ராஜகுமாரி -1
அக்கூட்டத்தின் வருகையை தரு சத்தத்தின் மூலம் தான் அறிந்தாள். நடு மண்டையில் சுல்லென அடிக்கும் வெயிலில் தனக்கான குடையாய் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு வெயிலுக்கு அஞ்சி குனிந்த தலை நிமிராத புதுப்பெண்ணாய் பாயில் (mat ) கோதுமையை பரத்திக்கொண்டிருந்தாள். அப்புதுப்பெண்ணின் திருமண வைபோகம் போல ஒரு கூட்டம் ஜாம் ஜூம் என ஜாலியாய் இவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.
ஆரவாரம் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது வெகு நேரமாய் குனிதிருந்த முதுகு சுருக்கென வலித்தது. தருவின் கண்களுக்கு முன்னாடி சில குட்டிகளும் பின்னால் நாலைந்து பெருசுகளும் வெயிலில் சற்று தூரத்தில் தெரிந்தனர். அவர்கள் வீட்டை வந்தடைவதற்குள் இந்த கோதுமையை பரத்தி முடித்திரலாம் என தரு எடைப்போட்டாள்.
"அக்கா, நியூஸ் பேப்பர்ல உங்க வீடு வரப்போகுது!" முன்னால் ஓடி வந்த ஒரு சிறுவன் உற்சாகத்தில் கூட்டத்தின் வருகயின் நோக்கத்தைக் கூறினான்.
தரு நிமிர்ந்து பார்த்தாள்.
"ஆமா, அதுக்கு தான் ராஜாவ பார்க்க வந்துருக்கோம் அக்கா!"
"டேய், அக்கா இல்லடா, இளவரசி ஆக்கும்," ஒரு வாலு சிரித்தது. இரண்டு சிறுவர்களும் விஷயத்தை சொல்லிவிட்டு மீண்டும் கூட்டத்தோடு வந்து ஒட்டிக்கொண்டனர்.
கோதுமையை அவசரமாய் பரப்பிவிட்டு வாலியை இடுப்பில் இடுக்கியபோது ஊர் பெரியவர்கள் வந்து சேர்ந்தனர். தாத்தா எங்கே என விசாரித்த ஊர் பெரியவரிடம், "உள்ளே தான் இருக்கிறார், அவர்கிட்ட தகவல் சொல்லுறேன்," என தெரிவித்த தரு புதிதாய் இருந்த இரு ஆண்களை பார்க்க முயன்றாள் ஆனால் கூட்டத்தில் அவர்களை ஒழுங்காக பார்க்க முடியவில்லை. ஊர் பெரியவர்கள் தாங்கள் தான் அங்கு அதிகாரி என காட்டிக்கொள்ள ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முன்னாடி வந்து நின்றனர்.
வீட்டினுள் வந்த தரு அம்மாவிடம் விஷயத்தை தெரிவிக்க அம்மாவும் அவளை ஆச்சரியமாய் பார்க்க, "எனக்கு என்ன தெரியும்," என தரு கையை விரித்தாள். அம்மாவுன் தாத்தாவிடம் விஷயத்தை சொல்ல அனைவரும் ஹாலில் கூட பதினைந்து நிமிடங்கள் ஆகின..
மர நாற்காலியில் தாத்தா உட்கார மற்றவர்கள் பிளாஸ்டிக் நாற்காலியில் தங்களைப் பொருத்திக்கொள்ள சிறுவர்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓட தரு மாடியில் நின்றுக்கொண்டு கீழே நடந்த கூத்தைக் கண்ணோட்டமிட்டாள். இப்போது அந்த நியூஸ் பேப்பர் ஆட்கள் தெளிவாய் தெரிந்தனர். மாடியிலிருந்து பார்த்தபோது 5 மாத கர்ப்பிணி போல் வயிர் மட்டும் தனியாய் தெரிய ஒருத்தர் அமர்ந்திருந்தார். தோளில் ஒரு டப்பாவும் தொங்கியது. அந்த டப்பாகுள்ள - கேமரா இருக்கனும் அப்போ இவரு போட்டோகிராபர் என தரு தன் புத்திசாலித்தனத்தை மெச்சினாள். அவர் அருகில் ஒல்லியாய் சிறு வயதாய் இன்னொருத்தர் உட்கார்ந்திருந்தார். மாடியிலிருந்து அவரின் கரு நிற சுருல் முடி மட்டும் தெரிந்தது. அவர் தான் பேசினார்.
"என் பெயர் ஷரண். இவரு மகேந்திரன். நாங்க டைம்ஸ் ஆப் இந்தியா இங்கிலிஷ் நியூஸ் பேப்பர்லேர்ந்து வர்ரோம்."
தாத்தா தனக்கு காது கேட்டகும் என்ற அறிகுறி கூட கொடுக்கவில்லை, சிலையாய் அமர்ந்திருந்தார்.
எவ்வித மறுமொழியும் வராததால் தயக்கத்தோடு ஷரண் தொடர்ந்தான். " நாங்க நம்ம இந்தியாவுல அதுவும் மத்திய பிரதேசம், நம்ம மானிலத்துல, இருக்கிற ஒரு ராஜ குடும்பத்தைப் பத்தி பேப்பர்ல எழுத போறோம். நிறைய பேருக்கு நம்ம நாட்டுல அரசர்கள் இன்னும் இருக்காங்கன்னு கூட தெரியல. அழிந்த ஓர் இனம் போல நினைச்சிட்டு இருக்காங்க. அதான் ஒரு ஸ்பெஷல் ஆர்டிகல்காக உங்கள பேட்டி எடுக்கனும்னு ஆர்வமா வந்துருக்கேன். "
சில நொடிகள் அமைதி நிலவ ஊர் பெருசு ஒன்று பேசியது, "ராஜா, உங்கள பத்தி நாலு பேருக்கு தெரிய வரும். அப்புறம் இவங்க இங்கிலிஷ் பத்திரிக்கை! சும்மா நம்ம ஹிந்தி ஆளுங்க இல்ல. இந்தியா முழுக்க நம்மள பத்தி தெரிய வரும். இதுலாம் ரொம்ப பெரிய விஷயம்."
Regional பேப்பரை முழு இந்தியா பேப்பராக மாற்றிய பெரியவரின் வார்த்தையை ஷரண் மறுக்கவில்லை. வாய்ப்பு கிடைக்க அவன் பொய் சொல்லவில்லையே, வேறு யாரோ தான் பொய் சொன்னார்கள் ஆதலால் நமது பத்திரிக்கை தர்மம் மாசின்றி இருக்கிறது.
தாத்தா பேசினார், "போட்டோலாம் வருமா இல்ல எழுத்து மட்டும் தானா?"
"ஆ... போட்டோலாம் வரும்."
"எத்தனை பக்கம்?"
"மேலிடத்துக்கு பிடிச்சிருந்தா ரெண்டு முழு பக்கமே கொடுப்பாங்க ஐயா."
"ஐயா இல்ல, ராஜா."
"மன்னிச்சுக்குங்க ராஜா."
"நல்ல விதமா தான எழுதுவ?"
இதற்கு மீண்டும் ஷரணின் தொழில் தர்மத்தைக் காக்க பெரியவர் குரல் கொடுத்தார், "ஆமாம். நம்ம ஊர் மரியாதையும் உங்க மரியாதையும் ஒன்னு ராஜா. எதாவது தப்பா எழுதுனா சும்மா விட்டுருவோமா."
"இன்னைகே எழுதி இன்னைக்கே படம் புடிச்சி நாளைக்கு பேப்பர்ல வந்துருமா சார்?" அப்பெரியவர் கேட்டார்.
ஷரணுக்கு தூக்குவாரி போட்டது. இது என்ன துணியா, இன்று துவைத்து காயப்போட்டு நாளை உடுத்திக்கொள்ள?
"இல்லைங்க. ஒரு பக்கம் எழுதனும்னா 10 பக்கம் எழுதி அதுக்கு பிறகு எடிட்டர் ஒரு பக்கம் தேர்ந்தெடுப்பார். அப்புறம் போட்டோவும் நிறைய எடுக்கனும். ங்களையும் பேட்டி எடுக்கனும். ஒரு மாசம் ஆகலாம் பேப்பர்ல வர."
இப்பதிலை ஊர் மக்கள் எதிர்பார்க்காததால் இம்முடிவை மட்டும் ராஜாவிடம் கொடுத்தனர். கடைசியில் வரப்போவது அவரின் முகமல்லவா எனவே அவரின் பதிலுக்காக காத்திருந்தனர்.
"சரி, ஆகட்டும்."
ராஜாவின் பதிலைக் கேட்ட கூட்டம் வேடிக்கை முடிந்ததென கலைய தொடங்கியது. அப்போது ஷரண் நிமிர்ந்து மாடியில் நின்ற தருவைப் பார்க்க இதை சற்றும் எதிர்பார்க்காத தரு முழித்தாள். ஷரண் புன்னைகையோடு கையசைத்தான் எதோ தெரிந்தவருக்கு டாட்டா சொல்வதுபோல.
அடுத்த நாள் காலையிலேயே ஷரணும் போட்டோகிராபரும் வந்தனர் ஆனால் இம்முறை எந்த ஆரவாரமும் இன்றி. வீட்டை, இல்லை, அரண்மனையை, சுத்திக் காட்டிக்கேட்டனர். தருவின் தம்பி தான் அந்த பாழடைந்த அரண்மனையை வீட்டு புரோக்கர் போல சுற்றிக்காட்டினான். "இது அந்த காலத்து சமையல் அறை. இப்போ ஆளுங்க கம்மினால நாங்க சின்ன சமையலையறைல சமைக்கிறோம். இது அப்போ உள்ள என்னமோ ஒரு அறை. இப்போ யாரும் யூஸ் பண்ணல." வாடகை மட்டும் தான் சொல்லவில்லை இந்த வாண்டு.
இவனிடமிருந்து எந்த ஒரு முக்கிய தகவலும் வராது, தெரிந்தால் தானே சொல்லுவான் என நொந்துக்கொண்டான் ஷரண். அந்த காலத்தில் நிரம்பி ததும்பிய ஆடம்பரத்தையும் அழகையும் ராஜப்பரம்பரை என்றாலே தோன்றும் பிரமாண்டமும் எழுத வேண்டும். அதற்கான கதை இவனிடமிருந்து வரப்போவதில்லை. என்ன செய்யலாம் என யோசித்த ஷரணுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது. கிழ் தளத்தில் துவங்கிய சுற்றுலா இறுதியில் மொட்டை மாடியில் வந்து முடிய அங்கே தரு radio antennaவை ஆட வைத்துக்கொண்டிருந்தாள்.
"நீயும் antenna கூட டான்ஸ் ஆடுறியா?"
குரல் கேட்டு திடுகிட்ட தரு திரும்பினாள்.
"நான் முயற்சி பண்ணி பார்க்கவா?" என ஷரண் கையை நீட்ட தரு antennaவை கொடுத்தாள்.
ஷரணும் அப்பிடியும் இப்பிடியுமாய் திருப்பினாலும் கிர்ர்ர்ர் என்ற சத்தம் மட்டும் ஒலித்தது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தோல்வியுடன் ஷரண் திரும்பி தருவைப் பார்த்தான்.
அவள் சிரித்தாள், "இவ்ளோ நேரமா எனக்கு வராத சிக்னல் உங்களுக்கு மட்டும் எப்படி வரும்?"
"இல்லையே, இப்போ எனக்கு பாட்டு கேட்குதே!"
தரு குழப்பத்துடன் வினவ, "அதான் நீ பேசுறியே!" ஷரண் சிரித்தான். தருவின் கன்னங்கள் சிவந்தன.
"நான் ஷரண்."
"தெரியும், ஊர் வந்தப்போ பேசுனீங்க."
"உன் பெயர் என்ன இளவரசி?"
இதற்கும் தரு வெட்கப்பட்டாள், "தரு."
"சரி நீயாவது ஒழுங்கா இந்த அரண்மனைய சுத்திக் காட்டுறியா?"
"முதல்ல நீங்க ஏன் எங்களை பத்தி எழுத வந்துருக்கீங்க நு சொல்லுங்க அப்புறம் சுத்திக் காட்டுறேன்."
"உங்க வீட்ல உனக்கு மட்டும் தான் அறிவு இருக்கு. இதுவரை யாரும் கேட்காத முக்கிய கேள்விய நீ கேட்டிருக்க. ரேடியோ ஓடுனா உனக்கே தெரிஞ்ச்சிருக்கும். இன்னும் ரெண்டு மாசத்துல இங்கிலாந்து அரசன் சார்லஸுக்கும் டயானாவுக்கும் கல்யாணம். எல்லாரும் அத பத்தி தான் பேசுராங்க. அதுனால அதை வச்சி நம்ம நாட்ல இருக்கிற மறக்கப்பட்ட அரசர்கள் பத்தி பேப்பர்ல எழுதலாம்னு வந்துருக்கேன். இப்போ சுத்தி காட்டுவீங்களா டயானா?"
(இப்பொழுது தெரிந்திருக்கும் இந்த கதை 1981 இல் நடந்தது என. twist பா twist உ!)
"ம்ம்ம். உண்மைய சொன்னதுக்கு நன்றி. என்ன பார்க்கனும் நு சொல்லுங்க"
ஓரிரு நாட்கள் தாத்தாவை பேட்டி எடுத்தான் ஷரண். அதிக நாட்கள் அரண்மனையை தருவோடு சுற்றி திரிந்தான். அரண்மனை பல ஏக்கர்களில் விரிந்து இருந்ததால் பல இடங்கள் இருந்தன அதுவும் அவர்கள் தனியாய் சுற்ற பல சந்தர்பங்கள் அமைந்தன.
பெரிய சிட்டியிலிருந்து வந்திருக்கும் அதுவும் விவசாயம் செய்யும் ஊரில் நியூஸ்பேப்பரில் எழுதும் ஷரண் தருவுக்கு புதுமை கலந்த ஈர்பாய் அமைந்தான். அவனுக்கும் தரு அவ்வாறே தெரிந்தாள்.
"ஏன் இவ்ளோ இடம் காலியா இருக்கு?"
"அதுவா இந்தியா சுதந்திரத்துக்கு முன்னால நாங்க ஆட்சி பண்ணப்போ நிறைய பேரு இருந்தாங்க. அப்புறம் அஸ்ஸென்ஷன் ஆக்ட்(accession act) வந்தப்பிறகு எங்க சொத்துலாம் எங்கள விட்டு போகிட்டு. அதுனால சொந்தமும் போச்சு. இப்போ ராஜாவோட மகன் நு எங்க அப்பாவும் அப்பாவோட குடும்பம் அடுத்த அரசன்னு நாங்களும் இருக்கோம். இதுலாம் தாத்தா தான் சொல்லி புலம்புவார். நிறைய வேலைக்காரங்க இருந்தாங்களாம். இப்போ வயல்ல மட்டும் வேலைக்கு ஆளுங்க இருக்காங்க. அரண்மனை வேலை நாங்க பொம்பளைங்க தான் பண்ணுறோம்."
"என் நாட்டு டயானாவுக்கு அடியேனாய் இருக்க நான் இல்லையா?" ஷரண் அவளின் விரல்களைப் பற்றினான்.
தருவுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியும் பயமும் தோண பின் அவனின் கைவிரல்கள் இவளின் விரல்களைப் இழுத்து முத்தமிட இனம் புரியா பரவசம் உடல் முழுக்க பரவியது. அன்றிரவு தூக்கம் வரவில்லை, ஷரணின் முகம் தான் வந்தது. "நமக்கு தான் இருபத்தி ரெண்டு வயசாச்சு. இந்த வயசுல காதலிக்காம எந்த வயசுல காதலிக்கிறது. மாலினி 15 வயசுலயே ஒரு பையனை லவ் பண்ணா. சித்திரா 18 வயசுல கல்யாணம் பண்ணி பத்து மாசத்துல புள்ள பெத்துக்கிட்டா. நம்ம தான் ஏழு கழுத வயசாகியும் கோதுமை காயவச்சிக்கிட்டும் ராஜாவோட பழைய கதைய கேட்டுக்கிட்டும் இருக்கோம். நம்ம இனிமே சின்ன பிள்ளையா வாழ்ந்தது போதும்." தரு முடிவெடுத்தாள். இனிப்பு திங்க முடிவெடுப்பது இலகுவாய் தானே இருக்கும். அதன்பின் குற்றவுணர்ச்சியின்றி ஷரணின் சீண்டல்களை அனுபவித்தாள்.
தொடரும்.
(இந்த சிறுகதைய நாளைக்கே எழுதி முடிச்சிருவேன்னு நம்புறேன். கமெண்ட்ஸ், எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன:)
அப்புறம் Netflixஇன் The Crown showவோட பெரிய ரசிகை நான் சோ இளவரசி பத்தி ஒரு கதை எழுதனும் ஆனால் இளவரசி கதைக்கூட realistic ஆ இருக்கனும்னு ஒரு முயற்சி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro