அலை - 10
ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தான் வழக்கமாக செல்லும் ஜிம் சென்ற அஸ்வின், நீண்ட உடற்பயிற்சிக்கு பிறகு மூச்சு வாங்க அமர்ந்தவன், கடந்த பத்து நாட்களாக இருந்த பழக்கத்தை இன்றும் தொடர்ந்தான்.
கைப்பேசியை எடுத்து இன்றைய நாளுக்கான காலை உணவை தேட துவங்கினான். இது அவனுக்கான தினசரி வேலையாகி போனது. பல வருடங்கள் அவனது அன்னை படும்பாடு இப்பொழுது தான் மகனுக்கு புரிந்துள்ளது போல்.
ஒவ்வொரு நாளும் ஒரு வகை செய்ய வேண்டும், அன்று அவன் கேட்டது போல் இன்று அவன் மனைவி கேட்பது இல்லை.
ஆனாலும் அவளுக்காக இவனே சிரமப்பட்டே ஆனாலும், விதவிதமாக செய்யத் துவங்கினான். அவன் செய்யும் உணவினை உன்னிப்பாக பார்ப்பவள், அதனை இரண்டு கவளம் உண்டு அவன் முகம் பார்த்து சிரிப்போடு, கட்டை விரல் உயர்த்தி அதனை அங்கீகரிப்பதை பார்த்தபிறகு தான் இவன் முகத்தில் சிரிப்பே வரும்.
அதற்காகவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சமைத்துவிடுவான். இப்பொழுதும் அதே தான். சமைக்க தெரியாது என்பதை மனைவியிடம் காட்ட பிடிக்காமல், அவளுக்காகவே தினமும் காலை அரை மணி நேரத்தை இதற்கே செலவிட்டு தான் வீட்டிற்கு செல்வது.
இன்றைய உணவிற்கான தகவல்கள் அனைத்தையும் சேகரித்தவன், வீட்டிற்கு சென்று குளித்து ஆரோஹி எழுந்து வரும் முன் காலை உணவை முடித்துவிட்டான். எப்பொழுதும் போல் ஒன்பது மணிக்கு ஆரோஹி கீழே வர, இரண்டு வகையான உணவோடு ஒரு ஜூஸ் அவள் முன்னாள் நீட்டப்பட்டது.
அன்று அவள் வியந்து அஸ்வினைத் திட்டிய, அதே விலையுயர்ந்த உணவு மேஜைதான் இப்பொழுது அவளுக்கு பிடித்த இருக்கையாக மாறியது.
"அடடே! பாக்க ரொம்ப அழகா இருக்கே நாராயணா... பேர் என்ன?" பரபரவென கைகளை தேய்த்து அவனைக் கேட்டாள்.
அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் தானும் அமர்ந்தவன் வரிசையாக உணவுகளைக் கை காட்டி, "ஹனி அண்ட் டோஸ்டட் சேஸிமி பிளாட் நூடுல்ஸ் வித் டோஸ்டட் டோஃபூ (Honey and toasted sesame flat noodles with toasted tofu), ஸ்பைசி ஜலப்பினோ மஸ்ரூம் ஸ்க்ராம்பிள்ட் எக் (spicy jalapeno mushroom scrambled egg), டாங்கி ரெட் ப்யூரிஃபைர் ஜூஸ் (tangy red purifier juice- made with tomato and beetroot)" என கூறி முடிக்க உடனே உணவில் மூழ்கினாள்.
"வாவ் கிரிக்கெட்டரே... நூடுல்ஸ் அப்டியே ஐஸ்க்ரீம் மாதிரி கரையிது. எப்படி பண்ணீங்க?" ருசியில் ஒழுங்காக பேச முடியாமல் உடனே பாராட்டினாள் கண்களை மூடி சுவையை அனுபவித்தவாறே.
"இது ஹாண்ட் மேட் ஆரூ."
"இதுக்கு தான் சொல்றேன், நீங்க செஃப் ஆகிடுங்கனு."
'ம்ம்ஹ்ம்... சமைக்கவே தெரியாதவன் செஃப்... விளங்கும்!' மனதினுள்ளே புலம்பியவன், வெளியில் அமைதியாக இருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு பேச்சே எழவில்லை. அவளோ உணவில் கவனமாக அவனோ அவளில் கவனமானான்.
இறுதியாக முகத்தை அப்படியும் இப்படியும் வைத்து அந்த சாறை குடித்தவள், "இந்த ஜூஸ மட்டும் கொஞ்சம் அவாய்ட் பண்ணிருக்கலாம்."
"இந்த ஜூஸ் குடிக்க லஞ்சம் தான் இந்த சாப்பாடு எல்லாம் மேடம்." அவளை கேலி செய்து தனக்கான உணவை முடித்தான்.
அவளுக்கென தனி உணவு, அவனுக்கு எளிதான தனி உணவு தான் எப்பொழுதும்.
அவனும் உண்டு முடிக்க இருவரது உணவு பாத்திரத்தையும் ஆரோஹி எடுத்து சமையலறை நுழைய, அவள் பின்னே மற்ற பாத்திரங்களை எடுத்து வந்தான் அஸ்வின்.
தாங்கள் இருவரும் உண்ட தட்டை மட்டும் கழுவி வைத்த ஆரோஹியை மீதி இருந்தவற்றை சுத்தம் செய்ய விடாமல், "நீ கெளம்பு, அம்மா அப்பயே கால் பண்ணிட்டாங்க." என பிடிவாதமாக அனுப்பி வைத்தான்.
எதற்காக என்றெல்லாம் தெரியாமலே இருவரும் அஸ்வின் பெற்றோர் இல்லம் செல்ல, வீட்டில் ஏற்பாடாகிக் கொண்டிருந்த தடபுடலான விருந்தைப் பார்த்த அஸ்வின் விழிகள் யோசனையில் சுருங்கியது. அதோடு வீட்டின் மத்தியில் இருந்த சிறிய யாக குண்டத்தின் ஒளி வேறு, புருவம் உயர்த்த வைத்தது.
தங்களைக் கடந்து செல்ல முயன்ற ஒருவரை நிறுத்தி, "அம்மா எங்க?" என அஸ்வின் கேள்வி கேட்க, ஆரோஹி அவர் கையிலிருந்த தட்டிலிருந்து லட்டை எடுத்து ருசி பார்க்க, அஸ்வினை மறந்து தட்டை அவளிடம் நன்றாகவே நீட்டினார் அந்த மனிதர்.
"இன்னும் எடுத்துக்கோங்க ம்மா." வீட்டின் முதல் மருமகளாக வந்தவளைப் பார்க்கும் ஆர்வம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்க, திருமணத்திற்கு அடுத்த நாள் ஆரோஹியின் எதார்த்தமான பேச்சு, அனைவரிடமும் பாரபட்சம் பாராமல் பழகும் குணம், அனைத்தையும் கவனித்தவர்கள் மனதில் இந்த பெண் தங்கமாகவே பதிந்துபோனாள்.
"வேற ஸ்வீட் இல்லையா அங்கிள்?"
"இருக்கு ம்மா, உங்களுக்கு புடிக்கும்னு பெரிய அம்மா பைன் ஆப்பிள் கேசரியும், பக்லவா ஸ்வீட்டும் பண்ணி வச்சிருக்காங்க."
ஆரோஹிக்கு கை, கால்கள் நிற்கவில்லை, துள்ளி ஓட தயாரானவளைப் பிடித்து வீட்டினுள் நகர்ந்தான். அவனுக்கு தெரிந்துவிட்டது இனி இது அவன் வீடல்ல, அவன் மனைவியின் வீடென்று.
எப்பொழுது வந்தாலும் அஸ்வினுக்கு அங்கு கவனிப்பு பலமாகவே இருக்கும். ஆனால் கடந்த இரண்டு முறையாக அனைவரின் கவனிப்பும் இந்த பெண்ணிடம் சென்றுவிட்டது.
அதனால் தான் அவரிடமிருந்து பதிலும் வராதென தானே முடிவெடுத்தவனாய் அஸ்வின் வீட்டினுள் செல்ல, புது மாப்பிள்ளையின் தோரணையோடு பட்டு வேஷ்டி அணிந்து மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் சித்தார்த்.
"என்னடா உனக்கும் அவசர கல்யாணமா?" கேலியோடு அஸ்வின், சித்தார்த்தை நோக்கி நடக்க,
"ம்ம்ம், பண்ணிட்டாலும்..." நொந்துகொண்ட சித்தார்த், "என்னடா இன்னைக்கு அப்பா பிறந்தநாள் கூட மறந்துட்டியா?"
"மாமா பிறந்தநாளா? என்ன நீங்க, என்கிட்ட சொல்லவே இல்ல?" அஸ்வினைக் கடிந்தவள், "அங்கிள் எங்க, நான் விஷ் பண்ணிட்டு வர்றேன்." மதி, ராகவின் அறை நோக்கி நடந்தவளை, இருவரும் எட்டிப் பிடித்து வேகமாக நிறுத்தினர்.
இருவரின் வேகத்தையும் பார்த்து பெண்ணவள் பயந்து பார்க்க, "அங்க போகாத..." என்றனர் இருவரும் ஒருசேர.
சகோதரர்களை விசித்திரமாக பார்த்தவள், "ஏன்?" என கேட்டாள்.
"அதெல்லாம் அப்டி தான்... போகாத, கிட்சன்ல ஸ்வீட் இருக்குன்னு சொன்னாங்கள்ல பாக்கலயா?" மனைவியை திசை திருப்பும் எண்ணத்தோடு அஸ்வின் பேச அவள் அசையவே இல்லை.
"இல்ல, நான் அங்கிள பாத்துட்டு போறேன்." ஆண்கள் இருவரும் தடுப்பதன் காரணத்தை அறிந்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம், பிடிவாதமாய் மாறியிருந்தது ஆரோஹிக்கு.
"அதோ அப்பா வந்தாச்சு" நிம்மதியாக சித்தார்த், அஸ்வின் பெற்றோரைப் பார்க்க,
மதி, ராகவ் இருவரும் பட்டு வேஷ்டி சட்டை, பட்டு புடவையோடு தங்கள் அறையை விட்டு வந்தனர்.
"ஹாப்பி பர்த்டே மாமா! இவர் சொல்லவே இல்ல, இன்னைக்கு உங்க பர்த்டேனு. ஒரு கிஃப்ட் கூட வாங்கல." வருத்தமாக கூறியவள் இறுதியாக கணவனை முறைத்து நின்றாள்.
அஸ்வினுக்கு சங்கடமாக இருந்தது.
"உங்கள பாத்து அஸ்வினுக்கு உலகமே மறந்து போச்சு போல. இல்லனா எங்க இருந்தாலும் அப்பாக்கு முதல் விஷ் அஸ்வின் தான்."
அஸ்வின் தந்தையை நெருங்கி, "சாரி ப்பா..." என்றதோடு தந்தையை அணைத்து, மறவாமல் தன்னுடைய வாழ்த்தையும் கூறி விலகி நின்றான்.
"ஏன்டா இவ்ளோ ஃபீல் பண்ற? விடு... இதையும் மறக்குற அளவுக்கு உன் கல்யாண வாழ்க்கை அமையிறத விட, இந்த விஷ் எல்லாம் எனக்கு பெருசா படல." என்ற தந்தைக்கு அளவளாவிய மகிழ்ச்சி தான் மகனின் செயல்.
மதிக்கும் அதே மகிழ்ச்சி தான். "டேய் மகனே, மறந்துட்டு சமாளிக்காத... உன் அப்பா காலைல இருந்து உன்னோட ஒரு கால்காக தான் வெயிட் பண்ணிட்டே இருந்தார்."
ஆரோஹி, "இவர் இப்டி தான் அத்தை, நான் பத்து நாளா என்னோட ஸ்கூட்டிய ஹாஸ்டல்ல இருந்து எடுத்துட்டு வர கேக்குறேன். செய்யவே மாட்டிக்கிறார், நல்லா ரெண்டு திட்டுங்க அத்தை, என் பங்குக்கும் சேத்து."
போலியாக ஆச்சரியப்பட்ட மதி, "இது வேறயாமா? ஒரு வாரம் சாப்பாடு போடாத. சொன்ன பேச்ச, தானா கேப்பான்."
"அப்டியே அவ போட்டுட்டாலும்..." அஸ்வின் முணுமுணுக்க, அமைதியாக அவன் கையில் கிள்ளி முறைத்தாள்.
மகன் சன்னமான சிரிப்போடு தந்தையைப் பார்த்து, "ஏன் ப்பா, பார்ட்டி அரேன்ஞ் பண்ணத கூட என்கிட்ட சொல்லல?" போலியான கோவத்தோடு கேட்டான்.
"இந்த வருஷம் கேன்சல் பண்ணியாச்சுடா." என்றான் சித்தார்த்.
"ஏன்?" அஸ்வின் கேள்வி பெற்றோரைப் பார்த்தது.
மதி, ராகவ் இருவருக்கும் இதில் துளி கூட வருத்தம் தெரியவில்லை. பொதுவாக ராகவ் பிறந்தநாளை பல வருடங்களாகவே, தொழில் முறை நண்பர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்து, தொழில் வட்டாரத்தை வலுவாக்கிக் கொள்வார். ஆனால் இம்முறை அது இல்லை என கேள்விப்பட்டதும் நம்பவே முடியவில்லை அஸ்வினால்.
"பார்ட்டி எல்லாம் வைப்பிங்களா மாமா?"
"எப்பவும் நடக்கும் ஆரூ." என்ற அஸ்வின் பெற்றோரிடம் மீண்டும் வந்து, "என்ன ரீசன் ப்பா?" தீவிரமாக கேட்டான்.
"விடேன்டா..." மதி அவ்விடம் விட்டு அகலப்பார்க்க, அவரை பிடித்து வைத்தான் மைந்தன்.
இவன் விடப்போவதில்லை என அறிந்தவர், "உங்க கல்யாணம் முடிஞ்சதும் நடக்குற முதல் ஃபங்ஷன், என் பையனோட மருமகளும் வந்து முன்னாடி நிக்கணும். நீ மட்டும் தனியா வந்து நிக்கவா இவ்ளோ பாடு பட்டேன்? இவன் உங்க கல்யாண விஷயத்தையே வெளிய தெரிய கூடதுன்னு சொல்லிட்டான்." மதிக்கு, மருமகளை உலகிற்கே காட்டிவிடும் வேகம் அதிகமிருக்க, மகனோ அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு நிறுத்திய கோவம் அவன் மேல்.
"எனக்காக யோசிக்காதிங்க அத்தை, நீங்க எப்பவும் பண்றதை பாருங்க அத்தை. நான் நைட் வேணும்னா ஹாஸ்டல் போய்க்கிறேன்."
மருமகளின் பேச்சு பிடிக்காத ராகவ் உடனே அவளை இடையிட்டு, "இல்ல ம்மா... என் வீட்டு விசேஷம், அது சின்னதோ பெருசோ, என் குடும்பம் மொத்தமும் என் பக்கத்துல நிக்கணும். என் குடும்பம்னு நான் சொல்றது நீயும்தான் ம்மா.
இதுல யாரோ மாதிரி உன்னை எங்கையோ விட்டுட்டு நாங்க சந்தோசமா எப்படி ம்மா இருப்போம்? அந்த நினைப்பே உனக்கு இனி வரக் கூடாது. மதி பிள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்து குடு." சற்று கோபமாகவே கூறியவர் முகம், மருமகளின் சுருங்கிய முகத்தைப் பார்த்த உடனே வருந்தியது.
"மாமாக்கு கிஃப்ட் வாங்கி குடுக்கலைனு பீல் பண்ணல?" அவள் மனநிலையை மாற்ற உடனே பேச்சை மாற்றி திசை திருப்ப முயன்றவர், அவள் பொம்மை போல் தலை ஆட்டுவதைப் பார்த்து சிரிப்போடு "அன்னைக்கு சர்க்கரை தூக்கலா போட்டு ஒரு காபி குடுத்தியே, அதே இன்னைக்கும் கிடைக்குமா?"
"ஐயோ மாமா! அன்னைக்கு அத்தைகிட்ட கேட்டு சக்கரை போடுறப்போ, இந்த சித்தார்த் பின்னாடி நின்னு பயமுறுத்திட்டான். பயத்துல கைல இருந்த எல்லாம் கொட்டிடுச்சு. வேஸ்ட் ஆக கூடாதுனுனுனு..." சொல்ல முடியாமல் நாக்கைக் கடித்து நிற்க ஆண்கள் அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டது.
"அதை தான் அவரும் கேக்குறார் ஆரூ. அப்பாக்கு எப்பவும் சுகர் அதிகமா சாப்பிட பிடிக்கும். ஆனா அம்மா விட மாட்டாங்க." அஸ்வின் எடுத்துரைக்க, வேகமாக சென்றவள் தேவைக்கு அதிகமாகவே சர்க்கரை போட்டு எடுத்து வந்து, ராகவ் கையில் கொடுத்தாள்.
காபியை ருசி பார்த்தவர் ஆரோஹியிடம் பாராட்டிவிட்டு மகனிடம் வந்தவர் அவன் முதுகில் தட்டி, "வேகமா சமையல் கத்துக்கோடா..."
சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி தந்தை கூற அஸ்வினும் அதே நிலையில், "ப்ராஸஸ் எப்பவோ ஸ்டார்ட் பண்ணிட்டேன் ப்பா."
"பொழைச்சுக்குவடா மகனே..." ராகவ் சிரித்துவிட, மகன் தந்தையோடு இணைந்து கொண்டான்.
அதே நேரம் மதி தன்னுடைய மூத்த மகனுக்கும் மருமகளுக்கும், புது ஆடைகளை கொடுத்து அரை மணி நேரத்தில் தயாராகி வர அனுப்பினார்.
ஆரோஹி, அஸ்வின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க, ஒரு வேலை ஆளை அவளோடு அனுப்பி அவளுக்கான புடவையை அணிய அனுப்பி வைத்தார்.
சித்தார்த் அறையில் தயாராகியிருந்த அஸ்வின், அரை மணி நேரம் கடந்ததை உணர்ந்து தன்னுடைய அறைக்கு சென்றவன், அறையினுள் நுழைந்த உடனே வந்த பட்டின் மணத்தை, உணர்ந்த நொடி வித்தியாசமாய் ஏதோ உணர்வு மனதினுள்.
இதுவரை பெற்றோரின் அறையில் மட்டுமே உணர்ந்த பெண்மையின் மணம், முதல் முறை தன்னுடைய அறையில் இருப்பதை உணர்ந்தவன் கண்களிலும் ஒரு பிரமிப்பு.
அந்த பிரமிப்போடு மேலும் ஓர் அடி எடுத்து வைத்தவன் காதில், மெல்லிய முணுமுணுப்பு சத்தம். சத்தம் வந்த திசையில் திரும்ப, அவன் மனைவி ஏதோ பாட்டு ஒன்றை பாடிக்கொண்டிருந்தாள், அவனது அறையில்.
அவளது வாசனை மொத்தத்தையும் அவ்விடத்திற்கே பரப்பிவிட்டு, சிறு பிள்ளை போல் அவன் வைத்திருக்கும் கண்ணாடி ஒவ்வொன்றாக எடுத்து அணிந்து, நிலை கண்ணாடி வழியே தன்னை பார்த்து ரசித்தபடியே நின்றாள்.
அஸ்வின் அறை நல்ல விசாலமான அறை தான். அறையின் மத்தியில் ஐந்து பேர் படுக்கும் அளவு, படுக்கையும் மிகவும் பெரியதே. மகன் கேட்டதன் பெயரில் அளவிற்கு விட பெரியதாகவே செய்துவிட்டார் ராகவ்.
அறையின் ஒரு மூலையில் சொகுசு சோபா ஒன்றோடு, ஒரு திவான் இருந்தது. அறையின் மற்றொரு பக்கம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பக்கம் நல்ல விசாலமான குளியலறை, மற்றொரு பக்கம் அதை விட விசாலமான வாக்இன் வார்ட்ரோப், அஸ்வின் பார்த்து பார்த்து வடிவமைத்தது.
அவன் கைக்கடிகாரத்திலிருந்து கூலர்ஸ், ஷூ வரை ஒவ்வொன்றையும் வைக்க, அவனே செதுக்கிய இடம் அது.
அதில் ஆரோஹி அவன் ஆசையாக வாங்கிய கருப்பு கண்ணாடியை, மாற்றி மாற்றி அணிந்து ரசிப்பதைப் பார்க்க அறைக்குள்ளே வானவில் நுழைந்ததை போல் வண்ணமயமாகியது.
கதவை அடைத்து வந்த அஸ்வின் அவளை நோக்கி நடந்த அந்த ஐந்தே நொடியில், அவளை மொத்தமாய், மொத்தமும் மறைக்காத அவள் பளிச்சென்ற குட்டி இடையையும், பருகிய பிறகே உணர்வின் பிடியிலிருந்து வெளியேறினான்.
கணவனின் உரிமையோடு அல்லாமல் கள்வனாய் அவளைப் பார்த்ததை உணர்ந்து, இறுக்கமாய் கண் மூடி சிரிப்போடு மீண்டும் அவளைப் பார்த்தான்.
இளம் நீல நிற புடவையில், அடர் பழுப்பு நிற பார்டர் வைத்த புடவை, அவளது உடலில் இரண்டாம் தோல் போல் பாந்தமாக தழுவியிருக்க, மாங்காய் இழைந்தோடிய புடவையில் பூக்களை தூவியது போல், இன்னதென கூறமுடியாத வடிவங்கள் அழகாக உடல் முழுவதும் படர்ந்திருந்தது.
பளிச்சென்ற நிறமாக இருந்தால் அவளுக்கு இன்னும் எடுப்பாய் இருந்திருக்குமோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனாலும் இந்த நிறமும் அவளுக்கு நேர் மேலே இருந்த விளக்கின் பயனால், புடவையோடு அவளது மஞ்சள் மேனியும் ஜொலித்தது.
இத்தகைய ஜொலிப்பில் அடர் நிறத்தில் இருந்த ரவிக்கையின் இறுதியில், தங்கமாய் மின்னிய அவளது சிறு இடையை தவற விடாமல் கண்டது அவன் தவறில்லையே?!
குத்தும் அவன் பார்வையை உணர்ந்தவள் கண்ணாடி வழியே பின்னால் பார்த்து, "உங்க வார்ட்ரோப் கலெக்ஷன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் இந்த கூலர்ஸ்... எனக்கு புடிச்சிருக்கு கிரிக்கெட்டரே. இல்லாத கலர் இல்ல, ஒவ்வொரு கலருக்கும் மூணு, நாலு ஆப்ஷன் வேற..." மெல்ல நடந்தவன் நடை, அவளை விட்டு சற்று தூரமே நின்றது.
"உனக்கு வேணும்னா எடுத்துக்கோ ஆரூ."
"இது ஜென்ஸ் போடுறதுல?"
"ரைட்ல இருக்க மூணு ரோவும் யுனிசெக்ஸ் ஐட்டம் தான்."
ஆரோஹி, "அப்போ நான் எக்குத்தப்பா தூக்கிடுவேன்." எச்சரிக்கையாக அவள் கூறி சிரிக்க, தலை ஆட்டி சம்மதம் கூறினான்.
அவளுக்கோ அவன் அனுமதி கிடைக்கவும் எதை எடுக்கவென தெரியவில்லை. அனைத்தும் அழகாக தெரிகிறதே... முதலிலிருந்து தேடலைத் துவங்கினாள்.
"கன்ஃப்யூஷன் எதுக்கு ஆரூ? மொத்தமும் உன்னோடது தான். நாம போறப்போ எல்லாத்தையும் எடுத்துக்கலாம். நம்ம வீட்டுல இருக்க கலெக்ஷன்ஸ் பாரு, இல்லையா நான் வெளிய போறப்போ வாங்கிட்டு வர்றேன்." அவள் ஆசையைப் பார்த்து தானே முடிவெடுத்தான் அஸ்வின்.
"இல்ல, நான் இந்த ரெண்ட மட்டும் எடுத்துக்குறேன்." என்றவள் அவனைத் திரும்பி நின்று சொன்னவள், தான் தேர்ந்தெடுத்த கண்ணாடியை அணிந்தவாறே அவனைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்.
"ஆ... கேக்கணும்னு நினைச்சேன், ஏன் அத்தை ரூமுக்கு போக வேணாம்னு சொன்னிங்க?"
அஸ்வின் சங்கடமாய் உணர்ந்தான். இதை அவளிடம் பகிர்ந்துகொள்வதா? அப்டியே பகிர்ந்தாலும் அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற சிறு சந்தேகம்.
அவன் மனைவியோ ஆவலாய் அவனைப் பார்க்க, "ஒரு தடவை அவசரம்னு நான் கதவைத் தட்டாம அவங்க ரூம்குள்ள போய்ட்டேன். ஹக் பண்ணிட்டு இருந்தவங்க, டக்குனு விலகி நிக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. இதே மாதிரி சித்தார்த்துக்கும் நடந்துருக்கு. அதுல இருந்து அவங்க ரூம் திறந்திருந்தா கூட அந்த பக்கம் போக மாட்டோம்." என மொழிந்த அஸ்வின் நகைப்பை மெல்லிய புன்னகையோடு கேட்டவள்,
"ரொம்ப ரொமான்டிக் கப்பிள்ஸா?"
"ரொம்பவே... லவ்னா என்னன்னே தெரியாத வயசுலயே என்னை பொறாமைப்பட வச்சிட்டாங்கனா பாத்துக்கோ." என்றான் கால்சட்டையில் இரண்டு கைகளையும் நுழைத்து.
"அதே ஆர்வத்துல கண்டிப்பா ஏதாவது ட்ரை பண்ணிருப்பீங்களே...?"
"ம்ம்ம்... ஒண்ணுக்கு ரெண்டு ட்ரை பண்ணேன். எதுவும் செட் ஆகல." என்றான் போலியான சோகத்தோடு.
அவனை மேலும் கீழும் புருவம் உயர்த்தி பார்த்தவள், "ரொம்ப தான் சோகம் போல... என்னை பாத்து என்ன யூஸ்? ரொமான்ஸ் எல்லாம் உங்களுக்கு செட் ஆகாதுனு தான் எனக்கு தோனுது." முதலில் சிறிது கோவம் எட்டி பார்க்க, பிறகு அவனை சீண்டும் பொருட்டு பேசி வைத்தாள்.
மனைவியின் உணர்வைப் புரிந்தவன், ஆண் அகங்காரம் அஸ்வினை சீண்டி விட, மனைவிக்கு இப்பொழுதே அதை அபத்தமான குற்றசாட்டு என காட்டிவிடத் தான் தோன்றியது. அதை விடுத்து அவளை சீண்டும் எண்ணம் முளைத்தது.
இருவருக்கும் இடையே இருந்த நான்கடி இடைவெளியை இமை தாழ்த்தி பார்த்தவன், பிறகு மனைவியைக் குறும்பாக பார்த்தவாறே மெல்ல மெல்ல இடைவெளி குறைத்தான்.
"சாரீ கட்டி முடிச்சாச்சா?"
அவனது எண்ணம் புரியாமல் எதார்த்தமாகவே அவளிடமிருந்து வந்தது பதில், "ம்ம்ம்... ஓவர் ஆச்சே..." என்று.
"பாத்தா அப்டி தெரியலயே?"
ஆரோஹியின் கைக்கெட்டும் தூரத்தில் நின்றவன், சற்று குனிந்து அவள் காதுகளுக்கு நெருக்கத்தில் வந்து கிசுகிசுக்க, ஆரோஹியின் விழிகள் பட்டாம்பூச்சியைப் போல் படபடவென அடித்துக்கொண்டது.
வேகமாக திரும்பி நின்றவள் மனம் இடியாய் அடிக்க, கண்ணாடியில் தன்னைக் குனிந்து பார்த்தவளுக்கு எந்த தவறும் தென்படவில்லை.
குற்றம் சாட்டும் பார்வையோடு அதே கண்ணாடி வழியே அஸ்வினைப் பார்த்தவள், கண்களை சுருக்கி கோவத்தைக் காட்ட, அவன் கண்களில் கள்ளம் கூடியது.
பார்வையைத் தழைத்தவன் சிறிய அளவு தெரிந்த பாவையின் இடையைக் காட்டி, "இது இப்டியே இருந்தா எனக்கு சந்தோசம் தான்." சரசமாய் காதில் வினவியவனது கண்களில் இருந்த குறும்பைத் தாண்டி, கொட்டிய ஆசையானது ஆரோஹிக்கு மூச்சடைக்க செய்தது.
தன்னை கண்டுகொண்டாள் என்பது, பூனையாய் நகர்ந்து இடையின் புடவையை அவள் சரி செய்ததில் அறிந்தவன் கண்கள், இப்பொழுது கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அவள் கைகளைப் பின்தொடர, அவஸ்தையாய் கண்களை சுருக்கி அவனை விழியால் கெஞ்சினாள்.
"டிஸ்அப்பாயிண்டட்! பட், அட் தி சேம் டைம் ஹாப்பி வித் தி வியூ."
அணைக்கும் தூரத்தில் அவள் இருந்தும், அணைக்க முடியாத இந்த பெயர் சொல்லா உணர்வை வெறுத்தவன் பார்வை, அவளது பின்னிடையைப் பார்க்க சொக்கிதான் போனான்.
முன்னால் அவள் செய்த மாற்றத்தின் விளைவால், பின்னால் அவளது புடவை மேலும் விலகி, பளிச்சென அவளது முதுகுப்பகுதி தெரிய, யோசிக்காமல் தன்னுடைய விரல் நுனி கூட படாமல் புடவையை ஏற்றி விட்டான்.
மென்மையாய் உடலில் உரசிய அந்த புடவையானது, அவனது கைகளே உடலில் பதிந்தது போல், தேன் கதிர் ஒளிகள் வீசும் அவள் விழிகள் மூடி, இரவின் குளுமையை அனுபவித்தது.
இருவரும் ஒருவரில் மற்றவர் எண்ணங்களை அருகாமை என்னும் கனவு கொண்டு நிரப்பினர்.
"என்ன சொன்ன ஆரூ, எனக்கு ரொமான்ஸ் வராதா?" அவன் கேட்ட கேள்வியில், அவள் தலை குழந்தையின் கைகளின் வேகத்தில் ஆடியது.
"ஓ... எனக்கு தான் அப்டி கேட்டுச்சோ?" அதற்கும் ஆமாம் என அவள் தலையை ஆட்ட, படபடக்கும் இமைகளைப் பார்த்தவன், "அழகா இருக்கடா பட்டாம்பூச்சி..." உண்மையாய் உரைத்தவன் அவ்விடம் விட்டு அகன்ற பிறகும், ஆரோஹி அவள் இடத்தில் இருந்து அசைந்த பாடில்லை. மொத்தமாய் சொக்கிவிட்டு சென்றுவிட்டான்.
அதன்பிறகு பொழுது இனிமையாய் அவர்களுக்கு நகர திவ்யா, மாறன் வரவு இன்னும் அந்நாளில் வீட்டினருக்கு ருசித்தது.
ராகவ் பிறந்தநாளுக்காக வீட்டிலே சிறு பூஜை ஏற்பாடாகியிருக்க, ரெக்கை கட்டி நேரம் பறந்தது.
அஸ்வின், ஆரோஹி இருவரும் தங்களுக்குள் தனியே நிகழ்ந்தேறிய அழகிய தருணத்தை, வெளியில் காட்டி மற்றவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல், எப்பொழுதும் நடக்கும் எதார்த்த பேச்சுகளோடு வீட்டிற்கு வர, அஸ்வின் உடலை காற்று கூட இடையே வர முடியாத அளவிற்கு தழுவியது யவ்னிக்காவின் பூவுடல்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro