Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அலை - 12

"அவன் போன் போட்டானா ரோஹி?"

"போடலையே அத்தை" பதில் கொடுத்தவளின் கண்கள் தினசரி செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்தது.

"இவனுக்கு இதே வேலை. இத்தனை நாள் சரி, கல்யாணம் ஆனதுமாவது உனக்காச்சும் போன் பண்ணி பேசணும்ல."

கவனமே இல்லாமல், "ம்ம்" கொட்டியவள் விளையாட்டு செய்தியில் இருந்த மட்டைப்பந்து தொடர்பான செய்தியை ஒவ்வொரு வரியாக வாசித்தாள். அவன் பெயர், அவன் பெயர் என கடலின் ஆழம் சென்று தேடியவளுக்கு அஸ்வின் என்ற பெயரை பார்த்ததும் அத்தனை உவகை முகத்தில்.

"எண்ணெய் ரொம்ப நேரம் வச்சிருக்காத ரோஹி. ஜுரம் வந்துடும், அப்றம் உன் வீட்டுக்காரன் என்கிட்ட தான் ஆடுவான், போய் குளி."

தான் அவசரப்படுத்தியதற்கு எந்த பதிலும் வராமல் போக மருமகள் கொடுத்த கற்றாழை எண்ணெயை சீராக தலையில் தேய்த்து தலை சாய்த்து படுத்திருந்தவர் கண்களை திறந்து பார்க்க, மருமகள் அந்த நாளிதழில் மூழ்கி கிடந்தாள். விட்டால் குப்புற கவிழ்ந்து அதனுள்ளே குதித்துவிடுவாள் போல்.

"என்ன பண்ற அண்ணி?" வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த் அவளை பார்த்த மாத்திரம் சிரித்துவிட்டான்.

இருவர் அழைத்தும் மௌனமே வர, அவளை நோக்கி நடந்தவன் அவள் தலையை மெல்ல ஆட்டினான். அவன் கையை தட்டிவிட்டவள் சுருங்கிய முகத்தோடு தலையை தூக்கினாள்.

"உன் அண்ணன் இப்ப இன்னைக்கு தான் டீம் கூட பிராக்டிஸ் பண்ண போயிருக்கார். ஆனா ஏன் பொய் சொன்னார்?"

மதி மருமகளின் ஏக்கத்தில் மகிழ்ச்சி பெருக பேச்சற்று அமைதியானார்.  சித்தார்த் மனமும் நெகிழ்ந்தாலும் கோணல் சிரிப்போடு, "ஒருவேளை யாரையாவது பாக்க போயிருப்பானோ?"

"யவ்னிகாவா இருக்குமோ?" சோகம் கண்களில் இழையோட அவள் கேட்பதை பார்த்து மதிக்கு அந்த வருத்தம் தொற்றிக்கொண்டது.

"அவ்ளோ வருத்தம், சந்தேகம் இருந்தா நீயே அவனுக்கு போன் பண்ணி கேளேன்" என்றவர் குரலில் இளைய மகன் மேல் சிறு கோவமும் வந்தது.

அவள் அமைதியாக இருந்தாலும் இவன் எதற்கு தேவையில்லாதது பேசுகிறான் என்கிற கோவம். பெரிய மகன் மேல் முழு நம்பிக்கை, அன்று தன்னிடம் மருத்துவமனையில் வைத்து சத்தியம் செய்தானே, இவள் மட்டுமே தன்னுடைய மனைவி என்று.  அதை மீறி செயல்படுபவன் அவன் அல்லவே. அதை மருமகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்லிவிட்டார்.

"அது என்ன சந்தேகம் இருந்தா? எங்களுக்கு சந்தேகம் தான். என்ன ரோஹி?"

நெருப்பை ஊதுகுழல் வைத்து மேலும் மேலும் ஊதினான் கொழுந்தன். ஆரோஹிக்கு எந்த பக்கம் சாய்வதென்றே தெரியவில்லை, காகித கப்பல் போல் நிலையற்று திரிந்தது மனம்.

ஆனால் பேசி பார்த்தே தீர வேண்டும் போல் இருக்க, தான் குளிப்பதாக சாக்கிட்டு ஓடிவிட்டாள் அவள், அவன் அறைக்கு.

உள்ளே நுழைந்ததுமே கணவனுக்கு அழைத்து பார்க்க, அழைப்பை ஏற்பார் இல்லை. சரி என குளித்து அவதியோடு வந்து பார்த்தாலும் மறுஅழைப்பும் வந்தபாடில்லை.

காத்திருந்தாள், காத்திருந்தாள். அவனது இணைய வலைத்தளங்களில் அவன் பயிற்சி செய்வது போல், நண்பர்களோடு இணைந்து சிரித்து பேசுவது போல் பல வகையான புகைப்படங்களை பதிவு செய்தான் தான், ஆனாலும் மனைவிக்காக முழுதாய் ஒரு நிமிடம் ஒதுக்கவில்லை.

வீட்டில் அர்த்தமே இல்லாமல் உலா வந்தவள் செய்தது யாவும் தேவையற்ற வேலையே. என்ன செய்கிறோம் என்று தெரியாமலே வளைய வந்தவளை பார்க்க மதிவர்த்தினிக்கு சிரிப்பு அதிகம் வந்தது.

ஓய்வெடு, உறங்கு எனக் கூறியும் கண்களில் தூக்கம் சொட்ட சொட்ட முழித்து கைபேசியை அவ்வபோழுது பார்த்துக்கொண்டே இருந்தாள். காலை தொடங்கிய ஏக்கம் மதியம், மாலை தாண்டி இரவு வரை அழையா விருந்தாளியாக பின்தொடர்ந்தது.

கடன்பட்டவனோ பொறுமையாக இரவு உணவை முடித்த பிறகே அழைத்தான். அதுவும் வெறும், "ஹலோ" மட்டுமே.

மூக்கு விடைக்க கோவம் அவன் மனைவிக்கு, 'ஹலோவாமே ஹலோ' ஆத்திரம் பொங்க மௌனம் சாதித்தாள். கைபேசியை காதிலிருந்து எடுத்து பார்த்தான் இணைப்பு இணைந்து பத்து நொடிகளுக்கு மேல் ஆகியிருந்தது.

"ஹலோ இருக்கியா?" ஸ்பீக்கரில் போட்டு உறங்க தயாராகினான்.

உடல் மொத்தமும் அடித்துப் போட்டது போல் அலுப்பு தட்டியது, காலையிலிருந்து பயிற்சி கடுமையாக இருந்தது. இடையிடையே நண்பர்களோடு பேச, சிரிக்க என்றிருந்தாலும் இரவு வரை மைதானத்தை விட்டு வர மனம் வரவில்லை.

அதோடு இரண்டு நாட்களாக யவ்னிகா அழுகை, கோவம், தவிப்பு என பார்த்தவன் உள்ளமும் சோர்ந்து தான் கிடக்கிறான்.

'என்ன ஹலோ எனக்கு பேர் இல்லையா?' சண்டையிட தூண்டிய மனதினை துணியை மடித்து வைத்து பெரும்பாடு பட்டு அமைதிப்படுத்தினாள்.

"போன் பண்ணா என்ன ஏதுன்னு பேசணும். அதைவிட்டு உன் வேலைய பாக்கவா எனக்கு கால் பண்ண?" எரிந்து விழுந்தான் அந்த பக்கம்.

அவனது உயர்ந்த குரலும் ஓங்கிய சினமும் ஆரோஹிக்கு தூக்கிவாரி போட, செய்த வேலையை விட்டு அப்படியே நின்றாள்.

"சரி வைக்கிறேன்" அதே உஷ்ணத்தோடு அவளது அமைதியில் இணைப்பை துண்டித்தவன் மெத்தையில் படுத்து உருண்டு பிரண்டும் உறக்கம் அண்டாமல் போனது. மனம் தாளாமல் எழுந்து அமர்ந்தவன் அவளது கைபேசிக்கு அழைத்தான்.

ஒரே ஒரு ரிங் தான் சென்றிருக்கும் உடனே ஏற்றுவிட்டாள் இதற்காகவே காத்திருந்தது போல். சிகையினுள் விரல்களை  விட்டு கோதியவன் மனம் வாடியது.

"ஹலோ" குரலை வரவழைத்து அவன் பேச, "ம்ம்" என்றாள் அமைதியான வேகத்தோடு அவன் மனைவி.

'பயப்பட வைத்துவிட்டேன்' தனக்குள்ளே சிரித்தவன், "தூக்கத்துல இருக்கியா?" என்றான்.

மணியை பார்த்தாள். பத்தை கூட தொடவில்லை சிறிய முள். இவனை போல் ஒன்பதரைக்கெல்லாம் உறங்குபவளா அவள்?

"ம்ம்ஹும்" என்ற முனகல் மறுப்பு தான்.

"அப்றம் ஏன் நான் பேசுறப்போ பதில் பேசாம இருந்த?"

"நீங்க எங்க பேசுனீங்க? திட்டுனீங்க, கோவமா இருந்திங்க."

எழுந்து அறையை விட்டு பால்கனி வந்தான்.. "அது ஒரு பிரச்சனை ஆரோஹி"

ஆரோஹி, "என்ன ஆச்சு?"

"ஒன்னுமில்ல" அவன் அணியினுள் ஏதேனும் பிரச்சனையோ என சிந்தித்தவள், அவனது சிந்தனையை பற்றி யோசிக்காமல், கேளாமல் தன்னுடைய சந்தேகத்தை முன்னிறுத்தினாள்.

"நீங்க இன்னைக்கு தான் பிராக்டிஸ்க்கு வந்திங்களா?"

புருவம் இடுங்க, "ஆமாம்" என்றான்.

"ஓ..." என ராகம் இழுத்தவள், "யாரை பாக்க போயிருந்திங்க?" அவளது தயக்கமே தான் பேசியதை தவறென அவள் உணர்ந்ததை அறிந்தாலும், அஸ்வினுக்கு சுள்ளென கோவம் ஏறியது.

"யார் பேர் சொன்னா உனக்கு நிம்மதியா இருக்கும் ஆரோஹி?" நாகமாய் சீறிய அவன் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தின் பெயரிலே எத்தனை மடத்தனம் செய்துள்ளோம் என ஆரோஹிக்கு புரிந்தது.

"உங்கள தப்பா சொல்லல, நீங்க கெளம்பி ஒரு வாரமாச்சு ஒரு கால் கூட பண்ணல..."

"ஒரு வாரம் கால் பண்ணல இவன் யார் கூடயோ ஊர் சுத்த கெளம்பிட்டான்னு நீயா ஒரு முடிவு பண்ணி சந்தேகப்பட்டு கேக்குற?" முகத்தில் சில்லென்ற காற்று அடித்தாலும் அவள் வார்த்தைகளால் ஏறிய உஷ்ணம் மட்டும் மட்டுப்படவே மாட்டேன் என்றது.

"நீ இழுத்து வச்ச பிரச்சனைய நான் முடிக்க முடியாம திணறிட்டு நிக்கிறேன். என்னமோ அவளை நான் ஏமாத்தி கெடுத்த மாதிரி அவ அப்பன் என்ன வந்து கத்துறான். போதாததுக்கு அவ ஒரு பக்கம் கண்ண கசக்கிட்டு, தினமும் என் உயிரை வாங்குறா. இது எல்லாம் போதாதுன்னு உன் பங்குக்கு நீ சந்தேகப்படு. நிம்மதியா இருக்கு."

"கிரிக்..."

"தலை வலி தெறிக்கிது தயவு செஞ்சு வை ஆரோஹி" பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கியவன் அவள் உணர்வை கூட புரிந்துகொள்ளாமல் பேச்சை முறித்து மெத்தையில் சரிந்தான்.

அஸ்டராய்டாய் (asteroid) அதீத வேகத்தோடு மோதியவன் வார்த்தைகள் ஆரோஹி மனதினை தீ வைக்க, நெருப்பாய் உறுமினாள் அவளும்.

'நான் என்ன கேட்டேனாம்? சரி தப்பு தான். அதுக்குன்னு தலைவலியே என்னால தான்னு சொல்றார். இதுல ஆரம்பத்துல இருந்து போன் வைக்கிற வரை கோவம் மட்டும் தான்' பொருமலோடு அஸ்வினை திட்டி வருத்தத்தை மறைத்து நள்ளிரவை தாண்டி உறங்காமல் தவிக்க, நிதான யோசனைக்கு பிறகே அவன் கோவம் புரிந்தது.

உடனே அவனுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை அனுப்பி வைத்து தான் உறங்கினாள் நாளை பேசிக் கொள்வோம் என்கிற நம்பிக்கையில். அஸ்வின் அவள் நினைவிற்கெல்லாம் வடிகால் போல அடுத்து வந்த ஒரு வாரம் அவளிடம் பேச முயற்சிக்க கூட இல்லை.

ஏன் அவள் அனுப்பிய மன்னிப்பை பார்க்க கூட இல்லை. கோவம் சிறுக சிறுக வருத்தமாய், வருத்தம் மெல்ல மெல்ல அழுகையாய் மாறியது. இங்கிருந்தவரை சேயாய் பாதுகாத்ததென்ன, தோழனாய் சீண்டியதென்ன, கணவனாய் உரிமை கொண்டாடியதென்ன?

இத்தனையையும் கொடுத்தவன் அவை நிகழ்ந்த தடயத்தையே மறைத்து உதாசீனம் செய்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போராடி தோற்றுப்போனவளை இழுத்து பிடித்து தொலைக்காட்சி முன்பு அமர வைத்தார் மதி. அதில் லைவ்வாக நடந்துகொண்டிருந்த கிரிக்கெட் போட்டியை சுவாரஸ்யமே இல்லாமல் பார்த்தவள் முகம் மெல்லிய விடிவெள்ளி போல் அவள் கணவனை காணும் பொழுதெல்லாம் மின்னும்.

அதிலும் இன்று அவன் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கோவம், ஆக்ரோஷம் என இரண்டு மட்டுமே தெரிந்தது. பேட் பிடித்த ஒரு வீரனோடு வேறு சண்டைக்கு சென்றுவிட, மற்ற வீரர்கள் தான் அஸ்வினை பிடித்து நிறுத்திவைக்க வேண்டி இருந்தது.

அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை, அஸ்வின் பேட் செய்ய வரும்பொழுதும் பந்து வீச்சாளர் அவன் முகத்திற்கு நேராக பந்தை எறிய இப்பொழுதும் சண்டைக்கு சென்றவன், அடுத்த இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்க, pavilion சென்றவனின் கோவத்தை மறக்காமல் கேமரா பல புகைப்படம் எடுத்துக்கொண்டது.

ஆக அன்று முழுவதும் வலைத்தளங்களில் பேச்சே அவனானான். அவன் கோவம் பேச்சானது. எப்பொழுதும் இருப்பதை விட அதிக ஆக்ரோஷத்தை கண்டு அவன் ரசிகர்கள் கூட பிரமித்துப்போயினர்.

மதி, சித்தார்த் என அனைவரும் வருத்தமுற மௌனமாய் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாள் ஆரோஹி. அன்று இரவு பனிரெண்டை தாண்டிய பிறகு பட்டிமன்றமே அவளுள் நிகழ்ந்தது.

எல்லாம் அஸ்வினுக்கு அழைத்து பேசுவதில் தான். மனம் தாங்காமல் அழைத்துவிட்டாள், என்ன திட்டு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என.

சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு அழைப்பை ஏற்றவன், "என்ன?" எடுத்த எடுப்பிலே காய்ந்தான்.

கணவன் குரலில் தெரிந்த கடுமை அவன் குரல் கனத்தில் இல்லை.

"சாப்பிட்டீங்களா?" அவன் வாட்டம் அவள் வாட்டமாய் என்று மாறியதென பேசிய அவளே அறியாத விந்தை அது.

ஆழ்ந்து மூச்சு விடும் சத்தம் அவனிடம்.

"கிரிக்கெட்டரே..." அவன் நிலை தெரிந்துகொள்ளும் ஆவல் அவளிடம். புரிந்தவன் உடல் மெல்ல தளர்வுற்று கோவம் கூட சற்று தூரம் போயின.

பாவைக்கோ கணவன் குரல் சிரிப்பில் கலந்து காதில் ஒலிக்க வேண்டும் போல் இருக்க, "அஸ்வின்..." என கெஞ்சினாள்.

குரல் தழைந்து, கெஞ்சல் மொழியில் பேசியவள் வார்த்தை அவன் உடலில் பட்டாம்பூச்சிகளை பறக்க செய்தது. 'அஸ்வின் சொல்லாதடி... என்னென்னவோ பண்ண தோணுது' அலைபேசி வாயிலாகவே அவளிடம் கத்தி கூப்பாடு போட தோன்றியது.

வறண்டிருந்த நிலத்தில் சிறு மழைக்கும் மின்னல் கீற்றுக்கும் மயங்கி முளைக்கும் காளானாய் அவளுக்கு குடை விரித்து நிற்கும் மனதினை என்ன கூறி வஞ்சிப்பது?

இன்னும் மௌனமாய் இருந்தால் இதற்கு மேலும் சிணுங்கி அவன் அடித்தளத்தையே ஆட்டிவைத்தாலும் வியப்பதற்கில்லை, அதனாலே பதில் கொடுத்தான், "இல்லை" என்று.

"சரி கால் கட் பண்றேன். சாப்பிட்டு கூப்டுங்க."

"ஆரோஹி..." அஸ்வின் அவளை அவசரமாய் அழைக்க, "நான் முழிச்சிருப்பேன்" என மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அமர்ந்துவிட்டாள்.

அவனும் இரு முறை அழைத்து பார்த்து மனைவியின் பிடிவாதம் தாளாமல் அவள் சொல்லியதையே செய்ய வேண்டியதாயிற்று. உணவை அறைக்கு கொடுக்க வந்தவன் அஸ்வினை வித்தியாசமாகவே பார்த்து சிரித்தான்.

பிறகு, இரவு உணவை ஒரு மணிக்கு எடுத்துக்கொண்டால்? ஆதாரமாக உணவையும் அவளுக்கு அனுப்பி வைத்தான். அதை பார்த்த உடனே வீடியோ கால் பறந்து வந்தது.

அழைப்பை ஏற்று வசதியாக தன்னுடைய முகம் தெரியும்படி தூரம் வைத்தவன் அவளை ஆராய, மெத்தையில் ஒருக்களித்து படுத்திருந்தபடியே அவனை இம்மி விடாமல் அளந்தாள். இன்னும் புருவங்கள் சுருங்கி கண்கள் சிவப்பேறி நிதானம் இல்லாமல் இருந்தான்.

அவளை மட்டுமே பார்த்தவன் உணவை மறந்து நிற்க, "சாப்பிடுங்க நாராயணா" என நினைவுப்படுத்த அமைதியாக உண்டான்.

அவன் உணவை முடிக்கும் வரை பொறுமை காத்தவள், "எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோவம் வருது?" என்ற கேள்வியை முன் வைக்க, பேசவே இல்லை அவன்.

"பாருங்க இப்பவும் கோவம் தான்."

அஸ்வின், "நீ கேட்ட கேள்விக்கு உன்ன கொஞ்ச சொல்றியா?"

ஆரோஹி, "அதுக்கு தான் மனசு தீர திட்டியாச்சே."

அஸ்வின், "நான் திட்டல, பேசுனேன்."

கண்களை அகல விரித்து, "எப்பா பேசுனதே இவ்ளோ ஹார்ஷா? எனக்கு தூக்கமே வரல தெரியுமா?" பதில் கொடுத்தாள்.

"ம்ம்ம், பாத்தாலே தெரியுதே ரெண்டே வாரத்துல ஒரு சுத்து போட்டுட்ட."

"இல்ல கிரிக்கெட்டரே" சிணுங்கினாள் பெண், அவளுக்கே அது தோன்றியது தான். ஆனாலும் அவன் கேட்க சங்கோஜமாக இருந்தது. இதழ் கடையோராம் மில்லிமீட்டர் அளவில் வளைந்திருந்த அவன் சிரிப்பில் கோவம் தனியப்பெற்றதை உணர்ந்தவள் சிரிப்பும் விரிந்தது.

"கோவம் போச்சா நாராயணா?"

தோளை அசட்டையாக குலுக்கினான். "ஏன் இன்னும் தூங்காம இருக்க ஆரோஹி? தூங்கு போ."

"மாட்டேன்" என்றவள் கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது.

"என்ன இது பிடிவாதம்?" தலையணையை நெஞ்சோடு இழுத்து அணைத்தவள் வாகாய் படுக்க, அஸ்வின் பார்வை தன்னுடைய மெத்தையில் கோணலாக படுத்திருக்கும் மனைவியையும், அதனால் விலகி இருக்கும் ஆடையை பார்த்த மாத்திரம் தடம்புரண்டது.

உடனே சுதாரித்தவன் தொண்டையை செருமி, "எந்திரிச்சு ஒக்காரு ஆரோஹி."

"என்ன சும்மா ஆரோஹி ஆரோஹி? ஆரூ தானே சொல்லுவீங்க அப்படி கூப்பிடுங்க" சண்டை போட்டு அவன் சொல்வதை செய்யாமல் விட்டாள்.

"சொல்றேன், நீ எந்திரி."

"எனக்கு பாக் பெயின். ஒக்கார முடியல கிரிக்கெட்டரே."

அவளை பார்க்காமல் எத்தனை நேரம் தான் பார்வையையும் தாழ்த்தியே வைத்திருப்பது, அதற்கும் கோவம் காட்டுவாள். பிடரி மயிரை நீவியபடியே கைபேசிக்கு சார்ஜ் போடுவது போல் திரையிலிருந்து பார்வையை அகற்றியவன், "ஒழுங்கா படு" என கடினப்பட்டு கூறியும் விட்டான்.

'ஒழுங்கா தானே படுத்திருக்கேன்' மனதிலே கணவனை திட்டியவள் குனிந்து பார்க்க, அப்பொழுது தான் எக்குத்தப்பாக விலகியிருந்த உடையை பார்த்ததும் பட்டென எழுத்து அமர்ந்துவிட்டாள் மேலாடையை சரி செய்தபடியே.

கைபேசியில் மீண்டும் அவன் முகம் பார்க்க அவளுக்கும், அவள் கண்ணை பார்க்க அவனுக்கும் அத்தனை சங்கோஜம்.

"நீ தூங்கு. நான் வைக்கிறேன்" பேச்சை துண்டிக்க பிடிக்காமல் இருவருக்கும் இடையே படர்ந்திருந்த சங்கட ரேகையை முறித்து விட முயன்றான்.

அவன் மனைவிக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. "ம்ம்ஹூம். உங்கள புடிக்கிறதே பெரிய விஷயம் நான் கட் பண்ண மாட்டேன்."

"நாளைக்கு பேசுறேன் ம்மா. ஒடம்பு முடியாம ஏன் கஷ்டப்படுற?"

அவள் பிடிவாதமாக தலையை ஆட்ட, "பில்லோ வச்சு ஒக்கார்" என்றான்.

அவளும் அப்படியே செய்து, "அது என்ன உங்களுக்கு போஸ்ட் போட டைம் இருக்கு, உங்க போஸ்ட்க்கு வந்த கமெண்ட்ஸ்க்கு லைக் போட டைம் இருக்கு. ஆனா என்னோட மெசேஜ் பாக்க கூட டைம் இல்ல?"

"உனக்கே தெரியுமே ஆரோஹி நான் கோவமா இருந்தேன்ல."

"ஆமா பொல்லாத கோவம், எங்க போனீங்கனு கேட்டது தப்பா?"

அவன் முறைக்கவும், "சரி தப்பு தான். நீங்க கால் பண்ணி பேசியிருந்தா நான் ஏன் அப்படி கேக்க போறேன்? என்னால இவருக்கு தலைவலி மாதிரில பேசுனார்."

அவள் கோவத்தில் இத்தனை நாள் தொலைந்திருந்த சிரிப்பு மீண்டும் அவனிடம் அட்டையாய் ஒட்டிக்கொண்டது.

வாய் விட்டு அடக்க மாட்டாமல் சிரிப்பவன் சிரிப்பில் தொலைந்து தொலைந்து மீண்டும் எழுந்து வந்தாள் அஸ்வின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

"ம்ம் சிரிப்பீங்களே... எங்க எங்கையோ இருக்க கோவத்தை வேற ஒரு இடத்துல காட்டுனா உங்க பிரச்சனை அப்படியே காத்துல பறந்து போய்டும்?!"

"இல்ல ஆரோஹி..."

"யோவ் ஆரோஹி சொல்லாதயா... ஆரூ சொல்லுங்க?"

அதற்கும் சிரித்தான். "அந்த கோவமும் இந்த கோவமும் ஈக்வல் ஆகிடுச்சு. இதோட விடலாமா? என் பங்குக்கு நானும் சாரி சொல்றேன். ரியலி சாரி" கெஞ்சல் மொழியோடு கண்கள் சுருக்கினான். உண்மையில் அவன் அவள் மேல் கோவத்தை இழுத்து பிடிக்கவே இல்லை. மனதில் வஞ்சம், கள்ளம் இல்லாமல் பயத்தை மட்டுமே வைத்து அவள் கேட்டது பேசியதை வைத்தா அவளை தண்டிப்பது?

அதற்கு அவன் மூளை அனுமதித்தாலும் மனம் அனுமதியாதே. யவ்னிகா தொடர்பான பிரச்சனை இன்னும் முடியவில்லை. விஷயம் வெளியே கசிந்திட கூடாதென்பதில் முனைப்பாய் இருந்தவனை சுற்றி எந்நேரமும் அவன் நண்பர்கள் இருந்துகொண்டே இருக்க மனைவியிடம் பேசக் கூட முடியாத நிலை.

அது இது என மொத்தமும் சேர்ந்து அவன் கோவத்தை எல்லாம் அந்த மைதானம் உறிஞ்சிவிட்டது. அதன் விளைவு அஸ்வினால் சரியாக தன்னுடைய பங்கை அணிக்கு செயலாற்ற முடியவில்லை என்கிற வருத்தம் தூக்கத்தையே விரட்டி அடித்திருந்தது.

"மன்னிச்சிட்டேன் போங்க" பெரிய மனதோடு அவனை மன்னித்து விட்டாள் விரிந்த புன்னகையோடு.

"ம்ம்ம், அப்றம் சித்தார்த் சொன்னான் அந்த பொண்ண பாத்தியாமே. எப்படி இருந்தா?"

சகோதரனை போல அவள் முகமும் சோர்ந்து போனது. "ரொம்ப அழகா இருக்காங்க அஸ்வின். எனக்கு ஆப்போசிட். ஸ்லிம்மா, கொஞ்சம் ஹைட்டா, க்யூட்டா இருந்தாங்க. ஆனா ஒரு கால் கொஞ்சம் சாய்ச்சு சாய்ச்சு நடந்தாங்க. உங்க தம்பிகிட்ட கேட்டா பதிலே சொல்லாம ஒரே அழுகை. என்னனு சொல்லவும் மாட்டிங்கிறான். நீங்க அத்தை மாமாகிட்ட பேசுங்களேன்."

"என் பொண்டாட்டிக்கு என்ன குறை? அவ சப்பியா க்யூட்டா தானே இருக்கா? ஹைட் கம்மியா இருந்தா தான் எனக்கும் வசதி."

விஷமமாக சிரித்தவன் பேச்சில் இருந்த அர்த்தம் அவளை சென்று சேரவில்லை, மாறாக முறைத்தாள். "நான் என்ன சொல்லிட்டு இருந்தா நீங்க என்ன பேசுறீங்க கிரிக்கெட்டரே?"

அஸ்வின், "அப்போ அது தேவையில்லன்னு அர்த்தம்."

ஆரோஹி, "உங்க தம்பி வாழ்க்கை சம்மந்தப்பட்டது எப்படி தேவையில்லாம போகும்?"

"கவலை தேவையில்லன்னு சொன்னேன் ஆரூ. வீட்டுல இருக்க சித்தார்த் வச்சு அவனை எடை போடாத. எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் அப்பாவே அசந்து போகுற மாதிரி இருக்கும் அவனோட ஒவ்வொரு யோசனையும் முடிவும்.

நின்ன இடத்துல இருந்து பிளான் பண்ணி அடிக்கிறதுல அவனை மிஞ்ச எனக்கு தெரிஞ்சு யாருமில்ல. அவ்ளோ தெளிவு, நிதானம், முற்போக்கு சிந்தனை அவன்கிட்ட இருக்கும். இந்த விஷயத்தை அப்பாகிட்ட எடுத்துட்டு போகாம இருக்கான்னா கண்டிப்பா எதுக்கோ அவன் வெயிட் பண்றான்."

ஆரோஹி, "உங்ககிட்ட சொல்ல கூட தயங்கிருக்கலாமே."

"கண்டிப்பா இல்ல ஆரூ. அவன் லவ் பத்தி nook and cranny எனக்கு தெரியும். என் ஹெல்ப் என் தம்பிக்கு தேவைப்படுதுன்னு நான் பீல் பண்ற டைம் கண்டிப்பா அவனுக்காக யாரை வேணாலும் எதிர்த்து நிப்பேன்" அஸ்வினின் உறுதியான பாசத்தில் ஆரோஹிக்கு உடலே சிலிர்த்தது, ஒரு பக்கம் பொறாமை கூட.

"உங்ககிட்ட சொல்லியிருக்கான், என்கிட்ட மட்டும் மழுப்பிட்டே இருக்கான்" பொறாமையை மறைத்து கணவனிடம் அவன் சகோதரன் மீது கோவத்தை காட்டினாள்.

"எங்களுக்குள்ள எதுவுமே மறைக்க இருக்காது ஆரூ. அன்னைக்கு நீ காய்ச்சலோட ரெண்டு பாக்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிட்டத்துல இருந்து இன்னைக்கு என்னோட சட்டையை நீ எடுத்து அயர்ன் பண்ண ட்ரையல் பாத்து கிழிச்சது வரை."

ஐயோ என்றானது ஆரோஹிக்கு. இருந்த கோவத்தில் அவனை இப்பொழுதே எழுப்பி அடிக்க வேண்டும் போல் இருந்தது.

"இன்னும் என்ன என்ன சொன்னான் உங்க தம்பி? எல்லாத்தையும் சொல்லிடுங்க மொத்தமா கவனிச்சிர்றேன்."

அவள் கோவத்தில் சிரித்தவன், "நீ எனக்கு டிவோர்ஸ் குடுக்க போறியாமே?" கண்களில் குறும்பு இழையோட கேட்டான்.

"அது... அது அங்க இருந்த புட் ரொம்ப நல்லா இருந்துச்சு..." குரல் இறங்க பதில் கொடுத்தாள்.

"ஓ..." ராகம் இழுத்தவன், "அப்போ வீட்டுக்கு ஒரு குக் அரேஞ் பண்றேன்?"

"இல்ல இல்ல வேண்டாம்" அமைதியை கிழித்து பளிச்சென வந்தது அவள் மறுப்பு பதில் நொடி பொழுதில்.

அந்த வேகம் கண்களில் சுவாரஸ்யம் கூட்ட, "ஏன்?" கேட்டான் அஸ்வின் ஆர்வமாக.

அஸ்வின் கண்களை பார்த்தவள் அதிலிருந்த ஆசையின் வீரியம் தாளாமல் பார்வையை விலக்கவே அதிகம் மனதோடு போராட வேண்டி இருந்தது. இதில் எங்கு அவனுக்கு பதில் கொடுப்பது? பாசம், ஆசை, அக்கறை கலந்து அவன் சமைக்கும் உணவிற்கு முன்பு ருசி எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் எங்கோ ஓடியே போயிருந்ததை அவனிடம் கூற தைரியம் வரவில்லை.

"ஹே பட்டாம்பூச்சி" அவன் ரகசிய குரலில், தன்னுடைய அடிவயிற்றில் பறந்த பட்டாம்பூச்சிகளின் மேல் ஒரு குற்ற வழக்கே தொடுத்தாள் அஸ்வினின் மனைவி.

"உங்கள... உங்க சமையலை சாப்பிடணும் போல இருக்கு."

அவனை நேரில் பார்க்க துடிக்கும் மனதை மறைத்து அவன் சமையலை அவள் சுட்டிக்காட்டியது அவளவனுக்கா தெரியாது? உள்ளம் பூரித்தது அஸ்வினுக்கு. ஒரே மாதத்தில் இத்தனை மாற்றங்களா தன்னுள் என்கிற வியப்பு. அவளது பரிதவிப்பு, அவனுள் நடக்கும் ரசாயன மாற்றத்தை ஒத்தது அல்லவா?

"அப்போ என்ன மிஸ் பண்ணல?" நப்பாசை கொண்டு அவன் கேட்க,

"ரொம்ப தான் ஆசை..." நெட்டி தள்ளி வெட்கப்பட்டது பெண்.

ஏதேதோ கவிபாடும் அவன் கண்களின் அலையில் சிக்கி சின்னாபின்னமான உணர்வுகளை திரையிட்டு மறைக்கவே தேடிப்பிடித்து பேசினாள். "எனக்கு வீடெல்லாம் மெடல்ஸ் வேணும். எங்க வைக்கிறதுனு தெரியாம அதுக்கே ஒரு வீடு கட்டணும். ம்ம்ம் செய்விங்களா?"

சிரிப்போடு சம்மதமாய் தலை அசைத்தவன் மூளை கேட்ட, 'எதனால் இந்த பித்து?' என்கிற கேள்விக்கு, 'அவள்' என்பதை தாண்டி வேறு எந்த காரணமும் தேவைப்படவில்லை.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro