Sudum Nilavu Sudatha Suriyan - 14
சுடும் நிலவு சுடாத சூரியன் – 14
சம்யுகதா, சித்தார்த்தின் படத்தை வரைந்து அடையாளம் காண்பித்து, இன்றோடு மூன்று நாட்களாகி விட்டது. கையறு நிலையில் தான் இருப்பதாக மித்ரனுக்கு தோன்றியது. தயாளன், தினமும் வீட்டிற்கு வந்து சம்யுகதாவிடம் பேசி செல்கிறார். நாளுக்கு நாள் சம்யுவின் முகம் தெளிவடைந்து வந்து கொண்டிருந்தது. ஆனால், இன்னும் சசியுடனோ, அவனது பெற்றோர்களுடனோ ஒழுங்காக பேசுவதில்லை. முதலில் அவள் பேச மறுப்பதினால், கோபமடைந்த சசி, பின்னர் மித்ரனின் விளக்கத்தினால் தணிந்தான். அவளை தனியாக விட சொல்லி, மித்ரன் கேட்டதால் இரண்டு நாட்களாக அவன் வீட்டிற்கு வருவதில்ல
அகிலன் சொல்வது போல், இது தன் தங்கையில் கேஸாக இருப்பதால், ஒழுங்காக சிந்திக்க முடியவில்லையோ என யோசித்தான். இந்த கேஸில் இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை ரவிகுமார் தான்.
ரவிகுமாரும் பார்ப்பதற்கு ஒல்லியாக கிராமத்துப் பையனாக தோன்றினாலும், உடலளவிலும், மனதளவிலும் மிகவும் உறுதியானவனாக இருந்தான். அவனை மூன்றாம் தர சித்ரவதைக்கு ஆட்படுத்தியும், சொன்னதையே திரும்ப, திரும்ப எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சொல்லி கொண்டிருந்தான். சம்யுக்தாவை பணத்துக்காக கடத்தியதாக சொன்னான். கடத்தியவுடன் மித்ரனை நினைத்துப் பயந்து விட்டதாகவும், அதனால் தான் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் சொன்னான்.
கூட்டாளிகள் என்று தனக்கு யாருமில்லை என்று சொன்னான். ரெட் ஐ20 காரில் வந்தது தற்செயலானது என்று சொன்னான். எல்லாமே தற்செயலாக நடந்ததாக அவன் சொன்னது நம்பும்படியாக இல்லை. அவளைக் கடத்தி வைத்திருந்த நாட்களில், அவனது செல்போனை உபயோகிக்கவே இல்லை.
ஆனால், சம்யுக்தாவை கடத்தியதற்கு, பணம் கண்டிப்பாக காரணம் இல்லை என்று தெளிவாக தெரிந்தது. அவளை கடத்தி கொண்டு போய் ஏன் சத்தியமங்கலத்தில் வைக்க வேண்டும்? ரவியை அங்கு கண்டு பிடிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று தெரிந்தும், ஏன் அந்த இடம் தேர்வு செய்யபட்டது என்று யோசித்தான்.
இது ஏதோ, ஒரு சிலந்தி வலையின் ஒரு கண்ணி என்று தோன்றியது. ரவிகுமார், முதலில் ஏதோ முன்பின் தெரியாத களவாணி என்று நினைத்தான். ஆனால், வசந்தன் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, அவன், இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்தவனாக இருப்பது தற்செயலாக தோன்றவில்லை.
கதவை திறந்து கொண்டு கோபமாக ஃபைலை போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தான் அகிலன். நெற்றியை கைகளால் தேய்த்துக் கொண்டு, மித்ரனை பார்த்து உதட்டைப் பிதுக்கினான்.
"என்னாச்சு, நீலிமா குப்தா என்ன சொன்னா?" என்று கேட்டான்.
"உன்னை ரொம்ப கேட்டதாக சொன்னா. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டா. நீ யாரையாவது லவ் பண்றியா என்று கேட்டா. உன்னை யாராவது லவ் பண்றாங்களானும் கேட்டா" என சேரில் சாய்ந்து உட்கார்ந்து சிரிப்புடன் சொன்னான்.
"அதுக்கு நீ என்ன சொன்னே?" என ஆர்வமாக கேட்டான் மித்ரன்.
"உங்க இரண்டு பேர் கிட்டேயும் போன் இருக்கில்லை. எடுத்துப் பேசுங்க. உங்களுக்கு நடுவில் நான் என்ன அனுமாரா?" என கேட்டான்.
"இல்லை அகிலன், நீ அனுமாரெல்லாம் இல்லை, புறா, அழகான வெள்ளை புறா" என சொன்னான்.
"போதும் நிறுத்துடா. ஆமா, உனக்கும் அவளை பிடிச்சிருக்கு, அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்கு, அப்புறம் என்ன, கலயாணம் செஞ்சிக்க வேண்டியது தானே?" என கேட்டான் அகிலன்.
"நீலிமாவோட சின்ன வயசு கனவு, ஐ.எஃப்.எஸ். இந்தியன் ஃபாரின் சர்வீஸ். என்னோட சின்ன வயசு கனவு, ஐ.பி.எஸ். இந்தியன் போலிஸ் சர்வீஸ். இரண்டு பேருக்கும் அவங்க, அவங்க கனவை விட்டுக் கொடுக்க முடியாது. அவளுக்கு எப்பவும் வெளிநாட்டில் தான் வேலை. எனக்கு உள்நாட்டில் தான் வேலை. சரியாக வராது என்பதால் ஆரம்பத்திலேயே பிரிஞ்சிட்டோம்" என்றான் மித்ரன்.
"நீ சொல்றதை கேட்டவுடன் எனக்கு ராஜா ஸார் பாட்டு தான் ஞாபகம் வருது. இதயகோயில் படத்தில், கிளைமாக்ஸில் மணிரத்னம் ஒரு பாட்டு வைச்சிருப்பார். இதயம் ஒரு கோயில், என்று தொடங்கும் பாட்டு சரியான காம்போஸிஷன். அதிலே ஒரு வரி வருமே, 'பாதை ஒன்று ஆன போது திசைகள் வேறம்மா. உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா'. சான்ஸே இல்லை" என்றான் அகிலன்.
வருத்தமான புன்னகையுடன் அவனை பார்த்த மித்ரன், "நோ ரெக்ரட்ஸ்" என்றான்.
"பழைய கதையை விடு. இப்ப நீலிமா எப்படி இருக்கா?" என ஆர்வமாக கேட்டான்.
"இப்போ அவ நியூயார்க்கில் தான் இருக்கா. அங்கே இருக்கிற இந்தியன் ஹை கமிஷனில் தான் வொர்க் பண்றா. சித்தார்த் பத்தி அவகிட்டே தான் இரண்டு நாள் முன்னாடி கேட்டேன். அவனை பத்தின டீடெயில்ஸ் கேட்டா. அவனோட பாஸ்போர்ட் ஸ்கேண்ட் காப்பி இருந்ததில்லை. அதை அனுப்பினேன். நான் அவ கிட்ட கேட்ட டீடெயில்ஸ்ஸை கலெக்ட் பண்ணிட்டு இன்னிக்குக் கூப்பிட்டா" என்றான் அகிலன்.
"என்ன சொன்னா?" என ஆர்வமுடன் கேட்டான் மித்ரன்.
"நமக்கு தெரிஞ்ச விஷயத்தைத் தான் சொன்னா. அவங்க தாத்தா, மாமா எல்லாம் அங்க ரொம்ப செல்வாக்கானவங்க என்று சொன்னாள். இன்னும் சித்தார்த பத்தின பர்ஸெனல் விஷயங்களை கலெக்ட் பண்ணி அனுப்பறேன் என்று சொல்லியிருக்கா" என்றான் அகிலன்
"நீ அவகிட்ட என்ன டீடெயில்ஸ் கேட்டே?" என கேட்டான்.
"அவன் எத்தனை தடவை இந்தியா வந்திருக்கான். அவன் எப்போ இங்க வர விசா அபளை பண்ணான் என்று கேட்டேன்" என நிறுத்தினான்.
இதை பற்றி தான் யோசிக்கவே இல்லை என்பதை நினைத்த மித்ரன், அகிலனை பெருமையுடன் பார்த்தான்.
"அப்படியெல்லாம் பார்க்காதே" என வெறுப்புடன் சொன்னான் அகிலன்.
புருவத்தை கேள்வியாக தூக்கி மித்ரன் அவனை பார்க்க, "இது வரைக்கும் அவனுக்கு இரண்டு தடவை, இந்தியா வர விசா கொடுத்திருக்காங்க" என சொன்னவுடன் மித்ரனின் கண்களில் ஒளி தெரிந்தது.
"அன்னிக்கு நம்மகிட்ட ஏர்போர்ட்டில், இப்போ தான் முதல் தடவையா இந்தியாவுக்கு வரேன் என்று சித்தார்த் கதை விட்டான்" என தொடங்கிய மித்ரனை கையமர்த்தி நிறுத்தினான் அகிலன்.
"ரொம்ப உணர்ச்சி வசப்படாதே. அவன் சரியாக தான் சொல்லியிருக்கான். முதல் தடவை அவன் அஞ்சு வயசாயிருக்கும் போது கொடுத்திருக்காங்க. இரண்டாவது தடவை அவங்க தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குக் கொடுத்திருக்காங்க" என்றான் அகிலன்.
"அவனுக்கு எப்படி அவங்க தாத்தாக்கு அன்னிக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று தெரியும்? குறைஞ்சுது இரண்டு நாள் முன்னாடியே அதுக்கு அப்ளை பண்ணனும் இல்லை?" என கேட்டான்.
"அதையும் கேட்டேன். அவனுக்கு எமர்ஜென்ஸி விசா கொடுத்திருக்காங்க. பாதி ராத்திரியில் இந்தியன் ஹை கமிஷனரை எழுப்பி, விசா கொடுக்க வைச்சிருக்காங்க" என அலுப்புடன் சொன்னான்.
"அப்போ சம்யு சொல்றது பொய்யா?" என கோபமாக கேட்டான் மித்ரன்.
"உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க இல்லை. அது மாதிரி கோ-இன்ஸிடென்ஸ் ஆக இருக்கலாம். வெற்றிவேலுக்கோ, குமரவேலுக்கோ, இன்னோரு மனைவி இருந்து, அவங்க மூலமாக பிறந்த பையனா கூட இருக்கலாம். வெற்றிவேல் தாத்தாவோட சொத்தை பறிக்க, சித்தார்த்தை மாட்டி விட, அவனை மாதிரி மாஸ்க் போட்டுகிட்டு, ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செஞ்சிட்டு கடத்தியிருக்கலாம்" என்றான் அகிலன்.
"நிறைய தமிழ் சினிமா பார்க்கிறே போலிருக்கு. உன் கற்பனை கண்டபடி இருக்கு" என அலுப்புடன் சொன்னான்.
"இப்போ ஹாலிவுட சினிமா கூட பார்க்கிறேன்" என சொன்னவனை முறைத்தான்.
"இப்போ வெற்றிவேல் தாத்தாவுக்கு உடம்பு சரியாயில்லையே. ரவியை திரும்பவும் ஜூடிஸியல் கஸ்டடியில் எடுக்கலாமா?" என கேட்டான் மித்ரன்.
"அதையும் முயற்சி செஞ்சேன். அவரோட வக்கில் தேவசகாயம், ரொம்ப கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாரு. புதுசா எதுவும் எவிடென்ஸ் இல்லாததால் ஜட்ஜ் ரிஜெக்ட் பண்ணிட்டாரு. நம்ம அரசு வக்கில், இதுக்கு தன்கிட்டே இருக்கிறதிலேயே ஜூனியர் பையனை அனுப்பியிருந்தார். அவன் தேவசகாயம் கேட்ட இரண்டு கேள்வியிலேயே ஆஃப் ஆயிட்டான்" என்றான்.
"அப்போ நாம என்ன தான் செய்யறது?" என இறங்கிய குரலில் கேட்டான் மித்ரன்.
"நமக்கு இந்த கேஸில் ஒரே ஒரு ஆள் தான் உதவ முடியும்" என்றவனை கேள்வியுடன் பார்த்தான் மித்ரன்.
"சித்தார்த்" என சிரிப்புடன் சொன்னவனை, நோக்கி தன் மேஜையிலிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்தான் மித்ரன்.
அந்த ஞாயிறு, கிழக்குக் கடற்கரை சாலையின் நான்கு வழி பாதையில் மித்ரனின் கார் பறந்து கொண்டிருந்தது.
மதியம் அகிலனுடன், சித்தார்த்துடன் மஹாப்ஸ் சென்றிருந்தான் மித்ரன். சித்தார்த், அங்கிருந்த சிற்பங்களை ரசித்துப் பார்த்தான். அந்த ஊரின் சரித்திரத்தை முழுவதும் தெரிந்து வைத்திருந்தான். சங்க காலத்திலிருந்தே இந்த ஊர் பெரிய துறைமுகமாக இருந்தது என்றும் அப்போது இதன் பெயர், அப்போது நிர்பேர் என்றும் சொன்னான். இரண்டாம் சங்க காலத்தில் இந்த துறைமுகம் அழிந்து விட்டது என்றும் சொன்னான். அதற்கு பிறகு மகேந்திர வர்மர் காலத்தில் திரும்பவும் கட்டப்பட்டது என்று சொன்னான்.
அவனுடன் சுற்றியதில் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அவனால் எதை பற்றியும் ஆழமாக பேச முடிந்தது. பங்கு சந்தை முதல், சுற்று சூழ்நிலை வரை எதை பற்றியும் அவனால் விவாதிக்க முடிந்தது. நிறைய நாடுகளை சுற்றி பார்த்திருப்பதாக சொன்னான். இந்தியா வருவதற்கு ஆசை இருந்தாலும், அவனது தாத்தா அதாவது அம்மாவின் அப்பா மகாதேவனும், மாமா கெளதமனும் அனுமதி மறுத்ததால் வரவில்லை என்று சொன்னான்.
அகிலனுக்கும், மித்ரனுக்கும் அவனை பார்த்து பிரமிப்பாக இருந்தது. இரவு எட்டு மணியாகி விட, வரும் வழியில் ஒரு ரிசார்ட்டில் இரவு நேர உணவிற்காக இறங்கினார்கள்.
கடற்கரையை ஒட்டியிருந்த உணவகத்தில், கடல் காற்றை அனுபவித்தபடி, கடல் உணவை ரசித்து சாப்பிட்டனர். மது வேண்டுமா என கேட்ட பார்டெண்டரிடம், முதலில் மறுத்தவர்கள், பிறகு சரியென்று தலையசைத்தனர். மித்ரன் கார் ஒட்ட வேண்டும் என்பதால் மது அருந்தவில்லை.
அகிலனும், சித்தார்த்தும் லைட்டாக ஆரம்பித்து, ஹெவியாக அருந்த ஆரம்பித்தனர்.
சித்தார்த், தன்னிலை இழக்க தொடங்கியதை உணர்ந்த மித்ரன், "ஸிட், இந்தியாவுக்கு எத்தனை தடவை வந்திருக்கீங்க?" என கேட்டான்.
"டியூட், நான் இந்தியாவுக்கு பத்து தடவை வந்திருக்கேன்ன்ன்" என அவன் சொன்னவுடன் மித்ரன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"முதல் தடவை எப்போ வந்தீங்க?" என கூர்மையாக கேட்டான்
"அஞ்சு வயசு, அப்பா அம்மாவோட வந்தேன். ஆனா போகும் போது, அவங்களை இங்க விட்டு விட்ட்ட்ட்ட்டு தனியாக தான் போனேன்ன்ன்ன்ன்ன்" என சொல்லும் போதே அவன் குரல் உடைந்தது. கண்களில் நீர் வழிந்தது.
அவன் அழுவதை பார்க்க பாவமாக இருந்தாலும், வந்த வேலையை பார்க்க வேண்டும் என்பதால், "இரண்டாவது தடவை எப்போ வந்தீங்க?" என கேட்டான்.
"தாத்தாவுக்கு ஹார்ட்ட்ட்ட்ட் அட்டாக் என்று நாதன் அங்கிள் சொன்னார். அதனால மகாதேவன் தாத்தா கிட்ட்ட்ட்ட்ட் சண்டை போட்டுட்டு வந்தேன்ன்ன்" என குழறியபடி சொன்னான்.
அஞ்சு வருடங்களுக்கு முன்னால் வெற்றிவேல் தாத்தாவுக்கு முதல் அட்டாக் வந்ததாக சொன்னதை நினைவு கூர்ந்தான்.
"அஞ்சு வருஷம் முன்னாடி வந்தீங்களா?" என மித்ரன் கேட்க, "இல்லை ஒரு வாரம்ம்ம்ம் முன்னாடி தான்ன்ன்ன் வந்தேன்" என சொன்னான்.
"அப்போ மிச்சம் எட்டு தடவை எப்போ வந்தீங்க?" என கேட்டான் மித்ரன்.
"கனவுல, கற்பனையில வந்தேன்ன்ன். மகாதேவன் தாத்தா, எது கேட்டாலும் வாங்கி கொடுப்பார்ர்ர்ர், நான் என்ன செய்றேன் என்று சொன்னாலும்ம்ம்ம் சரியென்று சொல்லுவார். ஆனா இந்தியாவுக்கு போறேன் என்று சொன்னால்ல்ல்ல், முடியவே முடியாது என்று சொல்லிடுவார்ர்ர்" என உளறி கொட்டினான்.
"இந்தியாவுக்கு எதுக்கு வரனும் என்று நினைச்சீங்க?" என கேட்டான்.
"இங்க தான் ராதிகாம்மாவும், குமரவேல் அப்பாவும் இருக்க்க்காங்க" என சொல்லிவிட்டு, "அம்மா...." என்று சின்ன பிள்ளை போல் விக்கி விக்கி அழுதான்.
அவன் அழுவதை பார்த்தவுடன் மித்ரனுக்கு பரிதாபமாக இருந்தது. வேறு விஷயத்துக்கு திசை திருப்ப நினைத்தவன், "ஸிட், உஙகளுக்கு இந்தியா பிடிச்சிருக்கா?" என கேட்டான்.
"ரொம்ப பிடிச்சிருக்கு" என சொன்னவன் தேவையில்லாமல் சிரித்தான்.
"எதனால் பிடிச்சிருக்கு?" என்று கேட்டான்.
"வெற்றிவேல்ல்ல்ல் தாத்தா, நாதன்ன்ன்ன் அங்கிள், அந்த வீடு, எதிரில் இருக்கிற பீச், அப்பறம்ம்ம்ம்.." என சொல்லும் போது அவன் தலை தொங்கியது.
"ஸிட், ஸிட் என்று அவனை உலுக்கி எழுப்பினான் மித்ரன். பக்கத்தில் அகிலன் மேஜை மேல் படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
அவன் உலுக்கியவுடன், மயக்கத்திலிருந்து பாதி விழித்துக் கொண்ட சித்தார்த், "என்ன சொல்லிட்டிருந்தேன்ன்ன்.. அந்த வீடு, எதிரில் இருக்கிற பீச்.. அப்பறம்.." என்று மறுபடியும் அதே இடத்தில் அவன் நிறுத்த, மித்ரன், "சொல்லுங்க ஸிட், அப்பறம்.. " என அவனை உலுக்கினான்.
சித்தார்த்தின் கண்கள் பாதி மூடியிருக்க, அவனது உதடுகள் வளைந்து சிரித்தன.
"அப்பறம், பீச்சில் பார்த்த பொண்ண்ண்ண்ண்" என நீட்டி சொன்னான்.
"யாரு அந்த பொண்ணு?" என கேட்டான் மித்ரன்.
அவன் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து விட்டு, அப்படியே மேஜை மேல் சரிந்து படுத்தான்.
திரும்பவும் அவனை உலுக்கியவன், "ஸிட், யார் அந்த பொண்ணு" என கேட்டான்.
தலையை தூக்காமல், "யு...க்க்க்க்...தா" என அவன் சொன்னவுடன் மித்ரன் அதிர்ந்து போய் பார்க்க, அவனிடமிருந்து குறட்டை சத்தம் வந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro