அலை - 17
நண்பகல் வெயில் சுட்டெரிக்க அந்த பால்கனியிலும் வெய்யோனின் கதிர்கள் எதற்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரகாசமாக ஒளிர்ந்தது.
"இன்னும் கொஞ்சம் மேலே ஏத்துங்க" தற்காலிக தீர்வுகாண அஸ்வின் ஒரு தார்பாய் கொண்டு அவ்விடத்தை மூடும் முயற்சியிலிருக்க மனைவி அவனுக்கு வழிகாட்டினாள்.
சரியாக வெயில் மறைந்ததை பார்த்து இறுக்கமான முடிச்சிட்டு அஸ்வின் கீழே இறங்கி அவனோடு இணைந்து அந்த மடக்கு ஏணியை உள்ளே ஓரமாக வைத்து வந்தான்.
அதற்குள் ஆரோஹி அவ்விடத்தினில் சிறிய மெத்தை விரித்து அதற்கு மேல் இரண்டு போர்வை, தலையணை வைத்து காத்திருக்க, அஸ்வின் இருவருக்கும் ஏதுவாக ஏர் கூலர் ஒன்றை அவர்களுக்கு காற்று வரும்படி பொருத்தி வந்து மனைவியருகே படுத்தான்.
வீடே குட்டி உறக்கத்திலிருக்க, இந்த இருவருக்கும் உறக்கம் வரவில்லை. மெத்தையில் அமர்ந்து பேசவும் தோன்றாமல் போக, மனைவி கேட்டதன் பேரில் இந்த சிறு அலங்காரம் அந்த உப்பரிகைக்கு.
"நல்லா இருக்கு ஆரு" தலைக்கு மேல் இரண்டு கையையும் வைத்து படுத்தான்.
"ம்ம்" சிரிப்போடு எழுந்தவள் ஏர் கூலரின் வேகத்தை கொஞ்சம் குறைத்து அவனது கைகளில் தலையை வைத்து படுத்தாள்.
சிரித்தான், "ஏர் கூலர் ஒரு சாக்கா?" என்று.
கண்டுபிடித்துவிட்டான் என மெல்ல அவன் மார்பினில் தலையை வைத்து முட்டினாள்.
"யாரு கிரிக்கெட்டரே உங்கள பத்தி அப்டி நியூஸ் சொன்னது?"
"யவ்னி கூட்டம் தான். அவளுக்கு நல்லது செய்றேன்னு ஏதாவது ஒரு கிறுக்கு வேலைய பாத்துடுறாங்க" என்றான் மனைவியை வாகாக கைகளில் இடம் மாற்றி.
"அவ்ளோ லவ் போல உங்க மேல" கேலியாக அவனை பார்த்து வளைந்தது அவள் இதழ்கள் ஓரம்.
"ரொம்ப லவ் போ. உண்மையான லவ், நாம லவ் பண்றவங்களோட நல்லதை மட்டும் தான் யோசிக்கும். அவளே அமைதியா இருந்தாலும் சுத்தி இருக்குறவங்க சரியில்ல. எல்லாம் ஓவர் ஆகிடுச்சு இனி அந்த பேச்சு வேணாம்" என்றான்.
"உங்க ஃப்ரண்ட்ஸ், டீம் மேட்ஸ் கிட்ட என்ன சொல்லி சமாளிச்சீங்க?"
"அவுங்களுக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு பார்ட்டில அவ என் கூட கொஞ்சம் கிளோஸா வந்து நின்னது கோவம் வந்துடுச்சு, சோ எல்லார் முன்னாடியும் நம்ம கல்யாணம் பத்தி சொல்ல வேண்டியதா போய்டுச்சு"
அவன் முகத்தை பார்த்து முறைத்து, "அப்டி என்ன கோவம்? உங்களுக்கு கோவமே வராதுன்னு திவ்யா நம்பிட்டு இருக்கா"
அஸ்வின், "அர்த்தம், காரணம் இல்லாம வந்தா தான் தப்பு. காட்ட வேண்டிய இடத்துல எமோஷன்ஸ் காட்டலனா நமக்கு மதிப்பே இல்லாம போய்டும்"
அவள் நாடி வருடி கூறியவன் கையை தட்டிவிட்டு, "என்னமோ போங்க. எனக்கு இன்னைக்கு கிடைச்ச மாதிரி திடீர் அட்டென்ஷன் எல்லாம் சுத்தமா புடிக்கல"
"ஏன்? யாரும் எதுவும் சொன்னாங்களா?"
"இல்ல... ஸ்கேன் பண்றங்க கிரிக்கெட்டரே. டாப் டு பாட்டம் மொத்தமா ஸ்கேன் பன்றாங்க. உங்களுக்கு ஏத்த பேர் தானா நான்னு பாக்கறீங்களா இல்ல உங்க ரேஞ்க்கு நான் இருக்கேனான்னு பாக்குறாங்க. ஒரு ஆண்ட்டி நகத்தை பாத்து என்ன இதுனு கேக்குறாங்க"
அவள் நகத்தை அவனிடம் நீட்டினாள். அழகாக துளியும் வளர்த்திருக்காமல் ஓட்ட நறுக்கியிருந்தாள். நீட்டிய அவள் கையை பற்றிகொண்டவன் விரல்கள் அவள் விரல்கள் ஒவ்வொன்றையும் வருடியது.
"நகத்தை வெட்டி சுத்தமா வச்சிருக்கணும்னு தானே சொல்லுவாங்க, இவங்க என்ன வளக்காம விட்டதுக்கு ஏதோ ஜந்துவை பாக்குற மாதிரி பாக்குறாங்க" அவள் முக பாவனையை பார்த்து வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.
"ஆமா உங்க பங்குக்கு நீங்களும் சிரிங்க" அழுத்துக்கொண்டவளுக்கு அவர்களை பற்றி குறை கூற ஓராயிரம் இருந்தது.
அத்தனையையும் கூறி முடித்தாள் கணவனிடம். அவளது குற்றசாட்டுகளை கூறுவது குழந்தை பள்ளி முடித்து வந்து கதை கூறுவது போல் சுவாரஸ்யமாக தான் இருந்தது அவனுக்கும்.
"குடும்பம் நடத்த குணம் இருக்கா, அறிவிருக்கா, பொறுப்பிருக்கானு பாக்குறத விட்டு... நகம் இருக்கா, பல்லு லைனா இருக்கா, இடுப்பு தெரியிற மாதிரி புடவை கட்டிருக்கேனா, ஊசி மாதிரி ஹீல்ஸ் போட்ருக்கேனான்னு பாக்குறாங்க.
இவங்க ஃப்ரண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ண சொல்லுங்க ஆண்ட்டிய. அதை விட ஒரு அம்மா பேங்க்ல எத்தனை சி வச்சிருப்பேன்னு கேக்குது. ஏன் எனக்கு சாப்பாடு நீங்க போட மாட்டிங்களா, இல்ல நான் பேப்பர் கேன்சல் பண்ணிட்டு ஆபீஸ் போகவா?"
"கண்டிப்பா பாத்துக்குவேன் ம்மா. நீ உன் இஷ்டபடியே இரு" வேகமாக பதில் கொடுத்தான் கணவன் மனைவியின் கோவத்தை பார்த்து.
'இவர்கள் இப்படி தான் என அவளே சிறிது நாட்களில் புரிந்துகொள்வாள். என்ன கூறியும் மாறும் வகை அவர்கள் இல்லையே. இவளிடம் அதை கூறினாலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை' என அவன் அமைதியாக இருந்தான்.
"முடிய வெட்ட சொல்றாங்க கிரிக்கெட்டரே... உங்களுக்கு புடிக்காதாமே இவ்ளோ முடி இருந்தா" கோவமாக பேசியவள் குரல் உடனே இறங்கி கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.
"என்ன ஆரு இது" மனைவியின் கன்னத்தை ஆதூரமாக வருடியவன் விறல் அவள் கண்ணீரை துடைத்தது,
"கல்யாணம் பண்ணிட்டா ஒருத்தருக்காக ஒருத்தர் சில விஷயங்களை தியாகம் பண்ணிட்டு இருக்கலாம். அது நல்லது தான், ஸ்ட்ராங் ரிலேஷன்க்கு ரொம்ப முக்கியமும் கூட.
ஆனா தன்னோட அடையாளத்தையே மாத்திட்டு அடுத்தவங்களுக்காக வாழணும்னு நினைக்கிறது சாக்ரிபைஸ் இல்ல. முட்டாள்தனத்தோட உச்சக்கட்டம், ஆதிக்கத்தோட அழுத்தமான நிலை"
"அப்போ இப்டியே இருக்கட்டும் சொல்றிங்களா?"
"இப்டியே இருக்க சொல்லல உனக்கு புடிச்ச மாதிரியே இருக்க சொல்றேன்" என்றான் அஸ்வின்.
அஸ்வினை குறுகுறுவென பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து, "போயா நாயாரானா... நீ க்யூட் போ" இது பாராட்டா திட்டா என தெரியாமலே அஸ்வின் உல்லாசமாக மார்பினில் படுத்துக்கிடந்தவளை பார்த்து சிரித்தான்.
"முக்கியமான விஷயம் பேசணும், டீம் மேட்ஸ் எல்லாம் உன்ன இன்றோ குடுக்க சொல்றாங்க. ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ண போறேன். உனக்கு ஓகே தானே?" சிறிது யோசித்தவள் மறுப்பு தெரிவிக்காமல் சரி என்றாள்.
"என்ன டிரஸ் பண்ண போற ஐடியா?"
"கவுன் போடவா?"
"கவுன் வேணாம்டா சாரீ கட்டுறியா?"
"இது என்ன வீட்டு பங்க்ஷனா பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வைக்க?"
அஸ்வின், "யார் பட்டு புடவை சொன்னாங்க?" கைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை தேடி அவள்முன்பு நீட்டினான்.
அதனை பார்த்தவள் அஸ்வினை முறைத்ததோடு நிறுத்தாமல், "யோவ் போயா" வெட்கத்தை அந்த கோவத்தினுள் அவள் ஒழித்து வைத்ததை கணவன் அவன் கண்டுகொண்டான்.
"என்ன போயா? இந்த ட்ரேஸ்க்கு என்ன குறை?" அவனை பொறுத்த வரை அந்த உடை அத்தனை அழகாய் இருந்தது.
என்ன கொஞ்சம் கண்ணாடியாய் இருந்தது. ஆனால் அவளுக்கு தகுந்தாற் போல் உடையை வடிவமைக்க அவன் கையில் தான் ஆள் உள்ளதே.
"என்ன குறையா? எதுவுமே இல்ல அதுல. புள் நெட் க்ளாத், என் உடம்புக்கு தொப்பை எல்லாம் அசிங்கமா தெரியும்" நிதர்சனத்தை உரைத்தவள் வேகத்தில் என்ன பேசினோம் என்றே கவனிக்கவில்லை.
'அப்படியா?' என கேள்வியாக பார்த்தவன் கண்களுக்கு தலை அசைத்து பதில் கொடுத்தாள்.
அஸ்வின் இடது கையோ அவளது இடுப்பிற்கு புலம்பெயர்ந்து, "நாராயணா" அவனது திடீர் செயல் கூச்சத்தை கொடுக்க கைகளுக்கு தடை விதித்து சிணுங்கினாள்.
"கொஞ்ச நேரம் முன்னாடி பாத்தேனே அப்டி எதுவும் தெரியலயே"
"இல்ல இருக்கு" குரலில் சுதி இறங்கி ஒலித்தது பெண்ணுக்கு.
"எங்க கை எடு பாக்கலாம்" தன்னுடைய கையை இறுக்கமாக பற்றியிருக்கும் அவள் கைகளை எடுத்து இலக்கை அடைய அவனுக்கு எத்தனை நொடிகள் ஆகிவிட போகிறது, அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் பிறகு அவளிடம் தன்னுடைய தேடலை தேட முடிவெடுத்திருந்தான்.
"ஏய் பொறுக்கி பையா கை எடுடா" வேகமாக அவன் கையில் அடித்து கணவனுக்கு மினி ஷாக் கொடுத்தாள் வார்த்தைகள் கொண்டு.
"என்னடா பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட?"
ஆரோஹி, "பின்ன கை ரொம்ப சேட்டை பண்ணுதே"
அஸ்வின், "பாவம்ல அதுவும்"
ஆரோஹி, "என்ன பாவம், ஒன்றை மாசமாச்சு பாத்து, கால் பண்றப்போலாம் ஆசையா பேசல, நேர்ல வந்தா மட்டும் கட்டிபுடிக்கிறதென்ன முத்தம் குடுக்குறதென்ன. அப்போ நான் பாவமில்லையா?"
அஸ்வின், "போன்ல அதெல்லாம் பண்ண முடியாதே ஆருமா"
ஆரோஹி, "பண்ணனும்னு நினைச்சா எப்படி வேணாலும் பண்ணலாம். உங்களுக்கு தான் ரொமான்ஸே வராதே, பேசி வேஸ்ட் தான்"
ஏதோ நினைவு வந்தவளாக, "ஆ... அது என்ன முத்தம் கொடுக்குறது மட்டும் இவ்ளோ டீப்பா, கொஞ்சம் கூட தயங்காம ப்லோவா போறீங்க" திருதிருவென விழித்தவன் பார்வையே அவனை போட்டுக்கொடுத்தது.
"உன்னோட கோவாப்ரெஷன் ஆரும்மா. நீ க்யூட்ல" அவள் நாடி பிடித்து வண்டி கணக்கில் ஐஸை மேலே கொட்டினான். "பொய். கிஸ் பண்ணிருக்கீங்க தானே?"
எல்லா பக்கமும் தலையைஅஸ்வினிடம் பெருத்த அமைதி மட்டுமே பதிலாய் கிடைத்தது, அதோடு அவள் முகத்தையே பார்க்காமல் குற்றஉணர்வோடு பேச்சையே நிறுத்திவிட்டான். அவனது அமைதியே அதிலிருந்த உண்மையை கூற, நடந்து முடிந்தவற்றை பிடித்து தொங்குவதில் அவளுக்கு விருப்பமில்லை.
"சரி நம்ம பேச்சுக்கு வருவோம், உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெண்டு டிரஸ் ச்சூஸ் பண்ணுவோம், எது பெட்டெரோ அதை பிக்ஸ் பண்ணிடலாம்" தானே ஆரமித்தது தானே அந்த பேச்சை அறுத்து நிறுத்தினாள், வேறு பேச்சை முன்னிறுத்தி.
"ஆரூ"
அஸ்வின் ஏதோ பேச வர அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள், "டிசைன் உங்க இஷ்டம். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு... ம்ம்ம்?" அவன் முகத்தை பார்த்து தலை அசைத்து ஆரோஹி கேட்க அவள் நம்பிக்கையில் அஸ்வின் தான் வாயடைத்து நிற்க வேண்டியதாகி போனது.
*****
அந்த பேருந்து நிறுத்தத்தில் வழக்கத்தை விட எக்குத்தப்பாக கூட்டம். நெற்றியின் வியர்வை வெயிலின் தாக்கத்தால் சூடாக கன்னத்தை நனைத்தது.
கைக்கு எட்டிய தூரத்தில் தான் அந்த சொகுசு வாகனம் நிற்கிறது, அத்துனுள்ளே அமர்ந்திருந்தாலும் இதே நிலை தான் அப்பொழுதுமென தெரிந்து தான் வெளியே நிற்கிறானோ என்னவோ.
அதிகமான வெயில் கூட இல்லை, மாலை வெயில் தான். குளிர்சாதன பேட்டியின் கீழே அமர்ந்திருந்தவனுக்கு இந்த சிறு வெப்பம் கூட தாளவில்லை.
உடலுக்கு வெளியே அடிக்கும் வெப்பத்தை விட மனதின் வெப்பம் அதிகமாக இருக்கிறதல்லவா?! அதற்கு காரணமானவளே வந்தாள். பழுப்பு நிற ஒரு சுடிதார். அதோடு அவள் அணிந்திருந்த சாம்பல் நிற துப்பட்டா சிறிதும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
அதுவே அவனை பார்த்தால் மாடல் போல் காட்சி தருபவன். எதிலும் நேர்த்தி பார்ப்பவனுக்கு இந்த பெண்ணை தான் பிடித்திருக்கிறது. விதி பிடிக்க வைத்துவிட்டது. ஏன், எப்படி என கேட்டால் அதற்கு ஒரு பெரிய கதையே கூறுவான்.
சித்தார்த் பார்வை அவள் முகத்திலே நிலைத்திருப்பதை எதார்த்தமாக பார்த்த ஜனனிக்கு தெரிந்துவிட, அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவனை கடந்து கூட்டமாக இருந்த பேருந்து நிறுத்தத்தின் ஒரு மூலையில் சென்று நின்றுகொண்டாள்.
அவனும் அவளை பின்தொடரவில்லை, விலகியே நின்றான். கூட்டம் செல்வதும் வருவதுமாக இருந்தது. அரைமணி நேரம் இருவரும் அவ்விடத்தை விட்டு அசைந்தபாடில்லை. அவளுக்கு அவளது பேருந்து வரவில்லை, அவனுக்கு அவள் பார்வைகிட்டவில்லை.
மெல்ல இருட்ட துவங்கிய பின்பு வந்து நின்றது அந்த பேருந்து. தாமதமாக வந்ததால் தாராளமாக மக்களை தன்னுள் அடக்கி எந்த பக்கம் கவிழ்வதென தெரியாமல் தட்டு தடுமாறி கீரிச்சிட்டு நின்றது.
அந்த பேருந்தை தலை தூக்கி பார்த்தவளுக்கு அந்த கூட்டம் பிரமிப்பாக தான் இருந்தது. கடந்த ஒரு மாதமாகவே இப்படி தான் கூட்டம், காரணம் ஏதோ பேருந்துகளை திசைமாற்றி விடுகின்றனராம்.
நேரத்திற்கு தான் பேருந்துகள் வருவதும் போவதும். இன்று ஹோட்டலில் வேலை அதிகம் என்பதால் இதற்கு முன்பு இருந்த பேருந்தை புடிக்க முடியாமல் போனது. இந்த பேருந்தை விட்டால் இன்னும் அரை மணி நேரமாகும்.
நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவள் பேருந்தை நோக்கி நடக்கும் பொழுதே வேகமாக ஓடி வந்து கை பிடித்து நிறுத்தினான், "எங்க போற, அடுத்த பஸ்ல போ ஜனனி"
அவன் கையை உதறி மேலும் முந்நீரினாள் சித்தார்த் பக்கம் பார்வையை கூட திருப்பாமல். அவளுக்கு அவன் மேல் கோவம், அவள் பிடித்து நிறுத்திய அந்த சில நொடிகள் இடைவேளையில் அவளை முந்தி பத்து பேர் முன்னேறிவிட்டனர்.
கூட்டத்தினுள் அடித்து பிடித்து ஏற தெரியாதவளை அந்த கூட்டமே முன்னே தள்ளி ஒருவழியாக பேருந்தினுள் ஏற்றிவிட அவளுக்காகவே அவனும் பேருந்தின் படிகளில் பயணிக்க வேண்டியிருந்தது.
கோட் அணிந்து படிகளில் தொங்கியே வந்தவனை வித்தியாசமாகவே பார்த்தனர். இதில் ஒரு ஆட்டோ அந்த பேருந்தை ஒட்டி உரசி வந்து, "எப்பா அந்த சட்டையை அவுத்து போடு ஓசில வூடு போய் சேத்துடுறேன்"
அவர்களையும் அந்த கூட்டத்தையும் கடந்து ஜனனி ஸ்ரீ இறங்கும் இடத்திற்கு வரவே அவனுக்கு மூச்சு முட்டிப்போனது. ஒரு பெரிய கூட்டம் இறங்க அதனோடு இறங்கு நடந்தவள் சற்று தனித்த பாதையில் நடக்கவும் நெருங்கி நடந்தான்.
"ஜனனி..." எந்த மாற்றமும் இல்லை.
அவள் போக்கில் அவள் நடந்தாள்.
"ஜனனி..." மீண்டும் சித்தார்த் அழைக்க இம்முறையும் பதில் இல்லை.
"ஸ்ரீ... இங்க பாருடி" இறைஞ்சுதலான குரலில் உருகி அழைத்தவன் உரிமை குரலா இல்லை அந்த ஸ்ரீ என்னும் அழைப்பா தெரியவில்லை அவனை திரும்பி தீயாய் முறைத்தாள்.
அழைப்பிலும் முறைப்பிலும் மட்டுமே முக்கால்வாசி காலம் ஓடிவிடுமோ என்கிற பயம் முதல்முறை அவனை அச்சுறுத்தியது.
எப்படி அழைத்தும் நிற்காமல் நடந்தவள் கை பிடித்து அங்கிருந்த சிறிய விநாயகர் கோவில் நோக்கி நடந்தான். அவன் கையை உதறி திமிறி நின்றவளை சிறிதும் சித்தார்த்தின் பிடி விளக்கவில்லை.
"நான் உள்ள வர கூடாது" அழுத்தமாக அவள் மறுக்க, எரிச்சலுற்றவன் வந்த ஒரு ஆட்டோவை மறித்து நிறுத்தி ஒரு உணவகத்தில் நிறுத்தினான்.
அவள் கையை பிடித்த சித்தார்த் கடைக்கு வந்த பிறகும் அவளை விடும் எண்ணமில்லை. பறவை போல பறந்து விடுவாளோ என்கிற பயம் அவனுக்கு.
அந்த பெண் பட்சிக்கு அவன் கைகளிலிருந்து பறந்து போக எத்தனை நேரம் பிடித்துவிட போகிறது, கடந்த ஒரு ஆண்டு காலமாக பின்னே பைத்தியமாக சுற்றும் இவன் பேச்சை இன்று ஒரு நாள் மட்டுமாவது கேட்டுக்கொள்ளலாம் என்கிற பரிதாபத்தில் அவனுக்கு செவிசாய்த்து நிக்கிறாள், அதற்காக அவன் கைகள் பிடித்து நிற்பது எரிச்சலை மூட்டியது.
"கைய எடுங்க" பற்கள் கடித்து வார்த்தையை துப்பினாள்.
"ப்ளீஸ்" பார்வையால் கெஞ்சினான்.
அவளுக்கு இளகிய மனம் இல்லாதது போல் முகத்தில் அத்தனை கோவத்தை காட்டினாள்.
மனமே இல்லாமல் விலகி அமர்ந்தவன், "ஏன் சென்னை விட்டு போற?" அவனை திரும்பி பார்த்தவள் கண்ணில் இதற்கும் கோவம் தான்.
"போறேன்னு தெரிஞ்சவருக்கு ஏன் போறேனும் தெரிஞ்சிருக்குமே" வசந்தத்தை மட்டுமே பார்த்த அவன் விழிகளில் அவள் கேள்வியின் தாக்கத்தில் நீர் நிறைந்தது.
இதழ் கடித்து தலை கவிழ்ந்தவன் மீண்டும் தலை உயர்த்தும் பொழுது சற்று தேறி தெரிந்தது.
"ஏன் இந்த அவசர கல்யாணம்? வீட்டுல கம்பெல் பண்றங்களா? நான் வந்து பேசவா?"
"எந்த உரிமைல வந்து பேசுவீங்க?" அவள் கேள்வியில் ஆடி தான் போனான் சித்தார்த்.
"சொல்லுங்க எந்த உரிமைல வந்து கேள்வி கேப்பிங்க? இத்தனை வருஷம் விதி என்ன குடுத்துச்சோ அதை தானே அனுபவிச்சிட்டு இருக்கேன், இப்ப திடீர்னு மாத்த ஏன் முயற்சி பண்றீங்க?" அவளுக்கு சுத்தமாக புரியவில்லை அவனது நடவடிக்கை.
இரண்டு வருடமாக இருந்த சுவடு தெரியாமல் மறைந்தவன் இப்பொழுது முன்னே அடிக்கடி காட்சி தருகிறான். இன்று இத்தனை உரிமையாய்... ம்ஹூம் புடிக்கவில்லை அவளுக்கு.
"ஏன்னா எல்லாமே தப்பா இருக்கு ஜனனி. கல்யாணம் பண்ண பாக்குறாங்க" உள்ளே கொதித்த கோவத்தை பிடித்து வைத்து பேசினான்.
ஜனனி, "தப்பு பத்தி நீங்க பேசுறது தான் எனக்கு வேடிக்கையா இருக்கு" எள்ளல் சிரிப்பு மாறவில்லை அவளிடம்.
"சரி நான் மட்டும் தான் தப்பு. அதுக்குன்னு உன்னோட ஆசை கனவு எல்லாம் புதைச்சு அரை கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா உன் வீட்டு ஆளுங்க, செகண்ட் மேரேஜ் ரெண்டு குழந்தைக்கு அப்பா." குரலின் சுதி தனித்திருந்தாலும் அவன் கண்ணில் அத்தனை காட்டம் தான்.
"எனக்கும் இது ரெண்டாவது கல்யாணம் தானே. தப்பில்லையே" அவளை இந்த திருமணம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல் அவள் பேசுவது அவன் ரசிக்கும்படி இல்லை.
"அவன் பொண்டாட்டி செத்து போய்ட்டா. உன் புருஷன் உயிரோட தானே இருக்கேன்" அவனது எந்த சூடு சொல்லும் அவளை சிறிதும் அசைக்கவில்லை.
கண்ணிலோ முகத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை, "உணர்ச்சியே இல்லாத மாதிரி இருக்காதாடி. கடுப்பாகுது" பற்களை கடித்து சிடுசிடுத்தான்.
"என் உணர்ச்சி எல்லாம் செத்து மூணு வருஷம் ஆச்சு" தலையில் கை வைத்து இமை மூடி வேதனைப்பட்டவன் சோகம் அவளை துளி கூட மாற்றவில்லை.
எவன் அவளுள் உணர்ச்சிகள் இருந்ததை உணர்த்தினானோ அவனே அதனை துடிக்க துடிக்க எரித்துவிட்டலவா சென்றுவிட்டான், பயிர் முளைக்கும் முன்பே கருகி போவதன் வலி அதனை நட்டவளுக்கல்லவா தெரியும்?!
"நான் உன் வீட்டுக்கு வந்து பேசுறேன் ஜனனி, அப்பா அம்மா கூட வர்றேன்"
அவள் முகத்தில் கசந்த புன்னகை, எழுந்து நின்றுவிட்டாள், "வாழ்க்கைல பரிதாப பிச்சை எடுத்து வாழ்ந்தே சாகணும்னு எனக்கு விதி இருந்தா யார் மாத்த முடியும்?" எத்தனை வேதனையை ஒரு புன்னகையில் வைத்து அவன் மீதே குண்டாய் வீசி சென்றுவிட்டாள்...
இல்லாத பாரமெல்லாம் அவள் சுமக்க, நிதம் முள் மேல் உறங்கினான் சித்தார்த். உண்மையான நிம்மதியான உறக்கம் கண்டு ஆண்டுகள் ஆகியது இருவரும்.
அவள் கூறுவது போல தான் அவனும் நடந்தது. பரிதாபத்தில் நடந்த திருமணம், ஆணவத்தால் அறுத்து எறியப்பட, இடையே துடித்து மடிந்தது அவள் மட்டுமே தான்.
கொஞ்சம் நொண்டி நடந்தவள் இதயத்தில் ஒரு போர்க்களமே நிகழ்ந்தது. ஆசைப்பட்ட ஒன்று காதலாகி போனது அவள் விதியின் சதி தான் போல. பரிதாபம் தானா என அவள் வாக்கியத்தின் உள்ளே ஒளிந்திருந்த மறை கேள்வி அவனுக்கு புரியாமலா இருக்கும்? ஆக எப்பொழுதும் இது பரிதாபமாக மட்டும் தான் இருக்கும் என அவனது அமைதியே கூறிவிட்டது.
*****
எத்தனை பெண்களை கடந்து வந்திருப்பான், இவளை விட அழகில் அறிவில், படிப்பில் எல்லாம் உயர்ந்தவர்களை பார்த்திருக்கிறான். பார்த்தாலே கண்களை அகற்ற விரும்பாமல் நெளிவு சுளிவுகளை காட்டி இழுக்கும் பெண்கள் அவர்கள்.
இவள் அவை எவற்றுக்கும் வேலை கொடுக்கவில்லை. மிக இறுக்கமாக இல்லாமல் எளிமையாக தான் அணிந்திருந்தாள். கருப்பு நிற டிசைனர் புடவை.
பூசினார் போல் இருந்த பொழுதே அழகு கூட்டி காட்டியது அவன் விழிகள், இப்பொழுது இன்னும் வசீகரித்தாள். நெட் பேப்ரிக் தான் புடவை முழுதும், முழுக்கை ரவிக்கை, கழுத்தில் வைர அட்டிகை ஒன்று.
அவளது அடர்ந்த நீல கூந்தல் இடை தாண்டி சுதந்திரமாக காற்றில் ஆட மூச்சு முட்டியது அஸ்வினுக்கு. மனைவி ரவிக்கையை தன்னுடைய உடலை மறைத்து சங்கட்டமாக போர்வையை போல் மேலே மேலே ப்லீட்ஸ் வைத்தது போல் நின்றாள்.
அவளை என்ன செய்வதென பார்த்த அந்த அழகு நிலைய பெண் வந்து உடையை சரி செய்துவிட்டு போக, "தேங்க்ஸ் ம்மா" அவளை அனுப்பி வைத்தவன் ஆரோஹி கை பிடித்து அறையுள்ளே இழுத்து சென்றான்.
"யோவ் நாராயணா" அவனது திடீர் இழுப்பிற்கு திணறி போனாள்.
ஆரோஹிக்கு இந்த உடை மிகவும் பிடித்து போனது, அவள் நினைத்தது போல் அத்தனை மோசமில்லை, அவள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க கூறியிருப்பான் போல, என்ன அந்த இடை தான் அப்பட்டமாக தெரிகிறது. உள்ளே மனைவியை இழுத்து நிறுத்தியவன் அங்கும் அங்கும் நடக்க, இவள் மீண்டும் கண்ணாடி முன்பு சென்று நின்றுகொண்டாள்.
"நல்லா இருக்கு கிரிக்கெட்டரே. நான் இதே போட்டுக்குறேன். ம்ம் கெளம்பலாமா?" காரியமே கண்ணாக கண்ணாடி விட்டு அகலாமல் சிறிது உதட்டு சாயம் பூசி நின்றவளை அப்படியே அந்த கண்ணாடி மீது இழுத்து சாற்றி திருப்பினான்.
கண்கள் அவள் விழிகளை நோகாமல் உதட்டின் மீது மையலிட்டு நின்றுவிட்டது.
'அய்யய்யோ' மனம் எக்குத்தப்பாக மத்தளம் அடிக்க அவள் பார்வை அவன் உதடுகளை தொட்ட சமயம் அஸ்வின் அவளை மொத்தமாய் தன்னுள் இழுத்துக்கொண்டான்.
ஒரு மாதத்திற்கு முன்பு கிடைத்த இதழ் தேன், பிறகு இப்பொழுது தான் கிடைக்கிறது. விட்டுவிடுவானா என்ன, திகட்ட திகட்ட பருகி, அவள் உதட்டு சாயத்தை மொத்தமாய் உண்டு, இருந்த தடயமே தெரியாமல் போன பிறகு தான் மனைவியை விடுவித்தான்.
அவனை விட அவளுக்கு தான் கிறக்கம் அதிகம் போல, விழிகளை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டு பிரித்து பார்த்தாள்.
அவன் வேகத்தில் பயந்து போனாலோ என அஸ்வின் மெல்ல மனைவியின் நெற்றி முட்டி சில நொடிகள் இளைப்பாறினான்.
பிறகு அவளை விட்டு இரண்டடி நகர்ந்தவன் அலமாரியில் இருந்த ஒரு பையை அவள் கையில் ஒப்படைத்து, "இதை மாத்திக்கோடா" என்றான்.
"இ... இல்ல இதுவே இருக்கட்டுமே. எனக்கு பிரச்சனை இல்லை" என்றால் வரவழைத்த குரலில்.
ஒரேடியாக தலையாட்டினான், "ம்ஹூம், என்னால உன்ன இப்டி விட முடியாது, வர வர கண்ட்ரோல் ரொம்ப மிஸ் ஆகுது ஆரூ. இதுல இந்த கலர், பேப்ரிக்... சாத்தியமா முடியல. ப்ளீஸ்டி வேற மாத்து" மன்றாடினான் அஸ்வின்.
அவன் பதிலில் முகமெல்லாம் குப்பென சிவந்தாலும் இந்த உடையை அவிழ்க்கும் சோகத்தில் திரும்பி நடந்தவள் இடையை பற்றி அழுத்தினான்.
மீண்டும் மூச்சு திறனால் உருவாக அவனை பீதியோடு பார்த்தாள், "இது நாம மட்டும் இருக்கும்போது போடு ஆரூ..." சரசமாக அவள் காதில் கிசுகிசுத்தவன் அவள் உடை மாற்ற ஏதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
அஸ்வின் கொடுத்த உடையை அணிந்து கண்ணாடி முன்பு நின்ற ஆரோஹிக்கு அவன் கன்னத்தை பிடித்து கொஞ்ச தான் தோன்றியது. அவள் கேட்ட கவுன் வகை உடை.
அழகிய கழுத்து வட்டம், மங்கிய லாவெண்டர் நிற அந்த உடை அவள் கணுக்காலுக்கு ஓரடி மேல் இருந்தது. உடையின் இடுப்பு பகுதிக்கு கீழ் ஆங்காங்கு பூக்களும் அதில் மேயும் பட்டாம்பூச்சிகளுமாய் பார்க்கவே அதிகம் உறுத்தாமல் கண்ணை பறித்தது.
கூடவும் இல்லை, குறையும் இல்லை. கச்சிதமான தேர்வு கணவன் தேர்வு என ஒரே பாராட்டு தான் அஸ்வினுக்கு.
சிகையை கொஞ்சம் அலங்கரித்து உதட்டு சாயத்தை எடுக்க, தலை கவிழ்த்து வெட்கத்தில் உளமார புன்னகைத்தவள் அதே புன்னகையோடு வெளியே வர அஸ்வின் கோட் சூட் சகிதம் அத்தனை வசீகரமாக வந்து நின்றான்.
இருவர் கண்ணிலும் மற்றவரை பார்த்து மெச்சுதல் பார்வை தான். மெல்லிய பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு இருவரும் செல்ல அங்கு இந்த புது தம்பதிக்கு ஏகபோக வரவேற்பு தான்.
பெண்கள் வட்டம் ஆரோஹியை மொத்தமாய் தங்களுக்குள் இழுத்துக்கொள்ள, அங்கு பாகுபாடில்லாமல் அழகிய நட்புக்கரம் அவளை நோக்கி நீட்டப்பட்டது.
தங்குதடையின்று அவர்கள் ஜோதியில் ஐக்கியமான மனைவியின் மேல் ஒரு பார்வையும், நண்பர்கள் கேலியில் ஒரு பார்வையும் வைத்திருந்த அஸ்வினை தான் ஆண்கள் கூட்டம் சரமாரியாக கேலி செய்துவிட்டனர்.
பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் ஆரோஹியை குறைய நினைக்கவில்லை, தங்களது தோழியாய் பாவித்து சகஜமாக பழக ஆரோஹிக்கு கொண்டாட்டம் தான்.
மன நிறைவோடு இல்லம் வந்தவர்கள் உடை மாற்றி மாடி வரவேற்பறையில் படுத்து பராசக்தி படம் பார்த்துக்கொண்டிருந்தனர், எல்லாம் அஸ்வின் செயல் தான்.
அந்த படத்திலிருந்து ஏதோ ஒரு காட்சி அருமையாக உள்ளதென அவன் மனைவி கூறவும் உடனே பார்க்கும் ஆவலில் இருவரும் சித்தமாயினர். அஸ்வின் கவனம் படத்தினில் நிலைப்பெற அவன் மனைவியோ ஏதோ சிந்தனையில் உழன்றுகொண்டிருந்தாள்.
அதிக நேரம் அந்த மூளையினுள்ளும் சிந்தனையை அடக்க முடியவில்லை. அஸ்வின் தோளை சுரண்டி, "சரக்கடிக்கலாமா?" ஒரே போடாய் போட்ட மனைவி கேள்வியில் கழுத்து சுளுக்கும் அளவு வேகத்தோடு வெடுக்கென திரும்பினான்.
"என்ன சொன்ன?" சந்தேகம் தீரவில்லை அஸ்வின் பார்வையில். மனைவியோ வாகாக எழுந்து அமர்ந்துகொண்டாள், "சரக்கு... சரக்கு அடிக்கலாமானு கேட்டேன்"
"போடி பைத்தியம்" தூக்க கழகத்தில் பிதற்றுகிறாள் என்றெண்ணியவன் மீண்டும் படத்தை ரீவைண்ட் செய்து பார்க்க துவங்கினான்.
"யோவ் கிரிக்கெட்டரே. நான் இப்ப ட்ரின்க் பண்ணனும்" பிடிவாதமாக நின்றாள் மனைவி.
"ஆரூ தூங்கு. காலைல பேசிக்கலாம்"
ஆரோஹி, "அதெல்லாம் முடியாது, இப்போவே வாங்க"
அஸ்வின், "என்ன இது பைத்தியக்கார தனமா"
ஆரோஹி, "என்ன பைத்தியக்கார தனம்? எனக்கு இது ரொம்ப நாள் ஆசை, கொஞ்சம் டேஸ்ட் பண்ணிக்கிறேன்"
"அதெல்லாம் தப்பு. படு. ஏதாவது உளறிட்டு"
"யார் உளறுறாங்க, ஏன் நீங்க குடிக்க மாட்டிங்களா என்ன? ஆம்பளைங்கனா எல்லாம் பண்ணலாம், பொம்பளைங்க நாங்க பண்ண கூடாதா?"
அவளை மார்கமாக முறைத்தான், "எது எதுல ஆம்பளைங்களோட போட்டி போடணும்னு ஒரு வரைமுறை இல்லையா? நான் குடிச்சாலும் தப்பு தான், நீ குடிச்சாலும் தப்பு தான்"
"தப்புனு நினைக்கிறவர் எதுக்காக கீழ ஒரு பார் ஓபன் பண்ணிருக்கீங்களாம்?" சோர்ந்து போனான், இவளிடம் இதை மறைக்க தானே அவன் பாடாய்ப்பட்டது, எப்படி தான் பார்த்தாலோ.
"அது எனக்கில்லடா. இன்னைக்கு மாதிரி நம்ம வீட்டுல பார்ட்டி ஹோஸ்ட் பண்ணா இதுக்குன்னு தனியா இடம் ஒதுங்கிடும்ல. அதுக்காக கன்ஸ்ரக்ட் பண்ணது" ஆரோஹியை சமாளித்துவிட்டதாக எண்ணி பெருமைகொண்டான்.
அவளோ அதற்கு மேல் நிற்கவே இல்லை, "நீங்க வந்தா வாங்க, நான் போறேன். இன்னைக்கு மட்டையாகி அந்த போதைய பீல் பண்ண தான் போறேன்"
அஸ்வினை விட்டு தான் மட்டும் எழுந்து வேகமாக கீழே இறங்க, அவளை விட வேகமாக வந்த அந்த விளையாட்டு வீரன், மனைவியை வளைத்து தடுக்க பார்க்க தன்னை வளைந்திருந்த அஸ்வின் கையில் பற்தடம் பதிய கடித்தாள்.
வலி உயிரே போனாலும் அவன் விடவில்லை, "யோவ் விடுயா..." "முடியாதுடி" என்றான் இவனும்.
"ஓ... சரி இப்ப இல்லனா என்ன, நீங்க தூங்குனதும் நான் எந்திரிச்சு போவேன், இங்க நீங்க லாக் போனாலும் பார் போவேன். அட்லீஸ்ட் ஒரு பெக் ஆவது குடிக்காம விட மாட்டேன்"
அவளை வியந்து தான் பார்த்தான், "எப்பா டேய் மொடா குடிகாரன் கூட இப்டி பேசமாட்டான்" அஸ்வின் சற்று கைகளை தளர்த்தியிருந்த நேரம் அவன் கையிலிருந்து விலகி சிட்டாக ஓடிவிட்டாள்.
அனைத்தும் கை மீறி சென்றிருப்பதாக உணர்ந்தவன் தானும், ஓரளவிற்கு கைகளில் சூழலை வைக்க முயன்று தானும் மனைவியை தேடி சென்றான்.
இவன் வருவானென அவளுக்கும் நம்பிக்கை போல, வாசலில் நிற்க, அவ்விடத்திற்கான சாவியை அவனிடம் நீட்டினாள்.
மனைவியை முறைத்தபடியே, "கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு. இன்னைக்கு மட்டும் தான் இதுக்கெல்லாம் விடுவேன்"
உர்ரென முகத்தை வைத்திருந்தவள் சட்டென மலர்ந்து, "என்னோட பக்கெட் லிஸ்ட்ல ஒரே ஒரு நாள் என்னோட புருஷன் கூட சேர்ந்து ட்ரின்க் பண்ணனும்னு தான் ஆசை. இது தான் லாஸ்ட். வாங்க, வாங்க, அங்க பிரிட்ஜ்ல ஐஸ் கட்டி இருக்குமா, சரி வேணாம் ஒரு நாள் குடிக்கிறோம் ராவா அடிச்சா தான் நல்லா இருக்கும்"
தன் வாக்கில் பேசியவள் தனக்கு தெரியாமல் எதையாவது குடித்துவிட்டாளா என்கிற சந்தேகம் அஸ்வினுக்கு. அந்த அறை நீண்டு நன்கு விசாலமாக இருந்தது.
மங்கிய மஞ்சள் நிற விளக்குகள் அவ்விடத்தை மொத்தமும் ஒளிரவிட்டிருக்க மங்கிய வெளிச்சத்திலும் அவ்விடத்தின் நேர்த்தி கண்ணை பறித்தது. இவ்விடம் இருப்பதாய் சித்தார்த் மூலம் கேள்வியுற்றிருக்கிறாள், ஆனால் இன்று தான் பார்ப்பது முதல் முறை.
"அழகா இருக்கு நாராயணா"
"ரொம்ப முக்கியம், சும்மாவே போதை போட்ட மாதிரி தான் இருப்ப. இதுல ட்ரிங்க்ஸ் வேற" என்றான் இன்னும் கோவம் தணியாமல்.
காரியம் நடக்கவேண்டும் ஆரோஹிக்கு அதனால் அமைதியாக இருக்க, அஸ்வின் பார்வை அங்கு நூற்றுக்கும் மேல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஆராய்ந்து.
அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. அதில் இருப்பதில் குறைந்தளவு போதை அளவு கொண்ட ஒரு பாட்டிலை எடுத்து அஸ்வின் திரும்ப அந்த மேஜைக்கு அந்தப்புரம் உள்ள நாற்காலியில் அமர்த்திருந்தவள் முகம் அஸ்டகோலமாய் காட்சியளித்தது.
"ஆரூ" அஸ்வின் அழைக்க, "ச்சை கேவலமா இருக்கு" வெறுப்பு அவள் வார்த்தைகளில் மிதந்தாலும் கீழே குனிந்து மீண்டும் அந்த பாட்டிலை எடுத்தாள்.
அதனை பார்த்த அஸ்வினுக்கு பதறியது. தலையில் அடித்துக்கொண்டான். சிறிய பாட்டில் அதற்கு வீரியம் அதிகமாம். அதிலே இந்த பெண் ஒரே மிடறில் பாதியை தீர்த்திருந்தாள்.
"அதை ஏன் ஆரூ எடுத்த, லூசு பொண்ணே" அவளிடமிருந்து அதனை வாங்க அவன் மேஜையை சுற்றி வர அதற்குள் வேகமாக மீதியையும் குடித்துவிட்டாள்.
"இன்னைக்கு நான் போட்டிருந்த டிரஸ்க்கு மேட்ச்சா இருந்ததுல கிரிக்கெட்டரே... வியாக் நல்லாவே இல்ல"
"அடி பாவி மொத்தத்தையும் முடிச்சிட்டு வியாக்னு சொல்ற. வா போகலாம்"
அவனுக்கு கோவம், புதிதாக இதனை அருந்துபவர்கள் இவ்வகை பானத்தை எடுப்பது சரியே இல்லை, அதிலும் அவன் ஆரோஹி, ம்ம்ஹூம் புடிக்கவில்லை அவனுக்கு.
அவளை அவ்விடம் விட்டு அப்புறப்படுத்த அவன் துடிக்க அவளோ பாவமாக கெஞ்சினாள் பத்து நிமிடம் இவ்விடத்தில் இருக்கலாமென.
அஸ்வின் முகத்தை தூக்கி வைத்து அமைதிகாக்க, "கோவமா?" மெல்ல மெல்ல தன்னையே இழக்க துவங்கிய மனைவியை அவன் பத்திரமாக அருகிலே வைத்திருந்தான்.
"இல்ல."
"உங்களுக்கு ஒரு கொஸ்டின்"
"கேளு" என்றான்.
"ஒருத்தன் பச்சை பாண்ட் போட்டு, பச்சை சட்டை போட்டு, பச்சை செப்பல் போட்டு, பச்சை கேப் போட்டு, பச்சை கதவு இருக்க வீட்டுல கதவ தட்டுறாரு ஏன்?"
அஸ்வின், "அவனுக்கு பச்சை கலர் தான் புடிக்குமா?" அவள் இல்லை என்க அவன் வகை வகையாக பதில் கூறி பார்த்தும் அரை போதைக்கு சென்றிருந்த ஆரோஹி எதற்கும் சரி என கூறவில்லை.
அவளிடம் தோல்வியை ஒப்புக்கொள்ள, "ஏன்னா அந்த வீட்டுல காலிங் பெல் இல்லயாம்" தானே கூறி சிரித்தவள் பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் அஸ்வின்.
இதில் விக்கல் வேறு பெண்ணுக்கு. "கிரிக்கெட்டரே சைடு டிஷ் ஒரு ஹாலேப் பாயில் சொல்லுங்க"
அரண்டுபோனான், "அடியேய் அவ்ளோ தான்டி உன் லிமிட்டு சொல்லிட்டேன்" பொங்கினான் அஸ்வின்.
அவளோ ஏதேதோ கதை பேசினாள், பல தத்துவங்கள் பிறந்தது. ஆண்களிடம் கூட இத்தனை உளறலை அவன் கேட்டதில்லை.
"எனக்கு பக்கெட் லிஸ்ட் விஷ் கொஞ்சம் இருந்துச்சு... அதுல நீங்க நிறையா செஞ்சுட்டீங்க..."
"நிறையானா, அப்போ என் பட்டாம்பூச்சிக்கு இன்னும் ஆசை இருக்கு" தலை அசைத்தாள் கணவன் கழுத்தோடு கைகள் கட்டி நெருங்கி அமர்ந்து.
"சொல்லுங்க கேப்போம்" என்றான் அவனும் அவளை வசதியாக அமரவைத்து.
"எனக்கு பைக் ஓட்டணும் கிரிக்கெட்டரே, அப்றம் எனக்கு அஞ்சு குட்டி நாய் வளர்க்கணும்"
விரல்கள் பத்தை காட்டியது, "எல்லாம் என் பின்னாடியே என் காலுக்கு நடுல ஓடி வந்து விளையாடனும். எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா புல்ல படுத்து வானத்தை பாத்து ஒரு தூக்கம், நான் நீங்க மட்டும்"
அஸ்வினுக்கோ வெட்டவெளியில் தாங்கள் மட்டும் படுத்து முடிவே இல்லாத நட்சத்திரங்களை விறல் விட்டு எண்ணுவது போல் கனவு காண, அது அத்தனை நிறைவாய் தோன்றியது.
"அப்றம் மேஜிக் பென்சில். நான் என்ன சாப்பாடு கேட்டு வரைஞ்சாலும் ஒடனே டிங்னு காத்துல வந்து நிக்கணும்"
சிறு வயதில் பார்த்து ஆசைப்பட்டது எல்லாம் இன்று அடிமனதிலிருந்து ஆசையாக வெளியே வந்தது.
"அப்றம் அஞ்சு குட்டி நாய்..."
"இப்ப தான் மேடம் சொன்னிங்க" அவள் பேசியதை கேட்டு சிரித்தான்,
"ஓ சொல்லிட்டேனா?" தானே குழம்பி போய் பெண் கேள்வி கேட்க அஸ்வின் இன்னும் சிரித்தான்.
"இன்னும் ஒன்னு உங்ககிட்ட கேக்கணும்"
அஸ்வின், "ம்ம்?"
"உங்க முடிய தொட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கு..."
இதழ்கள் ஓரம் மெல்லிய புன்னகை அஸ்வினுக்கு, அவள் கையை எடுத்து தன்னுடைய சிகையினுள் வைக்க வைக்க சொக்கிய கண்களோடு அவன் சிகையோடு விளையாடினாள்.
நிலையில்லாமல் தள்ளாடிய விரல்களின் கதகதப்பில் இளைப்பாறியவன் முகம் காதல் சுகத்தில் விரிந்திருக்க, "உங்க சிரிப்பு ரொம்ப க்யூட் நாராயணா, அப்றம் உங்க கிஸ். ப்ச் பிளாட் ஆகிட்டேன்"
தன்னுடைய மனதினை கண்ணாடியாய் படம் காட்டும் இந்த ஆரோஹிக்கு போதையே கொடுக்காமல் போதையில் வைத்திருக்க அவன் யோசித்த வழிகள் தான் அத்தனை அத்தனை லட்சங்கள்.
மன திருத்தம் செய்திருந்த வாழ்க்கையில் பிழைகளுக்கு வேலை குறைந்திருந்தது. அவளுக்காக அவன் மொத்தம் மாறியிருக்க, அவனை அவனாய் நேசிக்க துவங்கி நித்தம் பித்தானாள் பாவை.
"எத்தனை ஷாக் தருவ நீ எனக்கு?" அஸ்வின் அதிசயித்து மனைவியின் கன்னம் வருட அவள் கண்களில் கள்ளம் அதிகம் குடியேறியது.
அஸ்வினுக்கு புரிந்துபோனது கள்ளி இன்னும் ஏதோ ஒன்று வைத்திருக்கிறாள் என, "சொல்லுங்க கேப்போம்" என்றான் உறக்கத்தின் பிடியில் செல்ல தயாராகியிருந்த மனைவியை அவசரப்படுத்தி.
"அது... நான்" விக்கல் வர தண்ணீரை மனைவிக்கு கொடுத்து, "ம்ம் சொல்லு" நினைவுபடுத்தினான்.
"நான். இல்ல... இல்ல எனக்..." முழுதாக முடிக்காமல் கண்கள் மூடி அஸ்வின் தோளிலே உறங்கிவிட ஏமாற்றத்தோடு மனைவியை வீட்டினுள் அழைத்து சென்று அவளது அறையில் உறங்க வைத்தான்.
மறுநாள் காலை பத்தை தாண்டியும் அவள் வராமல் போக, தலை வலிக்கு தேவையான மாத்திரை, லெமன் ஜூஸ் என அனைத்தையும் ஏற்பாடு செய்து போன அஸ்வின் ஆரோஹியை எழுப்ப, அசையவே இல்லை அவள். திரைசீலைகளை விலக்கி மனைவியை காண அரண்டு போனான் அவள் இருந்த நிலையை பார்த்து.
மெத்தையின் கால்வாசி ரத்தத்தால் பரவியிருக்க அவள் கன்னம் தட்டி தண்ணீர் தெளித்து எது செய்தும் அசையவில்லை. பைத்தியம் போல் பிதற்றினான் அவள் பெயரை. சிறிதும் அசையவில்லை.
"எந்திரிச்சுக்கோடா ஆரூ பயமா இருக்கு எனக்கு. விளையாட இது நேரமில்லைடி" பல முறை மனைவியிடம் மன்றாடினான். அசைவே இல்லை. உடலை ஆராய்ந்தான் எங்கும் சிறு காயம் கூட இல்லை.
உதிரப்போக்காக இருக்குமோ என்கிற பயத்தில் அவளை கைகளில் அள்ளி மருத்துவமனை சென்று சேர்த்தவனிடம், "பீ பிரிப்பர்ட் யுவர்ஸெல்ப் அஸ்வின்(be prepared Ashwin), அவங்களுக்கு செர்விக்கல் கேன்சர். தேர்ட் ஸ்டேஜ்"
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவன் மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள் என்கிற செய்தியை வைத்து அஸ்வின் உயிரை மொத்தமாய் அந்த மருத்துவர் காவுவாங்கிவிட்டார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro