21
வருண் கூறுவதையே இமைக்கவும் மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஈஷ்வரபாண்டியன் “நிறுத்துடா….. நிறுத்து….எனக்கு நீ சொல்ற ஒன்னும் புரியல …. நான் உன்னை அந்த நிலவறைல பார்த்தது வரைக்கும் தான் எனக்கு தெரியும் …. இன்னும் இந்த லிங்கத்தை பத்தி உனக்கு எப்படி தெரியும்னு கூட எனக்கு தெரியாது …. இதுல விஷ்ணு எங்க இருந்து வந்தான்…அவனை உனக்கு எப்படித் தெரியும்… அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ...நீ என்னை கொலை செய்ற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் ….” என்று குழப்பத்துடனும் ஆவேசத்துடனும் கூறிக்கொண்டே சென்ற ஈஷ்வரபாண்டியனை அமைதியாக கையமர்த்திய வருண்
“ அட அட...பொறுமையா இருங்க அங்கிள் அதுக்குள்ள என்ன அவசரம்... இது கூட சொல்லாமயா உங்களை கொன்னுடுவேன் இருங்க அதையும் சொல்றேன் … “என்றவன் தன் பூர்வ ஜென்மத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் கூறி முடித்தான் . “ இப்ப புரியுதா நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு …. முதல்ல அந்த மரகதலிங்கம் எடுக்கப்போகும்போது என்ன ஃபாலோவ் பண்ணி வந்தீங்க பாருங்க அது தப்பு …. எவனோ என்னவோ பண்ணிட்டு போறான்னு விடாமா என்னை பின்தொடர்ந்து வந்து அந்த நிலவறைக்குகைக்குள்ள வந்தீங்க பத்தீங்களா அது இரண்டாவது தப்பு …. அப்புறம் போலீஸ்க்கு போறேன்னு சொல்லிட்டு என்னையே ஒரு ஆட்டு ஆட்டிட்டீங்க பாருங்க அது தான் இருக்குறதுலேயே மஹாபெரிய தப்பு…. என்வாயாலேயே என் உழைப்பால வர போகிற பணத்தை பங்கு போட வச்சீங்க பாருங்க …. இதையெல்லாம் நினைக்க நினைக்கத்தான் அப்படியே உங்களை கொல்லனும்குற ஆத்திரம் வருது …. “ என்று தன் கையில் இருந்த துப்பாக்கியை அவரை நோக்கி குறிப்பார்த்துக்கொண்டே கூறினான் வருண்.
“ வேண்டாம் வருண் வேண்டாம்… நீ ரொம்ப பெரிய தப்பு பண்ற …. இந்த மாதகரி விஷயமே வேண்டாம்னு சொன்ன என்னையும் உன் கூட சேர்ந்து தப்பு பண்ண வச்ச ...இந்த முன் ஜென்ம கதையையும் விஷ்ணுவையும் பத்தி முதல்லயே சொல்வியிருந்தா நான் உன்னோட இந்த அயோக்கியத்தனத்துக்கு உடந்தையா இருந்திருக்கவே மாட்டேன். … போலீஸுக்குதான் போயிருப்பேன் …. ராஸ்கல்" என்று கருவினார் ஈஸ்வரபாண்டியன் .
“ அதுக்குதான் நான் உங்களுக்கு அந்த கதையைப் பத்தி சொல்லலை அங்கிள்…. இதுல விஷ்ணு சம்பந்தப்பட்டிருக்கான்னு தெரிஞ்சா நீங்க வேற மாதிரி முடிவு எடுத்துடுவீங்களோன்னு எனக்கு லேஸா டவுட் இருந்துச்சு … அதான் நான் உண்மையை சொல்லாம மறைச்சேன் … சரி சரி எனக்கும் நேரமாச்சு உங்களுக்கும் நேரமாச்சு …. வந்த வேலையை முடிச்சுட்டு நான் கிளம்பறேன் அங்கிள்" என்றவன் அத்துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்துவதற்கு விரல்களைக் கொண்டு சென்ற அவ்வேளையில் ஒரு கனமான கட்டை பறந்து வந்து வருணின் கையைத் தட்டி விட்டது . அந்த கட்டை விழுந்த அதிர்வில் அவன் கையிலிருந்த துப்பாக்கியும் அதே வேகத்துடன் எங்கோ பறந்து சென்று விழுந்தது .
அதிர்ச்சியுடன் அக்கட்டை வந்த திசையைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது . அங்கே கண்களில் அடக்கவியலா ரௌத்திரத்துடன் நின்றிருந்த விஷ்ணுவே வருணுக்கு காட்சியளித்தான் .
கோபத்தீ மனத்தினில் பற்றி எரிய “ நீ எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டியா…? தப்புக்கு மேல தப்பு தப்புக்கு மேல தப்புன்னு இத்தனை பாவம் பண்ணி வாழ்க்கைல என்ன சாதிக்க போற … மனிஷ ஜென்மத்துக்கே தகுதி இல்லாத மிருகம்டா நீ…. ப்ளடி இடியட் “ என்று கத்தியவனின் அதட்டலை அலட்சியத்துடன் நிறுத்தினான் வருண். .
“ வந்துட்டியா விஷ்ணு …. வா வா … உனக்கும் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சின்னு அந்த பார்க்ல நீ என்ன பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச அப்பவே கண்டுபிடிச்சிட்டேன் …. நீ அந்த லிங்கத்தை எடுக்குறதுக்கு முன்னாடி நான் எடுத்து அதை பணமாக்கனும்னு நினைச்சேன் … கொஞ்சம் லேட்டா வந்திருந்தா நான் முடிக்க வேண்டியதை முடிச்சிட்டு எடுக்க வேண்டியதை எடுத்துட்டு கிளம்பியிருப்பேன்ல …. என் வேலையும் ஈஸியா முடிஞ்சிருக்கும் . இப்ப பாரு நான் உன்னையும் கொண்ணுட்டு அந்த கிழவனையும் கொல்லனும் … எனக்கு வேலை டபுள் ஆகிடுச்சி பார்த்தியா …" என எகத்தாளமாய் நக்கல் தொனி ஒலிக்கும் குரலில் கூறினான் வருண் .
“ வேண்டாம் வளவா … நான் சொல்றதைக் கேளு இப்பவாச்சும் நல்ல வழியில போக பாரு … இந்த லிங்கத்தை எடுத்துட்டு போய் கோவில்ல வச்சிடலாம் . நீ பண்ண பாவம் எல்லாம் அடுத்த நிமிஷமே கரைஞ்சி உன் தப்புக்கு பிராயர்ச்சித்தம் பண்ணிடு . உன் பிறப்புக்கு புண்ணியத்தை தேடிக்கோடா … “ என்ற விஷ்ணுவின் கூற்றினில் இருக்கும் உண்மையை புரிந்து கொள்ளாமல் கோபம் கொப்பளிக்க
“ நான் என்ன செய்யனும் என்ன செய்யக்கூடாதுன்னு சொல்ற உரிமையை அப்பவும் சரி இப்பவும் சரி யாருக்கும் நான் கொடுத்ததில்லை …. இதுல நீயும் விதிவிலக்கு இல்லை… என் வழியில குறுக்குல புகுந்து எனக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுக்குறதே உனக்கு வாடிக்கையா போச்சு இல்ல…. முதல்ல உன்னை கொன்னுட்டு அப்புறம் அந்த கிழவனைக் கொல்றேன்டா …. “என்றவாறே அருகிலிருந்த பெரிய கட்டையை எடுத்து விஷ்ணுவினை அடிக்க பாய்ந்தான். அதுவரை இருவரின் சம்பாஷனைகளையும் ஸ்தம்பிதத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஈஷ்வரபாண்டியன் விஷ்ணுவை வருண் தாக்க முற்பட்டவுடன் சுயநினைவு வந்தவராக அவனை தடுக்கும் பொருட்டு ஓடிவந்து வருணை அடிக்கப் பாய்ந்தார்.
அதற்குள் சுதாரித்த வருண் கையில் இருந்த கட்டையை ஓங்கி அவரின் தலையில் அடித்துவிடவே ஈஷ்வரபாண்டியன் அத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் அப்படியே சரிந்து விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இவையனைத்தும் நடந்துவிடவே விஷ்ணு ஈஷ்வரபாண்டியனை நோக்கி அவரை காப்பாற்றும் பொருட்டு ஓடினான்.
ஈஷ்வரபாண்டியனை சமீபிக்கும் சமயம் பார்த்து ஓடிவந்தவனின் கால்களை தான் வைத்திருந்த கட்டையால் மிகப்பலமாக தாக்கினான். ஓடிவந்த வேகத்தில் கால் இடறி விழவும் வலியில் துடித்தவனின் தலையில் அடிக்கப்பாய்ந்தான். அரை மாத்திரை கால அவகாசத்தில் இருந்த இடத்திலிருந்து விஷ்ணு சற்று தள்ளி நகரவும் , மிகப்பலம் கொண்டு தாக்க வந்த வருண் இதை எதிர்பார்க்காததால் அதி வேகத்துடன் அவனும் கீழே விழுந்தான் . இதுதான் சமயம் என்று உணர்ந்த விஷ்ணு சட்டென்று எழுந்து தன்னால் முடிந்த மட்டும் அவன் தாடையில் விசையுடன் தன் கைமுஷ்டியால் குத்தினான் .
வலியும் ஆத்திரமும் ஒரு சேர தன் பலத்தை பிரயோகித்து எழ முயன்ற வளவனை மறுபடியும் விஷ்ணு தாக்க இம்முறை சற்று மயங்கிய நிலைக்கே சென்றவனை மேலும் தாக்க மனமில்லாமல் அவனை அப்படியே விட்டுவிட்டு ஈஷ்வரபாண்டியனை நோக்கிச் சென்றான் . தலையில் அடிபட்டதன் காரணமாக வலி அதிகமான நிலையில் இருந்தவரை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான்.
“அங்கிள் , ஆர் யூ ஓகே… “ என்று கரிசனத்துடன் கேட்க வந்தவனை குற்ற உணர்ச்சியுடன் கையமர்த்தியவர் “என்னை மன்னிச்சிடு விஷ்ணு என்னை மன்னிச்சிடு . இந்த விஷயத்துல இவ்வளவு பெரிய உண்மைகள் , சம்பவங்கள் புதைஞ்சி இருக்கும்னு எனக்கு தெரியாது . அந்த சண்டாளனோட பேச்சைக்கேட்டு புத்திகெட்டு பேராசைப்பட்டுட்டேன் . பேராசைன்ற போதைல என் அறிவு மழுங்கிடுச்சி . கூடா நட்பு கேடாய் விளையும்ன்றது எவ்வளவு பாந்தமான வாக்கியம்ன்னு இத்தனை வயசுக்கப்பறம் உணர்ந்து என்ன பிரயோஜனம் . என் வாழ்நாள்ல இது ஒரு களங்கம் இல்லையா …. என்னை அந்த கடவுள் மன்னிப்பானா?! அதுவும் நம்ம ஊர் சிவன் கோவில் லிங்கத்தை இல்ல வித்து பணமாக்க நினைச்சிட்டு இருந்தேன்… கடவுளே! ஈஷ்வரா… என்னை மன்னிச்சிடுப்பா என உணர்ச்சித் ததும்பளுடன் கூறி கண் கலங்கினார் ஈஷ்வரபாண்டியன் .
“இல்ல அங்கிள் நீங்க கவலைப்படாதீங்க . செய்த தப்பை உணர்ந்து திருந்தி மனமாற அந்த கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டா அவர் நிச்சயம் உங்க மன்னிப்பை ஏத்துக்குவார் .இப்பவும் ஒன்னும் ஆகல… முதல்ல இந்த இடத்தை விட்டு போகனும். சீக்கிரம் கிளம்பலாம் வாங்க “ எனக்கூறிக்கொண்டே அங்கிருந்து அவரை கைத்தாங்கலாக எழுப்பினான்.
“ விஷ்ணு இந்த இடத்தை விட்டு நாம மட்டும் இல்லை இந்த மரகதலிங்கமும் சேர்ந்து வெளிய போகனும் . நான் செய்த பாவத்துக்கு என்னால ஆன பாவமன்னிப்பை நிறைவேத்தனும் இல்லையா … நீ போய் அந்த லிங்கத்தை தூக்கிட்டு வா . இப்பவே கோவில்ல கொண்டுபோய் வச்சிடலாம் . கோவில் சாவி இப்ப என்கிட்டதான் இருக்கு. வாப்பா இன்னைக்கே இப்பவே இந்த நல்ல காரியத்தை பண்ணிடலாம் “ என்றார் .
அவர் கூறிய செய்தியின் தாக்கம் விஷ்ணுவின் மனத்தினில் சந்தோஷ புயலை உண்டுபண்ணியது . தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஆழிப்பேரலையாய் ஆனந்தத்தை ஊட்டியது. “ சரிங்க அங்கிள் , நான் லிங்கத்தை எடுத்துட்டு வந்துட்றேன்” எனக்கூறிய விஷ்ணுவினை தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த மரகதலிங்கம் உள்ள அறைக்கு கூட்டிச்சென்றார் .
அந்த அறைக்குச் சென்றதும் இருளாக இருந்த அறைக்குள் தான் கையில் வைத்திருந்த டார்ச்சினால் ஒளியூட்டினான் விஷ்ணு. சூரியனைக் கண்டதும் மறைந்துவிடும் பனித்துளியைப் போல ஒளிக்கீற்று பட்டதும் இருளும் மாயமாய் மறைந்தது. அறைக்குள் நுழைந்த வெளிச்சம் மரகதப் பச்சை நிற லிங்கத்தின் மீது பட்டு அந்த மரகத லிங்கம் ஜ்வால்ஜல்யமாக காட்சி கொடுத்தது. அந்த மரகத லிங்கத்தினைக் கண்டதும் அவனையும் அறியாமல் கண்களில் ஜலப்பிரவாகம் ஊற்றெடுத்தது . தான் இந்த ஊருக்கு வந்தது முதல் மனத்தினில் இல்லாமல் இருந்த நிம்மதி லிங்கத்தைப் பார்த்தவுடன் சூரியனைக்காணும் தாமரை மலர்வது போல் மலர்ந்ததை விஷ்ணுவால் உணர முடிந்தது .
லிங்கத்தின் அருகில் சென்றவன் ஒருமுறை அந்தலிங்கத்தினை மனமாற வணங்கிவிட்டு அதைத்தூக்கினான். சற்று சிரமமாகவே இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்து தேகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்ததால் ஒருவாறு சமாளித்து சிறிது நேரத்திற்குள் அந்த மரகத லிங்கத்தைத் தூக்கிவிட்டான் விஷ்ணு .
விஷ்ணுவும் ஈஷ்வரபாண்டியனும் லிங்கத்துடன் அறைவாயிலை நோக்கி திரும்புகையில வருண் அளவிட முடியாத கோபத்துடன் நின்றுகொண்டிருந்தான் .
"டேய் விஷ்ணு...எப்பவுமே என் வழியிலேயே குறுக்கு வரதையே குறிக்கோளா வச்சிருக்கியே… அப்பவும் சரி இப்பவும் சரி… எனனோட நிம்மதியை குலைச்சிட்ருக்க உன்னை சும்மா விடமாட்டேன்டா" என ஆவேசம் வந்தவனைப் போல கத்திக்கொண்டே கையில் தடித்த மரக்கட்டையுடன் ஓடி வந்தான் வருண்.
ரௌத்ரத்துடன் ஓடிவரும் வருணை இடைமறித்த ஈஷ்வரபாண்டியனை பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடித்தான் வருண். அவனின் இந்த திடீர் தாக்குதலால் சிந்தை தடுமாறிய ஈஷ்வரபாண்டியன் மயங்கி கீழே சரிந்தார். இதெல்லாம் சில நொடிகளிலேயே நடந்துவிட்டதால் பதறிய விஷ்ணு லிங்கத்தினை கீழே வைத்துவிட்டு " அங்கிள்…அங்கிள்… என்ன ஆச்சு…. அங்கிள்… எழுந்திரிங்க அங்கிள்"என அவரை மயக்கம் தெளிய வைப்பதில் மும்முரமானான்.
இதுதான் விஷ்ணுவைத் தாக்க சரியான சந்தர்ப்பம் என யோசித்த வருண் அவனுக்கு அருகில் கீழே கிடந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு விஷ்ணுவைத் தாக்க முன்னேறிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென வலிமையான இரண்டு கரங்கள் அவனைப் பின்புறமிருந்து அவனைப் பிடித்து இழுத்து அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro