Sudum Nilavu Sudatha Suriyan - 24
சுடும் நிலவு சுடாத சூரியன் – 24
சித்தார்த்தின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும், ஸம்யுக்தாவிற்கு கோபம் வந்தது. அவன் எதிரே எதற்கு யோசிக்க வேண்டும் என்று தன்னை தானே நொந்து கொண்டாள். அவன் நோக்கம் புரிந்து தான், அவனை தவிர்ப்பதற்காக சசி மேல் காதலிருப்பதாக சொன்னாள். வேண்டுமென்றே மிஸஸ் ஸம்யுக்தா சசிதரன் என்று சொல்லி, அவனை விலக்க முயற்சித்தாள். ஆனால் அவன் உண்மையாக சொல் என்று சொன்னவுடன், ஏன் அப்போது அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அவன் கேட்டவுடன் நான் இன்னும் சசியை காதலிக்கிறேன் என்று சொல்ல விடாமல் எது தடுத்தது என யோசித்தாள்.
தான் ஒன்றும் சசியை இப்போது காதலிக்கவில்லை என்று சொல்லவில்லையே. அவனே எதையோ பதில் என்று நினைத்துக் கொண்டால், அதற்கு எந்த விதத்திலும் தான் பொறுப்பில்லை என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், "வாவ், ஒரு நிமிஷத்தில் உன் முகத்தில் எத்தனை எக்ஸ்பிரஷன், பியுட்டிஃபுல்" என அவளை ஆசையுடன் பார்த்துச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும், தன் முகத்தை மறைப்பதற்குக் குனிந்து கொண்டாள்.
"பாட்டி சரியாக தான் சொல்லியிருக்காங்க, நான் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்ததில்லை. தமிழ் பொண்ணுங்க இத்தனை இண்டிரஸ்டிங்கா இருப்பாங்க என்று எனக்குத் தெரியாது" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.
தன் முகத்தை மறைப்பதற்குக் குனிந்ததை, அவள் வெட்கப்பட்டு குனிந்ததாக நினைத்து விட்டான் என புரிந்த போது எரிச்சலாக வந்தது.
"நான் வெட்கப்படலை. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க" என எரிச்சலாக சொன்னாள்.
"ஒ, இஸ், இட்" என்றவன், அவளது வலது கையை எடுத்து, அவள் விரல்களை ஆர்வத்துடன் பார்த்தான்.
அவனது கரம் அவள் கையை பற்றியவுடன், தனக்குள் ஏற்பட்ட இனிய அதிர்வை பற்களை கடித்து அடக்கிக் கொண்டாள். எந்த உணர்வையும் வெளிகாட்ட கூடாதென்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அவளது நகத்தை யோசனையுடன் பார்த்தவன், "உனக்கு பேபி பிங்க கலர் தான் பிடிக்குமா?" என ஆர்வத்துடன் கேட்டான்.
"இது பேபி பிங்க் கலர் இல்லை, ஆல்மோண்ட் பிங்க்" என்றவள், தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அவனோ கையை விடாமல், "ஒ, அன்னிக்குப் பார்ட்டிக்குக் கூட இதே நைல் கலர் தான் போட்டிருந்தே, ஸோ, உனக்கு ஆல்மோண்ட் பிங்க் நைல் கலர் பிடிக்கும்" என சொன்னவன், ஞாபகம் வந்தவனாக, "இப்போ உன் கை எப்படியிருக்கு? பிராக்சர் சரியாயிடிச்சா?" என அவளது கைகளை மெதுவாக வருடியபடி கவலையுடன் கேட்டான்.
அவனது இதமான வருடலில், அவளது இதயம் வேகமாக அடித்து, உடலில் ரத்தம் வெப்பமாக பாய்ந்தது. தன் உணர்வுகளை கஷ்டப்பட்டு சமன்படுத்தியவள், "சரியாயிடிச்சு" என சொல்லி, தன் கையை அவன் பிடியில் இருந்து விலக்கினாள். அமிதா தூங்கி கொண்டிருக்க, வெற்றிவேல் தாத்தாவும், நாதன் அங்கிளும் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை. இவனுடன் இங்கேயிருந்தால் பிரச்சனை என்ற தோன்ற, உடனே சென்று விட வேண்டுமென்று என நினைத்தாள்.
"எனக்குத் தலை வலிக்குது, நான் தூங்க போறேன்" என சொல்லியபடி வேகமாக எழுந்து நடந்தவளை, அவன் வேகமாக கை பற்றி நிறுத்தினான்.
"சித்தார்த், கையை விடுங்க" என ஸம்யுக்தா கோபமாக சொன்னாள்.
"ரிலாக்ஸ் யுக்தா, நான் உங்கிட்ட இன்னும் பேசி முடிக்கலை" என சொன்னவனது குரலில் உணர்ச்சி நிறைந்திருந்தது.
"எனக்கு உங்க கிட்ட எதுவும் பேச வேண்டாம்" என சொன்னவளது குரலில் மிக லேசாக பயம் எட்டிப் பார்த்தது. மித்ரனும் வீட்டில் இல்லை எனபது மனதில் வந்து போனது.
"நீ எதுவும் பேச வேண்டாம், நான் சொல்றதை மட்டும் கொஞ்சம் கேள்" என்றவனது குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.
"யுக்தா, யூ ஆர் ஸோ பியுட்டிஃபுல். உன்னை பார்த்தவுடனே.." என அவன் காதலுடன் சொல்லும் போதே, "சித்தார்த் ப்ளிஸ், நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கும் சசிக்கும் ஏற்கெனவே கல்யாணம் நிச்சியமாயிடிச்சு. அடுத்த மாசம் எங்களுக்குக் கல்யாணம்" என சொல்லும் போதே அவளது கண்களில் நீர் நிறைந்தது.
அவன் தனது கண்ணீரை பார்க்காமல் இருக்க, மறுபக்கம் முகத்தை திருப்பியவள், தனது கையை வேகமாக அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.
வலுகட்டாயமாக அவளது முகத்தை தன் கைகளால் திருப்பியவன், "நீ சசியை இன்னும் விரும்பறியா? இதுக்குப் பதில் உன்னோட கண்ணீரே எனக்குச் சொல்லிடிச்சு, ஆனால் உனக்குத் தான் இன்னும் தெரியலை" என காதலுடன் சொன்னவனது கைகளை தட்டி விட்டவள், தன் விரல்களால் விழிநீரை துடைத்துக் கொண்டாள்.
"நீங்க அதைப் பத்தி கவலைப் பட வேண்டாம். அது என்னோட சொந்த பிரச்சனை" என சொன்னவள், வேகமாக உள்ளே ஒடி சென்று விட்டாள்.
இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
"உங்களுக்குச் சக்திவேலை எத்தனை நாளா தெரியும்?" என பத்தாவது முறையாக கேட்டான் அகிலன்.
மெளனத்தையே பதிலாக தந்தார் எதிரே அமர்ந்திருந்த வைத்தியர்.
அமிதாவையும், சம்யுக்தாவையும் வெற்றிவேலின் வீட்டில் கொண்டு விட்டு, இருவரும் உடனே கிளம்பி வைத்தியரின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
வைத்தியர் மூலிகை பறிக்க வெளியே சென்றிருந்தார். செல்வியிடம் விசாரித்ததில் பெரியதாக ஒன்றும் விவரம் தெரியவில்லை. வைத்தியரை பார்க்க இரண்டு வருடமாக சக்திவேல் வந்து செல்வது உண்டு என்று மட்டுமே தெரிந்தது. ஸம்யு சொன்னதை போல, அவன் வாய் பேச முடியாதவன் இல்லை, மெதுவான குரலில் வைத்தியரிடம் பேசுவான் என்று செல்வி சொன்னாள். சக்திவேல் எப்போது வந்தாலும், அவளை வைத்தியர் வெளியே அனுப்பி விடுவார் என்று சொன்னாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வைத்தியர், தன்னுடைய சைக்கிளில் பைகளுடன் வந்தார். அகிலன் இப்போது தான் அவரை நன்றாக பார்த்தான். அவருக்கு வயது எண்பது இருக்கும். இவர்களைப் பார்த்தவுடன் அமிதாவிற்கு ஏதாவது பிரச்சனையாகி விட்டதா என கேட்டார்.
சக்திவேலைப் பற்றி கேட்டவுடன் எதுவும் பதில் சொல்ல மறுத்து விட்டார். மித்ரன் பொறுமையாக அவரிடம் சம்யுக்தா கடத்தபட்டது முதல் இன்று நடந்தது வரை அவரிடம் சொன்னான். அவர் மெளனமாக அதை கேட்டுக் கொண்டார். ஸம்யுக்தாவிற்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி, பத்திரமாக தன் தங்கையை தன்னிடம் சேர்த்ததற்கு அவருக்கு நன்றி சொன்னான். அதற்கும் அவர் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்.
மித்ரனுக்கு அவரை அதட்டியோ, மிரட்டியோ கேட்க மனமில்லை. உயிருடன் தன் தங்கையை மீட்டுக் கொடுத்தவரை கஷ்டபடுத்த அவனுக்கு மனம் வரவில்லை. சக்திவேலை தெரியுமா என்று கேட்டதற்கு மட்டும் தெரியும் என பதில் சொன்னார். ஆனால் அதற்கு பிறகு அவனை பற்றி கேட்ட எந்த கேள்விக்கும் மெளனத்தையே பதிலாக தந்தார்.
அகிலனுக்குப் பொறுமை குறைந்து கொண்டே வந்தது. அவரை அதட்டினாலே மித்ரன் கண் பார்வையால் தடுத்து விடுகிறான். பிறகு எப்படி உண்மையை அவரிடம் இருந்து வரவழைப்பது? கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த கேஸில் இப்போது தான் முதல் முறையாக, முக்கியமான தடயம் கிடைத்திருக்கிறது. ஸம்யுக்தா சொன்னது போல், அவளை கடத்திய இன்னொரு ஆளின் பெயர் தெரிந்திருக்கிறது. அவனை பற்றி சொல்ல கூடியவர் வைத்தியர் மட்டும் தான். அவரும் மெளனமாக இருக்கிறார்.
"ஐயா, எனக்கு பொறுமை குறைஞ்சிட்டிருக்கு, நீங்க உண்மையை சொல்லலை என்றால் உங்களை கைது பண்ணி கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டியிருக்கும்" என்றான்.
"அரெஸ்ட் வாரண்ட் இருக்கா தம்பி?" என வாயை திறந்தார் வைத்தியர்.
"சந்தேகப்பட்டா உங்களை வாரண்ட் இல்லாம ஸ்டேஷனில் கொண்டு போய் விசாரிக்க முடியும் ஐயா" என்றான் அகிலன்.
"செய்யுங்க தம்பி, நான் என் வக்கிலையும் வர சொல்றேன்" என்றார் வைத்தியர்.
மித்ரன், "ஐயா, அதெல்லாம் வேணாம். நீங்க சக்திவேல் யாரு என்று சொன்னால் போதும். நாங்க இங்கேயிருந்து போயிடறோம். நாங்க உங்களை இனிமே விசாரணை என்று தொந்திரவு செய்ய மாட்டோம்" என நிதானமாக சொன்னான்.
அதற்கும் அவர் மெள்னமாகவே இருக்க, அகிலனுக்குப் பொறுமை போனது.
"ஐயா, வாங்க போலிஸ் ஸ்டேஷன் போலாம்" என அகிலன் சொன்னவுடன் அவர் எழுந்து கிளம்பினார்.
அவர்கள் வாசலுக்கு செல்வதற்குள், பக்கத்திலிருந்த வன காவல் நிலையத்தில் இருந்து காவலர்களும், அதிகாரிகளும் வந்து விட்டனர். இவர்கள் வைத்தியரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, செல்வி சென்று அவர்களை அழைத்து வந்து விட்டாள்.
அவர்களிடம் எதற்காக அவரை அழைத்துச் செல்கிறார்கள் என கேட்டனர். அவரை போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லி, அவர்களை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வைத்தியரையும், செல்வியையும் உள்ளே அமர வைத்துவிட்டு, இவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் வன அதிகாரி.
மித்ரன் அவரிடம் பொறுமையாக நடந்தவற்றை சொன்னான். அவருக்கு ஏற்கனெவெ சம்யுவின் கடத்தலைப் பற்றி தெரியும் என்பதால் கவனமாக கேட்டுக் கொண்டார்.
"மித்ரன், வைத்தியர் ஏதோ காரணத்துக்காக அவனை பத்தி சொல்ல மாட்டேங்கிறார். நீங்க பொறுமையாக தான் இதை கையாளணும்" என்றார்.
"ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போய், இரண்டு போட்டா சொல்லிட்டு போறார்" என எரிச்சலாக சொன்னான் அகிலன்.
"அகிலன், அது அத்தனை சுலபமான விஷய்ம் இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி இவர் நாட்டு வைத்தியர் இல்லை. கோவையில் பிரபலமான ஆலோபதி மருத்துவர். அந்த காலத்திலேயே லண்டன் போய் படிச்சிட்டு வந்தார். இவருக்குச் சென்னை, கோவை என்று பல இடங்களில் பெரிய மருத்துவமனை இருக்கு. அதை இப்போ அவரோட பசங்களும், பேர பசங்களும் நடத்தறாங்க" என்றார்.
"இப்போ, இவர் ஏன் இங்கே தனியா இருக்கார்?" என கேட்டான் மித்ரன்.
"இவர் பெரிய மருத்துவரா இருந்தும், அவங்க மனைவியை கேன்ஸரிலிருந்து காப்பாற்ற முடியலை. இருபத்தி அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி அவங்க இறந்துட்டாங்க. இவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய், இங்கே வந்து கொஞ்ச நாள் பைத்தியம் மாதிரி சுத்திட்டிருந்தார். அவங்க பசங்க வந்து கூப்பிட்டும் போக மறுத்துட்டார். அவங்களை இங்கே ஒரு மர வீடு மட்டும் கட்டி தர சொன்னார். அதிலே இருந்து இங்கேயே இருக்கார். சித்த மருத்தவமும், நாட்டு மருந்து பத்தியும் ஆராய்ச்சி செஞ்சிட்டிருக்கார். இங்கே அவர்கிட்ட வரவங்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்" என் சொல்லிவிட்டு நிறுத்தினார்.
"இப்போ நீங்க அவரை கூட்டிட்டு போனா, உடனே அவரோட பசங்க, அவரை பெயிலில் எடுத்துடுவாங்க. அவருக்கு வயசு வேற அதிகம் ஆயிடிச்சு என்று ஏதாவது காரணம் சொல்லி, அவரை விசாரிக்க விடாம செஞ்சிருவாங்க. நான் அவரிடம் பேசி பார்க்கிறேன்" என சொல்லிவிட்டு வன அதிகார் உள்ளே சென்றார்.
பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவர், "அவர் உங்க கிட்ட சக்திவேலை பத்தி சொல்ல ஒத்துக்கிட்டார்" என்றார்.
அகிலன், பெருமூச்சு விட்டுத் தன்னை தளர்த்திக் கொண்டான். மித்ரனுக்குச் சற்றே நிம்மதியாக இருந்தது. எப்படியோ வைத்தியரை கஷ்டபடுத்தாமல், சக்திவேலை பற்றி தெரிந்தால் போதும் என்று தோன்றியது.
உள்ளே செல்ல திரும்பிய அகிலனை தடுத்தவர், "அவர் நாளைக்கு உங்க கிட்ட அவனை பத்தி பேசுவார்" என்றார்.
"ஏன் அவர் எங்காவது ஓடி போய் ஒளிஞ்சுக்க டைம் கேட்கிறாரா?" என எரிச்சலாக கேட்டான் அகிலன்.
"அவர் எங்கேயும் ஓடி போக மாட்டார். அதுக்கு நான் உங்களுக்கு உத்திரவாதம் தர்றேன்" என சொன்னார் வன அதிகாரி.
வேறு வழியின்றி தலையசைத்த மித்ரன், "நாளைக்கு நாங்க மதியம் ஒரு மணிக்கு வர்றோம்" என சொன்னான். காலையில் பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த செல்ல வேண்டி இருந்தது.
"நீங்க இங்கே வர வேண்டாம். நாளைக்கு அவரே வெற்றிவேல் ஐயா வீட்டிற்குக் காலை பதினோரு மணிக்கு வர்றேன் என்று சொன்னார்" என்றார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro