2. அழனம்
சட்டையை இஸ்திரி செய்து போடும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை அவனுக்கு. ஆனாலும் அவளது கைப்பிடியில் கொத்தாகக் கசங்கிக்கொண்டிருந்த சட்டையைக் குனிந்து பார்த்தபோது கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"எக்ஸ்க்யூஸ்மீ!"
"எக்ஸ்க்யூஸ் பண்ண முடியாது. எனக்கு என் லக்கேஜ் திரும்ப வேணும்."
அவன் கண்களை விரித்து அவளை வினோதமாகப் பார்த்தான்.
அதற்குள் அவளருகில் இருந்த ஓட்டுநரோ, "மேடம்.. அப்ப.. டாக்சி வேணாமா..? நான் கிளம்பறேன், வேற சவாரி பிடிக்க" என்றபடி நழுவ, அவள் எதையும் லட்சியம் செய்யாமல் நின்றாள்.
வருணின் கைபேசி மீண்டும் ஒலித்தது.
நெடிய மூச்சொன்றை அவன் விட்டான், தோற்றதாய்.
"சரி, லக்கேஜ் தானே? டாக்சியை பிடிச்சு நானே மீட்டுத் தர்றேன். சட்டையை விடுங்க. போய் ஆட்டோ எதானும் தென்படுதா பாருங்க, அந்த டாக்சிய புடிக்கணும்னா ஆட்டோவுல பறந்து போனா தான் சாத்தியம்"
அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சட்டையின் பிடியைத் தளர்த்த, ஒருநொடி அவளது கவனம் மாறியதுமே பொறியிலிருந்து விடுபட்ட சுண்டெலியைப் போல ஓட்டமெடுத்தான் அவன், ஏர்ப்போர்ட் வாசலைத் தாண்டி.
சில காவலர்கள் சந்தேகமாகப் பார்க்க, ஜனங்களும் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல, ஜனக்கூட்டத்தில் அவன் தொலையும் வரை அவளோ அசையாமல் நின்றாள்.
தூரமாய்ச் சென்றவன் அவள் எங்கேனும் பின்தொடர்ந்து வருகிறாளா எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.
ஆளில்லை. எங்கும் தென்படவில்லை.
தனக்குள் குயுக்தியோடு சிரித்துக்கொண்டான் அவன். மனசாட்சியோ சாடியது.
'என்ன இருந்தாலும் நீ செய்தது தவறு.. நமது ஊருக்குப் புதிதாக வந்திருப்பவள், தன் கையிலிருந்த பொருளையெல்லாம் பறிகொடுத்துவிட்டு நிற்க, நீயோ கொஞ்சமும் மனிதாபிமானமற்றவனாய் இப்படி அவளை ஏமாற்றலாமா?'
ஆங்.. பேசுவடா பேசுவ! சட்டையைப் புடிச்சுக்கிட்டு என்னா திமிரா மிரட்டுனா என்னை!? அவளா பாவம்?? சட்டைய கசக்கி அசிங்கப்படுத்துனால்ல? இப்ப லோல்படட்டும்! எப்படியோ போய் ஒழியட்டும்!
கைநீட்டி ஒரு ஆட்டோவை அழைத்தவன், "போஸ்டல் காலனி வருமா அண்ணே?" என்க, ஆட்டோ அவனை அலட்சியமாக உரசி நகர்ந்தது. ஆனால் அடுத்ததாக இன்னொரு ஆட்டோ வந்து அவன் அருகில் நிற்க, மகிழ்ந்தவன் எங்கும் பாராமல் அதில் ஏறி அமர, "ஹாய்" என்ற பெண்குரல் அவனைத் திடுக்கிட வைத்தது.
ஆட்டோவும் அதற்குள் கிளம்ப, ஓட நினைத்து எடுத்த ஒற்றைக் கால் ஆட்டோவின் வெளியே தொங்க, அருகே திரும்பிப் பார்த்தான் அரண்ட பேயறைந்த முகத்தோடு.
அவள் சாந்தமாகச் சிரித்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.
துவேஷமில்லை. குரோதமில்லை. ஏன், வருத்தம்கூட இல்லை.
அவளது புன்னகை முகத்தைப் பார்த்தவன் சற்றே அவமானமாகத் தலையைக் குனிந்தான். அதுவும் 'மாட்டிக்கிட்டோமே' என்ற ஆற்றாமை மட்டுமே.
ஒன்றுமே பேசாமல் இருவரும் அமர்ந்திருக்க, யுகங்களாய் நீண்ட சுமார் நாற்பது நிமிடங்களில், ஆட்டோ அவன் கேட்ட இடத்திற்கு வந்திருந்தது.
"அடுத்த லெஃப்ட்டு ணா"
நீண்டநேரம் வாய்திறக்காததால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, அவன் சற்றே சிரமப்பட வேண்டியிருந்தது பேச.
இடது பக்கம் திரும்பி ஒரு அலுவலகத்தின் முன்னே ஆட்டோ நிற்க, இருவரும் இறங்க, "முன்னூறு ரூவா ஆச்சுப்பா" என்றார் ஆட்டோக்காரர் அவனிடம். அவளோ சுற்றுலாப் பயணியைப் போல அங்குமிங்கும் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளை முறைத்தவாறே பணத்தை எடுத்து நீட்டினான் அவன்.
ஆட்டோ கிளம்பவும் அவன் மீண்டும் ஓடுவதுபோல பாவனை செய்ய, அவளோ சாந்தமே உருவாய் நின்றாள்.
மீண்டும் ஒருமுறை செய்து பார்த்தான். இரண்டடி நகர்ந்து பார்த்தான். அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. குளிர்கண்ணாடியைத் தாண்டி கண்ணில் அடிக்கும் வெய்யிலை விரல்களால் குடைப்பிடித்துக் காத்தபடி அங்குமிங்கும் நிமிர்ந்து கட்டிடங்களை வேடிக்கை பார்த்தாள்.
பழைய வீடுகள். சுவர்களை அடைத்த விளம்பரத் தட்டிகள். மாடிகளில் ஓரிரண்டு தம்பதி சண்டைகள். கீழே சைக்கிள்களில் சிறுவர்கள். தள்ளுவண்டிகளில் தர்பூசணியும் அன்னாசியும். கூறுகளாய் கீரைகளுடன் கூடைக்கார கிழவி.
வருணுக்கு அவையெல்லாம் மிகப் பரிச்சயம். அவ்விடத்தில் பொருந்தாத் தொகையாய் நின்றவள் அவள் மட்டுமே.
அவளது அமைதியைப் பார்க்க வேறு கொஞ்சம் பயமாயிருந்தது. எனவே பவ்யமாக, "என்னோட ஆபிஸ். அவசர வேலை. முடிச்சிட்டு தேடப் போலாம்," என்றான் அவளிடம்.
"ஸ்யூர்"
அங்கேயே நிற்பாளென அவன் எதிர்பார்க்க, அவளோ அவனுடனே நடந்தாள்.
வெள்ளையடித்து ஆண்டுக்கணக்காகிய அக்கட்டிடத்தின் குறுகிய படிக்கட்டுகளில் ஏறி முதல்மாடி பால்கனியை அடைந்து, ஷட்டரை ஏற்றிக் கண்ணாடிக் கதவைத் திறந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த ஒருவன் தலையில் கைவைத்தபடி நிமிராமல் திரும்பினான் அவர்கள்புறமாய்.
"வருண்..? இது-"
"யார்னு கேக்காத மச்சான்.. பெரிய கதை. அவசரமா போணும்.. என்ன ஆச்சு? ஏன் கூப்ட்ட?"
புதியவன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு பின் தொய்வாக வருணிடம் திரும்பினான். கணினியைக் காட்டி, தலையை இடவலமாக ஒரே முறை அசைத்தான்.
வருணின் முகம் வெளிறியது.
"என்னடா சொல்ற?"
"உண்மைதான் மச்சான். இருபது லட்சமும் போச்சு.."
வருண் தொப்பென அருகிலிருந்த நாற்காலியில் விழுந்தான்.
"மோகன்.. நிஜமாவே போச்சா மச்சான்?"
"என்ன சொல்றதுன்னு தெரியல மச்சான்.. அந்த சிங் நம்மளை நல்லா செஞ்சிட்டான். இப்ப ஃபோனே எடுக்க மாட்டேங்கறான். சொளையா இருபது லட்சத்தை அவனை நம்பி குடுத்துட்டு--"
வருண் கையுயர்த்தி அவனை நிறுத்தினான்.
மோகன் அவனையும் அப்பெண்ணையும் மாறிமாறிப் பார்க்க, அவளோ அவனை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. மேலும் கீழுமாய் வேடிக்கை பார்த்தாள். சுவரில் ஒட்டியிருந்த சில வண்ணப் பேப்பர்களைக் கண்சுருக்கிப் படித்தாள்.
இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் தேய்த்துத் துடைத்துக்கொண்டு, எழுந்து இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தான் வருண்.
"மங்களூர் போயிட்டு வந்து இதை டீல் பண்ணுவோம். நான் காரை எடுத்துட்டு போறேன். நீ பின்னால வந்து சேரு."
மோகன் மீண்டும் அவளை ஒருமுறை பார்த்தான். எழுந்து வருணின் அருகே வந்தவன், அவளுக்குக் கேட்காதவண்ணம், "மச்சான்.. நீ இதை எப்படி அமைதியா எடுக்கறனு எனக்குப் புரியல. உன் மனசுல என்ன ஓடுதுன்னும் எனக்குத் தெரியல. நீ ஷாக்ல இருக்கனு நெனைக்கறேன்.. மைண்ட் தெளிவா இல்லாதப்ப காரெல்லாம் தொட வேணாம்டா.." என்றான் தாழ்ந்த குரலில்.
வருண் யோசனையாக நிற்க, அவளோ கையருகே இருந்த கண்ணாடிக் கதவை இருமுறை தட்டினாள்.
"ஹலோ!? என் பேக்ஸ்?"
கோபத்தைக் கட்டுப்படுத்துவதுபோல கைகளையும் கண்களையும் இறுக்க மூடித் திறந்தான் வருண்.
"கிளம்பறேன் மச்சான்."
அவளைத் தாண்டிக்கொண்டு வெளியே நடந்தவன், பக்கத்து அறையைத் திறந்து சில பைகளை எடுத்துக்கொண்டு படியிறங்கினான் பரபரவென.
கீழே சென்று நின்றவன் அவளைத் தேடிட, அவளோ மாடியிலிருந்தே அவனைப் பார்த்திருக்க, "என்ன?" என்றான் சத்தமாக.
"உன் ரூம் கதவை நீ பூட்டல."
"ப்ச், அதை உள்ள இருக்கறவன் பாத்துக்குவான். உனக்கு உன் பொட்டி தானே வேணும்.. வா."
அதற்குள் மோகனும் வெளியே வந்து எட்டிப்பார்த்தான். அவள் தோளைக் குலுக்கியபடி இறங்கிச் செல்ல, மோகன் பெருமூச்சுடன் கதவைப் பூட்டினான்.
சில தெருக்கள் தாண்டி நடந்து ஒரு சாலை முனைக்கு வந்து, அங்கிருந்த டாக்சி ஸ்டாண்ட்டை அவளுக்குக் காட்டினான்.
"இங்கதான் டாக்சி பிடிச்சேன். ரேட் பேசி, காசைக் குடுத்துட்டு ஏறினோம். டிஜிட்டலா எதுவும் செய்யல. அதனால, டீடெய்ல்ஸ் எதுவும் எங்கிட்ட இல்ல. இங்கயே வெய்ட் பண்ணீன்னா, அந்த டாக்சிக்காரன் அடுத்த சவாரிக்கு வரும்போது புடிச்சிடலாம். குட்பை."
திரும்பி நடக்க எத்தனித்தபோது அவன் முதுகுப்புறம் மாட்டியிருந்த பையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள் அவள்.
"ப்ச், இப்ப என்ன?"
"என் பைகள்."
கைகளை முறுக்கியவன் பற்களைக் கடித்துத் தாடையையும் இறுக்கினான்.
"திருப்பித் திருப்பி சொன்னதையே சொல்ற! நீயென்ன பைத்தியமா? நானும் பொண்ணாச்சேன்னு பொறுமையா உன்னை ஹேன்டில் பண்ணா, நீ ரொம்ப ஓவரா போறியே.. ஒண்ணு விட்டேன்னு வை, செவுள் பேந்துரும்!"
கையை முகத்திற்கு நேரே உயர்த்தி அவன் மிரட்டிய நேரத்திலும் துளிகூட அசராமல், கண்ணிமைக்காமல் அவள் நிற்க, அவன் அயர்ந்துபோனான்.
கொஞ்சம் முகத்தை சுழித்து பயந்ததுபோல நடித்திருந்தாலேனும் அவன் மனம் திருப்திப் பட்டிருக்கும்போல. அவளோ ஊடுருவும் பார்வையுடன் ஆணியடித்தது போல நிற்க, அவன் உண்மையிலேயே சோர்ந்தான்.
"ஆண்டவா.."
"சாம தான பேத தண்டம். நாலு தானே சாணக்கிய வழி.. நாலையும் நடத்தியாச்சு. அடுத்து என்ன?"
அவன் 'ஞே' என விழித்தான்.
"நான் சொல்றேன். சரண். அதாவது, சரண்டர்."
"வாட்?"
"யோசி. புரியும்."
அங்கிருந்த நிழற்குடை அருகே ஒயிலாக சாய்ந்து நின்றவள் தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு மிட்டாயை எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டாள்.
வருணின் நெற்றி நரம்புகள் புடைத்தன. கண்கள் கொஞ்ச கொஞ்சமாக சிவக்கத் தொடங்கியிருந்தன. நெஞ்சில் வெறுப்புத் திரண்டு வெடிகுண்டாய் வெடித்துவிடும் அழுத்தம் உருவானதை உணர்ந்தவன், வாய்வழியே நெடிய மூச்சொன்றை விட்டான். காலால் கீழே கிடந்த அட்டையொன்றை ஓங்கி உதைத்து சுவற்றில் தெறிக்கச் செய்துவிட்டு, அதுவும் போதாமல் சுவற்றிலும் நான்கைந்து முறை உதைத்து சோர்ந்தான்.
"உன் பேக்ஸ் தானே உனக்கு வேணும்? வா, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போ. கம்ப்ளெய்ன் பண்ணு. நீயாச்சு அவங்களாச்சு. என்னை விட்டுரு."
"நானா தொலைச்சிருந்தா அதை செய்யலாம். என் பைகள் காணாமப் போனதுக்குக் காரணம் நீ. அதுக்குப் பொறுப்பேத்துக்கிட்டு அதை மீட்டுத் தரணும்னு உனக்குத் தோணலையா?"
"என்னை என்ன தான் பண்ண சொல்ற?"
"என் பேக்ஸ்--"
"ஐயோ அம்மா தாயே! என்னால முடியல! பேக், பேக், பேக், பேக், பேக். லட்சம் தடவை கேட்டு சலிச்சிப் போச்சு. நீயே நான் என்ன செய்யணும்னு சொல்லு; அதை நான் செய்யறேன். உன் பையைக் கண்டுபிடிக்க எனக்குத் தெரியல. நான் இன்னும் அரைமணி நேரத்துல கஸ்டம்ஸ் ஆபிஸ்ல இருக்கணும். நாளைக்கு என் ப்ரெண்டு கல்யாணம். நான் காரை எடுத்துட்டுப் போகலைன்னா அங்கே கல்யாணம் நின்னு போறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. தயவுசெய்து என் நிலமையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்னை விட்டுரு."
கைகூப்பி அவன் சரணடைந்து கெஞ்ச, அவள் யோசனையாகப் பார்த்துவிட்டுத் தலையசைத்தாள்.
"சரி, வா போலாம்."
"எங்கே?"
"கஸ்டம்ஸ் ஆபிஸ். உன் வேலையை முடிச்சிட்டு என் லக்கேஜை தேடலாம்."
"வாட்?"
*******************************
ஓகே... மை டியர் மக்களே.. இது இரண்டாவது அத்தியாயம். போன வருஷம் எழுத ஆரம்பிச்சு, இந்த வருஷம்தான் வெளியிட முடிஞ்சது.. ஹிஹி..
இது கொஞ்சம் வித்தியாசமான ப்ராஜெக்ட். கடகடன்னு எழுதறது கஷ்டம். (அதுக்காக மத்த கதையெல்லாம் கடகடன்னு எழுதிக் கிழிச்சுட்டயான்னு கேக்காதீங்க.. என் நிலமை அப்படி.)
கதை நத்தை மாதிரி ஸ்லோவா போகுதுன்னு தெரியுது எனக்கும். எனவே சேர்த்து வைத்து ஒரேயடியா படிக்கறதுதான் நல்லது. நானும் ப்ரெஷ்ஷர் இல்லாம மெதுமெதுவா அப்டேட் பண்றேன்.
எழுத்து நடையை கொஞ்சம் மாத்த ஆரம்பிச்சிருக்கேன். வித்தியாசங்கள் எதாச்சும் கண்டுபிடிச்சீங்களா? கமெண்ட்டில் சொல்லவும். மற்ற கதைகளை வாசித்து, மதுவை மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ளவும். இன்னும் நான்கே மாதத்தில் பட்டமளிப்பு விழா முடிந்து முழு டாக்டர் ஆனதும், வேலைக்குக் கூடப் போகாமல் ஒரு வருடம் உட்கார்ந்து பாதியில் விட்ட கதைகளை எல்லாம் முடித்துவிட்டுத் தான் மறுவேலை. இது என் ஆதர்ச நாயகி டாக்டர் ப்ரகதி மீது ஆணை!
அனைவருக்கும் எனது அன்பு.
மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro