Sudum Nilavu Sudatha Suriyan - 22
சுடும் நிலவு சுடாத சூரியன் – 22
சித்தார்த் வண்டியில் வந்தமர்ந்ததும், ஸம்யுக்தாவிற்கு உடனே வண்டியில் இருந்து இறங்கி விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் டிரைவர் வண்டியை எடுத்து விட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். ஒரு மனது வண்டியை நிறுத்தி இறங்கி விட சொல்ல, அவளது இன்னொரு மனம், என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று சொல்லியது.
மித்ரனும், அகிலனும் அருகே இருக்கும் போது என்ன நடந்து விடும் என்ற தைரியம் இருந்த போதும், உள்ளுக்குள் சொல்ல தெரியாத பயம் பரவியது. இந்த இடத்தின் அருகே தானே, தன்னை வைத்தியர் வீட்டில் கண்டு பிடித்தார்கள் என்று நினைத்த போது, பயம் இன்னும் அதிகரித்தது. ஆனாலும் மனதின் ஓரத்தில், மித்ரனிடம் இவனும், அவனும் ஒன்று தான் என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை பிறந்தது.
காட்டின் உள்ளே இருக்கும் வன அலுவலகத்தில் சென்று அனுமதி பெற்றதும், ஒரு வன காவலரை இவர்கள் துணைக்கு அனுப்பினார்கள். வழியில் தென்பட்ட பல வித மான்களை வேடிக்கை பார்த்த படி சென்றனர்.
ஸம்யுக்தாவிற்கு எதையும் ரசிக்க முடியவில்லை. திரும்பி மித்ரனை பார்த்த போது, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மித்ரனது பார்வை, அவளது மனநிலையை தான் நன்றாக உணர்ந்திருப்பதை சொன்னது.
ஆயிரம் சொற்கள் அளிக்க முடியாத தெம்பையும், தைரியத்தையும், அவளது அண்ணனின் ஒற்றை பார்வை அளித்துச் சென்றது. மனம் சற்றே தெளிவாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே சென்றாள்.
மான்களும், காட்டெருதுகளுமே கண்களில் தென்பட்டன. காட்டெருதை கண்டதும், தன்னை துரத்திய காட்டெருது மனதில் வந்து போனது. தனக்கு நடந்தது அனைத்தையும் மித்ரனிடமும், அகிலனிடமும் சொன்ன பிறகு அதே இடத்திற்கு தன்னை ஏன் கூட்டி வந்தார்கள் என்று கோபம் வந்தது. அகிலனிடம் ஒரு வாரத்திற்கு மேல் சொன்னதையே தினமும் திருப்பி திருப்பி சொல்லியிருக்கிறாள். அவன் கேள்விகளால் அவளை துளைத்து எடுத்திருந்தான். சிறிய விஷயங்களையும் துருவி துருவி கேட்டிருக்கிறான். அவளைக் கடத்திய போது, அவள் விழித்திருந்த நேரங்களில் என்ன நடந்தது என்று அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவனும் ஏன் என்னை இங்கே கூட்டி வந்தான் என்று யோசித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான்.
வன காவலர் காண்பித்த கறுப்பு முகமும், சாம்பல் உடலும், நீண்ட கொண்ட லங்கூர் குரங்குகள் கூட்டமாக அலைந்து கொண்டிருந்தன. வன காவலர், அங்கேயிருந்த உயரமான இடத்திற்குக் கூட்டி சென்று, யானை பாதையைக் கூட்டினார். பந்திபூர் காடுகளிலிருந்து, சத்தியமங்கல காடுகள் வழியே, கேரளாவின் வயநாடு வரை யானைகள் இந்த பாதை வழியே செல்லும் என்றார். அந்த பாதையை இப்போது மக்கள் தேயிலை தோட்டமாகவும், ரிசார்ட்டாகவும் மாற்றி விட்டதால், செல்வதற்கு வழியில்லாமல் அவை ஊருக்குள் வந்து விடுகின்றன என்றார்.
ஒரு யானை கூட்டம், அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு குட்டி யானை முன்னும், பின்னுமாக பெரிய யானைகளின் கால்களுக்கு ஊடாக செல்வது பார்க்கும் போதே மனதை ஈர்த்தது. பின்னே தனித்து நின்ற யானையை, ஒரு பெரிய யானை தும்பிக்கையால் நெட்டிச் சென்றது.
அமிதாவுடன் அகிலனும், மித்ரனும் முன்னே சென்று பாறை விளிம்பில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். அந்த யானையை பார்த்ததும், சம்யுவிற்கு காட்டில் பார்த்த அந்த ஒற்றை யானை ஞாபகம் வந்தது. கூடவே தன்னை அவன் காப்பாற்றியதும் நினைவில் வந்து போனது. யோசனையுடன் அவள் திரும்பி சித்தார்த்தைப் பார்க்க, ஜீப்பின் மேல் சாய்ந்து நின்று, அவன் அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது நீல கண்கள் அவளிடம் எதையோ எதிர்பார்ப்பது போல தோன்றியது. அவன் கண்கள் நீல நிறத்தில் இருப்பதால் அவை மிகவும் ஆழமானவையாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. கூர்மையான அவனது பார்வை, அவளது விழிகளை ஊடுருவி, தன் இதயத்தில் தைப்பதை உணர்ந்தவள், தன் பார்வையை உடனடியாக மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
"ஸிட், இங்கே வாங்க, ஒரு குட்டி யானை எப்படி விளையாடுது பாருங்க" என அழைத்தாள் அமிதா.
அவன் அசையாமல் அங்கேயே இருக்க, "ஸிட், இண்டிரஸ்டிங்கா இருக்கு, வாங்க" என மறுபடியும் அழைத்தாள்.
"இஸ் இட்?" என கேட்டவன், ஸம்யுவை தாண்டி செல்லும் போது, "நத்திங் இஸ் இண்டிரஸிடிங் தான் யூ" என முணுமுணுத்து விட்டு சென்றான்.
அவன் சொன்னது முதலில் புரியவில்லை என்றாலும், புரிந்த போது, முதலில் கோபம் வந்தாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு சொல்ல தெரியாத உணர்வினால் அவளது இதயம் படபடத்து, முகம் சிவந்து போனது.
மீண்டும் ஜீப்பில் ஏறியவுடன் அமிதா, "என்ன ஸம்யு, திடீரென்று கன்னம் சிவந்து போச்சு? ஏதாவது கடிச்சிடிச்சா?" என கேட்டாள்.
அமிதா சொன்னதை கேட்டவுடன் அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். அவளை கவலையுடன் மித்ரனுன், அகிலனும் பார்க்க, சித்தார்த்தோ திரும்பி சுவாரசியத்துடன் பார்த்தான்.
"இல்லை அண்ணி, எதுவும் கடிக்கலை" என்றாள் ஸம்யுக்தா.
வன காவலர், "இங்கே காட்டில் நிறைய தேனீங்க இருக்கு. சில தேனீங்க, நம்ம பக்கத்தில் பறந்து போனாலே, அத்தோட காத்து நம்ம மேல பட்டு கடிச்சது மாதிரி சிவந்து போகும்" என்றார்.
"ஓ, இஸ் இட். நான் கூட பார்த்தேன் அவங்க பக்கமா தான் போச்சு, கண்டிப்பாக அவங்க கன்னத்தை கடிக்கலை" என சொன்ன சித்தார்த்தின் குரலும், முகமும் சீரியசாக இருக்க, கண்கள் சிரித்துக் கொண்டிருந்தன.
அவன் சொன்னதை கேட்டு எரிச்சலாக இருந்தாலும், மித்ரன் கூட இருக்கிறான் என தெரிந்தும், அவனது தைரியத்தை மனதில் ரசித்தாள். மதியம் வரை சுற்றியும் புலிகள் எங்கும் தென்படவில்லை. அதிகாலையில் வந்தால் மட்டுமே புலிகளை பார்க்க முடியும் என்றார் வன காவலர்.
பார்வையாளர்கள் பார்ப்பதற்காக சில புலிகளையும், புலிகுட்டிகளையும் ஒரு பெரிய வளாகத்தில் அடைத்து வைத்திருந்தனர். அதைப் பார்த்து விட்டு ஜீப்பில் ஏறும் போது அமிதா தடுக்கி கீழே விழுந்து விட்டாள். அவளை பிடிக்க அகிலன் ஓடி வருவதறகுள், விழ்ந்தவளின் காலில் அடிபட்டு விட்டது.
பக்கத்தில் தங்கள் வன காவல் அலுவலகம் இருப்பதாகவும், அங்கே முதல் உதவிக்கான மருந்து இருக்கும் என்றார் வன காவலர், அங்கே சென்று போது, மருந்திடும் போது தான் காயம் சற்று பெரியதாக இருப்பதை உணர்ந்தனர்.
பக்கத்தில் சித்த வைத்தியர் ஒருவர் இருப்பதாக சொன்னவர்கள், அமிதாவை அங்கே அழைத்து சென்று காண்பிக்க சொன்னார்கள். சித்தார்த் வன காவல் நிலையத்தில், காட்டைப் பற்றி பேசி கொண்டிருக்க, மற்றவர்கள் வைத்தியரிடம் சென்றனர்.
அங்கே அந்த வீட்டைப் பார்த்ததுமே அகிலனும், மித்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஸம்யுக்தாவை அந்த வைத்தியர் வீட்டில் தான், அவள் தப்பி வந்த பிறகு சுயநினைவின்றி கண்டு பிடித்திருந்தனர்.
ஸம்யுக்தாவிற்கு, அந்த வீட்டைப் பார்த்ததும், எங்கோ பார்த்தது போலிருந்தாலும், உள்ளே சென்றதும் தெரிந்து விட்டது. வைத்தியரும் அவளைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். பாசத்துடன் அவள் தலையை வருடி, உடல் நலம் விசாரித்தார்.
அமிதாவை பரிசோதித்து அவள் கால் காயத்திற்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினார். நீர் படாமல் பார்த்துக் கொள்ள சொன்னவர், ஒரு கஷாயத்தையும் கொடுத்து, காலை மாலை இரு வேளையும் குடிக்க சொன்னார்.
அப்போது உள்ளே வந்த நாற்பது வயது பெண்மணி, ஸம்யுக்தாவை பார்த்து பாசத்துடன் சிரித்தார். அவர் தன்னை பாசத்துடன் கவனித்துக் கொண்டதை நினைத்து, அவருக்கு நன்றி சொன்னாள். அனைவரும் கிளம்பி வெளியே சென்று விட, ஸம்யுக்தா செல்லாமல் அங்கேயே நின்றாள். மித்ரன் வெளியே இருந்து, வர சொல்லி செய்கை செய்ய, இரண்டு நிமிடம் என்று சைகை செய்தாள்.
வைத்தியரின் பக்கத்தில் அமர்ந்தவள், "என்னை காட்டெருமை துரத்தியதில் எதன் மேலோ இடிச்சு மயக்கமாயிட்டேன். கண் முழிச்ச போது இங்கே இருந்தேன். என்னை இங்கே யார் கூட்டிட்டு வந்தாங்க?" என கேட்டாள்.
பக்கத்தில் கல்லில் பச்சிலை அரைத்துக் கொண்டிருந்த பெண் ஏதோ சொல்ல முயல, அவளை கண்களால அடக்கினார் வைத்தியர்.
"செல்வி, உள்ளே கஷாயம் கொதிச்சிட்டிருக்கு, தண்ணி வத்திடிச்சா என்று பாரு" என அவளை உள்ளே அனுப்பினார்.
"ஒ, அதுவாம்மா, நீ காட்டில் அடிப்பட்டிருந்ததைப் பார்த்து ஒருத்தர், இங்கே கொண்டு விட்டுப் போனாரும்மா" என்றார்.
"உங்களுக்கு அவரை தெரியுமா?" என ஆர்வமுடன் கேட்டாள்.
அவர் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்க, அதற்கு மேல் எதுவும் கேட்க மனமின்றி சம்யுக்தா வெளியே வந்தாள்.
சித்தார்த்தை கூட்டி செல்வதற்காக அவர்கள் சென்ற ஜீப் வனகாவல் நிலையத்தில் நின்றது.
வன காவலர், ஒரு பத்து நிமிடம் அவர்களை காத்திருக்க சொல்லிவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
அவர்கள் ஐந்து நிமிடம் காத்திருக்க, வைத்தியர் வீட்டில் பார்த்த செல்வி, கையில் கஷாய்த்துடன் ஒடி வந்தார். அதை பார்த்ததும் தான், அமிதாவிற்கு தான் அதை மறந்து விட்டது, ஞாபகத்திற்கு வந்தது. மறந்து விட்டதற்காக மன்னிப்பும், கஷாயத்தைக் கொண்டு வந்து கொடுத்ததற்காக நன்றியும் சொல்லி வாங்கி கொண்டாள்.
அப்போது சித்தார்த், வனகாவலரிடம் பேசி கொண்டு படிகளில் நின்றிருந்தான். அவனை பார்த்தவுடன் செல்வி, "பாப்பா, நீ வைத்தியர் கிட்ட கேட்டே இல்லை. உன்னை யார் காப்பாத்தி கொண்டு வந்தாங்கனு?" என கேட்டாள்.
ஸம்யுக்தா பரபரப்புடன் தலையசைத்தாள், "ஆமா, உங்களுக்கு அவரை தெரியுமா?" என கேட்டாள்.
"ஏன் தெரியாம? அவரை நல்லா தெரியும், வைத்தியரை பார்க்க நிறைய தடவை அவர் வந்திருக்கார்" என சொன்னாள் செல்வி.
"யாரு அவர், பெயர் என்ன?" என கேட்டாள் ஸம்யுக்தா.
அமிதா வலியுடன் குனிந்தபடி அமர்ந்திருக்க, மித்ரனும், அகிலனும் ஜீப்பிலிருந்து இறங்கி சற்று முன்னால் டிரைவருடன் நின்று பேசி கொண்டிருந்தனர்.
"அதோ, அங்கே நிற்கிறாரே, அவர் தான் உங்களை கூட்டிட்டு வந்தாரு" என வனகாவல் அலுவலகத்தின் வாசலை காண்பித்தாள்.
"யாரு, அந்த வன காவலரா?" என கேட்டாள் ஸம்யுக்தா.
"அவர் இல்லைம்மா, பக்கத்தில உயரமா நிக்கிறாரே, அவர் தான் உங்களை தூக்கிட்டு வந்தாரு" என சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்டவுடன், மித்ரனும், அகிலனும் அவர்களருகில் வந்தனர்.
"அவரை உங்களுக்கு தெரியுமா?" என மித்ரன் கேட்டான்.
"நல்லா தெரியுமே, அவர் வைத்தியரைப் பார்க்க வருவார். அவர் பெயர் கூட சக்தி, சக்திவேல்" என்றாள் செல்வி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro