Sudum Nilavu Sudatha Suriyan - 15
சுடும் நிலவு சுடாத சூரியன் – 15
மதியம் தன் அறைக்கு வந்த அகிலனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் மித்ரன்.
"ஹாய்.." என ஈனஸ்வத்தில் சொன்ன அகிலனை எதுவும் சொல்லாமல் கூர்மையாக பார்த்தான்.
"மித்ரன், யூ லுக் ஸ்மார்ட். நீ விரைப்பா இருக்கும் போது, அப்படியே கம்பிரமா அன்புசெல்வன் மாதிரியே இருக்கேடா" என சிரித்தபடி சொன்னான்.
எதுவும் பேசாமல் கைகளை கட்டியப்படி அமர்ந்திருந்தவனை, "போதும்டா, ரொம்ப சீன் போடாதே. இது என்ன, இப்போ தான் முதல் தடவையா நடக்குதா?" என கேஷுவலாக சேரில் அமர்ந்தான்.
"உன்னை அப்படியே அந்த ரிசார்ட்டில் விட்டு வந்திருப்பேன். திருந்தவே மாட்டியா? உனக்கு எப்போ தான் கண்ட்ரோல் வரும்?" என கோபமாக சொன்னான்.
"எல்லாம், நீ இருக்கிற தைரியம் தான்டா" என சொன்னவன், "நேற்று என்னாச்சு?" என கேட்டான்.
"நீங்க இரண்டு பேரும் மட்டையானது தான் நடந்தது. உன்னை உன் வீட்டுக்குக் கூட்டிட்டு போனா, அமிதா உன்னோடு சேர்த்து என்னையும் கட்டையால அடிப்பானு தான், உன்னை போலிஸ் ஹாஸ்டலில் கொண்டு விட்டேன். அமிதாவுக்கு நீ முக்கியமான கேஸுக்காக வெளியே போயிருக்கிறதா சொன்னேன். சித்தார்த்தையும் அவங்க தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டேன். நாதன் அங்கிள் பார்த்த பார்வையில், ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணேன்" என்றான் மித்ரன்.
"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இன்னிக்கு நீ என்னை காப்பாத்தினா, நாளைக்கு டீச்சர் கிட்டேயிருந்து நான் உன்னை காப்பாத்தறேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"டேய். எங்கேயிருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம்? நானே இன்னும் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை. ஆனா ஊர் ஃபுல்லா இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு" என அலுத்துக் கொண்டான்.
"ரொம்ப சிம்பிள்டா, காதலிக்கறவங்களுக்கு உலகம் தெரியாதுடா, ஆனா உலகத்துக்குக் காதலிக்கறவங்களை நல்லாவே தெரியும்டா" என சிரித்தான்.
"சரி, நேற்று நாம் போட்ட பிளான் காலியா? அவன் வாயே திறக்கலையா?" என கேட்டான்.
நேற்று நடந்ததை அகிலனிடம் விவரித்தவுடன், வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் அகிலன்.
"இப்போ எதுக்குடா இப்படி சிரிக்கறே?" என கோபமாக கேட்டான் மித்ரன்.
வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியும் முடியாமல் சிரித்ததால், அகிலனின் முகம் சிவந்து, கண்களில் நீர் வழிந்தது.
சிரிப்பை அடக்கி, மேஜையில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
"அவனை ஏர்போர்ட்டில் பிக் அப் பண்ண போகும் போது, அவனை லூஸு என்று சொன்னோம். கடைசியில் நம்ம இரண்டு பேரையும் சிரிப்பு போலிஸாக்கிட்டு போயிட்டான். நாம தான் இப்போ காமெடி பீஸ் மாதிரி நிற்கிறோம்" என்றான்.
"சரி, சித்தார்த்தை விடு. நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்த கடத்தலை முன்னாடியே பக்காவா பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க மித்ரன். அவங்க சம்யுகதாவை கடத்தினது கண்டிப்பாக பணத்துக்காக இல்லை" என்றான் அகிலன்.
"இதை சொல்றதுக்கு நீ ஐ.பி.எஸ் படிச்சிருக்க வேண்டாம்டா, வாசலில் நிக்கிற போலிஸ் கான்ஸ்டபிளே ஈஸியா சொல்லிடுவான்" என்றான் மித்ரன்.
"டேக் எ ஸ்டெப் பேக் மித்ரன். ஸம்யுக்தா தப்பிக்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் என்று யோசிச்சு பாரு. ஏதோ ஒரு வகையில், அவ அங்கே தான் இருக்கானு யாருக்கோ அவங்க தகவல் அனுப்பியிருப்பாங்க. அவளை தேடிட்டு போற ஆள் கிட்ட, அவங்களுக்கு ஏதோ வேலையிருக்கு. அந்தாளை சத்தியமங்களத்தில் தான் சந்திக்கனும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருக்காங்க. ஏற்கெனவே, இடத்தையும், நேரத்தையும் செலக்ட் பண்ணிட்டாங்க. ஆனால் சந்திக்க வேண்டிய ஆள் கிட்ட, அவங்களோட தகவல் வந்து சேர்வதற்கு முன்னாடி, ஸம்யு அங்கேயிருந்து தப்பிச்சிட்டா" என்றான் அகிலன்.
"ஸம்யு, ஏதாவது துப்பறிஞ்சு, முக்கியமான டாக்குமென்ட்ஸ் ஏதாவது கண்டுபிடிச்சிட்டாளா?" என கேட்டான்.
"அந்த மாதிரி எதுவும் இருக்கிறதா எனக்கு தோணலை. ஸம்யு கிட்டேயிருந்து விஷயத்தை வாங்கனும்னா அவளை டார்ச்சர் பண்ணியிருப்பாங்க. அந்த மாதிரி எதுவும் செய்யலை. அதனால் அதை எலிமினேட் பண்ணிடலாம்" என்றான்.
"ஸம்யுவை காப்பாத்துனும் என்று யாரெல்லாம் சீரியசாக நினைப்பாங்க என்று சொல்லு?" என கேட்டான்.
"நான், எங்கப்பா, எங்கம்மா அப்பறம் சசிதரன், அவங்கப்பா முரளிதரன், சசியோட அம்மா" என்றான்.
"இப்போதைக்கு இரண்டு அம்மாவையும் இதில் இருந்து தள்ளி வைக்கலாம். சத்தியமங்கலத்துக்கும் உங்க நாலு பேருக்கும் என்ன தொடர்பு இருக்கு?" என கேட்டான்.
"அம்மா அப்பாவோட சொந்த ஊர் என்பதை தவிர, எங்களுக்கு அங்க நிலம், வீடு எதுவுமில்லை. நெருங்கின சொந்தகாரங்க யாரும் இப்போ அங்க இல்லை. ஆனா சசி குடும்பத்துக்கு அங்கே வீடு, நிலம் எல்லாம் இருக்கு. சசியும், முரளி அங்கிளும் அங்கே மாசத்துக்கு ஒரு தடவையாவது போயிட்டு வருவாங்க" என்றான் மித்ரன்.
"அவங்க முதல் பிளான் தோல்வியில் முடிஞ்சிடிச்சு, இரண்டாவது பிளானை கண்டிப்பாக ஆரம்பிச்சிருப்பாங்க" என்றான் அகிலன்.
"அவங்க என்று நீ யாரை சொல்றே, சித்தார்த்தையா?" என கேட்டான்.
"தெரியலை, அவன் சித்தார்த்தாக இருக்கலாம், இல்லை சித்தார்த் பின்னாடி யாராவது இருக்கலாம். சித்தார்த்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லாம இருக்கலாம்" என்றான்.
"அப்போ, இன்னொரு தடவை சம்யுக்தாவை கடத்துவாங்க என்று நினைக்கிறியா?" என கேட்ட மித்ரனின் குரல் சற்றே நடுங்கியது.
"நமக்கு பாம் ஸ்குவாட்டில் சொல்லி கொடுத்தது தான். பாம் வெடிச்ச பிறகு அந்த ஏரியாவில் சேஃபான பிளேஸ், அந்த பாம் வெடிச்ச இடம் தான்" என்றவன், "ஸம்யுக்தா மேல இந்த தடவை கண்டிப்பாக கை வைக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு இந்த தடவை யாரையும் கடத்தவும் மாட்டாங்க. ஏதோ ஒரு வகையில் அவங்களை சந்திக்க போறாங்க" என்றான் அகிலன்.
"எனக்கு தெரிஞ்சு அவங்க டார்கெட் வரிசையில் முதலில் உங்கப்பா, இரண்டாவது நீ, மூன்றாவது சசிதரன், கடைசியில தான் முரளிதரன். லெட் அஸ் வெயிட், நமக்கு வேற வழியில்லை" என்றான்.
தன் கைவிரல்களால் தலையை தேய்த்துக் கொண்ட மித்ரனிடம், "நீலிமா கிட்ட சித்தார்த்தை பத்தி டீடெயில்ஸ் கேட்டிருக்கேன். எப்படியும் புதன் கிழமைக்குள் அனுப்பிச்சிடுவா என்று நினைக்கிறேன்" என்ற அகிலன், "மித்ரன், சித்தார்த்தை பத்தி நீ என்ன நினைக்கிறே?" என கேட்டான்.
புருவத்தை தூக்கியவனிடம், "லெட் அஸ் பீ ஹானஸ்ட். நாம அவனை நம்ம வழிக்குக் கொண்டு வர நினைச்சா, ஈஸியா அவன் வழிக்கு நம்மை இழுத்துட்டுப் போயிட்டிருக்கான்" என்றான் அகிலன்.
"என்னடா சொல்றே, எனக்குப் புரியலை" என்றான் மித்ரன்.
"ஹி ஹிஸ் பிரில்லியண்ட அண்ட் ஸ்டீரிட் ஸ்மார்ட்" என சொன்ன அகிலனின் கண்கள் மின்னியது.
"ஹும்ம்.. உன்னை வைச்சிக்கிட்டே, அன்னிக்குப் பீச்சில் உன் தங்கைக்கு யுக்தா என்று செல்ல பெயர் வைக்கிறான். அது மட்டுமில்லாம, அவளை உன்னையே டேட்க்கு கூட்டிட்டு வர சொல்றான்" என்றான்.
"அது அவங்க கல்ச்சர் டா" என சொன்ன மித்ரனிடம், "உலகம் மொத்தம், அண்ணன், அண்ணன் தான்டா. தன் தங்கையை ஒருத்தன் பார்க்கிறான் என்றால், எல்லா அண்ணனுக்கும் கோபம் தான் முதலில் வரும்" என்றான் அகிலன்.
சித்தார்த் அவளை வெளியே கூட்டி வர சொல்ல, அனிச்சையாக பாதியில் பேச்சை நிறுத்து விட்டு ஸம்யுவுடன் கிளம்பியதை நினைத்தான் மித்ரன்.
"ஆனா, அவன் நேற்று அடிச்சான் பாரு, லாஸ்ட் பாலில் சிக்ஸர். சான்ஸே இல்லை. உங்கிட்டயே உன் தங்கையை எனக்குப் பிடிச்சிருக்கு என்று சொன்னான் பாரு. சான்ஸே இல்லை. வேற யாராவது உங்கிட்ட அந்த மாதிரி சொல்லியிருந்தா, நீ ஓடவிட்டு அடிச்சிருக்க மாட்டே? ஏன் சசியே, உன் தங்கை கிட்ட எப்போ பிரபோஸ் பண்ணான்? நீ ஐபிஸ் டிரைனிங் கிளம்பின பிறகு தானே சொன்னான். நீ இங்கே இருந்தா அவனை துரத்தி அடிச்சிருக்க மாட்டே?" என்ற அகிலனை யோசனையுடன் பார்த்தான் மித்ரன்.
"அவன் அந்த கடத்தல்காரங்க மாதிரி தான். இடமும் நேரமும் செலக்ட் பண்ணிட்டான். சொல்ல வேண்டியதையும் முடிவு பண்ணிட்டான். நாம ஏதோ அவனை மடக்கிறதா நினைச்சிட்டோம். ஆனால், கடைசியில் தான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு மட்டையாயிட்டான். நம்ம சொந்த செலவிலேயே, நம்மளையே சூனியம் வைக்க செஞ்சிட்டான்" என அகிலன் சொல்வதை, பதில் பேசாமல் சீரியசாக கேட்டுக் கொண்டிருந்தான்.
சேரிலிருந்து எழுந்து, அவன் தோள்களை தட்டிய அகிலன், "நான் சொல்றேன் என்று தப்பாக நினைச்சுக்காதே. நீ தப்பாக நினைச்சாலும் பரவாயில்லை. உன்னை மாதிரியே, எனக்கும் ஸம்யு தங்கை தான். நம்ம ஸம்யுவிற்கு சசியை விட, சித்தார்த் தான் பெட்டர் மேட்ச் என்று தோனுது" என சொல்லிவிட்டு சென்றான்.
இரவு உணவு முடிந்து, தூக்கம் வராமல் யோசனையுடன் மொட்டை மாடியில் நின்றிருந்தான் மித்ரன். அவனை தேடி அங்கே வந்த வசந்தன், "என்னப்பா, ரொம்ப யோசனையா இருக்கே?" என கேட்டார்.
"ஒன்னுமில்லைப்பா, ஸம்யுவோட கேஸ் தான் எந்த முன்னேற்றமும் இல்லாம, அப்படியே நிக்குது" என்றான்.
"ஏன் அந்த ரவிகுமார், எதுவும் சொல்லலையா?" என கேட்டான்.
இல்லை என தலையசைத்தவனிடம், "மித்ரன், நான் ஒண்ணு சொன்னா, தப்பாக நினைச்சுக்க மாட்டியே?" என கேட்டார்.
என்னவென்று, தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.
"இந்த கேஸை கொஞ்ச நாளைக்கு அப்படியே விட்டுடலாம்பா. ஸம்யு தான் திரும்பவும் வந்துட்டாளே. அவளை கடத்திட்டுப் போனாங்கனு சில பேருக்குத் தான் தெரியும். மத்தவங்களுக்கு அவளுக்கு ரோட் ஆக்ஸிடண்ட் என்று தான் சொல்லியிருக்கோம்" என மெதுவாக சொன்னார்.
"அப்போ, நம்ம சம்யுவை கடத்திட்டு போனவனை அப்படியே விட்டு விட சொல்றீங்களாப்பா? வைத்தியர் வீட்டில் அவ இருந்த நிலைமையைப் பார்த்த போது, அவளை கடத்திட்டு போனவனை வெட்டிப் போடனும் என்று நினைச்சேன்பா. ஒவ்வொரு நாளும் ராத்திரியும், அவனை இன்னும் என்னால் பிடிக்க முடியலையேனு தூக்கம் வராம தவிக்கிறேன்பா. ஒரு அண்ணனா அவளை பார்த்துக்க முடியலையேனு, என் மேலேயே எனக்கு வெறுப்பாக இருக்குபா. அவனை பிடிக்கிற வரைக்கும் என் ஆத்திரம் அடங்காதுப்பா. எப்படிப்பா, உங்களால் இந்த கேஸை விட்டுடலாம் என சொல்ல முடியுது?" என கோபமாக கேட்டான்.
"உனக்கிருக்கிற அதே கோபம், ஆத்திரம் எல்லாம் எனக்கும் இருக்குப்பா, இன்னும் கேட்டா உன்னை விட அதிகமாகவே இருக்குப்பா. ஆனா, ஒரு தகப்பனா, அவ எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்க வேண்டியிருக்கு. சசியோட, சம்யு ஒழுங்கா பேசதறதில்லை என்று முரளி எங்கிட்ட வருத்த பட்டான்" என்றான்.
"அப்பா, அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுங்கப்பா. அவ இயல்பாக மாறுவதற்கு டைம் வேண்டும் என்று தயாளன் டாக்டர் சொல்றார்"என்றான்.
"சரிப்பா, அவளை வீட்டிலேயே அடைஞ்சு கிடக்க விடாம, வெளியே நாலு இடத்துக்குக் கூட்டிட்டு போனால் சரியாயிடும் என்று எங்கிட்டேயும் சொன்னார்" என்றார்.
"சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார். புதன்கிழமை வெற்றிவேல் ஐயா, அவர் வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கார். நம்மை குடும்பத்தோடு வர சொல்லியிருக்கார். முரளியும் அவன் குடும்பத்தோடு வரேன் என்று சொல்லியிருக்கான்" என்றார்.
"எதுக்குப்பா திடீரென்று பார்ட்டி, தாத்தாவுக்கு உடம்பு சரியாயிடிச்சா?" என கேட்டான்.
"ஐயாவுக்கு அவர் பேரனை பார்த்தவுடனே எல்லாம் சரியாயிடிச்சு. அந்த பையன் ஊருக்குப் போறதுக்குள்ளே, எல்லோருக்கும் அவனை அறிமுகப்படுத்தனும் என்று நினைக்கிறார் போலிருக்கு" என்றார்.
"அப்பா, அன்னிக்கு வொர்கிங் டே. என்னால வர முடியாது" என சொன்னான்.
"உங்க போலிஸ்க்கு என்னிக்குப்பா நான்-வொர்கிங் டே? நீங்க தான் 24 மணி நேரமும் ஆன் டியூட்டிலே இருக்கீங்களே. அதுவுமில்லாம ஸம்யு, நீ வந்தா தான் வருவா. அவ இப்போ உங்கூட இருக்கிறதை தான் பாதுகாப்பாக ஃபீல் பண்றா" என்றார்.
அவன் தோளை தட்டி, "குட் நைட்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
வானில் மூன்றாம் பிறை நிலவு, மேகங்களுக்கு இடையே மங்கலாக தெரிந்தது. காற்றில் கோடை காலம் நெருங்குவதால், வெப்பம் மிகுந்திருந்தது.
ஸம்யுவை தாத்தா வீட்டிற்கு எப்படி கூட்டி செல்வது என்று யோசித்தான். வசந்தனிடம், இன்னும் சித்தார்த் படத்தை தான் ஸம்யு இன்னொரு கடத்தல் ஆள் என்று அடையாளம் சொன்னாள் என்று சொல்லவில்லை. ஸம்யு, சித்தார்த்தை கைது செய்து விட்டதாக நம்புகிறாள். இவளைப் பார்ட்டிக்குக் கூட்டி சென்றால் என்ன ஆகும் என்று கவலையாக இருந்தது. பார்ட்டியுல் சித்தார்த்தை பார்த்தால் ஸம்யு என்ன செய்வாள் என்று தெரியவில்லை. குழப்பத்தில் மண்டை காய்வது போல தோன்றியது.
தலை முடியை பின்னால் தள்ளி, நிமிர்ந்து பார்த்தவனுக்கு மேக கூட்டங்களில் இருந்து, பிறைகீற்று வெளியே பிரகாசமாக தெரிந்தது.
பயந்து பின் வாங்குவதை விட, நேரில் சென்று மோதுவதே சிறந்தது என்று தோன்றியது. புதன் கிழமை அவனுக்கு பல கேள்விகளுக்கு விடை தெரியும் என்று தோன்றியது. ஒரு முடிவுடன் படுக்கையில் படுத்தவனுக்கு, உடனே தூக்கம் வந்தது.
புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு, கிரே புல் ஹாண்ட் ஷர்ட், பிளாக் பாண்ட்டில் தயாராகி கீழே வந்தான். வசந்தனும், வினோதினியும் தயாராகி வருத்தமுடன் அமர்ந்திருந்தனர்.
"போலாமாப்பா, ஸம்யு எங்கேம்மா?" என கேட்டான்.
"ரெடியாயிட்டா, கீழே எங்க ரூமில தானிருக்கா. ஆனா இப்போ வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறா" என வருத்தமுடன் சொன்னார் வினோதினி.
"நீங்க போய் காரில் உட்காருங்க, நான் கூட்டிட்டு வரேன்" என்றவன்
"ஸம்யு" என அழைத்தபடி கதவை திறந்தவன், படுக்கையில் மேல் தலை குனிந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும், மனம் ஒரு நிமிடம் வலித்தது.
"போலாம் வா, நேரமாகுது" என்றான்.
"எனக்கு பயமாயிருக்கு அண்ணா" என கண்களில் மிரட்சியுடன் சொன்னவளிடம், "ஸம்யு, நான் உன்னை ஏதோ ரொம்ப தைரியசாலியான பெண் என்று நினைச்சேன். அவ்வளவு தானா நீ?" என கேட்டான்.
"உன்னை இரண்டு நாள் கடத்திட்டு போய் வைச்ச உடனே, உன் தைரியம் எல்லாம் ஓடி போச்சு. அப்போ பயமே இல்லாத மாதிரி வீட்டில் இவ்வளவு நாள் சீன் தான் போட்டிருக்கே" என நக்கலாக சொன்னான்.
"அப்படியெல்லாம் இல்லை" என ஈனஸ்வரத்தில் தன் தங்கை சொன்னவுடன் நிம்மதி அடைந்தான் மித்ரன்.
"அதெல்லாம் இல்லை. நீ வீட்டிலேயே இரு. வெளியே போனா தானே பிரச்சனை. நாமே, ஏன் அனாவசியமாக போய் பிரச்சனையில் மாட்டிக்கனும்" என்றான்.
ஆம் என்று தலையசைத்தவள், உடனே இல்லை என்று தலையசைத்த படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"அண்ணா, நீயும் அங்க தானே வர்றே?" என கண்கள் அலைபாய கேட்டாள்.
"ஆமாம். நம்ம ஃபாமிலி போறோம். முரளி அங்கிளும் அவரோட ஃபாமிலியோட வர்றார். அகிலன், அமிதாவும் வர்றாங்க" என்றான்.
"அகில் அண்ணாவா? அவருக்கு வெற்றிவேல் தாத்தாவை தெரியுமா?" என கேட்டாள்.
"அவனுக்கு தாத்தாவை தெரியாது, அவங்க பேரனை தெரியும்" என்றவனை யோசனையுடன் பார்த்தாள்.
"அவரோட பேரன் சித்தார்த், அன்னிக்கு பீச்சில் பார்த்தோமே" என்றான்.
"அண்ணா, அவன் தான் என்னை கடத்தி வைச்சிருந்தான். அவனை நீங்க இன்னும் கைது பண்ணலையா?" என கண்கள் அலைபாய கேட்டவளின் கை நடுங்குவதைப் பார்த்தான்.
"உன்னை கடத்தினவன் அவனில்லைமா, வேற ஒருத்தன். அவன் கருப்பா இருந்தானே, வாய் பேச முடியாத ஆள். ரவிகுமாரை இரண்டு போட்டதில் அவன் எங்கே இருக்கான் என்று சொல்லிட்டான். அவனை கைது பண்ணி உள்ளே வைச்சிட்டோம்" என்றான்.
குழப்பத்துடன் அவனை பார்த்த தங்கையிடம், "இப்போ எந்த பிரச்சனையும் இல்லை. போகலாம் வா" என சொன்னான்.
எதுவும் சொல்லாமல், தன் அண்ணனின் கையைப் பிடித்த படி காரில் ஏறி அமர்ந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro