Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 23

சுடும் நிலவு சுடாத சூரியன் – 23

"சக்தி.. சக்திவேல்" என ஸம்யுக்தா முணுமுணுக்கும் போதே, சித்தார்த் படிகளில் இறங்கி ஜீப்பின் அருகே வந்தான்.

அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தனர் அகிலனும், மித்ரனும். அவன் அருகே வர வர, செல்வியின் முகத்தில் குழப்ப ரேகைகள் படிந்தன.

சித்தார்த் இயல்பாக அமிதாவை பார்த்து, "அமிதா, டாக்டர் என்ன சொன்னார்?" என கேட்டான்.

அமிதா, "பச்சிலை மருந்து போட்டுக் கட்டியிருக்கார். சாப்பிட மருந்து கொடுத்திருக்கார். இரண்டு நாளில் சரியாயிடும்" என்றாள்.

"போலாமா?" என கேட்டவன், செல்வியைப் பார்த்து இயல்பாக அமிதாவிடம், "இவங்க.." என கேட்டான்.

அமிதா, "இவங்க வைத்தியர் வீட்டில் இருக்காங்க, மருந்து அங்கேயே வைச்சிட்டேன். கொண்டு வந்து கொடுத்தாங்க" என்றாள்.

செல்வியைப் பார்த்துச் சினேகமாய்ப் புன்னகைத்து, "தாங்கஸ்" என்றான்.

வன அலுவலர் கையேடுகளுடன் சித்தார்த்தை கூப்பிட, அவன் இரண்டு நிமிடம் என்று சொல்லிவிட்டு மீண்டும் வன காவல் நிலையத்துக்குள் சென்றான்.

"இவர் தான் இவளைக் காப்பாத்தி கொண்டு வந்தாரா?" என கேட்டான் அகிலன்.

குழப்பமாக தலையசைத்த செல்வி, "தெரியலை ஐயா, தூரத்திலிருந்து பார்க்க சக்தி தம்பி மாதிரி தான் இருந்திச்சு, ஆனா பக்கத்தில் வந்தா வேற யாரோ மாதிரி இருக்காரு" என கவலையுடன் சொன்னாள் செல்வி.

"சக்திக்கு கழுத்து வரைக்கும் முடியிருக்கும், நல்லா கறுப்பா இருப்பார். கண்ணு கூட கறுப்பா இருக்கும். அவரு சிரிக்கவே மாட்டார். முகம் எப்பவும் இறுக்கமா, கோபமா இருக்கிற மாதிரியே இருக்கும். ஆனா இவர் அது மாதிரியே இல்லையே.." என அவள் சொல்லும் போதே சித்தார்த் திரும்பி வந்தான்.

"நாங்க உங்களை வைத்தியர் வீட்டில் வந்து பிறகு பார்க்கிறோம்" என செல்வியிடம் சொன்னான் மித்ரன்.

சரியென்று தலையசைத்து விட்டு செல்வி திரும்பி நடந்தாள்.

"ஸாரி, இங்கே மட்டும் தான் குரைக்கிற மான் வகை இருக்கு என்று கேள்விபட்டேன். அதைப் பற்றி விவரங்கள் கொடுக்க தான் கூப்பிட்டார்" என சொன்னான்.

சரியென்று தலையசைத்து, மித்ரனும், அகிலனும் ஜீப்பில் ஏறி அமர, வனகாவலருடன், சித்தார்த் ஏறியதும் ஜீப் கிளம்பியது.

ஸம்யுக்தாவிற்கு தன்னை கடத்தும் போது இன்னொரு ஆள் இருந்தான் என்று சொன்னதற்கு சாட்சி கிடைத்தது என்று சற்றே நிம்மதியாக இருந்தது. மனநல மருத்தவரும், அகிலனும் அப்படியோரு ஆள் இல்லை என்றே சொல்லி கொண்டிருந்தனர்.

மனதில் ஏனோ தன்னை கடத்தியவனும், சித்தார்த்தும் ஒன்றே என நம்பினாள். இப்போது தன்னை கடத்தியது சக்திவேல் என்ற வேறு ஒருவன் என நினைக்கும் போதே, தலை வலிப்பதைப் போல இருந்தது.

வீடு வந்து சேர்ந்ததும், யோசித்தபடியே என்ன சாப்பிட்டோம் என்று தெரியாமல் சாப்பிட்டாள். அமிதா கால் வலிப்பதாக சொல்லி, தூங்க சென்று விட்டாள். ஸம்யுக்தா தங்கள் அறைக்கு சென்றவள், என்ன செய்வதென்று தெரியாமல் சேரில் அமர்ந்தாள். முழுங்காலகளை கட்டிக் கொண்டு, அதன் மேல் தலையை வைத்து யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

வினோதினியும், வசந்தனும் இன்னும் உறவினர் வீட்டிலிருந்து திரும்பி வரவில்லை. மித்ரனிடம் பேசலாம் என்று வெளியே வரும் போது, அகிலனும், மித்ரனும் காரில் ஏறி கொண்டிருந்தனர். அவர்களை கூப்பிட வேண்டாம் என்று தோன்ற, வராண்டாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"சக்திவேல்" என்று திரும்பவும் சொல்லி பார்த்துக் கொண்டாள். யானையிடமிருந்து மட்டுமின்றி, காட்டெருமையிடமிருந்தும் தன்னை அவன் காப்பாற்றினான் என்று நினைக்கும் போது அவளது மனம் இளகியது. இதயம் அவனை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தது. ஆனால் அவளது அறிவோ அவளை பார்த்து நக்கலாக சிரித்தது. அவன் கடத்தி சென்றதால் தான், அவள் இந்த ஆபத்துக்களுக்கு ஆளாக நேரிட்டது என்று வாதிட்டது. அவளைக் காப்பாற்ற வேண்டியது அவனது கடமை என்று சத்தமாக சொன்னது.

யானையிடமிருந்து அவளைக் காப்பாற்றினாலும், திரும்பவும் அவளைத் தேடி வந்திருக்கிறான். அவளுக்கு நிறைய அடிபடாமல் இருந்திருந்தால் மறுபடியும் இழுத்துக் கொண்டு போய் அந்த இருண்ட அறையில் தள்ளி அடைத்து வைத்திருப்பான் என்று மிரட்டிச் சொன்னது. அடிபட்டதால் வேறு வழியின்றி அவளைக் கொண்டு வைத்தியர் வீட்டில் விட்டுச் சென்றான் என அவளை தெளிய வைக்க முயன்றது.

ஏன் என்னை கடத்திச் சென்றான், எதற்காக என்னை அடைத்து வைத்தான், பணத்திற்காக இல்லையென்றால், எதற்காக கடத்தி இருப்பான் என யோசித்தபடி அமர்ந்திருந்தாள். ஸ்மிருதி சொல்வது போல் என்னை விரும்பி கடத்தியிருப்பானா என யோசித்தாள். ஆனால் அது காரணமில்லை என்று அறிவும், இதயமும் சேர்ந்தே சொன்னது. இந்த கேள்விக்கு பதிலை அவன் ஒருவனே சொல்ல முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. "சக்தி.." என்று முணுமுணுத்தாள்.

"ஹாய் யுக்தா" என எதிரே குரல் கேட்டு நிமிர்ந்தாள். சித்தார்த் சிரித்தபடி அவள் எதிரே அமர்ந்தான்.

"யாரையோ கூப்பிட்டா மாதிரி இருந்தது?" என சொன்னவனது கண்கள் மின்னியது.

எழுந்து சென்று விட வேண்டும் என்று தோன்றினாலும், வலிந்து அவனை பார்த்துப் புன்னைகைத்தாள்.

"யுக்தா, உங்கிட்ட ஒன்று கேட்கட்டுமா?" என சீரியசான குரலில் அவன் கேட்டாலும், அவனது கண்களில் தெரிந்த ஒரு வித கிண்டல் தெரிந்தது.

வாய் திறந்து பேசாமல், மெளனமாக தலையசைத்தாள்.

"நீ ஏன் என்னை பார்த்தா டென்ஷனா இருக்கே? இன்னும் கரெக்டா சொல்லனும் என்றால் தவிக்கிற மாதிரி இருக்கு, பயப்படறா மாதிரி இருக்கு, அமைதியில்லாம இருக்கிற மாதிரி இருக்கு?" என கேட்டவனது பார்வை அவளை கூர்மையாக துளைத்தது.

அதற்கும் எதுவும் சொல்லாமல் மெளனமாக வலிந்து புன்னகைத்தாள்.

"இப்போ கூட நீ என்னை பார்த்து சிரிக்கிறது, ஆர்ட்டி..... தமிழில் என்ன அதுக்கு.." என நெற்றியில் விரலை தட்டி யோசித்தவன், "ஹாங் செயற்கையா இருக்கு" என்றான்.

"அப்படி இல்லை, எனக்கு உங்களை தெரியாது, தெரியாதவங்க கிட்ட என்ன பேசறது?" என மெலிதான குரலில் சொன்னாள்.

"ஒ, இஸ் இட்?" என சொன்னவன், அவள் பக்கத்தில் இருந்த சேரில் வந்து அமர்ந்தான்.

அவளது அறிவு, எழுந்து ஒடி விடு என்று எச்சரித்தது. இதயமோ என்ன செய்கிறான் பார்க்கலாம் என்று அப்படியே அவளை அமர வைத்தது.

"ஒகே, என் பேர் சித்தார்த் குமரவேல். வாஷிங்கடனில் எங்க தாத்தா பாட்டியோட இருக்கேன். எம்.ஐ.டியில் பிஸினஸ் டிகிரி முடிச்சிருக்கேன். எங்க ஃபாமிலி பிஸினஸ், தேவ் புடஸ்க்கு வேர்ல்ட் வைட் பிரான்சைஸ் இருக்கு. நான் அதிலே சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் வைஸ் பிரஸிடண்டா இருக்கேன்" என சீரியசாக சொல்லி நிறுத்தினான்.

சம்யுகதா, தனக்கு தேவையில்லாத ஒன்றை கேட்பதை போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், "எனக்கு ஒரு தம்பி இருக்கான், யதுநந்தன். எங்க மாமாவோட பையன், நானும் அவனும் கிளோஸ் ஃபிரண்ட்ஸ்" என சொன்னான்.

இதை எதற்கு என்னிடம் சொல்கிறாய் என்பதை போல் அலட்சியமாக முகத்தை வைத்துக் கொண்டாள். அதை உணர்ந்து கொண்டவன் போல், "என்னை பத்தி எதுவும் தெரியாது என்று சொன்னே இல்லை, அது தான் சொன்னேன்" என சொன்னவனின் குரலில் நக்கல் தெரிந்தது.

"நீ என்னை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு" என சொன்னவனை யோசனையுடன் பார்த்தாள் ஸம்யுக்தா.

"இது வரைக்கும், ஒரே ஒரு கேர்ள் ஃபிரண்ட் தான். கார்லா ஸ்டீபன். காலேஜில் படிக்கும் போது பார்த்தோம். இரண்டே வருஷத்தில் பிரேக் அப் ஆயிடிச்சு. அதுக்குப் பிறகு இன்னிக்கு வரைக்கும் நான் ஸிங்கிள் தான்" என சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டதும், கிண்டலாக ஸம்யுவின் உதடுகள் வளைந்தன.

"சிங்கிளா இருந்ததுக்கு காரணம் இருக்கு, அங்கே அழகான பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க" என சொல்லும் போது அவனது பார்வை அவளை தலையிலிருந்து கால் வரை மெதுவே வருடி சென்றது.

"பூரணி பாட்டி, தமிழ் பெண்ணை தான் கல்யாணம் செஞ்சிக்கனும் என்று சொல்லிட்டாங்க. நானும் எனக்குப் பிடிச்ச தமிழ் பெண்ணை தேடிட்டிருந்தேன்" என சொல்லி முடிக்கும் போது சித்தார்த்தின் முகம் மலர்ந்திருந்தது.

"ஏன் இப்போ தேடறதை நிறுத்திட்டிங்களா?" என தன்னையும் அறியாமல் கேட்டு விட்டாள் ஸம்யுக்தா.

"ஆமாம். நான் மனசில் நினைச்சிட்டிருந்த பொண்ணை பார்த்தவுடன் தேடறதை நிறுத்திட்டேன்" என சொன்னவனது கண்கள் அவளைக் கூர்மையாக பார்த்தன.

அவனது பார்வை, அவளை ஏதோ செய்ய, தன்னை அறியாமல் தலையை குனிந்து கொண்டாள். தன்னை சமன்படுத்தியவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"யுக்தா, உன்னை பத்தி எனக்கும் நிறைய தெரியாது, உன்னை பத்தி சொல்லேன்" என ஆர்வமுடன் கேட்டான்.

என்ன சொல்வதென்று யோசித்தவள், "ஜர்னலிஸம் படிச்சிருக்கேன். சென்னையில் ஒரு பத்திரிகையில் வேலை செய்யறேன். மித்ரன் அண்ணாவை உங்களுக்குத் தெரியும்" என சொல்லி நிறுத்தினாள்.

அவள் இன்னும் சொல்ல போகிறாள் என ஆர்வமுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, "அவ்வளவு தான்" என தோள்களை குலுக்கினாள்.

"ஹ்ம், உனக்கு என்ன ஹாபிஸ், என்ன கலர் பிடிக்கும், உன் ஆம்பிஷன் என்ன? மியுசிக் பிடிக்குமோ?" என தன் இரு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு கேட்டான்.

"நீங்க எதுக்கு அதை தெரிஞ்சக்கனும்?" என கேட்டவளது குரலில் சற்றே எரிச்சல் இருந்தது.

"உன்னை பத்தி முழுசாக தெரிஞ்சக்கலாம் என்று தான் கேட்டேன்" என சொன்னவனது புருவம் மேலே ஏறி நின்றது.

"உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் தெரியனும்? என்னை கட்டிக்க போற சசிக்குத் தெரிஞ்சா போதும்" என உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு அவனை கூர்ந்து பார்த்தாள்.

"ஒ, யா.. மறந்துட்டேன்" என தன் கன்னத்தில் இருந்து கையை எடுத்து தலையின் பின்புறம் கோர்த்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான்.

"அரேஞ்ட் மேரேஜ், ரைட்?" என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

"இல்லை, லவ் மேரேஜ்" என வேண்டுமென்றே குரலில் உணர்ச்சி பூர்வமாக சொன்னவள் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவளைப் பார்த்து வலிந்து புன்னகைத்தவன், "ஒன் சைடட் லவ், சசி ஒரு தலையா உன்னை காதலிச்சானா?" என கேட்டவனது குரல் மிகவும் சீரியசாக இருந்தது. அவனது கண்களும் உணர்வுகளற்று இருந்தது.

வேண்டுமென்றே தன் முகத்தை மலர வைத்து, அவனை பார்த்து புன்னகைத்து, "இல்லையே, ஐ லவ் ஹிம் டூ" என காதலுடன் சொன்னவள், "இந்த கட.. ரோட் ஆகிஸிடண்ட் மட்டும் நடக்கலை என்றால், இப்போ நான் மிஸஸ் ஸம்யுக்தா சசிதரனாகி ஒரு மாசம் முடிஞ்சிருக்கும்" என கண்கள் மின்ன சொன்னாள்.

"ஒ, இஸ் இட்?" என சொன்னவனது ஆழ்ந்த நீல கண்களில் நொடிக்கும் குறைவாக வலி வந்து போனது. அதை வெளியே தெரியாமல் மறைத்தவன், "தட்ஸ் கிரேட்" என்றவன், "எனக்கு ஹானஸ்ட்டா பதில் சொல்லு, இந்த விபத்துக்குப் பிறகு டூ யூ ஸ்டில் லவ் ஹிம்?" என கேட்டான்.

ஸம்யுக்தா அந்த கேள்விக்கான விடையை தனக்குள்ளே சில நாட்களாக தேடி கொண்டிருந்தாள். சசியை ஒரு நல்ல நண்பனாக பல வருடங்களாக தெரியும். அவன் காதலை சொன்ன போது உடனடியாக அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அன்பிற்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தவித்தாள். சசி அவளை விடாமல் தன் காதலை சொன்னதால், மறுக்க தெரியாமல் ஒத்துக் கொண்டாள். வீட்டில் சொன்ன போதும் யாரும் பெரியதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த கடத்தலுக்குப் பின்பு, சொல்ல தெரியாத ஏதோ ஒரு நூலிழை அவர்கள் உறவில் அறந்து விட்டிருந்தது. கோவிலில் சசியுடன் திருமணம் என்று சொன்ன போது, மனம் அதனை ஏனோ ஏற்கவில்லை.

மனதில் தோன்றிய குழப்பம் முகத்திலும் தெரிய, எதிரே அவளது பதிலுக்காக காத்திருந்த சித்தார்த்தை பார்த்தாள்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "நான் வந்து.." என நிறுத்தினாள்.
"யுக்தா, தாங்க்ஸ், ஐ காட் தி ஆன்ஸ்ர்" என சொன்னவனது முகம் வெள்ளை தாமரையாக மலர்ந்திருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro