Sudum Nilavu Sudatha Suriyan - 31
சுடும் நிலவு சுடாத சூரியன் – 31
திங்களன்று காலை அகிலனின் அறை கதவை திறந்து உள்ளே வந்தான் மித்ரன். அகிலன் போனில் பேசி கொண்டிருக்க, அவன் எதிரே இருந்த சேரில் அமர்ந்தான்.
மித்ரன் பொறுமையில்லாமல் மேஜையில் இருந்த பேப்பர் வையிட்டை உருட்டுவதைப் பார்த்த அகிலன், போன் பேசி கொண்டே அவன் கையில் இருந்து அதை பிடுங்கி தன் மேஜை டிராவில் வைத்து மூடினான்.
போனை கீழே வைத்தவன், "என்ன மித்ரன், காலையிலேயே இவ்வளவு டென்ஷனா இருக்கே?" என கேட்டான்.
"இப்போ தான் கமிஷனரிடம் பேசிட்டு வந்தேன். சித்தார்த் அரெஸ்ட் வாரண்ட் பத்தி அவருக்கு ஒண்ணும் தெரியலை. நீ எதுவும் அவரிடம் சொல்லலை போலிருக்கு" என குற்றம் சாட்டும் குரலில் சொன்னான்.
"சம்யுவை பத்து மணிக்கு வர சொல்லியிருக்கேன். அவ வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்தவுடன், சித்தார்த்துக்கு அரெஸ்ட் வாரண்ட் இஷ்யு பண்ணிடலாம்" என்றான் அகிலன்.
"உனக்குத் தெரியும் இல்லை, அவனை கைது பண்ண, கமிஷனரிடம் பர்மிஷன் வாங்கனும்" என கோபமாக கேட்டான்.
"தெரியும்டா, அவன் அமெரிக்கன் சிட்டிசன். அவனை கைது பண்ணனும் என்றால் கமிஷனரிடம் அனுமதி வாங்கனும் என்று தெரியும்" என சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அவன் இன்னிக்கு நைட் ஊருக்குக் கிளம்பறான் என்று தெரியுமில்லை. நாம லேட் பண்ணா கிளம்பி போயிட்டே இருப்பான்" என கண்கள் அலைபாய சொன்னான்.
"என்னை நம்பு மித்ரன், நான் பார்த்துக்கிறேன்" என சொன்னவனை எரிச்சலுடன் பார்த்தவன், "அகில், இனிமே உன்னை நான் ஜென்மத்துக்கும் நம்பவே மாட்டேண்டா" என சொல்லி விட்டு எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்று கொண்டான்.
"ஏன் மித்ரன்?" என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனருகே சென்று நின்றான் அகிலன்.
"கூடவே இருந்தியே, நீ செய்யற வேலையை பத்தி ஒரு வார்த்தை சொன்னியா? முரளிதரன் மேல, எங்கப்பா மேல சந்தேகம் இருக்கு என்று ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை?" என ஆயாசத்துடன் கேட்டான் மித்ரன்.
"நல்லா யோசிச்சு பாரு, ஸம்யு கேஸை எங்கிட்ட கொடுத்தவுடன் நான் உங்கிட்ட சொன்னேனில்லை. சசி விட்டிலேயும், உங்க வீட்டிலேயும் போன் கால்களையும், இணையத்தையும் மானிட்டர் பண்றோம் என்று சொன்னேன்" என அகிலன் பொறுமையாக சொன்னான்.
"வெற்றிவேல் தாத்தா, ரவிகுமாரை பெயிலில் எடுத்தவுடன் அவங்க வீட்டையும் மானிட்டர் பண்ண ஆரம்பிச்சோம். அதிலேயும் ஒண்ணும் தெரியலை. சம்யு சொல்றதை நான் நமபாத மாதிரி இருந்தாலும், நான் சித்தார்த்தை சந்தேகப் பட்டேன். ஆனால் அவன் தாத்தா வீட்டுக்கு வந்த பிறகு, எங்களால் அவங்க நெட்வொர்க்கை ஹாக் பண்ண முடியலை. அவன் போன் நம்பர் தெரிஞ்சும், எங்களால் அதையும் ஹாக் பண்ண முடியலை. அவன் வந்த ஒரே நாளில், அவங்க வீட்டில் இருந்த எல்லா தொலைதொடர்பு சாதனங்களையும் செக்யுர் பண்ணிட்டான். எனக்கு அப்போ தான் அவன் மேல் சந்தேகம் உறுதியாச்சு" என்றான் அகிலன்.
"என்ன காரணத்துகாக அவன் சம்யுவை கடத்தியிருப்பான் என்று யோசிச்சேன். பணம் காரணம் இல்லை என்று முன்னாலே தெரியும். அன்னிக்கு சொன்ன மாதிரி நாலு பேரை தான் டார்கெட் பண்ணியிருப்பான் என்று தோணிச்சு. அதனால் முரளிதரன் பத்தியும், உங்க அப்பா பத்தியும் தகவல் சேகரிச்சேன். அப்போ தான் சத்தி ஸ்டேஷனில் முரளிதரன் பேரில் நாதன் கொடுத்திருந்த புகார் பத்தி சொன்னாங்க. உங்கம்மா பேச்சு வாக்கில் அமிதாகிட்ட பதினெட்டு வருஷமா சத்திக்கு போகலைங்கிறதை சொன்னாங்க. நான் உங்கப்பாவை சந்தேகப்பட்டதால் தான் உன் கிட்ட அதை சொல்ல முடியலை" என்றான் அகிலன்.
"குமரவேல் விபத்து கொலையாக இருந்திருக்கலாம் என்று நினைச்சேன். அந்த விபத்து நடந்த சமயத்தில், சத்தியமங்கலத்தில் எஸ்.பியாக இருந்த முன்னாள் டிஜிபி திருமாறனை போய் சந்திச்சேன். அவரிடம் இந்த கேஸ் பத்தி டிஸ்கஸ் செஞ்சேன். அவர் கடத்தல்காரங்களுக்கு உதவறாங்க என்று சந்தேகப்பட்ட முக்கியமான ஆட்களில் முரளிதரன் இருந்ததை உறுதி செஞ்சார். ஆனால் உங்கப்பாவை அவருக்குத் தெரியலை. எனக்கு உங்கப்பா பணத்துக்காக குமரவேலை கொலை செஞ்சிருப்பார் என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இன்னும் கேட்டா உங்கப்பாவும், முரளியும் சேர்ந்து கும்ரவேலை கொலை செஞ்சிருப்பாங்க என்று நினைச்சேன்" என்றான்.
"முரளி அங்கிள் ஏதாவது பேசினாரா?" என கேட்டான் மித்ரன்.
"இதுவரைக்கு எதுவும் பேசலை. அந்த கேஸை விக்ரமிடம் கொடுத்துட்டாங்க" என சொன்ன அகிலன், "வசந்தன் அங்கிளையும் விசாரணைக்குக் கூப்பிடுவாங்க. கொலையை மறைச்சதில் அவருக்கும் தணடனை கிடைக்கலாம்" என இழுத்தான் அகிலன்.
வருத்தமாக தலையை அசைத்த மித்ரன், திரும்பவும் சேரில் உட்கார்ந்தான்.
"இந்த விசாரணையை நீ சனிக்கிழமையே முடிச்சிருக்கலாம். சித்தார்த் இத்தனை நேரம் எங்காவது ஒடி போயிருப்பான்" என சொன்னான் மித்ரன்.
"அதெல்லாம் போக முடியாது. நான் ஏர்போர்ட்டில் அவனை ஹோல்ட் பண்ண சொல்லிட்டேன்" என்றவன், "இப்போ தான் அவனிடம் பேசினேன். இங்கே தான் கிளம்பி வந்துட்டிருக்கான்" என சொன்னான் அகிலன்.
கான்ஸ்டபிள் சம்யுக்தா வந்திருப்பதாக சொல்ல, அவளை உள்ளே அனுப்ப சொன்னான்.
வசந்தனுடன் சம்யுக்தா உள்ளே வந்தாள். இறுக்கமாக இருந்த அவளது முகத்தைப் பார்ப்பதற்கே மிதரனுக்குக் கஷ்டமாக இருந்தது.
வசந்தனும் எதுவும் பேசாமல் சேரில் அமர்ந்தார். சம்யுக்தா அவரருகே இருந்த மற்றொரு சேரில் வந்தமர்ந்தாள். அகிலன் இன்னும் நான்கு சேர்களைக் கொண்டு போட சொன்னான். பத்து நிமிடம் கடந்த பிறகு சித்தார்த், ரவிகுமாருடனும், நாதனுடன் வந்தான்.
"ஹாய் அகிலன், ஹாய் மித்ரன்" என சொன்னவன் சேரில் அமர்ந்து "ஹலோ அங்கிள்" என்றான்.
ஸம்யுக்தாவை நோக்கி புருவத்தை தூக்கி விட்டு, அகிலனை பார்த்தான்.
"சித்தார்த், ஸம்யுவை ஏன் கடத்தினீங்க? உங்களுக்கு அது கிரிமனல் வேலை என்று தெரியாதா?" என கேட்டான்.
"தெரியும்" என்றவன், "எங்கப்பாவுக்கு நியாயம் கிடைக்க அதை செய்ய வேண்டியது என் கடமை என்று நினைச்சேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"இதுக்கு அஞ்சிலிருந்து பத்து வருஷ வரைக்கும் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று தெரியுமா?" என கேட்டான்.
"தெரியும் அகிலன். நீங்க கேட்கிறதை கேளுங்க" என சொல்லிவிட்டு சம்யுக்தாவை திரும்பி பார்த்தான். அவளோ அகிலனையே பார்த்தபடி இருந்தாள்.
"ஸம்யுவை ஏன் கடத்தினீங்க?" என கேட்டான்.
"வசந்தனை வைத்தியர் அடையாளம் காண்பிச்ச உடனே அவரைப் பத்தின அத்தனை விஷயத்தையும் நானும் ரவிகுமாரும் சேகரிக்க ஆரம்பிச்சோம்" என தொடங்கினான்.
"குடும்பத்தோட அவர் மகள் கல்யாணத்துக்கு புடவை எடுக்க கடைக்கு போக போறதா தகவல் தெரிஞ்சது. நானும் ரவியும் கடைக்குப் போனோம். வசந்தன் அங்கிள் குடும்பமும், முரளிதரன் குடும்பமும் வந்திருந்தாங்க. அவங்க சந்தோஷமா சிரிச்சு பேசறதை பார்த்து எனக்கு சொல்ல முடியாத கோபம் வந்தது. எனக்கு குடும்பமே இல்லாம செஞ்சிட்டு, இவர் சந்தோஷமா இருக்கிறார் என்று ஆத்திரமாக வந்தது. நான் இருபது வருஷமாக அனுபவிச்ச வேதனையை இவரும் அனுபவிக்கனும் என்று இவர் பொண்ணை கடத்தினேன்"
"எப்படியும் பொண்ணை தேடி இவரோ, இவர் பையனோ வருவாங்க என்று தெரியும். வரலை என்றாலும் எனக்கு அவங்களை எப்படி வர வைக்கனும் என்று தெரியும். எங்கிட்ட இவர் வந்தா, இருபது வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச கொலைக்கு போலிஸில் சரணடைஞ்சா தான் அவங்க பொண்ணை விடுவேன் என்று சொல்லலாம் என்றிருந்தேன். ஏன்னா எங்கிட்டே அவர் தான் கொலை செஞ்சார் என்று சொல்றதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வைத்தியர் மரத்தின் பின்னாடி இவர் ஒளிஞ்சிட்டிருந்ததை சொன்னாலும், கொலை செஞ்சதுக்கு அது எந்த விதத்திலும் ஆதாரம் ஆகாது என்று தெரியும். இவரே குற்றத்தை ஒத்துக்கிட்டு சரண்டைஞ்சா தான் உண்டு என்று தெரியும்" என ஆழ்ந்த குரலில் சொன்னான் சித்தார்த்.
"வசந்தன் தான் கொலை செஞ்சார் என்று எப்படி முடிவுக்கு வந்தீங்க?" என கேட்டான் அகிலன்.
"வசந்தன் தாத்தாவுக்கு நெருக்கமானவரா இருந்திருக்கார். தாத்தா தான் அவருக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிருக்கார். தொழில் தொடங்கவும் பணம் கொடுத்திருக்கார். அவர் கூட தொழில் தொடங்கின முரளிதரன் நல்லா முன்னேறி இருந்தாலும், இவர் வியாபாரம் நஷட்த்தில் தான் போயிட்டிருந்தது. இரண்டு குழந்தைங்களோட இவர் கஷ்டப்பட்டதா நாதன் சொன்னார். அதுவுமில்லாம இவர் மட்டும் தான் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கார். இவர் கொலை செய்யலை என்றாலோ அதில் சம்பந்த படலை என்றாலோ இவர் நடந்த விஷயத்தை தாத்தா கிட்ட சொல்லியிருப்பார். இல்லை போலிஸில் சொல்லியிருப்பார். இவர் இரண்டு விஷயத்தையும் செய்யலை. அப்போ யார் கிட்டேயாவது பயமிருந்திருந்தாலும், இந்த இருபது வருஷமா அவர் சொல்லலை என்பதே அவர் தான் தப்பு செஞ்சிருக்கார் என்று நினைக்க வைச்சுது" என்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் வசந்தன் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டார்.
"சம்யுக்தாவோட செல்போனை ஹாக் செஞ்சோம். ஆனா மித்ரன் அவளை எங்கேயும் தனியாவே விடலை. நாங்க கடத்தின முதல் நாள், கண்ணம்மா பேட்டையில் தனியா வண்டியில் வந்தாள். ஆனா இரண்டு போலிஸ் அவளை ஷாடோ பண்ணிட்டிருந்தாங்க. அதுக்கு அடுத்த நாள், பியூட்டி பார்லரிலிருந்து வரும் போது, வேண்டுமென்றே ஸ்மிருதியை அட்ரஸ் கேட்டு லேட் பண்ண வைச்சு அவளை கடத்தினோம்" என்றான்.
"அப்பறம் எதுக்கு அவளை காட்டில் காப்பாத்தி வைத்தியர் வீட்டில் கொண்டு விட்டீங்க?" என கேட்டான் அகிலன்.
"அவளை கடத்தி அவங்கப்பாவை போலிஸில் சரணடைய வைக்கிறது தான் என்னோட நோக்கம், அவளை கொல்றது என்னுடைய நோக்கம் இல்லை. அவளுக்கு நல்ல அடிபட்டிருந்ததால், உடனடியாக டிரீட்மெண்ட் தரனும் என்று தான் வைத்தியர் வீட்டில் கொண்டு விட்டேன்" என்றான் சித்தார்த்.
"வைத்தியருக்கு, நீங்க இவளை கடத்தினது தெரியுமா?" என கேட்டான் அகிலன்.
"இல்லை தெரியாது. காட்டில் அடிப்பட்டு கிடந்தாள் என்று தான் அவரிடம் சொன்னேன். தாத்தாவுக்கும், நாதன் அங்கிளுக்கும் கூட நான் வசந்தனை சந்தேகப்படறேன் என்றும் தெரியாது. ரவிகுமார் போலிஸில் மாட்டின பிறகு தான் எல்லா விஷயத்தையும் இவங்க கிட்ட சொன்னேன்" என்றான்.
"சத்தியமங்கலத்தில் கடத்தி வைச்சிருந்தா ரவிகுமார் மாட்டிப்பான் என்று உனக்குத் தெரியாதா?" என் கேட்டான்.
"தெரியும், ஆனா தன் பெண் அங்கே தான் இருக்கா என்று தெரிஞ்சாலே, வசந்தன் அங்கிளுக்குப் புரிஞ்சிடும் என்று நினைச்சேன். அதனால் தான் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்" என்றான்.
"அப்போ வெற்றிவேல் தாத்தாவோட ஹார்ட் அட்டாக்கும் நாடகமா?" என கேட்டான்.
"இல்லை. தாத்தாவுக்கு நிஜமாகவே தான் ஹார்ட் அட்டாக் வந்தது. அவர் முரளிதரனை விட வசந்தனை தான் நம்பினார். ஏற்கனவே முரளி கம்பனியில் பணம் எடுத்ததில் ரொம்ப அப்செட்டா இருந்தார். வசந்தனும் தனக்கு துரோகம் செஞ்சதை அவரால் தாங்க முடியலை" என அவன் சொல்லும் போதே வசந்தனின் கண்களில் நீர் நிறைந்தது.
"சம்யு, இவன் தான் உன்னை கடத்தின இரண்டாவது ஆளா?" என கேட்டான்.
சம்யுக்தா எதுவும் சொல்லாமல் இருக்க, "சம்யு, இவன் தான் கருப்பு பாடி கலர் பூசிட்டு, கருப்பு லென்ஸ் போட்டிருந்தான். தலைமுடியையும் நீளமா வளர்த்திட்டிருந்தான்" என்றான் அகிலன்.
அவள் மெளனமாகவே இருக்க, ஸம்யுக்தாவிடம் ஒரு பேப்பரைக் கொடுத்துக் கையெழுத்துப் போட சொன்னான் அகிலன்.
"ஸம்யு, உன்னை கடத்தினது சித்தார்த்தும், ரவிகுமாரும் தான் என்று எழுதியிருக்கு. அவங்களை நீ அடையாளம் காட்டினதற்கு இந்த பேப்பரை கோட்டில் கொடுக்கனும்" என்றான் அகிலன்.
"சம்யு, கையெழுத்துப் போடு" என மித்ரன் அருகே வந்து சொல்ல, சம்யு, அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அகிலனை நிமிர்ந்து பார்த்தவள், "என்னை யாரும் கடத்தலை. நானே தான் சித்தார்த்தோட போனேன்" என அவள் சொன்னவுடன் சித்தார்த் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.
"சம்யு, உன்னை சித்தார்த் ஏதாவது மிரட்டினானா? எங்களை ஏதாவது செஞ்சிடுவேன் என்று சொன்னானா?" என பதைப்புடன் கேட்டான் மித்ரன்.
இல்லை என்று தலையசைத்து மறுத்தவளை, "நீ எதுக்கும் பயப்படாதே சம்யு, நாங்க உன்னை பார்த்துக்கிறோம். அவன் உன்னை திரும்பவும் கடத்துவான் என்று பயப்படுறியா?" என கேட்டான் அகிலன்.
"இல்லை அகில் அண்ணா. அவர் என்னை முன்னாடி கடத்தியிருந்தா தானே திருமபவும் கடத்த முடியும்?" என கேட்டவளை யோசனையுடன் அகிலன் பார்க்க, ஆயாசத்துடன் பார்த்தான் மித்ரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro