Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Sudum Nilavu Sudatha Suriyan - 12

சுடும் நிலவு சுடாத சூரியன் – 12
சமயுக்தா போலிஸ் தலையமைகத்தில் மித்ரனின் அறையில் அமர்ந்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவளை மருத்தவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலது கையை தேவைக்கதிகமாக அசைக்க வேண்டாம் என மருத்தவர் சொல்லியிருந்தார். காலில் காயம் ஆறியிருக்க, அவளால் இப்போது மெதுவாக வலியில்லாமல் நடக்க முடிந்தது.

உள்ளே வந்த மித்ரன், "சம்யும்மா, அகிலன் சந்தேகப்படற குற்றாவளிகளோட பரேட் ஏற்பாடு பண்ணிட்டிருக்கான். இன்னும் இரண்டு நிமிஷத்தில் வந்து விடுவான்" என்றான்.
"அண்ணா, ப்ளீஸ்.. அவரை திரும்பி என்னை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்க. அவர் எத்தனை தடவை கேட்டாலும் அதையே தான் சொல்ல போறேன். நான் என்னமோ குற்றவாளி மாதிரி என்னையே விசாரணை செஞ்சிட்டிருக்கார். அமிதா அண்ணிக்காக பார்க்கிறேன். இல்லைன்னா, போங்கய்யா, நீங்களும் உங்க விசாரணையும் என்று போயிட்டே இருப்பேன்" என குரலை உயர்த்தி சொன்னாள்.

"தாங்க்ஸ் ஸம்யு, அவளால் தான் எனக்கு ஸ்டேஷனில் வேலையே நடக்குதுனு உங்க அண்ணிகிட்ட சொல்றேன்" என சிரித்தபடி உள்ளே வந்தான் அகிலன்.

"நீங்க ரொம்ப போரடிக்கிறீங்க, எனக்கு திரும்ப, திரும்ப அதே பதில் சொல்ல எரிச்சலாயிருக்கு" என அகிலனை பார்த்துச் சொன்னாள் சம்யுகதா.

"சம்யு, உன்னை எரிச்சல் படுத்தனும் என்பது எங்க நோக்கமில்லை. உங்கிட்டேயிருந்து வர்ற ஒரு சின்ன தகவல் கூட எங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். உன் மேல சந்தேகப்பட்டு எதுவும் கேட்கலை. உன்னை அறியாம சில விஷயங்களை நீ மறந்திருக்கலாம். உங்கிட்ட கேட்கும் போது, அது உனக்கு சட்டென்று ஞாபகம் வரலாம். அதனால் தான் அகிலன் உங்கிட்ட அப்படி தினமும் வந்து கேட்டு விட்டு போறான்" என்றான் மித்ரன்.

"சம்யு, போகலாம் வா, குற்றவாளிங்களை வரிசையில் நிற்க வைச்சிருக்காங்க. நீ வந்து அவங்களை பாரு. மொத்தம் பத்து பேர் இருக்காங்க. எல்லோருக்கும் நம்பர் கொடுத்திருக்காங்க. உன்னை கடத்தினவன் அங்கே இருந்தா, உடனே ரியாக்ட் பண்ணாதே. உள்ள வந்து எங்க கிட்ட சொல்லு" என்றான் அகிலன்.

"அண்ணா, நீ தான் ரவிகுமார் போட்டோவை காண்பிச்சியே. அவன் தான் அந்த வீட்டில் இருந்தான். இப்ப எதுக்கு நான் அவனை திரும்பவும் அடையாளாம் காட்டனும்? அவன் கூட வாய் பேசாம, காது கேட்காத ஒருத்தனும் இருந்தான். அவனை யானை தூக்கியடிச்சிடிச்சு என்று நினைக்கிறேன்" என்றாள்.

"சில சமயம் போட்டோவில் பார்க்கிறது சரியாக இல்லாம போகலாம். இது ஒரு ஃபார்மாலிட்டி தான்" என்றான் அகிலன்.

பெரிய ஹாலில் பத்து பேர் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த காட்டு வீட்டில் இருந்த ஒல்லியான பையன் அதில் நான்காவதாக நின்றிருந்தான். அவனது நம்பரை பார்த்துக் கொண்டவள், அனைவரையும் மெதுவாக பார்த்துக் கொண்டு சென்றாள். ஹாலின் பக்கத்திலிருந்த கண்ணாடி அறைக்குச் சென்று அங்கிருந்து இன்னொரு முறை அவனை அடையாளம் காட்டினாள்.

"அண்ணா, இவனை எப்படி பிடிச்சீங்க?" என கேட்டாள்.

"நீ சொன்ன அடையாளத்தை வைச்சு டிஜிட்டல் ஆர்ட் மூலமாக அவன் படத்தை வரைந்தோம். நீ சொன்ன வண்டி நம்பர், எதிர்பார்த்ததை போல, இந்த தடவையும் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டரோட கார் நம்பராக இருந்தது. அந்த காட்டு பக்கத்திலிருந்த ஹசனூர் என்ற ஊரில் விசாரித்ததில் அந்த பையனை நிறைய பேர் பார்த்திருந்தாங்க. அங்க டீ கடையில் வேலை பார்த்த பையன், ரவிகுமார் வளர்ந்த அதே அனாதை இல்லத்தில் வளர்ந்தவனாம். அவன் ரவிகுமார் என்ற பெயரையும், அவன் சத்திலே தங்கியிருக்கிற இடத்தையும் சொன்னான். நேராக போய் அவன் ரூமிலிருந்து அவனை தூக்கிட்டு வந்துட்டோம்" என்றான் மித்ரன்.

"என்னை எங்கண்ணா அடைச்சி வைச்சிருந்தாங்க?" என கேட்டாள் சம்யுக்தா.
"உன்னை தமிழ்நாடு கர்நாடகா பார்டரில் இருக்கிற தலைமாலை ரிஸர்வ் ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸில் அடைச்சி வைச்சிருந்தாங்க" என்றான் அகிலன்.

"எப்படி அவங்களுக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் கிடைச்சது? அப்ப ஃபாரஸ்ட் ஆளுங்களுக்கு என்னை கடத்தினது தெரியுமா" என கவலையுடன் கேட்டாள்.
"அந்த கெஸ்ட் ஹவுஸை ரொம்ப நாளாக யூஸ் பண்ணாம பூட்டி வைச்சிருந்திருக்காங்க. உன்னை கடத்தினவங்க பூட்டை உடைச்சு அதில் உன்னை அடைச்சு வைச்சிருக்காங்க. வாரம் ஒரு தடவை தான் அந்த பக்கம் செக் பண்ணா போவாங்களாம். நம்ம பேட் லக், அந்த வாரம் வேற ஒரு இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையில், அவங்க செக் பண்ண போகலை" என்றான் மித்ரன்.

"அப்போ அந்த இன்னொரு ஆள் என்ன ஆனான்? அவன் யானை அடிச்சு செத்திட்டானா?" என கேட்டாள்.

"நீ சொன்ன அடையாளத்தில் இருக்கிற இன்னொரு ஆளை யாரும் ஹசனூரில் பார்க்கலை. ரவிகுமாரை பார்த்ததாக எல்லோரும் சொல்றாங்க, ஆனா அவனை யாரும் பார்க்கவே இல்லை. சுத்தி இருக்கிற எல்லா ஊரிலேயும் விசாரிச்சோம். யாருமே அவனை பார்த்ததே இல்லை என்று சொல்லிட்டாங்க" என்றான் அகிலன்.

"ரவிகுமாரும் அதே தான் சொல்றான். அவன் மட்டும் தான் உன்னை அடைச்சி வைச்சிருந்ததா சொல்றான். எங்களுக்கு அது தனி ஒருத்தனால முடியாத காரியம் என்று தெரியும். ஏதோ கும்பலோ, இல்லை பெரிய சப்போர்ட் இல்லாம உன்னை கடத்தியிருக்கவும் முடியாது. அடைச்சு வைச்சிருக்கவும் முடியாது" என்றான் மித்ரன்.
"அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்த கைவிரல் ரேகையை கலெக்ட் பண்ணோம். சமீபத்தில் அந்த வீட்டில் இரண்டு பேரோட ரேகை தான் பதிவாகி இருந்தது. ஒன்று உன்னுடையது, இன்னொரு ரேகை ரவியோடது" என்றான் அகிலன்.

"அப்ப அந்த இன்னொரு ஆள், என்னோட கற்பனை என்று சொல்றீங்களா?" என கோபத்துடன் கேட்டாள் சம்யுக்தா.

"சம்யு, ரிலாக்ஸ், நாங்க அப்படி சொல்லலை. உனக்கு கொடுத்த மயக்க மருந்தால அப்படி ஒரு ஹாலிசுனேஷன் அதாவது மாயதோற்றம் உருவாகறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனாலும் நாங்க அந்த இன்னொரு ஆளை தேடிட்டு தான் இருக்கோம். எங்க கிரிமினல் ரெக்கார்ட் எல்லாம் தேட சொல்லியிருக்கோம். மத்த ஸ்டேட் போலிஸுக்கும் அனுப்பியிருக்கோம்" என்றான் அகிலன்.

"சம்யு, இந்த டிஜிட்டல் ஆர்ட் படத்தைப் பாரு. அவனை மாதிரி இருக்கா என்று சொல்லு" என கேட்டான் மித்ரன்.

அதை பார்த்தவள், "ஐயோ, இது அவனை மாதிரியே இல்லை. அவன் மூக்கு இன்னும் நல்லா ஷார்ப்பாக இருந்தது. நெற்றியும் இன்னும் அகலமாக இருந்தது. அவன் கன்னம் இன்னும் நல்லா தூக்கலா இருந்தது" என்றாள்.

"இன்னிக்கு டிஜிட்டல் ஆர்ட் செய்யறவர் வரலை. நான் அவர் வந்தவுடன் மித்ரன் கிட்ட சொல்றேன். அவன் உன்னை கூட்டிட்டு வருவான்" என்றான் அகிலன்.

சரியென்று தலையசைத்தவள், "அண்ணா, என்னை ஏன் கடத்தினாங்க?" என கண்கள் அலைபாய கேட்டாள்.

தைரியமாக ரவுடிகளிடமும், தாதாக்களிடமும் பேட்டி எடுக்கும் தன் தங்கை, இப்போது கண்கள் அலைபாய கேட்டவுடன் மித்ரனுக்கு இதயத்தில் பாரம் ஏறியது.

"அது தான் தெரியலைம்மா. பணம் கேட்டு எங்களையோ, சசியையோ யாரும் தொடர்பு கொள்ளலை. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்" என்றான் மித்ரன்.

"அண்ணா, நான் எப்படி அந்த வைத்தியர் வீட்டுக்கு வந்தேன்? என்னை காட்டெருமை துரத்தின வரைக்கும் ஞாபகம் இருந்தது. எது மேலேயோ இடிச்சி கீழே விழுந்துட்டேன். அதற்கு பிறகு ஞாபகமில்லை" என்றாள்.

"வைத்தியர் மூலிகை பறிக்கிறதுக்காக காட்டுக்குப் போயிருக்கார். நீ ஒடி வந்து அவர் மேல தான் இடிச்சு கீழே விழுந்திட்டே. அவர் பக்கத்தில் இருந்த ஃபாரஸ்ட் ஆபிஸில் சொல்லி, அவங்க கொடுத்த தகவலில் தான் நாங்க வந்தோம்" என்றான் அகிலன்.
"நீ யானை தூக்கியடிச்சுது என்று சொன்னதால, அங்க கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் இருந்த பழங்குடி மக்கள் கிட்ட கேட்டோம். அப்படி யாரும் அடிபடலை என்று சொன்னாங்க. அடிப்பட்டிருந்தாலோ, இல்லை இறந்து போயிருந்தாலோ, பறவைகளும், ஒநாய்களும், நரிகளும், கழுதை புலியும் அந்த இடத்துக்கு உடனே வந்திடும் என்று சொன்னாங்க. அப்படி எதுவும் வராததால் பெரிசாக அடிபட்டிருக்காது, இல்லை கீழே உருண்டு போய் கீழே இருந்த குண்டேறிபள்ளம் டாமில் விழுந்திருக்கலாம் என்று சொன்னாங்க" என்றான் மித்ரன்.

மனம் ஒரு நிமிடம் அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாது என்று நினைத்தது. அவன் நினைத்திருந்தால், தன்னை யானையிடம் அப்படியே விட்டு ஒடியிருக்க முடியும். இல்லை அவளை யானை தாக்கட்டும் என்று பக்கத்திலிருந்த மரத்தில் ஏறியிருக்கலாம். இது எதையும் செய்யாமல், அவளை பள்ளத்தில் தள்ளிவிட்டு யானையிடம் தானே பலியாக அதை நோக்கி ஒடியிருக்க வேண்டாம். காதில் கேட்ட அலறல் சத்தம் அவனுடையது என்பதில் அவளுக்குச் சந்தேகமேயில்லை.

"சம்யு, நாம வீட்டுக்குக் கிளம்பலாம். அகில், சம்யு கிட்ட வேற எதாவது உனக்கு கேட்கனுமா?" என கேட்டான் மித்ரன்.

"இல்லை மிதரன். ஏதாவது என்றால் நான் உங்கிட்ட சொல்றேன். எப்படியும் நாளைக்கு அந்த இன்னொருத்தனை படம் வரைய இவ இங்க வரனுமில்லை. அப்ப பார்த்துக்கலாம்" என்றான் அகிலன்.

"நீ வீட்டுக்கு கிளம்பலையா?" என கேட்டான் மித்ரன்.

"ரவிக்கிட்ட இன்னும் விசாரிக்க வேண்டியிருக்கு. அவனை விசாரிச்சிட்டு அப்பறம் கிளம்பறேன்" என்றான் அகிலன்.

"அண்ணா, ரவியை விசாரிக்கிறதா இருந்தா அடிப்பீங்களா?" என வருத்தத்துடன் கேட்டாள்.

"தேவைபட்டா அடிக்கவும் செய்வோம்" என்று அகிலனை பார்த்த படி சொன்னான் மித்ரன்.

ரவியை நன்றாக அடித்து உதைத்த பிறகு தான் விசாரணையை ஆரம்பித்தோம் என்று தங்கையிடம் சொன்னால் என்ன நடக்கும் என்று யோசித்தான்.

"ரொம்ப அடிக்காதீங்க. அவன் பாவம். எனக்கு தண்ணி, சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து கொடுத்தான். நான் வாந்தி எடுத்த போது என்னை பார்த்துகிட்டான். எனக்காக அந்த உயரமானவன் கிட்ட அடி கூட வாங்கினான்" என வருத்தத்துடன் சொன்னாள்.

"சரிம்மா, நான் பார்த்து விசாரிக்கிறேன்" என்ற அகிலன், மித்ரனை பார்த்து, "ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்" என மெதுவாக சொன்னான்.

ஜீப்பில் ஏறிய ஸம்யுக்தா அமைதியாக வர, மித்ரனுக்கு அவளை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. ஒரு வாரத்தில் தங்கள் வாழ்க்கையே மாறி போய் விட்டதை நினைத்து கோபமாக வந்தது. வாய் ஓயாமல் பேசும் சம்யு, இப்போது எண்ணி எண்ணி பேசுவதை நினைத்து வருத்தமாக இருந்தது. வெளியாள் யாரிடமும் பேசாமல், அறையிலேயே முடங்கி இருக்கும் தன் தங்கையை பார்க்க இதயம் கனத்து போனது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவனே, அவளை வெளியில் செல்ல வேண்டாம் என சொல்லியிருந்தான்.

மாறுதலுக்காக வீட்டுக்கு செல்லும் வழியில், பெஸண்ட் நகர் பீச்சில் ஜீப்பை நிறுத்தினான். கடல் நீரில் கால் நினைக்க மறுத்த சம்யுவை பார்க்க அவனுக்கு வேதனையாக இருந்தது. உள்ளுக்குள் ஒடுங்கும் அவளை எப்படி வெளி கொணர்வது என்று அவனுக்கு தெரியவில்லை. மனோதத்துவ மருத்தவர், அவளை அவள் போக்கில் சில நாட்களுக்கு விட சொல்லியிருந்தார்.

சூரியன் மறைந்து வானம் இருட்ட தொடங்க, "அண்ணா வீட்டுக்கு போகலாம்" என மிரட்சியுடன் சொன்ன தங்கையை எப்படி தேற்றுவது என யோசித்தான்.
மணலில் இருந்து எழுந்து, ஜீப்பை நோக்கி சம்யுவின் கையை ஆதரவாக பற்றிய படி நடந்தான். சம்யு எதிரே வரும் யாரையும் பார்க்காமல், அவனது கையை கெட்டியாக பிடித்தபடி, கீழே குனிந்து மண்லை பார்த்தபடி வந்தாள்.

தன் எதிரே வந்தவனை பார்த்து சினேகமாய் சிரித்த மித்ரன், "ஹாய்" என்றான்.
"ஹாய் டியூட், வாஸ்ஸாப் மேன்" என ஆங்கில ஆகஸ்ண்டில் சொன்னான் எதிரே நின்றவன்.

"ஜஸ்ட் கேம் ஃபார் ஃபிரஷ் ஏர்" என்ற மித்ரன், "தாத்தா எப்படியிருக்கார்?" என கேட்டான்.

"ஹி ஹிஸ் ஃபைன். ரெக்கவரிங்க்" என்றான்.

"யூர் கேர்ள்?" என கேட்டவனிடம், அவசரமாக தலையைசைத்து மறுத்தவன், "நோ டியூட். ஷி இஸ் மை ஸிஸ்டர், ஸம்யுக்தா" என்றான் மித்ரன்.

"ஸம்யு, இவர் வெற்றிவேல் தாத்தாவோட பேரன் சித்தார்த்" என்றான் மித்ரன்.
மெதுவாக தலை நிமிர்ந்தவள், எதிரே நின்றவனை பார்த்தவுடன் அதிர்ந்தவள், உடல் நடுங்க, இன்னொரு கையால் மித்ரனின் தோளினை பற்றி, தன் அண்ணனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro