Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 27

சுடும் நிலவு சுடாத சூரியன் – 27

வெற்றிவேல் அவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டார்.

"உங்களோட இன்னிக்கு என் பையன் குமரவேலும் இங்கே இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்" என வருத்தமுடன் சொன்னார்.

சித்தார்த்தின் முகத்தில் எந்த உணர்வுமின்றி தன் கை விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ரவிகுமார் வந்து வாசல் கதவோரம் சாய்ந்து நின்றான்.

வராண்டாவின் தூணில் சாய்ந்து நின்றிருந்த அகிலன், "ஐயா, உங்க பையன் எப்படி செத்துப் போனார்?" என கேட்டான்.

அகிலன் எதற்காக இதை கேட்கிறான் என மித்ரன் கேள்வியாக அவனை  பார்த்தான்.
வெற்றிவேலை பற்றி வசந்தன் சொன்னதை அகிலனிடம் அப்படியே சொல்லியிருந்தான்.

"சித்தார்த்துக்கு அப்போ அஞ்சு வயசு. அவனுக்கு மொட்டைப் போடணும் என்று நான் தான் வர அவங்களை அமெரிக்காவில் இருந்து இங்கே வர சொன்னேன். அவனுக்கு மொட்டைப் போட்டு முடிச்ச பிறகு, என் மருமக ராதிகா, மைசூர் பேலஸ் பார்க்கனும் என்று சொன்னாள். அங்கே போயிட்டு வரும் போது நடந்த விபத்தில் அவங்க இரண்டு பேரும் இறந்துட்டாங்க" என சொல்லும் போது அவரது குரல் தழதழத்தது. கண்களில் நீர் நிறைய தன் கண்ணாடியை கழட்டி, கண்களைத் துடைத்துக் கொண்டார்.

தன் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு, பாறையாய் முகம் இறுகி அமந்திருந்தான். வினோதினிக்கு ஏற்கனெவே அந்த விபத்தைப் பற்றி தெரிந்திருந்தும், அவரது கண்களில் நீர் நிறைந்தது. சித்தார்த்தின் பெற்றோர்களின் மரணத்தைப் பற்றி அப்போது தான் கேள்விபட்ட சமயுக்தா, நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்த்தாள். கண்கள் எங்கோ வெறித்தபடி இருக்க, உறைந்திருந்த அவனது முகத்தை பார்த்ததும், சமயுக்தாவிற்கு இதயத்தை ஏதோ செயத்து. அவனது தோளகளை அணைத்து, அவனது கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அவனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிந்திருதாலும், அத்தனை சிறு வயதில், விபத்தில் ஒன்றாக இறந்து விட்டார்கள் என்று இப்போது தான் தெரிந்ததால், அமிதாவிற்கு நெஞ்சை அடைத்தது. சித்தார்த்தின் அருகே சென்று அமர்ந்தவள், அவனது தோள்களை பரிவுடன் அழுத்தி, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள். அது வரை தன்னை இறுக்கமாக வைத்திருந்த சித்தார்த், அமிதா அவனது கைகளைப் பிடித்ததும், அவனது முகம் கசங்கி, கண்களை தாண்டி நீர் வழிந்தது. அவனது தோளை ஆதரவாக அமிதா அணைத்துக் கொள்ள, முகத்தை தன் இரு கைகளாலும் மூடி கொண்டான்.

அங்கே சூழ்நிலை மிகவும் இறுகி போயிருக்க, கனத்த மெளனம் பரவி அனைவரையும் அழுத்தியது.

"அது விபத்து என்று உங்களுக்கு நல்லா தெரியுமா?" என கேட்டான் அகிலன்.

அவன் அதைக் கேட்டவுடன் வசந்தன் குடும்பத்தாரும், முரளிதரன் குரும்பத்தினரும் அதிர்ந்தனர். அமிதா திரும்பி அகிலனை கவலையாக பார்த்தாள்.

"அவங்க மைசூர் போயிட்டு திரும்பி வரும் போது, ஹசனூர் கிட்ட வேகமாக பின்னால் வந்த லாரி, பிரேக் ஃபைலியர் ஆனதால அவங்க காரை இடிச்சி தள்ளிடிச்சு. சம்பவம் நடந்த இடத்திலேயே என் பையனும், மருமகளும் இறந்துட்டாங்க" என குரல் தழதழக்க சொன்னார்.

"ஐயா, பழைய கதையெல்லாம் எதுக்கு இப்போ பேசணும், அதனால் எல்லோருக்கும் மனகவலை தான் அதிகமாகும்" என மெலிதான குரலில் சொன்னார் முரளிதரன்.

அவர் பேசியதை கண்டு கொள்ளாமல் அகிலன், "அந்த செய்தி உங்களுக்கு எப்போ கிடைச்சது?" என வெற்றிவேலை கேட்டான்.

இது என்ன கேள்வி என திரும்பி அவனை முறைத்தாள், அமிதா. அவளை திரும்பி முறைத்தவன், தூணில் சாயந்து நின்று, "சொல்லுங்க ஐயா" என கேட்டான்.

"விபத்து நடந்த வழியே போன இன்னொரு காரில் இருந்தவங்க, அவங்க இரண்டு பேரையும் சத்தியமங்கலத்தில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. ஆனால் அவங்க மருத்துவமனைக்கு வருவதற்குள் அவங்க இறந்துட்டாங்க என்று டாக்டர் சொன்னார்" என்றான்.

ரவிகுமாரை திரும்பி பார்த்த அகிலன், "காரை ஓட்டிட்டு போன டிரைவர் சண்முகம் என்ன ஆனார்?" என கேட்டான்.

"டிரைவர் சண்முகத்தையும், சித்தார்த்தையும் வேற ஒருத்தர் கொஞ்ச நேரம் கழிச்சு கொண்டு வந்து சேர்த்தாங்க. சண்முகம் வரும் போதே இறந்துட்டான் என்று டாக்டர் சொன்னார். சித்தார்த்துக்கு இரண்டு மூணு இடத்தில் லேசா தான் அடிப்பட்டு இருந்தது" என சொன்னார்.

"சித்தார்த்துக்கு அப்போ எத்தனை வயசு?" என கேட்டான்.

"அஞ்சு வயசு, அவனுக்கு அப்போ தமிழ் பேசவும் வராது, பேசினாலும் புரியாது" என்றார்.

"அப்போ போலிஸில் கேஸ் ரிஜிஸ்டர் பண்ணாங்களா?" என கேட்டான அகிலன்.

"ஆமாம் கேஸ் ஃபைல் பண்ணாங்க, விதியைப் பத்தி என்ன சொல்றது, அந்த லாரி எங்க காட்டன் மில்லோட லாரி தான். டிரைவர் பிரேக் கொஞ்சம் சரியில்லை என்று ஒரு வாரமா சொல்லிட்டிருந்தார் போலிருக்கு. அதை ஒழங்கான நேரத்தில் ரிப்பேர் பண்ணாததால், விபத்து நடந்திருச்சு. டிரைவருக்கு அஞ்சு வருஷ ஜெயில் தண்டனை கொடுத்தாங்க" என்றார்.

"அடிபட்டு இருந்தவங்களை யார் கொண்டு வந்து மருத்தவமனையில் சேர்த்தாங்க என்று தெரியுமா?" என கேட்டான்.

"குமரனையும், ராதியையும் மைசூரிலிருக்கிற ஒரு நகை கடை வியாபாரி தான் கொண்டு வந்து சேர்த்தார்" என்றார்.

"அப்போ சண்முகத்தையும், சித்தார்த்தையும் யாரு கொண்டு வந்து சேர்த்தாங்க" என கேட்டான் அகிலன்.

"யாரு என்று தெரியலை. அவங்களை கொண்டு வந்து விட்டு விட்டு போயிட்டாங்க. அப்போ போலிஸ் விசாரிக்க முயற்சி செஞ்சாங்க. யாரென்று தெரியாததால் அப்படியே விட்டுட்டாங்க. எனக்கு அவங்க இறந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் எதையும் யோசிக்க தோணலை. போலிஸ்கார்ங்க இந்த கேஸை விபத்து என்று முடிச்சிடலாமா என்று கேட்டாங்க. நானும் சரியென்று சொல்லிட்டேன்" என ஆதங்கமாக முடித்தார்.

"விபத்து நடந்த போது அந்த காரில் இருந்த நாலு பேரில் இப்போ சித்தார்த் மட்டும் தான் உயிரோடு இருக்கான். அவனால் மட்டும் தான் அவனையும் சண்முகத்தையும் யார் கொண்டு வந்து சேர்த்தாங்க என்று சொல்ல முடியும்" என சொன்னான் அகிலன்.

"அப்போ சித்துக்கு அஞ்சு வயசு தான், அவனுக்கு என்ன தெரியும்?" என வாயை திறந்தார் வசந்தன்.

"மூன்று வயசிலேயே பசங்களுக்கு தன்னை சுத்தி நடக்கிற எல்லா விஷயமும் புரியும். அவங்க பார்க்கிற எதையும், வேகமாக மனசில் பதிய வைச்சுப்பாங்க. அஞ்சு வயசான சித்தார்த்துக்கு கண்டிப்பா நடந்தது என்ன என்று தெரியும். அவனோட மனசில் அவனை காப்பாத்தி கொண்டு வந்தது யாரென்று தெரியும்" என்றான் அகிலன்.

மித்ரனுக்கு ஏதோ புரிய, அகிலனை கேள்வியுடன் பார்த்தான். அகிலன் தலையசைக்க, சட்டென்று எழுந்து நின்று விட்டான்.

"என்ன மித்ரன், என்னாச்சு?" என சசிதரன் கேட்டான்.

"தண்ணி வேணும்" என சொன்னவன், இயல்பாக அகிலனின் அருகே சென்று நின்று கொண்டான்.

நாதன் தலையசைக்க, வேலையாள் தண்ணி எடுத்து வர உள்ளே சென்றான்.

"இப்போ யாரு சித்தார்த்தை கொண்டு வந்து சேர்த்தாங்க் என்று தெரிஞ்சு என்ன பண்ண போறோம். பழசையெல்லாம் கிளறாம விடறது தான் எல்லோருக்கும் நல்லது. இப்போ அதை பத்தி பேசறதால ஐயாவுக்கும், சித்தார்த்துக்கும் மன கஷ்டம் தான் அதிகமாகும்" என ஆழ்ந்த குரலில் சொன்னார் முரளிதரன்.

"அகிலன், எனக்கும் முரளி சொல்றது தான் சரியென்று தோணுது. இன்னிக்குத் தான் ரொம்ப நாள் கழிச்சு, நாங்க ஒண்ணா இந்த ஊருக்கு வந்திருக்கோம். இன்னிக்கு அவங்க நினைவு நாள் என்பதை மறுக்கலை. ஆனா நாம எதையாவது பேசி அவங்க காயத்தை அதிகப்படுத்த வேண்டாமே" என கவலையான குரலில் சொன்னார் வசந்தன்.

"இப்போ பேசறதால் நாம் எதை சாதிக்க போறாம்? போனவங்க திரும்பி வர போறாங்களா? அகிலன் நீங்க போலிஸ் என்கிறதால் எதையும் அதே பார்வையோடு பார்க்கனும் என்று அவசியமில்லை. இப்போ தான் சத்திக்கு நீங்க முதல் முறையா வந்திருக்கீங்க என்று சொன்னாங்க. அமிதாவும் வந்திருக்காங்க. எங்க ஊரை சுத்திப் பார்த்துட்டு சந்தோஷமா போங்க. வேற எங்கேயாவது போகனும் என்றாலும் சொல்லுங்க, நான் ஏற்பாடு பண்ணறேன்" என சொன்னார் முரளிதரன்.

"தாங்கஸ் அங்கிள்" என சொன்னான் அகிலன்.

"எனக்கும் அப்பா சொல்றது தான் சரியென்று தோணுது. நானும் சித்தார்த்தும், ஒரு பிஸினஸ் டீல் பத்தி பேசணும். இன்னிக்குள்ளே முடிச்சா தான் திங்கட்கிழமை சைன் பண்ண முடியும். சித்தார்த் திங்கட்கிழமை திரும்பி போறான். அதை மிஸ் பண்ணிட்டா, அப்பறம் இரண்டு மாசம் தள்ளி போயிடும்" என கவலையான குரலில் சொன்னான் சசிதரன்.

"ஏன் சசி, இரண்டு மாசமாகும், நீ அமெரிக்கா போய் பேசி முடிச்சிட்டு காண்டிராக்ட் சைன் பண்ணிட்டு வாயேன்" என்றான் மித்ரன்.

"அது முடியாது மித்ரன், போன தடவையே கல்யாணம் தள்ளி போச்சு. நான் இந்த சமயத்தில் எங்கேயும் போய் ரிஸ்க் எடுக்க இஷ்டமில்லை. இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் கூட இல்லை. அதுக்குப் பிறகு நாங்க ஹனிமூன் போகனும், எங்க அம்மாவும், உங்க அம்மாவும், கல்யாணம் நின்று போனதால் நிறைய சாமிகிட்ட வேண்டிக்கிட்டிருக்காங்க. அதெல்லாம் முடிச்சா தான் அமெரிக்கா போக முடியும்" என சொன்னான் சசிதரன்.

அவன் திருமணம் பற்றி பேசியவுடன், ஸம்யுக்தாவின் முகத்தில் படர்ந்த வேதனையை மறைக்க தலையை குனிந்து கொண்டாள். சசிதரனை திரும்பி பார்த்த சித்தார்த்தின் பார்வை உணவர்களற்று இருந்தது.

"சசி, ஸாரி, இன்னிக்கு எனக்கு இருக்கிற மூடில் பிஸினஸ் பேச முடியாது. நான் உங்களை இங்கே பிஸினஸ் பேச வர சொல்லவும் இல்லை" என கரகரத்த குரலில் சொன்னான் சித்தார்த்.

"புரியுது, சித்தார்த், நாம இப்பவே பேச வேண்டாம். இன்னிக்கு சாயங்காலம், இல்லை நாளைக்குக் காலையில் கூட பேசலாம்" என சொன்னான் சசிதரன்.

அதற்கு எதுவும் பதில் சொல்லாமல், தன் தலையை பின்னால் சரித்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த்.

ஸம்யுக்தாவிற்கு முதல் முறையாக சசிதரனின் மேல் கோபம் வந்தது. சித்தார்த்தின் வருத்தமான மனநிலையும், அவனது கலங்கிய கண்களும் அவளை ஏதோ செய்தன. அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆறுதல் சொல்ல இதயம் துடித்தது. அவ்னை நோக்கி ஒரு கனிவான பார்வை, ஆறுதல்படுத்தும் ஒரு சொல்லை  கூட சொல்ல முடியாமல் தவித்துப் போனாள். சித்தார்த்தின் நிலையை உணராமல் சசிதரன் பிஸினஸ் பத்தி பேச வேண்டும் என்று சொன்னது அவளுக்கு ஆத்திரமூட்டியது.

"சித்தார்த், எனக்கு உன் மனநிலை புரியுது. உனக்கு சொல்லலாம் என்றால் தோணினால் என் கேள்விக்குப் பதில் சொல்லு" என நிறுத்தினான் மித்ரன்.

ஸம்யுக்தாவிற்கு அவனது அண்ணனை பார்த்தும் கோபம் வந்தது. எல்லோரும் சேர்ந்து சித்தார்த்தை வேண்டுமென்றே தொல்லை செய்வது போலிருந்தது.

தன்னை முறைக்கும் தங்கையின் பார்வை உணர்ந்து திரும்பினான். ஸம்யுக்தாவின் மனநிலை அவளது பார்வையிலே அவனுக்குப் புரிந்து போனது. சித்தார்த்துக்காக பரிதாபப்படும் பார்வை இல்லை அது, அதற்கும் மேலே அதில் வேறு ஏதோ உணர்வு கலந்திருந்தது.

சித்தார்த், நிமிர்ந்து அமர்ந்து, மித்ரனை பார்த்து, "என்ன கேள்வி மித்ரன், எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்" என்றான்.

"அந்த விபத்து நடந்த போது, டிரைவரையும் உன்னையும் காப்பாத்தினது யாரென்று தெரியுமா?" என கேட்டான்.

தொண்டையை செருமி, தன் குரலை சரி செயதவன், "விபத்து நடந்த போது அவர் யாரென்று தெரியாது. ஆனால் இப்போ தெரியும்" என்றான்.

காற்றில் இலைகள் உராயும் ஓசை தெளிவாக கேட்டது. தூரத்தில் குயில் கூவும் ஓசை கூர்மையாக கேட்டது. அங்கே உட்கார்ந்திருந்தவர்களின் மூச்சு காற்று தெளிவாக கேட்டது.

"யாரு சித்தார்த்?" என கேட்டான் மித்ரன்.

"இவர் தான்" என சித்தார்த் சுட்டிய இடத்தில் வைத்தியர் அம்ர்ந்திருந்தார்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro