அலை - 2
"அய்யய்யோ...! யோவ் என்னயா பண்ணி வச்சிருக்க, என் செல்லத்தை?" தலைக்கு பின்னாலிருந்து கேட்ட அந்த அதீத கத்தலில், கையில் பட்ட அடியைக் கூட மறந்து அவன் திரும்பி பார்க்க, வந்த குரலுக்கும் அந்த முகத்திற்கும் சிறிதும் சம்மந்தமில்லை.
ஒரு வாரமாக காய்ச்சலில் வீழ்ந்திருந்தவள் இன்னும் முழுதாக உடல் தேறாமல் இருந்தாலும், மனம் அமைதியைத் தேட உடனே கிளம்பி வந்துவிட்டாள் ஆரோஹி. வந்த இடத்தில் அஸ்வின் சம்பவம் நிகழ்த்தியிருந்தான்.
"எக்ஸ்க்யூஸ் மீ?" என்றான் அதிர்ந்து.
தன்னை திரும்பி பார்த்த அந்த ஆணின் முகத்தைப் பார்த்ததும், அடுத்து திட்ட வந்த வார்த்தை மறந்து போனது. இவன்... இவனே தான்! அஸ்வின் நாராயண். மட்டைப்பந்து வீரர்.
இந்தியாவின் அதிக புகழ்பெற்ற மனிதர்களுள் ஒருவன். பல ரசிகர், ரசிகைகள் என வாழ்பவன். அவனை பற்றி, அவன் புகழ் பற்றி அறிந்தவள், அவன் ஆடும் ஆட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் மனம் நினைத்து கூத்தாடியது. தான் முதன்முதலில் இத்தனை நெருக்கத்தில் சந்திக்கும் ஒரு பிரபலம். அவன் தானா என ஆராய அவளுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.
தான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் தன்னையே கண் சிமிட்டாது பார்த்திருந்தவளை, தான் சந்திக்கும் ரசிகர்களில் ஒருவளாய் நினைத்தவன் இதழ்களின் ஓரம், சிறு புன்னகை உருவாக அதை பெண் கண்டுகொண்டாள்.
"என்ன எக்ஸ்க்யூஸ் மீ? ஆ? என்ன தைரியமிருந்தா என் திவியை தள்ளி விட்டிருப்பீங்க?"
நீ பார்க்கும் சராசரி பெண் அல்ல நான் என்பதாய், மூக்கு புடைக்க பேசியவளைப் புரியாமல் பார்த்தவன், எழுந்து நின்று மீண்டும் தங்கள் இருவரையும் சுற்றிப் பார்த்தான். அவள் கூறியது போல் எந்த திவியும் இல்லை. அப்பொழுது தான் புரிந்தது, அவள் குறிப்பிட்ட அந்த பெயர் அவளது வாகனம் என்று.
"தெரியாம மோதிட்டேன், சாரிங்க..." என்றான், அளவிற்கு அதிகமாகவே அடி வாங்கியிருந்த அந்த வாகனத்தைப் பார்த்து.
"யோவ் அறிவிருக்காயா உனக்கு? இது என்ன கிரிக்கெட் கிரௌண்டா, இப்டி விழுந்து விழுந்து வெளையாட?"
"ஹலோ, பாத்து பேசுங்க!" என்றான் கண்டிப்பாக அவளை முறைத்து.
"நீ பாத்து வந்தியா ய்யா? நான் எதுக்கு பாத்து பேசணும்?" எகிறிக்கொண்டு நின்றாள் ஆரோஹி அவனை நெருங்கி.
"அது ஒரு சின்ன ஆக்சிடென்ட். அதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போர் தேவையில்லை. அப்புறம், கொஞ்சம் நான் யார்னு தெரிஞ்சு பாத்து பேசுங்க, மரியாதை முக்கியம்." ஓர் அடி பின்னால் சென்றது அவன் கால்கள்.
"கிரிக்கெட்டர் தான? நல்லாவே தெரியும். அதுக்குன்னு யார் வண்டிய வேணாலும் தள்ளி விடலாமா? உங்க வண்டிய அடிச்சு ஒடைச்சு விட்டு சாரி சின்... ஹச்..."
பலமாக தும்மியவள் உடனே, "சாரி... சாரி..." தன்னுடைய கோபத்தையும் மறந்து அவனிடம் மன்னிப்பு கேட்டவள், அடுத்த நொடி மீண்டும், "ம், சின்ன ஆக்சிடென்ட்னு சொன்னா, நீங்க ஒத்துப்பிங்களா? ஒரு நிமிஷம்..." அவனை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினாள்.
அவன் அணிந்திருந்த டெனிம் ஷர்ட்டானது முதல் இரண்டு பொத்தான்கள் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக கிடந்தது. எந்நேரமும் செயற்கை குளிரூட்டியின் குளிர்ச்சியில் இருந்தவனுக்கு, இயற்கை தந்த இரவு காற்றை சுவாசிக்கும் ஆர்வம் பிறக்க, காரின் ஜன்னலை திறந்துவிட்டு வந்ததினால், தாறுமாறாக கலைந்திருந்த அவனது சிகையானது, வேறு விதமான கதையை பெண்ணுக்கு கூறியது.
"குடிச்சிருக்கீங்களா?" சந்தேகமாய் கேள்வி கேட்டவள், அவன் பதில் கொடுக்க கூட நேரம் வழங்கவில்லை. "அதான பாத்தேன், குடிச்சிருக்கீங்க." முடிவே எடுத்துவிட்டாள்.
"மைண்ட் யுவர் டங்க் மிஸ். நான் ட்ரின்க் பண்ணிருக்கேன்னு நீ பாத்தியா? இந்த ஓட்ட வண்டி மேல இடிச்சது தப்பு தான். அதுக்கு தானே நான் சாரி கேட்டேன். அதுக்கும் மேல பேசிட்டே இருக்க..." என்றான் இவனும் கோவமாக.
சரியாக கோர்வையாக கூட அவளால் ஒரு நிமிடம் தொடர்ந்து பேச முடியவில்லை. தொண்டை அடைத்து பேச்சும் திக்கியது தன்னை ஒரு வாரம் பிடித்து வைத்திருக்கும் ஜலதோஷம் செய்யும் செயலில். இதில் தம் கட்டி பேசும் பெண்ணை பார்த்து விசித்திரமாக இருந்தது அஸ்வினுக்கு.
"என்னது ஓட்ட வண்டியா? அந்த வண்டி எப்பேற்பட்ட வண்டி தெரியுமா? அதை நான் எப்படி பாத்துக்குறேன் தெரியுமா? ஒரு தூசி படாம பாத்துக்கிட்டா இப்டி அசால்ட்டா ஒடைச்சு வச்சு, என்ன என்னமோ பேசுறீங்க. இப்ப நான் ஆஃபீஸ் எப்படி போகுறது?
ரெண்டு பஸ் மாறி போகணும். அதுக்கே எனக்கு ஒரு நாளைக்கு குறைஞ்சது அம்பது ரூபாய் தேவைப்படும். இந்த வண்டிய நான் ஷெட்ல போய் நிறுத்துனா அந்தா இந்தானு ஒரு வாரம் இழுத்துடுவான். அதுவரை கஷ்டப்பட போறது யார், நான் தானே?" கோவம் அவன் மூக்கில் தெரிய, அதனை கட்டுப்படுத்த சிகையில் கை சரமாரியாக விளையாடியது.
"இப்ப நான் ஹாஸ்டல் டூ பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாப் டூ ஆஃபீஸ்னு நடந்தே போகணும். எனக்கென்ன உங்கள மாதிரி ரெண்டு, மூணு வண்டியா இருக்கு, ஒன்னு போனா இன்னொன்னு எடுக்க?"
"ஹலோ நிறுத்துறியா?" பொறுமை காற்றோடு காற்றாக பறந்தது அவனுக்கு. "உனக்கென்ன இப்ப?" இதெல்லாம் என்ன பெரிய விஷயம் என இருந்தது அவனுக்கு.
"என் வண்டிய நீங்க சரி பண்ணி தரணும்." உடனே தன்னுடைய கால் சட்டையிலிருந்து பண பையை எடுத்தவன், கொத்தாக பணத்தை அவள் முன்பு நீட்டினான், "வாங்கிக்கோ." என்று.
முகத்தை அஸ்டகோணலாக மாற்றியவள் மேலும் இடைவெளி உருவாக்கி அவனை முறைத்தாள்.
"இவ்ளோ பணத்தை வச்சு நான் என்ன புது வண்டியா வாங்க போறேன்? இதெல்லாம் எனக்கு வேணாம், என் வண்டிய ரிப்பேர் பண்ணி தாங்க." என்றாள் உறுதியாக அவனைப் பார்த்து.
"நான் என்ன மெக்கானிக்கா? பணத்தை வாங்கி நீயே ரிப்பேர் பண்ணிக்கோ."
"எனக்கு உங்க பணமெல்லாம் தேவையில்லை. மெக்கானிக்ட போனா அவன் ஓராயிரம் சொல்லுவான். நீங்கதான் பெரிய ஆள் ஆச்சே, எடுத்துட்டு போய் வேலை பாத்து அனுப்பி வைங்க." சாவியை அவன் முன்பு நீட்டினாள்.
"ஒரு நாயை காப்பாத்த இன்னொரு பேய்கிட்ட மாட்டிக்கிட்டேன்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், அவளை என்ன சமாதானம் செய்தும் அசரவில்லை ஆரோஹி.
உடும்பு பிடியாக சாவியை நீட்டியபடியே நிற்க, வேறு வழியில்லாமல் தன்னுடைய மெக்கானிக் ஒருவரை வரவழைத்து வாகனத்தைக் கொடுத்தனுப்பினான்.
இருவர் முகத்திலும் சோர்வின் சாயல் தாண்டவமாட, இருவராலும் அவ்விடத்தை விட்டு நகர முடியவில்லை. அஸ்வினை ஆரோஹி விடவில்லை. அவளை, அவள் ஆசை, அழகு வானம் விடவில்லை. அவள் வாகனத்தை எடுத்து சென்ற மெக்கானிக்கிடம், அத்தனை பத்திரம் கூறி அனுப்பி வைத்தாள்.
இதை எல்லாம் தூரத்தில் நின்று அமைதியாக பார்த்த அஸ்வினுக்கு எரிச்சலாக வந்தது. அவனுக்கு எங்கு தெரியும், அவளது ஒரே சொத்தின் அருமையும், அதன் மேல் அவள் கொண்ட பாசமும். அவள் தனக்காக தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் பொருள் அந்த வாகனம்.
கண் போல் காத்து வந்த வாகனத்தினை அந்நிலையில் பார்க்க கோவம் வரதான், நாயகனை முடிந்த மட்டும் திட்டிவிட்டாள்.
வாகனம் சென்றதும் அவளை நெருங்கி வந்தவன், "உன் நம்பர் தா, வண்டி ரெடியானதும் கால் பண்றேன்." கைப்பேசியை எடுத்து அவளைப் பார்த்தான் எண்ணுக்காக.
பெண்ணுக்கோ அதீத யோசனை. உடனே தன்னுடைய கம்பெனி விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள்.
"ப்ச்! இது என்ன உன் கம்பெனியா?" கேள்வி வந்தது எரிச்சலோடு.
"உங்கள நம்பி எப்படி நான் நம்பர் தர முடியும்? ஆஃபீஸ்ல வந்து வண்டிய விட சொல்லுங்க, பேர் ஆரோஹி."
"ஆமா, இவங்க இந்தியா பிரதமர். பேர் சொன்ன ஒடனே இவங்க முன்னாடி வண்டி நிக்கும்?"
வாய்க்குள்ளே முணுமுணுத்தாலும் அஸ்வின் வார்த்தை அவளுக்கு தெளிவாக கேட்க, பையை தோளில் வாகாக மாட்டி, "பேர் சொல்லி பாருங்க, அப்போ தெரியும் இந்த ஆரோஹி யார்னு..." கெத்தாக பேசியவள் நடை முற்றிலும் மாறாக இருந்தது.
எல்லையில்லா சோர்வு, உறக்கம், உடல் வலி என நடக்கவே கடினமாக தான் இருந்தது. ஆனால் இவ்விடத்தை விட்டு பேருந்து நிலையம் செல்லவே, குறைந்தது ஐந்து கிலோமீட்டர் ஆகும். அவளையும் அவள் சோர்ந்த நடையையும் பார்த்தவன் மனம் அதிகமாகவே இளகியது.
வாகனத்தை எடுத்து அவள் முன் நிறுத்தி, "பஸ் ஸ்டாப்ல விடுறேன், வண்டில ஏறு." என்றான் கதவைத் திறந்து வைத்து.
"நம்பரே தரல, இதுல நான் வருவேனா? என்ன கோபி இது?"
அவனைப் பார்த்து சிரித்தவள் மேலும் நடக்க, இம்முறை அவளைப் பிடித்து நிறுத்தி, பத்தே நிமிடத்தில் ஒரு டாக்ஸி பதிவு செய்து, அவளை அனுப்பி வைத்த பிறகுதான் இல்லம் திரும்பினான். இருவருக்கும் அந்த நீண்ட இரவுக்கு பிறகான தூக்கம் அதிகம் தேவைப்பட, வேறு சிந்தனை இல்லாமல் உடனே உறங்கியும் போயினர்.
***
மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் மேனேஜர் அறையில் நின்றிருந்த ஆரோஹி, சரமாரியாக திட்டு வாங்கி அசையாது நின்றவளைக் காக்கவே, கதவைத் தட்டி வந்தார் ப்யூன் ஒருவர்.
"சாரி சார்." மேனேஜரிடம் இடையிட்டதற்கு மன்னிப்பு வேண்டி, "ஆரோஹி மேடம், உங்களை பாக்க ஒருத்தர் கீழ வெயிட் பண்றாங்க."
"ம்ம்ஹ்ம்... வேலை செய்ற நேரமே கம்மி, இதுல விசிட்டர்ஸ் வேற... போ ம்மா..."
"ஓடிடுடா கைப்புள்ள..." மேனேஜர் காதில் கேட்கும்படியே அலறி, வெளியே ஓடிவிட்டாள் பெண் புறா.
"சார், ஏன் சார் இந்த பொண்ணு இப்டி இருக்காங்க? ஆஃபீஸ்க்கு கடைசியா வர்றதும் அவங்க தான், வேகமா போறதும் அவங்க தான்." என்றான் புரியாமல்.
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுல, அந்த பொண்ணு அப்படிப்பட்ட ரகம்." அவரது அந்த ஒரு சான்றிதழ், அந்த ப்யூனை வாயடைக்க வைத்துவிட்டது.
தப்பித்தோம், பிழைத்தோமென படிகளில் இறங்கி வந்தவள், அந்த பெரிய காம்ப்ளக்ஸை விட்டு வெளியே வர, அங்கு அவளது வாகனத்தைப் பார்த்து வாயடைத்து போனாள்.
கடந்த வருடம் புதிதாக வாங்கிய பொழுது இருந்த அதே மினுமினுப்பு அவள் வாகனத்திடம். நசுங்கி, அமுங்கி பல இடங்களில் சிராய்ப்பு வாங்கியிருந்த வாகனம் கண்ணாடியாய் பளபளத்தது.
பிளந்த வாயோடு வாகனத்தை இரண்டு முறை சுற்றி வந்தவள் அதை கொண்டு வந்த மனிதரிடம், "இது என்னோட வண்டி தானா?" என்றாள் அதிர்ச்சி விலகாமல்.
"நீங்கதான் ஆரோஹியா ம்மா?" அவர் கேள்விக்கு அவள், 'ஆமாம்' என தலையை ஆட்ட, "அப்போ இது உங்க வண்டிதான் ம்மா. அஸ்வின் சார்தான் உங்க கைல வண்டிய ஒப்படைச்சிட்டு வர சொன்னாங்க. எல்லாம் சரியா இருக்கானு பாத்துக்குறீங்களா ம்மா?" இன்னும் வியப்பிலிருந்து வெளிவராமல் இருப்பவளைப் பார்த்து சிரிப்போடு கேட்டார்.
"அங்கிள் நிஜமா இது என் வண்டி தானானு ஒரு தடவை செக் பண்றிங்களா?" பூவை வருடுவது போல் வாகனத்தின் மேனியை அவள் விரல்கள் வருடியது.
விரல்கள் தொடக்கத்தில் வாகனத்தின் மேல் படும்வரை தான் அவள் முயற்சி. அதன்பிறகு தானாக வழுக்கிக்கொண்டு சென்றது கைகள்.
அத்தனை வழுவழுப்பாக, சிறு கீறல் கூட கண்ணில் தெரியவில்லை. காதலில் விழுந்தால் கூட இத்தனை பிரகாசம் முகத்தில் ஜொலிக்குமா என தெரியவில்லை.
"சார் ஒப்படைச்சிட்டேன் சார்." இவளை பார்த்துக்கொண்டே அஸ்வினுக்கு அழைத்து தகவல் கொடுத்தார் அந்த மனிதர்.
"தாம் தூம்னு குதிக்கலையே?" என்ற கேள்விதான் முதலில் கேட்டான்.
"அந்த பொண்ணு அதோட வண்டி தானானு நம்பாம, சுத்தி சுத்தி பாத்துட்டு இருக்காங்க சார்." அந்த முகம் சிறிதளவே நினைவில் இருந்தாலும், அவர் கூறியதை கற்பனை செய்து சிரித்துவிட்டான்.
"கண்டுபுடிக்க கஷ்டமா எதுவும் இல்லையே?" அஸ்வின்
"இல்ல சார், பேர் சொன்ன ஒடனே அந்த பொண்ண கூட்டிட்டு வந்துட்டாங்க." அவள் அன்று கூறியதை நினைத்து, 'சவுண்ட் சரோஜா சொன்னது சரி தான் போல'. என்றெண்ணினான்.
"போன் குடுங்க, அவகிட்ட." கைப்பேசி அவள் கைகளுக்கு இடம் மாறியது.
"கிரிக்கெட்டரே நம்பர் ப்ளேட் மட்டும் மாத்தி, புது வண்டிய அனுப்பிட்டீங்களா? என்னம்மா மின்னுது!" கண்களை சிமிட்டி சிமிட்டி கனவிலிருந்து விழிக்க முயன்று தோற்றுப் போனாள்.
"என்னோட சேரிட்டில வண்டி எல்லாம் குடுக்க ஆரம்பிக்கல மேடம்." என்றவன் கேலி தான், அவளை நிஜ உலகிற்கு அழைத்தே வந்தது.
உதட்டை சுளித்து, "சரி, வண்டி வந்துடுச்சு. அந்த அண்ணாகிட்ட போன் கொடுக்குறேன்." காதினை விட்டு எடுக்க, அவனது ஹலோ மீண்டும் காதிற்கு கைப்பேசியை இழுத்துச் சென்றது.
"சொல்லுங்க கிரிக்கெட்டரே..." என்றாள் பொறுமையற்ற குரலில்.
"இல்ல, நீ தேங்க்ஸ் சொல்லுவியோனு நினைச்சேன்." என்றான் கேலியை விடாமல்.
"கடமையை செய்ய எதுக்கு நன்றி எல்லாம்?"
"எது, உன் வண்டிய சம்மந்தமே இல்லாத நான் ரிப்பேர் பண்ணி தர்றது என்னோட கடமையா?"
"அது என்ன, சம்மந்தமே இல்லனு அழுத்தி சொல்றிங்க? நேத்து கீழ தள்ளிவிட்டு உடைக்கிறப்போ தெரியலையா சார், என் வண்டிக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லனு..." அவளது நக்கலில், கேள்வி கேட்ட தன்னைக் கடிந்து இணைப்பைத் துண்டித்தான்.
வந்தவர், தான் கிளம்புவதாக கூற, அவரைத் தடுத்து அலுவலகம் சென்று விரைந்து வந்தவள் கையில், சிறு கவர் இருந்தது.
அதனை அவரிடம் கொடுத்து, "அவர்கிட்ட குடுத்துடுங்க அங்கிள்." என்றாள். அந்த கவரை தயக்கமாய் பார்த்திருந்தவர் அதனை வாங்க மறுக்க, "என்ன ம்மா இது?"
"மொய் கவர் அங்கிள், உங்க சார்ர்க்கு..." அவர் கையில் திணித்து ஓடிவிட்டாள் வேலையைக் கவனிக்க.
அதனை அப்படியே அஸ்வின் கையில் ஒப்படைத்தார் அந்த மனிதர். அவனின் கார் ஓட்டுநர் அவர். ஸ்டேடியத்திலிருந்து வீட்டிற்கு பயணிக்கும் இடைவெளியில் அவன் வசம் சென்றது.
"மொய் கவர்னு சொல்லுச்சு சார்." என்றார்.
அதனைக் கேட்டதுமே சிரித்துவிட்டான், "என்னது மொய்யா?" வாங்கி ஆர்வமாக பிரிக்க, கையிலிருந்து வாகனத்தில் விழுந்தது சில சில்லறைகள்.
சொன்னது உண்மையோ என ஒரு நிமிடம் விழித்தவன், கீழே விழுந்தவற்றை எடுக்க இரண்டு ஐந்து ரூபாய் இருந்தது. கவரில் இருநூறு ரூபாய் தாள் ஒன்றும், ஐம்பது ரூபாய் தாள் ஒன்றும், ஒரு டைரி மில்க் உடன் இருந்தது. அதனோடு சிறு காகிதம்.
அதில், 'தேங்க்ஸ் ஃபார் தி கேப் அண்ட் கிவ்விங் மை ஸ்கூட்டி சூன்' என்கிற சிறு செய்தி, அவசரத்தில் கிறுக்கியது என காட்டியது.
வலது கையில் காற்றில் ஆடிய பணமும், வாகனத்தின் குளிர்ச்சியில் சில்லிட்டிருந்த சாக்லேட்டும் அவன் நெற்றியில் புரண்ட சிகையை மெல்ல மெல்ல வருடியது.
'என்ன பெண் இவள்? பைத்தியமா!?' என்றெல்லாம் யோசித்து அவளை திட்டினாலும், இதழ்களின் ஓரத்தில் சிறு வற்றாத புன்னகையாகவும், மூளையின் நரம்புகளில் அவனையும் அறியாத சிறு எண்ணத் துளியாகவும், நின்றுகொண்டே தன்னுடைய தடயத்தைப் பதிக்க துவங்கினாள்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro