Sudum Nilavu Sudatha Suriyan - 18
சுடும் நிலவு சுடாத சூரியன் – 18
ரிப்போர்ட்டை ஆர்வமாக படித்த அகிலன், முடித்ததும், "சே" என்று அலுத்துக் கொண்டான். ரிப்போர்ட்டை இரண்டு பிரிண்ட் கொடுத்து விட்டு தன் சேரில் சாய்ந்து உட்கார்ந்தான்.
"எதுக்குடா அலுத்துக்கிறே?" என கேட்டான் மித்ரன்.
"நான் எதிர்பார்த்தது, அதில் எதுவுமே இல்லை" என வெறுப்பாக சொன்னவனை, குழப்பமாக பார்த்தான் மித்ரன்.
பிரிண்ட் முடிந்ததும், ரிப்போர்ட்டின் ஒரு காப்பியை மித்ரனிடம் கொடுத்தான். மற்றொன்றை தன் கையில் வைத்துக் கொண்டான். வேகமாக ரிப்போர்ட்டில் கண்களை ஒட்டிய மித்ரன், "இதில் எல்லாம் தான் போட்டிருக்காங்களே? நீ என்ன எதிர்பார்த்தே?" என கேட்டான்.
"அவன் ஏதாவது எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ ஆளாக இருப்பான் என்று பார்த்தேன்" என சொன்ன அகிலனை பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் மித்ரன்.
"அவன் தான் கடத்தியிருக்கான் என்று தெரியுது, ஆனா ஒரு தடயமும் இல்லை. காத்து மாதிரி வந்து போனதே தெரியாம வேலை செஞ்சிருக்கான். அது தான், அவன் ஏதாவது சீக்ரெட் ஏஜண்டாக இருப்பானா என்று பார்த்தேன். எத்தனை நாள், இங்க்லீஷ் சினிமாவிலேயே இவங்களை பார்க்கிறது, நேரில் பார்க்கலாம் என்று நினைச்சேன்" என்ற அகிலனை பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான்.
"ஜோக்ஸ் அபார்ட். இவங்க குடும்பம் நாலு தலைமுறையா வாஷிங்டன்னில் இருக்காங்க. இவன் தாத்தாவோட தாத்தா ஜெயதேவன், மதுரையிலிருந்து, அமெரிக்கா போயிருக்கார். தேவ் புட்ஸ் என்று இந்திய உணவகம் ஆரம்பிச்சிருக்கார். இப்போ அது அமெரிக்கா, யூரோப்பில் பெரிய பிராண்ட். சித்தார்த், அவனோட தாத்தா மகாதேவன், பாட்டி பூரணி, மாமா கெளதமன், அத்தை சுனிதியோட ஒரே வீட்டில் இருக்கான். அவங்க மாமாக்கு யதுநந்தன் என்று ஒரு பையன் இருக்கான். அவன் சித்தார்த்தை விட இரண்டு வயசு சின்னவன்" என நிறுத்தினான் அகிலன்.
"எங்கிட்டேயும் ரிப்போர்ட் இருக்குடா, நானும் படிச்சிட்டு தான் இருக்கேன். இப்போ எதுக்கு கத்தி சொல்றே?" என கேட்டான் மித்ரன்.
"நான் உனக்கு சொல்லலையே?" என அகிலன் சொன்னவுடன், மித்ரன் அறையில் சுற்றி பார்த்து, "வேற யாருக்குடா சொல்றே?" என கேட்டான்.
"எனக்கே சொல்லிக்கிறேன். நாம படிச்சுது மனசில் பதியனும் என்றால்
அதை கத்திப் படிக்கனும்னு எங்க அஞ்சாம் கிளாஸ் தமிழ் வாத்தியார் சொன்னார்டா" என அகிலன் சொன்னவுடன், மித்ரன் அவனது மேஜையில் எதையோ தேடினான்.
"என்னை அடிக்கிறதுக்கு பேப்பர் வெயிட் தானே தேடறே. வந்தவுடன் எடுத்து டிராவில் வைச்சிட்டேன். போன வாரம் அந்த பாடமும் படிச்சிட்டோம், பேப்பர் வெயிட்டால அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி?" என்றவனை முறைத்தான் மித்ரன்.
"சரி, சொல்றேன் கேட்டுக்கோ, தனியா படிக்க போரடிக்குது. எப்பவும் போல் மெ.ஐ.டியில் பிஸினஸ் மானேஜ்மண்ட் படிச்சிருக்கான். கார்லா ஸ்டிபன் என்கிற பெண்ணோட காலேஜில் சுத்திட்டிருந்திருக்கான். அதற்கு பிறகு அவங்களுக்கு பிரேக் அப் ஆயிடிச்சு. இரண்டு வருஷம் லண்டனில் அவங்க பிசினனை பார்த்துட்டிருக்கான். இப்போ இரண்டு வருஷமா, வாஷிங்க்டன்னிலே இருக்கான். இப்போ யாரும் கேர்ல் ஃபிரண்ட்ஸ் இல்லை" என சொன்ன அகிலன், "ஸம்யுக்கு ரூட் கிளியர்" என்றான்.
"அன்னிக்கே உன்னை உதைக்கனும் என்று நினைச்சேன். ஸம்யுவிற்கு சசிக்கும் கல்யாணம் முடிவாயிடிச்சு, அவளுக்கு உடம்பு சரியானவுடன், சிம்பிளா கல்யாணத்தைக் கோயிலில் முடிச்சிடுவோம். அதனால் இன்னொரு தடவை அவளை விளையாட்டுக்குக் கூட வேற யார் கூடவும் இணைச்சுப் பேசாதே" என உறுதியான குரலில் சொன்னான் மித்ரன்.
"ஸம்யுவிற்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா?" என கேட்ட அகிலனை எரிச்சலுடன் பார்த்தான் மித்ரன்.
"ஸம்யு, சசியை லவ் பண்றேன் என்று வீட்டில் சொன்னதால் தான் கல்யாணத்திற்கே ஏற்பாடு பண்ணோம்" என எரிச்சலாக சொன்னான்.
"அது கடத்தலுக்கு முன்னாடி சொன்னது, இப்போ கோயிலில் கல்யாணம் பண்ணறேன் என்று சொல்றியே, அதுக்கு சசிகிட்டேயும் அவகிட்டயும் சம்மதம் கேட்டியா?" என கேட்டான்.
"என் தங்கையோட மனசு நிமிஷத்துக்கு நிமிஷம் மாறாது" என உறுதியுடன் சொன்னவன் தொடர்ந்து, "சசி வீட்டில் உன் எதிரே தான் சொன்னாங்க. அவ எப்படி வந்தாலும், அவங்க வீட்டு மருமக தான்" என்று கேள்வியாக பார்த்தான் மித்ரன்.
"மித்ரன், உங்க அப்பா சொல்றது கரெக்ட் தான். உனக்கு எமோஷனல் இண்டெலிஜன்ஸ் பத்தாது. நீ நல்லா கண்ணை திறந்து வைச்சிட்டு பாரு. ஸம்யு, முன்னாடி மாதிரி சசியோட பேசறதில்லை. சசிக்கும் ஸம்யுவோட பேசறதில் ஒரு தயக்கம் இருக்கு" என சொன்னான் அகிலன்.
"அது போக போக சரியாயிடும்" என சொன்னவனை பார்த்து, "போடா முட்டாள், வாழ்க்கையில் சில தருணங்கள் தவறி போச்சுனா திரும்பவும் கிடைக்காது" என சொன்னான் அகிலன்.
"அதை விடு, என் மச்சானுக்கு என்ன குறைச்சல் என்று சொல்லு" என கேட்டான்.
"உன் மச்சான் இதில் எங்கடா வந்தான். எனக்கு தெரிஞ்சு உனக்கு ஒரே ஒரு மச்சினி தானாடா இருக்கா?" என கேட்டான்.
"என் மச்சானை உனக்குத் தெரியாது, நீ கூட அவனை நிறைய தடவை பார்த்திருக்கியே?" என்றவனை புரியாமல் பார்த்தான் மித்ரன்.
"ஆறடிக்கு மேல் உயரமா இருப்பான். நல்ல வெள்ளை கலர், அழகா இருப்பான். சூப்பர் ஸ்மார்ட் அண்ட் ஷார்ப். அமெரிக்காவில் எம்.பி.ஏ முடிச்சிருக்கான். பேர் கூட.." என்று அகிலன் சொல்லி முடிக்கும் முன்பே வேகமாக எழுந்து அகிலன் முதுகில் ஒரு போடு போட்டான் மித்ரன்.
"ஒரு கிரிமினலை போய், என் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றியே, நீயெல்லாம் என்ன ஃபிரண்ட்" என கோபமாக கேட்டான்.
"இது வரைக்கும் அவன் தான் கடத்தினான் என்று நிருபிக்க நம்மகிட்ட ஒரு சாட்சியமும் இல்லை" என சொன்ன அகிலன், "ஏண்டா, இப்படி அடிக்கிறே, வலிக்குது" என முதுகை தடவி கொண்டான்.
"ஸ்ம்யு, நேரிலே பார்த்த சாட்சி இருக்கு. அது போதும்" என உறுதியாக சொன்னான் மித்ரன்.
"அது உனக்கு வேணா போதுமா இருக்கலாம். நீதிபதிக்கு பத்தாது" என்றான் அகிலன்.
"சாட்சி தானே, கண்டிப்பாக் கொண்டு வர்றேன்" என தீர்மானமாக சொன்னான் மித்ரன்.
"சித்தார்த்துக்கு வேணா ஸம்யுவை பிடிச்சு இருக்கலாம். ஆனா ஸம்யு அவனை திரும்பி கூட பார்க்க மாட்டா" என சொன்னவனை பார்த்து கண்களை உருட்டினான் அகிலன்.
"அப்படியே இருக்கட்டும். உன் தங்கை அவனை திரும்பியே பார்க்க வேண்டாம். ஆனா, அவ கண்டிப்பா சசியை கல்யாணம் பண்ணிக்க மாட்டா" என சொன்ன அகிலன், மித்ரனின் தோள்களை தட்டி, "எனக்குப் உன் உணர்வுகள் புரியுது, ஆனா நீ சில நிதர்சனங்களை புரிஞ்சிக்க" என சொன்னவனின் குரல் உடைந்திருந்தது.
"டாக்டர், என் பொண்ணு இப்போ எப்படியிருக்கா?" என தயாளனிடம் கேட்டார் வினோதினி.
"இப்போ பரவாயில்லைம்மா. வந்ததற்கு இப்போ நல்ல முன்னேற்றம் தெரியுது. மன அழுத்தம் குறைஞ்சிருக்கு. நல்லா பேசறாங்க" என சிரித்தபடி சொன்னார் தயாளன்.
"எப்போ டாக்டர் அவ பழைய சம்யுக்தாவா எங்களுக்குக் கிடைப்பா?" என வருத்தத்துடன் கேட்டார்.
"சீக்கிரம் சரியாயிடுவா. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு, மனதிடம் நிறைய இருக்கு. அவங்க கிட்ட பேசினதில் அங்கே இருந்து இரண்டு தடவை தப்பிக்க முயற்சி செஞ்சிருக்காங்க என்று தெரியுது. சாதாரணமா மத்தவங்க இந்த மாதிரி மாட்டிக்கிட்டா, ரொம்ப பயந்துடுவாங்க. ஆனால், இவங்க அடுத்து என்ன என்று யோசிச்சிருக்காங்க" என சொன்னார்.
"அவ குணமானா, பண்ணாரி அம்மனுக்கு மாவிளக்கு ஏத்தறதா வேண்டிட்டிருக்கேன்" என்று சொன்னவரை ஆதரவாக பார்த்து சிரித்தார் தயாளன்.
"டாக்டர், அவ வேலைக்குப் போகனும் என்று சொல்றா, அனுப்பலாமா?" என்று கேட்டார்.
"கண்டிப்பாக அனுப்புங்க, அவ நாலு இடத்துக்குப் போயிட்டு வந்தா தான் இன்னும் வேகமாக தெளிவடைவாங்க. வீட்டுக்குள்ளேயே இருந்தா பழசையே நினைச்சு மறுகிட்டிருப்பாங்க" என்றார்.
"தாங்க்ஸ் டாக்டர், உங்க கிட்ட இன்னும் ஒன்னு அவளைப் பத்தி கேட்கனும், அதை எப்படி கேட்கிறது என்று தான் தெரியலை. அவகிட்டேயும் கேட்க தைரியம் வரலை" என இழுத்தார் விலாசினி.
"கேளுங்க, எனக்கு தெரிஞ்சு வரைக்கும் சொல்றேன்" என சொன்னவர் விலாசினியை கேள்வியாக பார்த்தார்.
"அது டாக்டர்.." என்றவர் ஸம்யுவின் திரும்பி அறை மூடியிருப்பதை பார்த்தார். "அவளைக் கடத்திட்டு போனவங்க, அவகிட்ட தப்பாக நடந்துக்கலை இல்லை?" என கேட்டவரின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
"இதை நீங்க அவகிட்டே கேட்டிருக்கலாமே?" என கேட்டார் தயாளன்.
"அவ கிட்ட கடத்தல் விஷயத்தைப் பத்தி கேட்டு அவ மனசை கஷ்ட்ப்பட வைக்க வேண்டாம் என்று தான் கேட்கலை" என்றார் விலாசினி.
"நான் அவங்க கிட்ட பேசின வரைக்கும் அது மாதிரி எதுவும் நடந்ததாக அவங்க சொல்லலை. என்னோட அனுபவத்தை வைச்சு பார்க்கும் போதும் எதுவும் தப்பாக நடந்ததாக தெரியலை. அப்படி நடந்திட்டிருந்தா, அவங்க நடவடிக்கையும், மன நிலையும் வேற மாதிரி இருந்திருக்கும்" என சொன்னார் தயாளன்.
"தாங்கஸ் டாக்டர்" என நிறைவுடன் சொன்ன விலாசினியிடம், "அந்த கடத்தல் நடந்திருக்க வேண்டாம். ஆனா நடந்திடிச்சு. அதைப் பத்தியே துருவி துருவி அவங்க கிட்ட கேட்காம, வீட்டில் இருக்கிறவங்க, அவங்களுக்கு அனுசரனையாக ஆதரவாக இருக்கனும். பழசையெல்லாம் மறந்திட்டு அவங்களை மறுபடியும் வேலைக்கு அனுப்புங்க" என சொன்னவர் எழுந்து நின்றார்.
"ஒரு டாக்டராக நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்லியிருக்க கூடாது. ஒரு நோயாளியை பத்தி அவங்க உறவினர் கிட்ட கூட அவங்க அனுமதியில்லாம சொல்ல கூடாது என்பது எங்க மனநல மருத்துவத்தின் மரபு. ஆனால் உங்க தவிப்பு புரிஞ்சதால் தான் உங்களுக்கு பதில் சொன்னேன். உங்க மாப்பிள்ளையும் எங்கிட்ட இதே கேள்வியைத தான் கேட்டார். ஆனால் அவருக்குப் பதில் சொல்ல மறுத்துட்டேன்" என சொன்னவர் வாசல் படிகளில் இறங்கி சென்றார்.
புடவை தலைப்பால் கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர், சற்றே நிமிர்ந்து பார்த்திருந்தால், ஸம்யுகதா படிகளில் சாய்ந்து நின்றிருப்பது தெரிந்திருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro