Sudum Nilavu Sudatha Suriyan - 9
சுடும் நிலவு சுடாத சூரியன் – 9
ஸம்யுக்தா கண் விழித்தப் போது, தான் ஒலை பாயில் படுத்திருப்பது தெரிந்தது. உடலை அசைக்கவே முடியாமல் வலித்தது. கண்கள் எரிந்து, நீர் கன்னங்களில் வழிந்தது. திரும்பவும் கண்களை மூடி கொண்டாள். கால்கள் இரும்பு குண்டுகளாக அசைக்க முடியாமல் வலித்தன. தலையில் இடி இடிப்பதை போல உணர்ந்தாள். உடம்பு அனலாக கொதித்தது. எதையும் யோசிக்க முடியாமல், சோர்வாக இருந்தது.
சிறிது நேரத்தில் அவளது நெற்றியை யாரோ தொடுவதை உணர்ந்து, கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள். அவளருகே ஒரு வெண்ணிற தாடியுடன் வயதான மனிதர் குனிந்து அவள் இடது கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கண்கள் திறந்ததைப் பார்த்து, ஆதூரமாக தலையை வருடினார்.
அவரது இதமான வருடல், நெஞ்சில் சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்த, அவளது கண்களில் கண்ணீர் பெருகியது. அவளது விழிநீரை துடைத்தவர், அவளது கால்களின் புண்களில், பச்சிலையை மயிலிற்கினால் தடவினார். எதையோ அவரிடம் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் மீண்டும் கண் மூடினாள்.
அவர் வெளியே சென்று யாரையோ அழைத்து வந்தார். இருவரின் காலடியோசை கேட்டும், கண் விழிக்க தெம்பின்றி அப்படியே இருந்தாள். முதியவர் அவளின் தலையை மீண்டும் வருட, கண்களை விழித்தாள். அவரது அருகே நாற்பது வயது மதிக்கதக்க மனிதர் காக்கி போன்ற சீருடை அணிந்திருந்தார்.
அவளது அருகே குனிந்தவர், "உன் பேர் என்னம்மா?" என கேட்டார். வாயை திறக்க முயன்று, முடியாமல் வலிக்க சலிப்புடன் கண்களை மூடி கொண்டாள். அதற்குள் அந்த முதியவர், சிறிய மண் பாத்திரத்தில் எதையோ எடுத்து வந்து அவளது வாயை பற்றி திறந்து அதில் விட்டார். தொண்டையில் இனிப்பாக இறங்கும் போதே, அது தேன் கலந்த நீர் என்பதை உணர்ந்தாள்.
உடல் சற்றே தெம்படைவதை உணர்ந்தவள், "ஸ்ம்யு.." என மெதுவாக சொன்னது அவளுக்கே கேட்கவில்லை. சீருடை அணிந்தவர், அவளருகே குனிந்து மறுபடியும், "யாரும்மா நீ?" என சத்தமாக கேட்டார். அவர் சத்தமாக கேட்டது தலையை வலிக்க, அலுப்புடன் கண்களை மூடி கொண்டாள்.
முதியவர் திரும்பவும் இதமாக தலை வருட, வேறு வழியின்றி கண்களை கஷ்டப்பட்டு திறந்தாள். அவர் மெதுவாக, "உங்க வீட்டில் உன்னை தேடுவாங்கம்மா. உன் பெயர் என்ன?" என கேட்டார்.
அவர் அதை சொன்னவுடன் உடலில் இருந்த அத்தனை சக்தியையும் திரட்டி, "ஸம்யு..." என தீனமாக சொன்னாள். "எந்த ஊரும்மா?" என அவர் கேட்க, "மித்ரன்.. ஏ..ஸி..பி.." என சொன்னவள், அதற்கு மேல் சோர்வுடன் கண் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
அவள் மறுபடியும் கண்விழித்த போது, சுற்றிலும் இருள் கவிழ்ந்து விட்டது. உள்ளே ஒரு அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அறையின் ஒரத்தில் இருந்து மூலிகை வாசத்துடன், வெண்மையான மெல்லிய புகை, கீற்றாக கூரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லேசாக குளிர் தெரிய, தன் மேல் ஒரு பருத்தியாலான துணி மூடப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.
அவள் பாயில் அசையும் சத்தம் கேட்டவுடன், ஒரு நடுத்தர வயது பெண்மணி உள்ளே வந்து, அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தார். கையில் நாடி பார்த்துவிட்டு வெளியே சென்றார். எதையும் யோசிக்க தோன்றாமல் கூரையை வெறித்துப் பார்த்தாள். தூரத்தில் கேட்ட கோட்டானின் சத்தமும், ஒநாயின் குரைக்கும் சத்தமும், அவள் இன்னும் காட்டில் இருப்பதை உறுதி செய்தன.
மீண்டும் உள்ளே வந்த பெண்மணி, மண் சொம்பும், மண் வட்டிலும் எடுத்து வந்தார். அவளை லேசாக மேலே தூக்கி, சொம்பில் இருந்த அரிசி கஞ்சியை புகட்டினார். அவள் கஞ்சி குடித்து முடித்ததும், தேன் கலந்த நீரை அவளுக்கு பருக கொடுத்து படுக்க வைத்தார். காலில் பட்ட காயத்துக்கு மயிற்பீலியால் பச்சிலை மருந்திட்டார். அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தவர், சிறிது நேரத்துக்குப் பிறகு கொடுத்த கசப்பான கஷாயத்தைக் குடித்தவுடன் தூங்கியே போனாள்.
தூங்கும் போது வெளியே எழுந்த இரைச்சலையோ, வண்டிகளின் சத்தத்தையோ கேட்கும் நிலையில் அவளில்லை. கனவில் மித்ரன் அவளின் தலையை பாசமாக வருடி சம்யு என்று கூப்பிடுவதாக கனவு கண்டாள்.
காலையில் அவள் கண் விழித்ததும், மங்கலாக தெரிந்த காட்சியில் நிறைய காக்கி சட்டைகளும், வெள்ளை சட்டைகளும் தெரிந்தன. மசமசத்த பார்வையை கண்களை சிமிட்டி தெளிவாக்கி திரும்ப பார்க்கும் போது, எதிரே வரி வடிவமாக மித்ரன் தெரிந்தான். கனவா, நினைவா என்று தெரியாமல் மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.
அவள் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்த மித்ரன், "ஸம்யும்மா.." என உடைந்த குரலில் அழைத்தான். கஷ்டப்பட்டு கண்களை பிரித்தவள், அங்கே மித்ரனை கண்டதும், அவனருகே நேற்று பார்த்த வயதானவரின் அருகே பார்த்தவுடன் அது நிஜம் என புரிந்து கொண்டாள்.
நெஞ்சம் பொங்கி வர, "அண்ணா" என உதட்டசைத்தவள், அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் கண்களில் நீர் வழிந்தது.
"அழாதே ஸம்யு, நான் தான் வந்திட்டேன் இல்லை" என சொன்னவன், அவளது கண்ணீரை துடைத்தான். அருகே வந்த அகிலன், மிதரனிடம் கிளம்பலாம் என செய்கை செய்தான்.
மித்ரன் அவளை தன் கையில் ஏந்தி கொண்டு, அந்த மர வீட்டை விட்டு வெளியே வந்தான். வெளியில் நின்று கொண்டிருந்த முதிய வைத்தியரும், நடுத்தர வயது பெண்மணியையும் பார்த்து, மித்ரன் நன்றி சொல்ல, ஸம்யுக்தா கையை குவிக்க முயன்று முடியாமல் தோற்றாள். அவளது தலையை வருடிய வைத்தியர், "எல்லாம் சரியாகிவிடும்" என மிருதுவான குரலில் சொன்னார்.
மித்ரன் அவளை குழந்தையை போல் பத்திரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி படுக்க வைத்தான். அருகே வெள்ளையுடையில் ஒரு மருத்தவரும், நர்ஸும் இருக்க, மித்ரன் அவளருகே கையைப் பிடித்தபடி அமர்ந்தான். மருத்தவர் அவளுக்கு ஊசி போட, ஸம்யுக்தா தூங்கி போனாள்.
இன்றோடு ஸம்யுக்தா சென்னைக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. இன்னும் வீட்டுக்கு செல்லாமல் அவளுக்கு மருத்தவமனையில் சிகிச்சை தொடர்ந்தது. வலது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போட்டிருந்தனர். கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் சற்றே ஆறியிருந்தது. ஆனால் நடக்கும் போது வலித்தது.
வசந்தனும், வினோதினியும் எப்போதும் அவளுடனே இருந்தனர். மித்ரன் அவளை பாசத்துடன் பார்த்தாலும், அவன் கண்களில் வந்து மறையும் குற்றவுணர்வு அவளை மேலும் வேதனை அடைய வைத்தது. தினமும் காலையில் பதினோரு மணிக்கு அவளை காண வரும் அகிலனை பார்க்கவே பிடிக்கவில்லை.
திரும்ப, திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தான். பதில் சொல்ல அவளுக்கு எரிச்சலாக இருந்தது. தன்னை பாசத்துடன் கவனித்துக் கொள்ளும் அமிதாவிற்காக பல்லை கடித்துக் கொண்டு அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள்.
சசியும், அவனது பெற்றோர்களும் தினம் வந்து அவளை பார்த்து நலம் விசாரித்து செல்கின்றனர். சசி காலை அலுவலகம் செல்லும் முன்பும், அலுவலகம் முடிந்து மாலை வந்தால், அவள் தூங்கும் வரை கூடவே இருக்கிறான்.
சம்யுக்தாவிற்கு யாருடனும் பேச பிடிக்கவில்லை. தாங்க முடியாத அளவில் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. தன் பெற்றோர்களையும், மித்ரனையும் தவிர யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்கவில்லை. சிகிச்சை செய்ய வந்த நர்ஸ்களிடமும், மருத்தவர்களிடமும் எரிந்து விழுந்தாள்.
தினமும் அகிலன் போன பிறகு வரும், ஒரு மனோதத்துவ நிபுணரிடம் மட்டும் ஆர்வமாக பேசினாள். அவர் மட்டுமே அவளின் கடத்தலை பற்றி கேட்காமல் இருந்தார். நகைச்சுவையாக தன் பழைய கல்லூரி கதைகளை பேசி சிரித்தார். மருத்தவ உலகில் நடக்கும் ஹாஸ்யங்களை சொல்லி அவளை சிரிக்க வைத்தார். இரவில் மருந்தின் உதவுயுடன் மட்டுமே அவளால் தூங்க முடிந்தது.
மறுநாள் மாலை பழம் சாப்பிட்டு முடித்து, சற்றே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். மித்ரனும், வசந்தனும் அலுவலகத்தில் இருந்து வந்து அவளை பார்த்தார்கள். அவர்களுடன் அன்று சசிதரனும், அவனது தந்தை முரளிதரனும் வந்திருந்தனர். அனைவரும் அவளை பார்த்து விட்டு வெளியே அமர்ந்திருக்க, வினோதினி அவளருகே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்தவரை பார்த்து வெகு நாட்களுக்குப் பின்பு ஸம்யுக்தாவின் முகம் மலர்ந்தது.
"ஸம்யுக்தா.. எப்படி இருக்கே?" என உள்ளே வந்த வெற்றிவேல் தாத்தா, அவளின் தலையை ஆதூரமாக வருடினாள்.
"வாங்க ஐயா" என எழுந்து நின்று மரியாதையாக வரவேற்றார் வினோதினி. அவர் பின்னே வந்த வசந்தனும், மித்ரனும் அமைதியாக பின்னால் நின்றிருந்தனர்.
தான் வாங்கி வந்த பெரிய சாக்லேட் பாரை அவளிடம் கொடுத்து, அவளது கன்னங்களை வருடினார்.
"இப்ப பரவாயில்லை தாத்தா" என எழுந்திருக்க முயன்றவளை, தடுத்து படுக்க வைத்தார்.
"உனக்கு உடம்பு சரியான பிறகு எனக்கு மரியாதை தரலாம். இப்ப பேசாம படு" என செல்லமாக அதட்டியவர், வினோதினியிடம், "டாக்டர் என்னம்மா சொல்றார்?" என கேட்டார்.
"உடம்பில் காயம் எல்லாம் ஆறிட்டு வருது. கை ஃபிராக்சரும், கால் காயமும் ஆற இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று சொன்னாங்க" என வருத்தமான குரலில் சொன்னார்.
"அப்ப, இன்னும் ஒரு வாரம், இவ இங்கே தான் இருக்க போறாளா?" என கேட்டார்.
"இல்லை, இன்னும் இரண்டு நாளில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று நினைக்கிறேன்" என்றார்.
"அந்த வீட்டில் பாதுகாப்பா இருக்குமா? நான் இவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?" என வசந்தனிடம் கேட்டார்.
அப்போது தயங்கியபடி அறையினுள் சசிதரனும், அவனது தந்தையும் உள்ளே நுழைந்தனர்.
"இல்லை தாத்தா, நான் பத்திரமாக பார்த்துக்கிறேன்" என மித்ரன் தய்ங்கியபடி சொன்னான்.
அவனை முறைத்துப் பார்த்தவர், "நீ பத்திரமாக பார்த்துக்கிட்ட லக்ஷ்ணம் தான் தெரிஞ்சிதே. நம்ம வீட்டு பெண்ணை, அதுவும் கல்யாண பெண்ணை தூக்கியிருக்கான். அவனை கண்டுபிடிக்க உங்க போலீஸ் துறைக்கு துப்பில்லை. அவளே அவன்கிட்டேயிருந்து தப்பிச்சு வந்திருக்கா" என கோபமாக சொன்னவரை பார்த்து ஸம்யுக்தா, "விடுங்க தாத்தா, அண்ணன் உயிரை கொடுத்து என்னை தேடியிருப்பார். என் பேட் லக், அவரால் என்னை கண்டுபிடிக்க முடியாம போச்சு" என வாடிய மித்ரனின் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.
"என்னவோ போ, நீ உயிரோடு திரும்பி வந்ததே எங்களுக்கு போதும். வசந்தா, நம்ம சென்னிமலை முருகனுக்கு நீ வர்ற சஷ்டிக்கு ஒரு காவடி எடுத்திடு" என்றார்.
"சரிங்க ஐயா" என பயபக்தியுடன் சொன்னார் வசந்தன்.
"வினோதினி, என் பேத்தியை பத்திரமாக பார்த்துக்க. அவ கூட பொறந்தவனுக்கும் வக்கில்லை, கட்டிக்க போறவனுக்கும் துப்பில்லை" என சொன்னவர், மித்ரனையும், சசிதரனையும் பார்த்து முறைத்து விட்டு வெளியே சென்றார்.
செல்லும் முன்பு, அவர் முரளிதரனை பார்த்த பார்வையில் அவர் ஒடுங்கி போய் வசந்தன் பின்னே மறைந்தார்.
அவர் சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகே அந்த அறையில் இருந்த ஆண்கள் அனைவரும் தைரியமாக மூச்சு விட்டனர்.
மித்ரனின் செல்ஃபோன் அடிக்க, அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
"என்ன அகிலன், எதாவது க்ளூ கிடைச்சிதா?" என ஆர்வமுடன் கேட்டான்.
"ஸம்யு சொன்ன அடையாளத்தை வைச்சு, ஒரு ஒல்லியான பையனை அரெஸ்ட் பண்ணோம் இல்லை, அந்த ரவி குமார்.." என்றான் அகிலன்.
"ஆமாம் சொல்லு, அந்த இன்னொரு ஆளு யார் என்று சொல்லிட்டானா?" என கேட்டான்.
"அவன் தான், தன் கூட யாருமே இல்லை என்று சாதிக்கிறானே? இப்ப அது இல்லை பிரச்சனை.." என இழுத்தான்.
"வேற என்ன பிரச்சனை?" என கேட்டவனிடம் அகிலன், "அவனுக்கு பெயில் மூவ் பண்ணியிருக்காங்க என்று கேள்விபட்டேன்" என்றான்.
"அகிலன், யார் வந்து கேட்டாலும், நாம பெயில் கொடுக்க வேண்டாம். கமிஷனர் தான் இந்த கேஸில் முழுசாக ஈடுபட்டிருக்கிறாரே?" என கேட்டான்.
"அவர் தான் இப்ப பெயில் கொடுக்க சொல்றார். நம்ம அரசு வக்கில் கிட்டேயும், நீதிபதி கிட்டேயும் பேசிட்டார்" என கோபமாக சொன்னான் அகிலன்.
அவன் சொன்னதை கேட்டு உறைந்து நின்ற மித்ரன், "ஏன் இப்படி திடீரென்று மாறிட்டார்?" என கவலையுடன் கேட்டான்.
"அவருக்கு உள் துறை அமைச்சர் கிட்டேயிருந்து பிரஷர், அவர் வேற என்ன செய்வார்?" என கடுப்படித்தான்.
"அந்த லோக்கல் சின்ன பையனுக்கு எப்படி அந்தளவு பெரிய இடத்து சப்போர்ட் கிடைச்சிது?" என வெறுப்பாக கேட்டான்.
"யாரோ பிக் ஷாட் சப்போர்ட் என்று பேசிக்கிறாங்க. பெயர் கூட ஏதோ சொன்னாங்களே, யெஸ், வேல்.. வெற்றிவேல்" என்றான் அகிலன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro