Sudum Nilavu Sudatha Suriyan - 6
சுடும் நிலவு சுடாத சூரியன் – 6
மித்ரன் எஃப்.ஐ.ஆர் எழுதி கொடுத்ததும், அகிலன் அதை தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சம்யுவின் போட்டோவுடன் மின் அஞ்சல் செய்தான்.
"மித்ரன், நாம ஸ்மிருதியை இன்னொரு தடவை விசாரிக்கலாமா? உங்க வீட்டுக்கு வர சொல்லேன்" என்றான்.
சரி என தலையசைத்த மித்ரன் ஸ்மிருதியை தன் வீட்டிற்கு வர சொன்னான்.
வீட்டிற்கு சென்ற போது, அழுது கொண்டிருந்த வினோதினியை ஸ்மிருதி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அகிலன் ஸ்ருதியிடம் நடந்ததை விவரிக்கும்படி சொன்னான். ஸ்மிருதி விவரித்தவுடன், "ஸ்மிருதி, நீங்க தான் சம்யுவை பிக் அப் செய்யறீங்க என்று உங்க வீட்டில் யாருக்கெல்லாம் தெரியும்?" என கேட்டான்.
"எனக்கு மட்டும் தான் தெரியும். அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போயிருந்தாங்க" என்றாள்.
"மித்ரன், உங்க வீட்டில் யாருகெல்லாம் தெரியும்?" என கேட்டான்.
"எனக்கே ஹோட்டலுக்கு வந்த பிறகு தான் தெரியும்" என நடந்ததை விவரித்தான்.
வினோதினி, "கிளம்பும் போது தான் எங்களுக்கே ஸ்மிருதி பிக் அப் பண்ணுவாள் என்று ஸம்யு சொன்னாள்" என்றார்.
"அவ அதை சொல்லும் போது யாரெல்லாம் இருந்தீங்க?" என கேட்டான் அகிலன்.
"நான், அவங்கப்பா, மாபிள்ளை மட்டும் தான் இருந்தோம். அது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது" என சொல்லும் போதே அழுது விட்டார்.
"ஸ்மிருதி, சம்யு உங்கிட்ட அவளை பிக் அப் பண்ண சொல்லும் போது யாரெல்லாம் இருந்தாங்க?" என கேட்டான்.
"அவ நேரில் சொல்லலை. வாட்ஸாப் சாட்ல தான் டிசைட் பண்ணோம்" என்றாள்.
மித்ரனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தன் பெற்றோர் எதிரில் காண்பித்துக் கொள்ளாமல் சோஃபாவில் உட்கார்ந்தான்.
இது லோக்கல் ரவுடிகளோ தாதாக்களோ செய்ததில்லை. சம்யுகதா செய்தி சேகரித்ததோ லோக்கல் என்கவுண்டர் விவகாரம். என்னையோ, அப்பாவையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அம்மாவோ வீட்டை தவிர வேறு எதுவும் தெரியாதவர். ஒரு வேளை சசியை யாராவது மிரட்டுகிறார்களோ என யோசிக்கத் தொடங்கினான்.
அகிலன், "ஸ்மிருதி, நீ கார் எடுத்திட்டு வர போகும் போது எதாவது நடந்ததா?" என்றான்.
"நான் ரோட் கிராஸ் பண்ணிட்டு காரை எடுத்திட்டு வந்துட்டேன்" என்றவள், நினைவு வந்தவளாக, "ஒரு தாத்தா வந்து அட்ரஸை காண்பித்து வழி கேட்டார். நானும் சொன்னேன். ஆனா அவருக்கு சரியாக காது கேட்காததால் இரண்டு மூன்று தடவை சொல்ல வேண்டியதாகி விட்டது" என்றாள்.
"தாங்க்ஸ் ஸ்மிருதி" என்ற அகிலன் மித்ரனிடம், "நாம சசி வீட்டுக்கு போகலாம்" என்றான்.
"அகிலன்" என அது வரை வாயே திறக்காத வசந்தன் கூப்பிட, "என்ன அங்கிள்?" என கேட்டான்.
"மாபிள்ளை வீட்டில் ரொம்ப பொறுமையாக இருக்காங்க. வேற யாராவதாக இருந்தால் நம்மை கண்டப்படி பேசியிருப்பாங்க.. அவங்க மனசு புண்படாம விசாரணை செஞ்சீங்க என்றால் நல்லாயிருக்கும்" என்றார்.
"முயற்சிக்கறேன் அங்கிள். ஆனால் தேவைப்பட்டா கடுமையாக நடக்க வேண்டியிருக்கும்" என்றவன் வினோதினியிடம், "அம்மா, சம்யுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் தானே? கடைசி நிமிஷத்தில் ஏதாவது மனசு மாறி ஏதாவது பேசினாளா?" என கேட்டான்.
"இல்லை, கடைசி வரைக்கும் அவ சசியை திருமணம் செய்ய முழு விருப்பத்தோடு தான் இருந்தாள்" என்றார்.
ஸ்மிருதியை கண்ணசைத்து தனியாக அழைத்தவன், மித்ரனிடம் கிளம்பலாம் என சைகை செய்தான்.
அவர்களின் காரின் அருகே மித்ரனுடன் நின்ற அகிலன், ஸ்மிருதியும் வெளியே வரும் வரை காத்திருந்தான்.
அவள் வெளியே வந்ததும், "ஸ்மிருதி, ஒரு ஃபிரண்டுக்கு தான் எல்லாம் விஷயமும் தெரியும். ஸம்யுவை காப்பாற்ற நீ சொல்ற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். மித்ரனை வேண்டுமானலும் அனுப்பி விடுகிறேன். இப்ப சொல்லு சசியை திருமணம் செய்ய சம்யுவுக்கு சம்மதம் தானே?" என கேட்டான் அகிலன்.
"அண்ணா இங்கேயே இருக்கட்டும். நான் சொல்றது அவருக்கும் தெரியும். உண்மையை சொல்லணும் என்றால் சம்யுவிற்கு சசி மேல் அளவு கடந்த காதலெல்லாம் இல்லை. அவன் தான், அவள் பின்னாடி காலேஜிலிருந்து சுத்திக்கிட்டிருந்தான். அவனிடம் ஒரு நல்ல ஃபிரண்டாக தான் சம்யு பழகினாள். அவன் அவகிட்ட ப்ரொபோஸ் செஞ்சப் போதும், உடனே சரி என்று சொல்லலை. கொஞ்ச நாள் கழிச்சு தான் ஒத்துக்கிட்டாள். மத்தப்படி எனக்கு தெரிஞ்சு வேற யாரையும் அவ விரும்பலை" என்றாள்.
"உன்னை தவிர அவளுக்கு வேற யாராவது நெருங்கிய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா?" என கேட்டான்.
"நிறைய பேர் ஃப்ரண்ட்ஸாக இருக்காங்க. ஸ்கூலிலிருந்து காலேஜ் முடியற வரைக்கும் நாங்க ஒன்றாக தான் படிச்சோம். ஆனால் இன்னி வரைக்கும் நாங்க இரண்டு பேர் தான் கிளோஸ் ஃபிரண்டஸ். அவ என் கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவாள்." என்றாள்.
"தாங்க்ஸ் ஸ்மிருதி, வேற எதாவது தேவை என்றால் கூப்பிடுகிறோம். எங்காவது வெளி ஊருக்குப் போவதென்றால் சொல்லி விட்டு போ" என்றான்.
"சம்யுவை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுங்க" என்றவளின் கண்களில் நீர் நிறைந்தது.
"அதுக்கு தான் எல்லா முயற்சியும் எடுத்திட்டிருக்கோம். நீயும் பத்திரமாக இரு." என்றான் அகிலன்,
சரியென்று தலையசைத்து விட்டு, ஸ்மிருதி தன் காரில் கிளம்பினாள்
"சரி, நாம கிளம்புவோம்" என மித்ரனிடம் சொன்னான் அகிலன்,
காரை அந்த தெரு தாண்டியதும் ஓரமாக நிறுத்தியவன், மித்ரனிடம், "உனக்கு எதாவது க்ளூ கிடைத்ததா?" என கேட்டான்.
"எதுவும் கிளியராக இல்லை. நிறைய கேள்விகள் இப்போ புதுசாக வந்திருக்கு" என்றான் வருத்தமுடன்.
"எனக்கும் அப்படி தானிருக்கு" என்ற அகிலன், "ஸ்மிருதியும் சம்யுவும் வாட்ஸாபில் சாட் செய்தது எப்படி வெளியில் தெரிந்தது. ஸ்மிருதியிடம் இருந்த ரெட் ஐ20 மாடல் காரிலியே வந்து சம்யுவை ஏற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள். அட்ரஸ் கேட்ட தாத்தாவும் வேண்டுமென்றே ஸ்மிருதியை தாமதமாக்க செய்த செட் அப். இது வெல் ப்ளாண்ட் கிட்நாப்" என்றான்.
"எதற்காக கிட்நாப் செஞ்சிருப்பாங்க. என்னையோ, அப்பாவையோ பணம் கேட்டோ இல்லை வேற எதாவது டிமாண்ட் செய்தோ யாரும் தொடர்பு கொள்ளவில்லையே" என ஏக்கத்துடன் சொன்னான் மித்ரன்.
"சசியையோ, அவள் வேளை செய்யும் பத்திரிகையிலோ தொடர்பு கொண்டிருக்கலாம்" என்றான் அகிலன்
"நான் அவங்க இரண்டு பேரிடம் ஏற்கனவே கேட்டேன். இன்றைக்கு வரை யாரும் தொடர்பு கொள்ளவிலை. இட் இஸ் லைக் ஷுட்டிங்க் இன் த டார்க். எங்க தேடறது என்று கூட தெரியவில்லை" என்றான் நிராசையாக.
"எதாவது கண்டிப்பாக நமக்கு க்ளு கிடைக்கும். இப்போ சசி வீட்டுக்குப் போகலாம்" என காரை கிளப்பினான் அகிலன்.
சசி வீட்டில் அவனும் அவன் பெற்றோர்களும் இருந்தனர். அனைவரும் சோகத்தில் இருந்தனர். மித்ரனை கண்டதும் சசியின் அம்மா அழத் தொடங்கி விட்டார். சசியோ நான்கு நாள் தாடியுடன் கண்களை சுற்றி கருப்பு வளையங்களோடு இலக்கில்லாமல் வெறித்தப்படி அமர்ந்திருந்தான். சசியின் தந்தை முரளிதரன் மட்டுமே பேசும் நிலையிலிருந்தார்.
விசாரணை என்றதும் முகம் சுளித்த முரளிதரன், "எங்ககிட்ட என்ன கேட்க போறீங்க?" எனறு குரலை உயர்த்தி கேட்டார்.
அகிலன், "இது ஃபார்மாலிடி சார்" என்றவுடன் அடங்கியவர், "எங்க பையன் இருக்கிற நிலையில் எதுவும் பேசுவான் என்று தோன்றவில்லை" என்றார்.
"அகிலன், நீங்க கேளுங்க. எனக்கு தெரிந்ததை சொல்றேன்" என்றான் சசிதரன்.
"அன்னிக்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா?" என கேட்டான் அகிலன்.
சசி விரிவாக விவரிக்க, அகிலன் சில கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டான்.
"ஸ்ம்யு, ஸ்மிருதி பிக் அப் செய்வாள் என்று சொன்னதை வேறு யாராவது கேட்டார்களா?" என கேட்டான் அகிலன்.
"இல்லை, காரின் உள்ளே தான் சொன்னாள். சத்தம் வெளியில் கேட்டிருக்க வாய்ப்பில்லை" என்றான்
"நீங்க சம்யுவை ஏன் விரும்பினீங்க?" என கேட்டான் அகிலன்.
"சில கேள்விகளுக்கு நேரடியான பதில் கிடையாது அகிலன்.. உங்களுக்கு அமிதாவை ஏன் பிடிக்கும் என்றால் உங்ககிட்ட பதில் இருக்கா? இல்லையில்லை அது போல தான் சம்யுவை ஏன் பிடிக்கும் என்பதற்கு என்னிடம் பதிலில்லை. சில உணர்வுகளுக்கு எந்த மொழியிலும் வார்த்தை வடிவம் இருக்காது" என்றான்.
"அப்படி கேட்கலை சசி, உங்களுக்கு சம்யு கிட்ட என்ன ரொம்ப பிடித்தது, அவ அழகா, அறிவா, துணிச்சலா?" என கேட்டான் அகிலன்.
"எனக்கு சம்யுவை பிடிக்கும், இப்படி தனிதனியாக கேட்டால் சொல்ல தெரியவில்லை" என அவன் சொல்லும் போதே கண்களில் நீர் துளிர்த்தது.
"அழாதே சசி" என தோளை தட்டி சமாதானப்படுத்தும் போதே மித்ரனுக்கும் கண்கள் நிறைந்து, குரல் கரகரத்தது'
சசியின் பக்கம் திரும்பிய அகிலன் அவனை கூர்மையாக பார்த்தப்படி, "சசி, கிட்நாப் செய்தவர்கள் உங்களை காண்டாக்ட் செய்தார்களா?" என கேட்டான்.
சசி பதில் சொல்வதற்குள், அவனது தந்தை முரளிதரன், "எங்களை ஏன் அவங்க தொடர்பு கொள்ள போறாங்க?" எனறார் உயர்ந்த குரலில்.
"அவளோட அப்பாவையோ, அண்ணனையோ தான் தொடர்பு கொள்வார்கள். அவள் இன்னும் எங்க வீட்டுக்கு மருமகளாக வரலை" என்றார் எரிச்சலுடன்.
"சும்மாயிருங்கப்பா, என்னிக்கு அவ திரும்பி வந்தாலும், எப்படி திரும்பி வந்தாலும் அவ தான் என் மனைவி" என்றான் சசிதரன்.
"அகிலன் ஸாரி, கல்யாணம் நடக்காததில் வீட்டில் எல்லோரும் ரொம்ப அப் செட்டாக இருக்காங்க. நீங்க அப்பாவை தப்பாக எடுத்துக்காதீங்க" என்றான்.
"எனக்கு புரியுது. தாங்க்ஸ் சசி. நாங்க கிளம்பறோம்" என அங்கிருந்து கிளம்பினார்கள்.
காவல் நிலையம் வந்தவர்கள், எந்த காவல் நிலையத்திலிருந்தாவது பதில் வந்திருக்கிறதா என பார்த்தார்கள்.
எதுவும் வரவில்லை என்றவுடன் நிராசையாக சேரில் அமர்ந்தான் மித்ரன்.
"மித்ரன், உனக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?" என கேட்டான் அகிலன்.
"அடுத்த விசாரணையா என்கிட்டயா?" என ஆயாசத்துடன் கேட்டான் மித்ரன்.
ஆம் என தலையசைத்த அகிலனிடம், "நாம் கைது செஞ்ச அத்தனை குற்றவாளிங்களும் நம்மை எதிரியாக தான் பார்க்கிறாங்க" என்றான்.
"இல்லை, சமீபத்தில் உன்னை யாராவது எதுக்காவது மிரட்டினாங்களா?" என கேட்டான்.
"அப்படி குறிபிட்டு சொல்ற மாதிரி எதுவுமில்லை" என உதட்டை பிதுக்கினான்.
"நீ எதாவது முக்கியமான கேஸில் வேலை செய்கிறாயா? சீக்ரெட் அஸைன்மண்ட்?" என கேட்டான்.
"இல்லை அகிலன். உனக்கே தெரியும் இப்ப இருக்கிற கேஸையெல்லாம் நான் ரவிகுமாரிடம் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டிருக்கேன். என்னை ஃபினான்சியல் கிரைம்ஸ் இலாக்காவிற்கு மாத்தப் போறாங்க என்று கேள்வி பட்டேன். ஆனால் இதுவரை யாரும் என்கிட்ட சொல்லலை" என்றான்.
"மித்ரன். எனக்கு ஒரு இண்டியூஷன். இது வரைக்கும் விசாரிச்ச வரையில், சம்யுவை கடத்தினவங்க நம்மை தொடர்பு கொள்ளலை. இது பணத்துக்காக நடந்த கடத்தல் இல்லை. இது உன்னையோ, இல்லை சசியையோ பழி வாங்கறதுக்கு செஞ்ச கடத்தல் என்று தோனுது" என நிறுத்தினான்.
"உன்னை பழிவாங்கறதுக்கு என்று தான் எனக்கு இப்ப தோனுது. எப்பவுமே குற்றவாளிங்க எதையாவது தடயம் விட்டு போவாங்க. இவங்க பளானிங் வாட்ட்ர் டைட் ஆக இருக்கு. நாம் எப்படியெல்லாம் யோசிப்போம் என்று அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. இன்னும் கேட்டால், எனக்கு தெரிஞ்சு ந்ம்ம டிபார்ட்மண்ட்டில் ஆளை தூக்கிற அதே டெக்னிக் பயன்படுத்தியிருக்காங்க" என நிறுத்தினான்.
"உன் தங்கையோட ஃபோனை ஹாக் பண்ணியிருக்காங்க. ரொம்ப சோபிஸ்டிகேட்டட் திங்கிங்" என்றான்.
"சசியை பழி வாங்கவும் இருக்கலாம். ஆனால் அவனுக்கு சம்யு கடத்தினதில் இருந்து இதுவரைக்கும் வந்த ஃபோன் கால் ரெக்கார்டிங் அத்தனையும் கேட்டு விட்டேன். அவனையும் கடத்தினவங்க தொடர்பு கொள்ளலை. அவங்க அப்பா நமபரையும் செக் பண்ணிட்டேன்" என்றான் அகிலன்.
"உனக்கு சசி மேல் எதாவது சந்தேகம் இருக்கா?" என கேட்டான் மித்ரன்.
"அவன் தான் என்னோட சந்தேக லிஸ்டில் முதலில் இருக்கான். அவன் நம்க்கு தெரியாம வேற எதாவது செல் நம்பர் வைத்திருக்கலாம். நான் அவங்க வீட்டிலிருந்து போகும் அத்தனை செல் போன் கால்களையும் மானிட்டர் பண்ண சொல்லியிருக்கேன். அவங்க வீட்டிலிருக்கும் அத்தனை நம்பரையும் ஹாக் செஞ்சிட்டோம். இணைய சேவையும் மானிட்டர் செய்யறோம். இனிமே எங்களுக்கு தெரியாம ஒரு மெஸேஜ் கூட வெளியே போகாது." என்றவனை நம்ப முடியாமல் பார்த்தான் மித்ரன்.
"ஸாரி மித்ரன். உங்க வீட்டுக்கும் அதே நிலைமை தான்" என்றான் அகிலன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro