக்கட்டும்... நான் பாத்து கட்டி வைக்கிற பொண்ணு பின்னாடி நாயா சுத்த போறான் பார். அன்னைக்கு வச்சுக்குறேன், அவனை..." சபதமெடுத்து அறைக்குள் முடங்கிக்கொண்டார் மதி.
இங்கு அன்னையிடம் பேசியதை எண்ணி எண்ணி உறக்கம் தூரம் போனது அஸ்வினுக்கு. இரவெல்லாம் கண் விழித்து விடியலில் உறக்கம் தழுவ, அவன் காலை பொழுது புலர்ந்ததே எட்டு மணிக்கு தான்.
எழுந்ததும் நேரத்தைப் பார்த்தவன் அரக்க பறக்க வீட்டை விட்டு மைதானம் நோக்கி விரைந்தான். செல்லும் வழியில் தான் கைப்பேசியை வீட்டில் மறந்துவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது.
அடுத்த வாரம் இந்தியா, இங்கிலாந்து அணியினருக்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்த இந்திய அணியும் இன்று முதல், பயிற்சியை துவங்க உள்ளது. காலை பத்து மணிக்கு மைதானம் வந்தடைய வேண்டும் என்கிற, இந்திய பயிற்சியாளரின் கட்டளையை நிறைவேற்ற ஓடினான்.
சோதனைக்கென்றே பாலத்தில் சென்ற அவனது வாகனம் திடீரென நின்றுவிட ஐயோ என்றானது.
ஊரின் மத்தியில் நின்றுவிட்டது. இறங்கி வாகனத்தில் என்ன கோளாறு என்பதை கூட கவனிக்க முடியவில்லை. எந்த பக்கம் பார்த்தாலும் ஜன கூட்டம், வாகன நெரிசல் தான்.
இப்பொழுது கீழே இறங்கினால் அவ்வளவு தான், அவனே ஒரு பிரளயத்தை உருவாக்கிவிடுவான். அருகில் கார்ட்ஸ் நான்கு, ஐந்து பேர் இருந்தாலே ரசிகர்களின் பாச பிணைப்பிலிருந்து வெளிவர சிரமமாக இருக்கும். இதில் தனியாக வெளியே வந்தால்? ம்ஹூம்... சரி வராது.
மக்கள் நெரிசலில் சூழ்ந்து மாட்டிக்கொள்ள விரும்பாமல், விழித்துக்கொண்டு ஸ்டியரிங் வீலிலே படுத்துக்கொண்டான். மூளை பல்வேறு விதமாக சிந்தனையை செய்துகொண்டிருந்தது.
'பரவாயில்லை, சுற்றி வரும் மக்களை சமாளித்து ஒரு ஆட்டோவை பிடித்து சென்றிடலாமா?' என கண்ணாடி வழியே திரும்பி பார்த்தான். செல்லும் வாகனங்களில் ஒரு சில மட்டுமே ஆட்டோக்கள், அல்லது அவையும் ஆட்களை சுமந்து செல்ல செய்வதறியாது தடுமாறினான். நேரம் வேறு கடந்துகொண்டே செல்கிறது.
எத்தனை அழைப்புகள் தன்னுடைய கைப்பேசிக்கு வந்தனவோ என்கிற யோசனை, அவனை மொத்தமாய் மூழ்கடித்திருக்க, அவனது ஜன்னல் தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். அங்கு நின்றதோ ஒரு பெண்.
முகத்தை அவளது ஹெல்மெட் மூடியிருக்க, கண்களில் விஷம புன்னகை தெரிந்ததோ? அஸ்வினுக்கு பயம், பொதுமக்கள் தன்னை அறிந்துகொண்டனரோ என்று.
நிச்சயம் அந்த கருப்பு கண்ணாடியைத் தாண்டி அவன் முகம் வெளியில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, என்ன இது? அவன் யோசனை முடியும் முன்பே, அந்த பெண் தன்னுடைய கைப்பேசியில் ஏதோ எழுதி அந்த கண்ணாடியை ஒட்டி வைத்தாள். சற்று நெருங்கி வந்து உற்று பார்த்தான்.
'யோவ் கிரிக்கெட்டரே... நீ என்னயா இங்க?' என இருந்த எழுத்துகளைப் பார்த்ததும் தான், அது யார் என்றே புரிந்தது. உண்மை தெரிந்த உடனே, "ஏய்... ஏய்... மரியாதை, மரியாதை..." பாவம், அவன் கத்துவது வெளியில் நிற்கும் அவளுக்கு சென்று சேரவே இல்லையே.
கதவைத் திறக்கவே சென்றுவிட்டான் சண்டையிட. ஆனால் உடனே சுற்றம் உணர்ந்து அமைதியாகிவிட, அடுத்த செய்தியை நீட்டினாள். 'என்ன, திருட்டு பூனை மாதிரி ஒளிஞ்சிட்டு நிக்கிறிங்க? கதவைத் திறக்கல, நீங்க தான்னு ஊருக்கே சொல்லிடுவேன்.' பச்சையாக மிரட்டி வந்த மிரட்டல், கச்சிதமாக வேலை செய்தது ஆணிடம்.
இவளுடைய கைப்பேசியை வாங்கியாவது எவரிடமாவது தகவலைக் கூறிவிடலாம் என்றெண்ணியவன், வேறு வழியே இல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்து கூலர்ஸ் அணிந்து சிறிதளவே கண்ணாடியைத் திறந்தான்.
அவனைப் பார்த்ததும் கேலி சிரிப்பு ஆரோஹி முகத்தில் உருவாக, "அட நம்ம அய்யாசாமி!" கை தட்டி சொன்னவளைப் பார்த்து முறைத்தான்.
"என்ன சார் திட்டுறீங்களோ?" பெண்ணவள் இழுக்க, "திட்டிட்டாலும்..." அவனும் இழுத்து நிறுத்தினான், கண்களை மட்டும் அவள் முகத்திலிருந்து எடுக்க முடியாமல்.
ஏதோ அந்த முகத்தில், அந்த கண்ணில் சொல்ல முடியாத உணர்வு இருந்தது. அது என்ன, என்ன என அலசி ஆராயும் நிலையில் அவன் நேரமும் காலமும், இல்லையென்றாலும் ஆராய்ந்தான். ஆராய்ந்துகொண்டே இருந்தான். நின்றபாடில்லை அவன் ஆராய்ச்சி.
தேடினேன என தொடங்கிய பயணம் தொலைந்தேன் என்னும் நிலையில் தான் அந்த கருவிழிகளுக்குள் சிக்கிவிட புரிந்த நொடி, சட்டென கண் சிமிட்டி மீண்டு வந்தான்.
"என்னாச்சு வண்டிக்கு?"
"இது என் வண்டினு உனக்கு எப்படி தெரியும்?" அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டு நின்றான்.
"அதான் அன்னைக்கு பாத்தேனே... நைட்டுக்கும் வண்டிக்கும் வித்தியாசமே தெரியாம மறைஞ்சு நின்னுச்சே இந்த இருட்டுக்குட்டி." வஞ்சப்புகழ்ச்சி பாடியவள் கண்கள், அந்த இருட்டுக் குட்டியை ரசித்துக் கொண்டிருந்தது.
ஏனோ வாகனங்கள் என்றால் அவளுக்கு அத்தனை பிடித்தமாய் உள்ளது. அதிலும் கருப்பு நிறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். கண் சிமிட்டாது பார்ப்பவள் மனம், அதனைப் பிடித்து குழந்தையின் கன்னத்தைக் கொஞ்சுவது போல் கொஞ்ச தோன்றும்.
"ஏன்மா, அவன் அவன் இருக்குற பிரச்சனைல நீ வேற. போ ம்மா..." சலிப்போடு கண்ணாடியை அவன் மூடிவிட, மீண்டும் தட்டி திறக்க வைத்தாள் பெண்.
"அப்டி என்ன பிரச்சனை?"
"வண்டி ஸ்டார்ட் ஆகல என் தெய்வமே. மொபைலும் வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்." விடுவதாக இல்லை அவள் என்றறிந்தவன், அவளிடமே உதவி கேட்கலாமா என்ற எண்ணத்தோடு பார்க்க, பெண்ணுக்கும் புரிந்து போனது.
"இது பீக் ஹவர், வண்டி எதுவும் அவ்ளோ சீக்கிரம் ஃப்ரீயா வராது. பேசாமா வரிங்களா, நான் ட்ராப் பண்றேன்?"
சிரிப்போடு ஆசையாக கேட்டவள், வாகனத்தின் முன்னால் தள்ளி அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்தாள். தலையில் அடித்துக் கொள்ளலாம் என தோன்றியது அஸ்வினுக்கு.
"இப்டி வந்தா ஊருக்கே நான் தான்னு தெரியும்."
"ஆமா இவரு பெரிய அப்பாடக்கர். இவர் கண் அசைவுல ஊரே இவர் பக்கம் வந்து நிக்கும். ஹெல்மட் போட்டுக்கோங்க கிரிக்கெட்டரே..."
தன்னுடைய தலையில் இருந்த ஹெல்மட்டை சுட்டிக்காட்டும் வகையில், தலையை தலையை ஆட்டி கூறினாள். அவளையும் அந்த ஹெல்மட்டையும் பார்த்தவன் பார்வை, அவள் வாகனத்தில் விழ மனம் சிரித்தது. சிரித்த மனதை கேலி செய்தபடியே விதி அவனை அதே வாகனத்தில் தான் கடத்தியிருந்தது.
பேரிடர் வரிசையில் துவங்கிய அவனது வாழ்க்கையின் நாட்களில், அந்த நாளும் ஒன்று. என்ன, எதிர்காலத்தில் நினைத்து பார்த்தால் அந்நாள் இனிமையை தளும்ப தளும்ப நிரம்பியிருக்க கூடும்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro